பிரேசர் மலைக்குச் செல்வது உற்சாகம் தரக்கூடியது. ‘கெந்திங் மலை’ போன்று வருபவர்களின் பணத்தைக் கறக்கும் எவ்வித முன்திட்டங்களும் அங்கு இல்லை. ஒரு மணிகூண்டு. அதைச் சுற்றிலும் ஓரிரு கடைகள், கிளினிக், தபால் நிலையம் இவ்வளவுதான் பிரேசர் நகரம். எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து அலுக்கும் வரை காட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் பிரேசர் இந்நாட்டின் முக்கிய பறவைகளின் சரணாலயமாக இருப்பதைப் பலரும் அறிவதில்லை.
எனது முதல் பயணத்தில் தங்கும் விடுதியில் ஐந்தாவது மாடியில் அறை கிடைத்திருந்தது. பால்கனியுடன் கூடிய அவ்வறையைத் திறந்தவுடன் நேருக்கு நேராக நின்று கானகம் உரசும். ஒரு மலையின் உச்சியில் இருக்கும் மரங்களின் உச்சந்தலைகளை பார்க்கமுடிவது அபூர்வமான அனுபவம். அநேகமாக என் முதல் பயணத்தில் அதை மட்டுமே அதிகம் செய்துகொண்டிருந்தேன். நண்பர் இயக்குனர் சஞ்சை மூலமாகவே துரையைப் பற்றி அறிந்தேன். இயக்குனர் செந்தில் அவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
துரை ஒரு பறவை மனிதர்.
துரை பிரேசர் மலையிலேயே பிறந்து வளர்ந்தவர். ஐந்தாம் ஆண்டு படிக்கும் போதே பிரேசர் மலைக்கு வரும் பறவை நேசர்கள் அவருக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். அவர் சதா பார்த்துக்கொண்டிருக்கும் பறவைகளைக் காண வெளிநாடுகளிலிருந்து கப்பலேறி மலேசியா வரும் அவர்கள் சில சமயம் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அவரும் பறவைகளைக் காண ஆரம்பித்துள்ளார். கூடவே அவற்றில் ஒலிகளையும் எழுப்பப் பழகினார். அவர் எழுப்பும் ஒலிக்குப் பறவைகள் பதில் கூறுவது உற்சாகம் அளித்த காலம் அது.
1984 ஒரு ஆங்கியேலர் குழு அவரை வழிகாட்டியாக அழைத்துள்ளனர். அவரும் காடுகளுக்குச் சென்று பறவைகள் ஒலியை எழுப்பி, அவற்றை மறைவிடத்திலிருந்து வெளிப்படுத்தியிருக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு ஆச்சரியம். அவர்கள் போகும் போது கொடுத்துச்சென்ற தொலைநோக்கியும் நூல்களுமே அவர் வாழ்வில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதை அடிப்படையாக வைத்துக்கொண்டே துரை பறவைகள் குறித்து அதிகம் தெரிந்துகொண்டார். ஆச்சரியமான அனுபவங்களைக் கொண்டுள்ள துரையை ஃபிரேசர் மலையில் சந்தித்துப் பேசினேன்.
“எனக்கு ஆங்கிலமெல்லாம் அதிகம் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் பறவைகள். மெல்ல என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட WWF என்னை வேலைக்கு அமர்த்தியது. நாட்டில் காமன்வெல்த் நடந்தபோது இளவரசர் பிலிப்ஸ் வந்திருந்தார் (எலிசபெத் II கணவர்). அவரை அழைத்துக்கொண்டு பிரேசர் மலையில் உள்ள பறவைகளைக் காட்டினேன். இந்தத் தகவல் விரைந்து பரவ மறுநாளே ‘பிபிசி’ யிலிருந்து என்னை நேர்காணல் செய்தார்கள். அதன் பின்னர் இரு வாரம் கடந்து David Attenborough வந்திருந்தார். ஆவணப் படங்கள் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற அவர் என்னைச் சந்தித்து நேர்காணல் செய்தது நான் செய்வது மிக முக்கியமான பணி என என்னையே உணரவைத்தது. அவர் சிலந்திகள் பற்றி அறிய அதிக ஆர்வம் காட்டினார். நகரங்களுக்கு வழிகாட்டியாக இருப்பது எளிது. காடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் கலையை நான் ரசிக்கத் தொடங்கினேன்.”
