நான் ஓர் உணவுப்பிரியன். உணவில் எனக்கு தயவுதாட்சணியம் எல்லாம் இல்லை. மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தடை செய்யப்படும் உணவுகளை வயிற்றினுள் இறக்குவதுதான் முதல் அறம். டாக்டர் சண்முகசிவா என் உணவு பழக்கத்தை அடிக்கடிக் கிண்டல் செய்வார். நான் சைவ உணவு உண்பவனாக மாற வேண்டும் என்பது அவர் ஆவல். எனக்கோ சட்டியில் வேக வைத்த ஆட்டைக்கூட ஒரு புலிபோல சாப்பிட வேண்டும் என்பதே விருப்பம்.
ஜோக்ஜாவில் முதல்நாளே நானும் சந்துருவும் மாட்டிறைச்சியை ஒரு பிடிபிடித்திருந்தோம். பொதுவாகவே ஜோக்ஜா முழுவதும் உணவில் மலேசியர்களுக்கு ஏற்ற சுவை இல்லை. உணவை ரசனையே இல்லாமல் உண்ணும் பிராணிகளாக இருந்தனர். அங்கு விசேசமாகக் கிடைக்கும் வெங்காய பிளாச்சானை உரைப்புக்காகப் போகும் இடமெல்லாம் கேட்டு வாங்கி நாக்குக்கு உயிர்க்கொடுத்துக்கொண்டோம். பானங்களும் அப்படித்தான். டீ, காப்பி என்று எதுவும் நாக்கில் ஒட்ட மறுத்தன. மூசாங் காப்பியை அப்படிச் சொல்லிவிட முடியாது.
மூசாங் காப்பியை நான் ஏற்கனவே குடித்துள்ளேன். எனக்கு வரக்காப்பி இறங்காது. காப்பியில் பால் ஊற்ற வேண்டும். ஆனால்மூசாங்காப்பிக்கு பால் சரிவராது. ஒரு சிறிய ஸ்பூனில் காப்பித்தூளை அள்ளி போட்டுவிட்டு சுடுத்தண்ணீரை ஊற்றி, கொஞ்சம் சீனியைப் போட்டு அப்படியே குடித்துவிடலாம். வடித்தட்டில் மிஞ்சும் தூளில் மீண்டும் சுடுநீரை ஊற்றினால் அதே சுவையுடன் மீண்டும் மூசாங் காப்பி கிடைக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு ஸ்பூனுக்கு இரண்டு டம்ளர் மூசாங் காப்பி குடிக்கலாம். சட்டென உடலில் சூடேறுவது தெரியும்.
இந்த மூசாங் காப்பி தயாரிக்கும் விதம்தான் சுவாரசியமானது. முதலில், மூசாங் பூனைகளை காப்பி செடிகளில் விடுகிறார்கள். கவனிக்க! பலர் காப்பி செடியையும் கொக்கோ மரத்தையும் ஒன்றென நினைக்கிறார்கள். காப்பி சின்னஞ்சிறிய சிவப்பு பழம் போல இருக்கும். மூசாங் பூனைகள் மிகத்தீவிரமாகத் தேடி சிறந்ததில் சிறந்த காப்பி பழங்களைச் சாப்பிடும். சுமாரான பழங்களை அது திரும்பிக்கூட பார்க்காது. பின்னர்தான் விசயமே இருக்கிறது. மூசாங் பூனைகள் கழிக்கும் மலத்தைச் சேகரித்தால் அதில் காப்பிக்கொட்டைகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்தக்காப்பிக்கொட்டைகளை சுத்தப்படுத்தி, பதப்படுத்தி அதில் தயாரிக்கப்படும் காப்பித்தூள் அதிக விலை, தரம், இன்னும் என்னென்னவோ.
சிலர் இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு இதில் கொஞ்சம் அனுபவம் உண்டு. மலேசியக் காடுகளில் வாழும் புலிகள் சில சமயம் டுரியான் பழ சீசனில் தோட்டங்களுக்கு நுழைவதுண்டு. புலிகளுக்கு டுரியான் என்றால் கொள்ளை விருப்பம். ஆகஸ்டு மாதங்களில் காடுகளில் முகாம் இட தடைவிதிக்கப்பட இதுவே முக்கியக்காரணம். நான் ஹூலூ யாம் காட்டில் முகாம் இட்டிருந்த போது சில மலாய்க்காரர்கள் நண்பர்கள் ஆயினர். அவர்கள் தங்கள் தோட்டங்களில் புலியின் வருகைக்காக டுரியான் சீசனின் காத்திருப்பார்களாம். கீழே விழுந்து கிடக்கும் டுரியானில் புலிகள் சிறந்ததில் சிறந்ததை மட்டுமே தேர்வு செய்யுமாம். புலிகள் மனிதனைப் போலவே நகங்களைக் கொண்டு நேர்த்தியாகப் பிளக்கும். கரடிக்கும் இந்தப் பக்குவம் உண்டு. அதுவரை காத்திருந்து சில பட்டாசுகளை நண்பர்கள் வீசுவார்களாம். புலிகள் பயந்து ஓடியவுடன் அது தேர்வு செய்த டுரியானை எடுத்து ருசித்தால் அற்புதமான சுவை இருக்குமாம்.
விலங்குகளுக்கு நுகர்வின் மூலமாகவே ஒரு பொருளில் சுவையை அறியும் சக்தி உண்டு. தமிழில் கூட ‘அணில் கடித்தப்பழம் சுவைக்கும்’ என ஒரு பழமொழி சொல்வார்கள். அணிலுக்குக் குவிந்திருக்கும் பழங்களில் சிறந்தது எதுவென நிச்சயம் அடையாளம் காண முடியும். சின்ன வயதில் நான் பப்பாளி மரங்களை அதிகம் வேடிக்கைப் பார்த்துள்ளேன். பழுத்தப்பழங்கள் சில இருந்தாலும் குருவிகள் மிக நேர்த்தியாகத் தங்களுக்கான பப்பாளியைத் தேடி, அதில் மிகச் சுவையானப் பகுதியைக் கொத்தித்தின்று முக்கால் பழத்தை அப்படியே விட்டுச்செல்கின்றன. நமக்கு அந்தச் சக்தியெல்லாம் இல்லை. நாக்கில் வைத்துப்பார்த்தப் பிறகே நல்லது கெட்டது தெரிகிறது. உணவை உண்பதும் ஒரு கலைதான்.
நாங்கள் அங்கு வளர்க்கப்படும் சில மூசான்களைப் பார்த்தோம். அதன் மலங்களைப் பார்த்து நண்பர்கள் அருவருப்படைந்தனர். “ஒரு வேளை
அந்த தேர்வு செய்யப்பட்ட காப்பிக்கொட்டைகளை நாம் சாப்பிட்டால் நம்மிலிருந்து பெரும் காப்பிக்கொட்டைக்கு நமது பெயரையே வைத்துவிடுவார்கள்.” என கலாய்த்தேன். கடுப்பாகிப் போனார்கள் நண்பர்கள்.
அங்கிருந்து அரண்மனைக்கு ஒரு பயணம். அந்நாட்டு அரசன் முன்பு வாழ்ந்த அரண்மனையாம். சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஒரு வயதான மூதாட்டி எங்களுக்கு விளக்கம் கொடுத்தார். இந்த வயதிலும் அவர் உழைப்பு ஆச்சரியம்.
வெளியில் வந்தபோது வித்தியாசமான ஒரு விளையாட்டு சாதனம் விற்றது. எளிய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பறக்கும் குருவி. இரண்டு வாங்கி கொண்டேன். வீட்டில் சென்று முதல் வேலையாக பறக்க விட வேண்டும் என நினைத்துக்கொண்டேன். குருவி போல சத்தம் கொடுக்க மூங்கிலால் செய்யப்பட்ட குழலையும் வாங்கிக்கொண்டேன். காடுகளை அழித்து பறவைகளைத் துரத்திவிட்ட உஷ்ண தேசத்தில் அதிக பட்சம் அதைதானே செய்ய முடியும்!
– தொடரும்
ஹலோ மூசாங் காப்பி..? 🙁 நம்பவே முடியல.
மிருகங்கள் மற்றும் பறவைகளின் சுவையறியும் தன்மை.. சுவாரஸ்யம்.
உணவை ரசனையே இல்லாமல் உண்ணும் பிராணிகளாக இருந்தனர். அங்கு விசேசமாகக் கிடைக்கும் வெங்காய பிளாச்சானை உரைப்புக்காகப் போகும் இடமெல்லாம் கேட்டு வாங்கி நாக்குக்கு உயிர்க்கொடுத்துக்கொண்டோம். // ஹாஹாஹாஹா….. கோழியை உறித்து, அப்படியே துண்டு பண்ணி எந்த மசாலாவையும் சேர்க்காமல் சொயிங்ங்ங் என்று புண்ணாக்கு கணக்கா எண்ணெயில் பொரித்து, பாறாங்கற்கல் போல் தட்டில் வைத்துவிடுவார்கள். பற்களைப் பாதுகாக்கத்தெரியாதவர்கள் அந்தக்கோழியைக் கடித்தால், பல் தன்னால் கையோடு வந்துவிடும்.. வாயே வலி எடுக்கும்.. என்னக்கொடுமை என்று பசியோடு அலைந்ததுதான் மிச்சம். தெருவேறக்கடைகளில் சாப்பிடலாம், நன்றாக இருக்கும் என்றார் எங்களின் டிரைவர். சரி பார்க்காலாம் என்று காரை விட்டு இறங்கினால், அவி்ல் கடலைகளை திருவிழாவின் போது கூர் கூராகக் கொட்டிவைத்திருப்பார்களே, அப்படிக் கொட்டிவைத்திருந்தார்கள் உணவுகளை மேஜையின் மீது. ஈ மொய்த்துக்கொண்டு் கார் கக்கிய புகைகளுக்கு மத்தியில் மூடிபோடாமல்…பசியால் செத்தாலும் பரவாயில்லை. இங்கே மட்டும் வேண்டாம் என்று அடம்பிடித்து, இரவில் ஹோட்டலுக்கு வந்து (ஒன்பது மணிக்குமேல் உணவில்லை)எதாவது கிடைக்குமா என்று பிச்சைக்காரத்தனமாகக் கேட்டத்தை நினைத்தால், சிரிப்புதான் வருகிறது.