ஜோக்ஜாவில் சோம்பேறிகள் இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? வேற வழி ! ஈராயிரம் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்து ஒருவன் போய்வந்து சொன்னாமல் நம்பாமல் மறுக்க முடியுமா என்ன? உண்மையில் அது உழைப்பவர்களின் தேசம்தான். ஜோக்ஜாவின் நான்கு திசைகளுக்கும் சென்று கண்டதில் என்னால் இதை உறுதியாகவே நம்ப முடிகிறது. உடல் உழைப்புத் தொழிலாளர்கள் எங்குமே காணக்கிடைக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் எருமையைக் கொண்டே உழுகிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பாரம் சுமந்து செல்கிறார்கள். மலேசியாவில் இதையெல்லாம் 10 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கலாம். விவசாயமெல்லாம் அழிந்து இன்று மலேசியத் தொழிற்பேட்டைகளில் புகை மூட்டங்களுக்கு மத்தியில் வேறு விதமான உழைப்பு.
கம்பத்தில் இருக்கும் போது நானும் பயிர்களை விளைய வைத்துள்ளேன். விவசாயம் ஒரு அவசரமற்ற உழைப்பு. ஓர் எருமையை ஓட்டிச்செல்பவனிடம் அந்த நிதானத்தைப் பார்க்கலாம். மண்ணுக்கும் அவனுக்குமான தொடர்பு அந்த உழைப்பில் இழையோடியிருக்கும். இயந்திரங்களில் உழல்பவர்களிடம் இருக்கும் அவசரமும் படபடப்பும் முழுக்கவே பொருளியல் சார்ந்தவை. கடந்த காலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கம்பத்தில் மண்ணில் புரண்டு உழைத்தபோது இருந்த மன, உடல் வலிமை இப்போது கணிசமாகக் குறைந்தே இருக்கிறது. ஜோக்ஜா விவசாயிகள் இன்னமும் முதுகெலும்பு வளையாமல் நடப்பதைப் பார்க்க முடிந்தபோது பொறாமையாக இருந்தது.
அவ்வூரில் பிச்சைக்காரர்களும் இல்லை என்றால் சிலர் ஆச்சரியம் அடையளாம். நான் பார்த்தவரையில் அங்குப் பிச்சைக்காரர்கள் இல்லைதான். சில வயது முதிர்ந்த அங்கவீனர்கள் நம்மிடம் கையேந்துகிறார்கள். அதையெல்லாம் பிச்சை என சொல்லமுடியாது. இயலாதவனுக்கு இயன்றவன் உதவ வேண்டும் என்பது நியதி. நியதியையெல்லாம் உதவியில் சேர்த்துக்கொள்ள முடியாது. அதேபோலதான் சாலை ஓர கலைஞர்களையும்.
லண்டனின் சில இடங்களில் ஒரு காட்சியைக் கண்டுள்ளேன். யாராவது ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்து ஏதாவது இசைக்கருவியை மீட்டிக்கொண்டிருப்பார். அவ்விடத்தைக் கடப்பவர்கள் தங்களால் இயன்ற பணத்தை அவருக்குப் போட்டுவிட்டுச் செல்வர். மற்றபடி அக்கலைஞன் நம்மை நாடிவந்து பணம் போடும்படியெல்லாம் கேட்பதில்லை.
இசை என்பது அவன் அறிந்த கலை. அதை பொதுமக்கள் கூடுமிடத்தில் செய்துகாட்டி மகிழ்விக்கிறான் கலைஞன். விரும்புவர்கள்ஜோக்ஜாவில் வணிகவீதிகளில் இசைக்கருவியை மீட்டிக்கொண்டு பாடிச்செல்கின்றனர்.
வரிகளின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் உள்ளே ஒரு சோகம் நிரம்பியிருக்கிறது. அப்படி ஓர் இந்தோ பாடல் நாங்கள் சுற்றிக்கொண்டிருந்த வணிக வீதியில் தமிழ்ப்பாடல் ராகத்தில் கேட்டது. தயாஜி அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். தன்னை அப்பாடகன் என்னவோ செய்துவிட்டதாகக் கூறினார். அவருக்கு தன்னாலான வெகுமதியையும் கொடுத்தார். அதுதான் கலைஞனின் மனம். பரபரத்த சாலையில் எதையும் கண்டுக்கொள்ளாமல் கூட்டத்துக்கு மத்தியில் இதுபோன்ற பாடகர்கள் நகர்வது சக கலைஞன் ஒருவன் தன்னை அறிந்து வைத்திருப்பான் என்ற நம்பிக்கையில்தான்.