துரையின் ஆளுமை பெரிது. உலகம் முழுதும் பயணம் செய்து பறவைகள் குறித்து உரையாற்றுகிறார். பல வழிகாட்டிகளுக்குப் பயிற்சியாளராகவும் இருக்கும் இவர் மலேசியாவில் இத்துறையில் ஈடுபடும் ஒரே தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் தொடர்ந்து அவரிடம் சில கேள்விகள் கேட்டேன்.
கேள்வி : இன்றையத் தலைமுறையினர் பறவைகளைப் பார்க்க ஆர்வத்துடன் வருகின்றனரா?
பதில் : அனைவருக்கும் இன்று தகவல்கள் தெரிகின்றது. இணையத்தின் மூலம் கைவிரல்களில் தகவல் இருப்பதாகக் கூறுகின்றனர். தகவல்களைப் பெருவது சுலபம்தான். ஆனால் ஒன்றை நேரில் கண்டு, தொட்டு அனுபவிப்பதற்கும் தகவல்களை ஒப்புவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும்.
கேள்வி : காட்டுக்குள் செல்வதற்கென்று விதிமுறைகள் உண்டா?
பதில் : நிச்சயம். காடென்பது புதிய உலகம். அங்கு நாம் எழுப்பும் ஒலிகள் விலங்குகளை தொந்தரவு செய்யலாம். காட்டில் உள்ள ஒவ்வொன்றும் காட்டுக்கே சொந்தமானது. அதை அபகரிப்பது, வீட்டுக்குக் கொண்டு வருவதெல்லாம் தவறான செயல். மேலும் காட்டில் அசுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். காட்டில் இயல்பு நிலை நமது சிறிய செயல்கள் கூட பாதிக்கும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
கேள்வி : காட்டில் நிறைய மிருகங்கள் இருக்கும் போது ஏன் உங்களுக்குப் பறவை மேல் மட்டும் ஆர்வம் வந்தது?
பதில் : பறவை என்பது இயற்கை… பறவை என்பது வண்ணம்… பறவை என்பது ஓசைகள். ஒரு பறவை ஒரு காட்டையே கொண்டுவந்து நம்முன் நிறுத்துகிறது. காட்டின் பிரதிநிதியாக அது இருக்கிறது. தனது இறக்கையை விரிக்கும் போது இயற்கையை நம் முகத்தின் முன் வீசுகிறது. சாதாரணமாக ஒரு சிட்டுக்குருவியில் செயல்களைப் பாருங்கள். அதன் அசைவுகளைப் பாருங்கள். அதை நீங்கள் உணர முடியும். நான் இதுவரை கோலாலம்பூர் இரட்டை கோபுரத்தையெல்லாம் பார்த்ததில்லை. எனக்கு அதை காண ஒன்றுமே இல்லை. ஆனால் என்னால் மரத்தையும் அதில் உள்ள பறவைகளையும் காண முடியும்… அதன் ஆழம் வரை நுழைந்து.
கேள்வி : பறவைகளை நீங்கள் பார்க்கிறீர்கள். பறவைகள் மனிதனை எப்படிப்பார்க்கின்றன?
பதில் : பறவைகள் மனிதனைப்பார்க்க விரும்புவதில்லை. அதிக வண்ணம் கொண்ட உடைகளுடன் சென்றால் அவை நகந்துவிடும். அதேபோல அதிக ஓசைகளையும் விரும்புவதில்லை. அவை நம்மிடம் இருந்து விலகியிருக்கவே விரும்புகின்றன.
கேள்வி : நீங்கள் பறவை ஒலி எழுப்புவதன் மூலம் அதனுடன் உரையாடுகிறீர்களா அல்லது அது வெறும் ஓசை மட்டுமா?
பதில் : நான் எழுப்பும் ஓசைகளுக்குக் குறிப்பிட்டப் பொருள் இல்லை . ஆனால் பருந்து சூழலுக்கேற்ப ஓசையை மாற்றி எழுப்பும். அதன் சில ஓசைக்கு அர்த்தம் உண்டு . (செய்து காட்டுகிறார்) குரங்கும் அதே போலதான். அவை எழுப்பும் ஓசை காட்டின் அபாயத்தை அறிய உதவும்.
கேள்வி : பறவைகள் வெளியாகும் நேரம் என்ன?
