கடந்த காலங்களில்
பாட்டி மூன்றுமுறை அழுதிருந்தாள்
ஒன்றாவது, ஈழப்போர் இறுதியில்
பாட்டி நன்கொடை வழங்கவில்லை
சிதறிய உடல்களை வர்ணிக்கவில்லை
இறந்தவர்களின் எண்ணிக்கையில் கவனம் கொள்ளவில்லை
எந்தச் சொல்லின் மூலமும் சிதைவைக் கடக்க முயலவில்லை
எந்தத் தூதரகத்தின் முன்னும் கூடவில்லை
உயிர் மிஞ்சியது யாரென ஆராயவில்லை
பாட்டி தொடர்ந்து அழுதிருந்தாள்
இரண்டாவது , ஜப்பான் சுனாமியில்
நாங்கள் பாட்டியின் அழுகைக்கு
காரணம் தேடி அழைந்தோம்
பெரிய சேதங்கள் இல்லையென சமாதானம் கூறினோம்
மீண்டும் தொடங்குமென ஆறுதல் சொன்னோம்
அழிந்த நிலம் செழித்தக் கதையை
வரலாற்றிலிருந்து எடுத்துரைத்தோம்
ஆழிப்பேரலையில் இல்லாமல் போன
இடங்களைப் பட்டியலிட்டோம்
பாட்டி அழுதுகொண்டிருந்தாள்
மூன்றாவதாக தாத்தா இறப்பில்
நாங்கள் தாத்தாவின் முகத்தைப் பார்க்க வலியுறுத்தினோம்
சவப்பெட்டிக்கு அருகில் அழைத்தோம்
அவர்களின் பழைய நெருக்கங்களுக்கு மெருகேற்றினோம்
ஒப்பாரியில் தாத்தாவின் ஆளுமையை அழகுசெய்தோம்
பாட்டி அழுதுகொண்டிருந்தாள்
தாத்தா புதைக்கப்பட்ட தகவல் வந்தவுடன்
‘நான் வேசி இல்ல…’
என பாட்டி தலையில் அடித்து ஓலமிட்டபோது
அத்தனை அழுகைகளுக்கான காரணங்களும்
இறுதியில்
ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன.