அன்று காலை மிக உற்சாகமான பொழுது. நாங்கள் எரிமலையைப் பார்க்கப் புறப்பட்டோம். இதற்கு முன்பு பாலித்தீவில் எரிமலையைக் கண்டதுண்டு. அது இறந்துபோன எரிமலை. அதன் அருகே உணவகங்களை அமைத்து சாப்பிட வைத்தார்கள். இறந்து போன புலியின் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எப்படி சுவாரசியம் இல்லாமல் இருக்குமோ அப்படி இருந்தது அந்தச் சூழல். ஆனால் இது அப்படியல்ல. இன்னமும் உயிருடன் உறுமும் புலி. மத்திய ஜாவா பகுதியில் உள்ள இந்த மெராபி எரிமலை 2010-ஆம் ஆண்டு வெடித்ததில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
பயணத்தில் இன்னொரு சிறப்பு அங்கு எங்களை அழைத்துச்செல்லும் வாகனம். 1942ல் டச்சுக்காரர்கள் ஜப்பானியர்களின் தோற்றுவிட்டுச்சென்ற ராணுவ ஜீப்பில் பயணம். ஏறக்குறைய 70 வருடங்களுக்குப் பின்பும் நல்ல நிலையில் இருந்தது. யாரோ ஒரு இராணுவ வீரன் இந்நாட்டு மக்களை ஆள இந்த வண்டியில் முன்பு பயணம் செய்திருப்பான் என்ற எண்ணமே கிளுகிளுப்பாக இருந்தது. ‘என்ன வாழ்க்கடா இது’ என சொல்லிக்கொண்டேன்.
எரிமைலை வெடிப்பு என்பது பல உயிர்களையும் சொத்துகளையும் அழிக்கக்கூடியதாக இருந்தாலும் வெடித்து முடித்தப்பின் அதில்கிடைக்கும் வளத்தைப் பெறவே மக்கள் இன்னமும் அங்கு வாழ விரும்புகின்றனர். குறிப்பாக எரிமலை லார்வா இறுகிக் கல்லானப்பின் அதை கட்டுமானங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். லார்வா கற்கள் நல்ல விலைக்குப் போகின்றது. அதோடு அந்த மண் விவசாயத்துக்கு ஏற்றது. எங்கள் வழிக்காட்டியான கர்டி எரிமைலை மண்ணின் மகிமையை உள்ளூர் பாடலொன்றின் மூலமாக விளக்கிக் கொண்டே வந்தார். ‘கல்லை ஊன்றினாலும் ஏதாவதொன்று அதில் முளைத்து வளரும் மண்’ என்ற வரி அந்த பூமியின் சக்தியை விளக்கியது.
நாங்கள் இரண்டு ஜீப்பை வாடகைக்கு எடுத்தோம். ஒரு ஜீப்பில் நான் , தயாஜி , மணிமொழி , ஈஸ்வரியும் மற்றொரு ஜீப்பில் குழலி, யோகி, சந்துருவும் ஏறிக்கொண்டோம். பயணம் திடுக்கிட வைக்கும் வளைவுகளைக் கொண்டிருந்தது. சில சமயம் 90 டிகிரிக்கு சற்றுக்குறைவாக சாய்ந்து சென்றது. எங்கள் இரு புறமும் லார்வா. அங்கு முன்பு ஓடிய நதியில் எரிமலைக் குழம்பு புகுந்து முற்றிலும் பெரும் பள்ளமாகக் காட்சியளித்தது. சேதங்களை விளக்கும் வண்ணம் சிதைந்த பொருள்களையும் எலும்புக்கூடுகளையும் வைத்தே பயண பாதையில் ஒரு சின்னஞ்சிறிய நினைவகம் வைத்திருந்தார்கள். எரிமலைப் பிரதேசத்திற்கு வாகனம் ஓட்டிவந்த வழிகாட்டி சுவாரசியமானவர். புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். இந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலானவை அவர் பதிவு செய்தவைதான். மலேசியாவுக்கு அவர் ஏற்கனவே வந்துள்ளதால் இங்குள்ள உணவு வகைகள் குறித்து அறிந்து வைத்திருந்தார்.
எரிமலை வெடித்தால் தப்பிப்பதற்கென்று பதுங்கு குளிகள் செய்து வைத்திருந்தார்கள். 2010ல் எரிமலை வெடிப்பு மிகப்பெரியது என்பது நெரும்புக்குழம்பு அந்தக் குளிகளிலும் புகுந்து அனைவரையும் கொன்றிருந்த கொடூரம் தெரியவந்தது. பயணம் நெடுகிலும் நாங்கள் சுவாச கவசம் அணிந்தே இருந்தோம். தூசு மண்டலம் நிரம்பிய பகுதி அது.
நான்கு வருடங்களுக்குப் பின்பும் சில இடங்கள் புகை வந்துகொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட துளையில் கை வைத்துப்பார்க்கச் சொன்னார் எங்கள் வழிக்காட்டி. 2 வினாடிக்குமேல் தாங்க முடியவில்லை. உள்ளே உஷ்ணக்காற்று வீசியது. நாம் இருப்பது எரிமலையின் அடிவாரம் என்ற நினைவு அவ்விடத்தை விட்டு நீங்கும் வரை நீங்கவில்லை. வழிக்காட்டியிடம் , “எரிமலை வெடிக்கும் முன் அதன் எச்சரிக்கை மக்களுக்குத் தெரியும்தானே பின்னர் ஏன் தப்பிச் செல்வதில்லை” என்றேன்.
“தெரியும்தான். அரசாங்க எச்சரிகைக்களுக்கு முன்பே பயந்து மலையிலிருந்து தப்பி ஓடும் விலங்குகளையும் பறவைகளையும் கொண்டே இங்கு வாழ்பவர்கள் எரிமலை வெடிக்கப்போவதை கணித்து விடுவார்கள். அதன் பின் அரசாங்க அறிவிப்பும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஆனால் பலர் இங்கிருந்து நகர்வதில்லை. அதற்கு இரண்டு காரணம். ஒன்றாவது, இந்த மண்ணின் வளத்தில் அவர்கள் உருவாக்கிய செழிப்பை விட்டு அகல மனம் வராது. இரண்டாவது எரிமலையில் சாவதை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியென நினைக்கின்றனர்.”
எனக்கு இரண்டாவது காரணம் மனதை நெடுநேரமாக உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னர் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பங்கோர் தீவில் உள்ள தமிழ் மீனவர்களிடம் 2003ல் சந்தித்துப் பேசியுள்ளேன். அங்கு எப்போதும் கடல் ஆபத்துண்டு. நடுகடலுக்குச் செல்லும் போது பயத்தைப் போக்க கஞ்சா குடித்துவிட்டே செல்கிறார்கள். கடலின் மரண பயம் அவர்களைத் தொற்றுவதுண்டு. ஆனால் தங்கள் மரணம் கடலில் முடிவதுதான் அந்த வாழ்வின் நியதி என அவர்கள் நம்புகிறார்கள். அதற்காகத் தயாராகவும் இருக்கின்றனர்.
மரணத்தை வாழ்வின் ஒரு பகுதியெனும் நிரந்தரமான உண்மையை ஒவ்வொருநாளும் நினைத்துப்பார்க்கும் சூழல் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?
– தொடரும்
(y)