பதில் : பொதுவாகக் காலையில்தான். மதியம் வெயில் நேரங்களில் பருந்து மட்டுமே பறக்கும். அப்போது பறவைகளைக் காணமுடியாது. வெயில் குறைந்ததும் வெளிவரும் பறவைகள் ஆறரை மணிக்கெல்லாம் கூட்டுக்குத் திரும்பிவிடும். அதன் பின்னர் இரவு ஆந்தைகள் சாம்ராஜ்யம் தொடங்கும்.
கேள்வி : இத்துறையில் உள்ள சவால்கள் என்ன?
பதில் : தகவல்களைப் புதுப்பிக்காமல் காட்டைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் நீங்கள் இதில் ஈடுபட முடியாது. பறவையைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருந்தால் நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருக்க முடியாது. பறவைகள் நமக்காகக் காட்டில் காத்திருப்பதில்லை. சில சமயங்களில் பறவைகள் இருக்காது. அப்போது உங்களுக்கு வேறு விலங்குகள் குறித்து பேசவும் மரங்கள் குறித்து விளக்கம் தரவும் முன் திட்டங்கள் இருக்க வேண்டும். அதற்கு காட்டை தடைகள் இன்றி நேசிக்க வேண்டும்.
கேள்வி : எந்தப் பறவையும் நீங்கள் அழைத்தால் வருமா?
பதில் : இல்லை. குறிப்பிட்ட சில பறவைகளை மட்டுமே என்னால் அழைக்க முடியும். அதன் ஜோடியைப் போல ஒலியெழுப்பி அழைப்பேன். வெளிநாடுகளிலிருந்து இங்கு சில மாதங்கள் தங்கும் ஒரு சில பறவைகளையும் அழைக்க முடியும். சில பறவைகள் கூச்ச சுபாவம் கொண்டவை. அவை எவ்வளவு அழைத்தாலும் வருவதில்லை.
கேள்வி : பறவைகளிடம் நீங்கள் பார்க்கும் ஆச்சரியம் என்ன?
பதில் : இதுவரை பறவையில் இயற்கை மரணம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை என்பதுதான் ஆச்சரியம். ஒரு யானை மரணம் அடையும் தருவாயில் குகையைத் தேடிச் செல்கின்றது. ஒரு பறவை தன் இறுதி நிமிடத்தை எங்கே கழிக்கின்றது எனத் தெரியாதது ஆச்சரியம்.
கேள்வி : வெளிநாடுகளில் பறவைகளைப் பாதுகாப்பது போன்று நம் நாட்டில் உண்டா?
பதில் : அங்கு பல அரசாங்க சாற்பற்ற அமைப்புகள் விலங்குகளுக்காக இயங்குகின்றன. விலங்குகளுக்காகப் பணம் செலவழிக்கத் தயாராக உள்ளன. இங்கு அதுபோன்ற இயக்கங்கள் இருந்தாலும் அதன் செயல்பாடு இன்னும் ஆக்ககரமாக இருந்தால் சிறப்பு. இருக்கின்ற காடுகளும் அழிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவில் ஏற்படும் காட்டுத்தீயின் புகையால் பாதிக்கப்படும் மலேசியப் பறவைகள் அதிகம். வெளிநாடுகளில் 14 வயதிலேயே இது போன்ற இயக்கங்களில் இணைந்து இயங்குகின்றனர். சிங்கப்பூரில்கூட மரங்களை வெட்ட சில கட்டுப்பாடுகள் உண்டு. நம்மிடம் அந்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இளைஞர்கள் மனம் மாறினால் அனைத்தும் மாறும். 800 வகையான பறவைகள் நம் நாட்டில் உண்டு. அவற்றை பாதுகாக்க வேண்டாம்… புரிந்துகொள்ளவாவது இளைஞர்கள் முன்வரவேண்டும்.
கேள்வி : பறவைகள் ஒரே இனத்திலேயே சிற்சில வேறுபாடுகளுடன் இருக்கின்றன. உதாரணத்துக்கு மீன் கொத்தி பறவையிலேயே ஏழெட்டு பிரிவுகளைப் பார்க்கிறோம். அவற்றிற்கிடையில் இனப்பெருக்கம் நடக்கும் போது இந்தப் பிரிவுகள் கலப்பதுண்டா?
பதில் : இல்லை. பறக்கும் போதும் மரங்களில் அமரும் போது ஒன்றாக இருக்கும். இனப்பெருக்கத்தில் அவை கலப்பதில்லை. எடை, அளவு இவை காரணமாக இருக்கலாம். ‘லாயாங் லாயாங் ‘ மட்டும் பிற பிரிவுகளுடன் இணையும். அதேபோல அவற்றின் ஒலிகளும் மாறுபடும். அவற்றிற்கும் மொழி ரீதியான மாறுதல்கள் உண்டு. ஒரு பறவையின் கூட்டில் இன்னொரு பறவை எப்போதுமே தங்காது.
கேள்வி : இத்தனை காலம் பறவைகளோடு பேசும் வழக்கத்தால் உங்களுக்கு ஏதேனும் ஒரு பறவையுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கம் உண்டா?
பதில் : (ஒரு நீல நிற பறவையின் படத்தைக் காட்டுகின்றார்) குறைந்தது மூன்று நிமிடத்தில் நான் அழைத்தவுடன் காட்டுக்குள் இருந்து வந்துவிடும். (அந்தப் பறவை போல குரல் எழுப்புகிறார்.) வீட்டில் வளர்க்கும் பறவைகள் மனிதர்கள் மேல் வந்தமரும். ஆனால் காட்டில் உள்ள பறவைகள் மனிதர்களை அண்டுவதில்லை. அதையும் மீறி சில பறவைகள் சில அடி தூரத்தில் வந்து அமர்ந்து என்னுடன் சத்தம் எழுப்பும். ஆனால் அது ஒரு உரையாடல் அல்ல. நான் அதற்கு எந்தக் கட்டளையும் இடுவதில்லை. சப்தங்களை மட்டுமே பரிமாறிக்கொள்வோம்.
கேள்வி : பறவைகள் குறித்த நிறை�� அனுமானங்கள் உலாவுகின்றனவே.
பதில் : புரிந்துகொள்ள முடியாதவை குறித்து கற்பனைகள் எழுவது இயற்கைதான். காகம் கரைந்தால் ஆபத்தென்றும், மூலிகையின் வேர்களை பறவைகள் ஏழுகடல் தாண்டி கொண்டு வரும் என்றும் கூறிக் கேட்டுள்ளேன். எனக்கு அது குறித்தெல்லாம் எந்த அனுபவமும் இல்லை. என்னைப் பொருத்தவரை பறவை என்பது இயற்கையின் பிரதிநிதி. அதை காண்பதே ஒரு பேரனுபவம்தான்.
துரையுடன் பகலில் பறவைகளைப்பார்க்கச் சென்றோம். அவரது சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் பறவைகளை அருகில் காண முடிந்தது. அதன் அசைவுகளை, மிரட்சியை, சந்தேகத்தை இரசித்துக்கொண்டிருந்தோம். சில பறவைகளின் குரலை கொடுத்து அருகில் அழைத்துக்காட்டி ஆச்சரியப்பட வைத்தார். அதே போல இரவிலும் இராட்சத சிலந்திகளைப் பார்க்க காட்டிற்குள் அழைத்துச் சென்றார். மண்ணில் குழி தோண்டி அவை இருப்பிடங்களை அமைத்திருந்தன. ஆச்சரியமாக அக்குழிகளுக்கு கதவை அமைத்திருந்தன. அக்கதவை இருக்கி பிடிக்க இருபுறமும் நான்கு பிடிமானங்களை எழுப்பி இருந்தன. அவற்றிற்கு அந்த டிசைனை சொல்லிக்கொடுத்தது யாரென்று தெரியவில்லை.
உலகம் முழுக்கவும் பயணிக்கும் துரையிடமிருந்து அனுபவங்களைப் பெற பல இனத்தவரும் முந்துகின்றனர். நம்மவர்கள் இவரைக் கண்டுக்கொள்வதில்லை. இதுவரை எவ்வித கருத்துபரிமாற்றங்களும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் நடத்தப்படவில்லை என்பது வருத்தமான செய்திதான். ஃபிரேசர் மலைக்குச் சென்று துரையை விசாரித்தால் அனைவருமே வழிக்காட்டுவார்கள். பள்ளிக்கூடங்கள் தராத அறிவை இயற்கை அவருக்குக் கொடுத்துள்ளது. அது நமக்கு பயன்பட வேண்டும்.