வணிகச்சந்தையில் சந்துரு Bongo drum ரக வாத்தியக்கருவியை வாங்கியிருந்தார். எங்கள் நீண்டப்பயணம் தொடர அந்தக் கருவிதான் அதற்கு மேல் துணையாக இருந்தது எனலாம். சந்துரு தாளம் அடிக்க ஆளாலுக்குப் பாடத்தொடங்கினோன். எனக்குப் பாடுவது பிடித்தமானது. என் நினைவில் குறைந்தது 500 பாடல்களாவது இருக்கும். சில இடங்களில் வரிகள் தப்பியிருக்கும். அதனால் என்ன நாமே ஒரு வரியைப் போட்டு ஒப்பேற்றி பாடிவிட வேண்டியதுதான். எங்கள் பாடலில் வேன் குழுங்கியது. வழிகாட்டியும் ஓட்டுனரும் எங்களோடு இணைந்து கைத்தட்டி பாடினர். இதே போல பொது இடத்தில் பாடி பணம் சேகரிப்பதென முடிவெடுத்தோம்.
ராகம், தாளம் என எது குறித்தும் கவலையில்லாது பலப்பாடல்களை எடுத்துவிட்டோம். அப்படியே அது பாடல் போட்டியாக மாறி ஆண்கள் ஒரு குழுவும் பெண்கள் ஒரு குழுவுமான பிரிந்து விட்ட எழுத்திலிருந்து பாடலைத் தொடங்கும் போட்டியை நடத்தினோம். ஐந்நூறு பாடல்களை அறிந்த மேதை இருக்கும்போது ஆண்கள் குழுவை தோற்க விற்றுவிடுவேனா என்ன. பெரும் புள்ளி வித்தியாசத்தில் எங்களுக்கே வெற்றி.
சந்துரு நன்றாகப் பாடக்கூடியவர். மெல்லிசை பாடல்களே அவர் தேர்வு. 10 ஆண்டுகளுக்கும்
மேலாக நான் அவரை அறிந்து வைத்திருப்பவன். என் நினைவில் மெல்லிசையைத் தவிர அவர் வேறு பாடல்களைப் பாடி பார்த்ததில்லை. யோகிக்கு பாடும் போது சட்டென வேறொரு இனிய குரல் வந்துவிடுகிறது. நினைவில் தப்பியிருக்கும் நல்லப்பாடல்களை கொண்டுவந்துவிடுகிறார். குழலிக்குப் பாடத்தெரியும் என எனக்கு அப்போதுதான் தெரியும். ஒரு குழந்தையின் குரல் அவருக்கு. “போற்றிப்பாடடி பொண்ணே” என அவரை பாட விட்டு விட்டு சிவாஜிகணேசன் போல கேட்டுக்கொண்டிருக்கலாம். மணிமொழி முழுமையாக ஒரு பாடலைப் பாடி முடித்தார். என்னுடன் சேர்த்து அவரும் பாடல்களை நினைவு வைத்து கெட்டுப்போயிருந்தார். தயாஜி இதுவரை கேட்காத பாடல்களையெல்லாம் பாடிக்கொண்டிருந்தார். ஈஸ்வரியின் குரல் கேட்கவில்லை. மௌனமாகப் பாடிக்கொண்டிருந்திருக்கலாம்.
மொத்தத்தில் ஆர்பாட்டத்துக்குக் குறைவில்லாம் இரண்டு, மூன்று மணி நேர பயணங்கள் அந்த மூடுந்தில் (வேன்) சென்றுக்கொண்டிருந்தது. அந்த வேனும் வித்தியாசமானதுதான். பேருந்துக்கும் வேனுக்கும் கலப்பில் பிறந்தது போல நீளமாகவும் வசதியாகவும் இருந்தது. கடைசியாக குளிர்ந்த காற்றுவிச்சிய ஒரு மலை முகட்டில் அமர்ந்துகொண்டு முழுமையாக பொதுமக்களுக்கு ஒரு பாடலைப் பாடி முடித்தோம். “காசு மேல காசு வந்து…” என நான் தொடங்கே அப்படியே சின்ன நடனத்தோடு அனைவரும் தொடர பயணிகள் சிலர் படமெல்லாம் எடுக்கத்தொடங்கினர். பாடி முடித்தப்பின் பார்த்தோம், தவறியோ தெரிந்தோ யாரோ 500 ரூபாயைக் கீழே போட்டுச் சென்றிருந்தனர். எடுத்துக்கொண்டோம். அது கலைக்கான வெகுமதி.
சிரிப்பில்லாத இடத்தில் கலை வளராது என உறுதியாக நம்புபவன் நான். நகைச்சுவை உணர்வும்
குழந்தை மனமும் இல்லாத உள்ளத்தில் கலை பிறப்பதில்லை. வல்லினம் நண்பர்கள் எப்போதும் இணைந்தாலும் இதுபோன்ற சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. பொதுவில் ஏதோ தீவிரவாதக் குழு போல எங்களைப் பார்த்தாலும் யாரின் கணிப்புக்கும் நெருங்காத குணத்தைதான் வல்லினம் குழுவினர் கொண்டிருக்கின்றனர். முதலில் இந்தச் சமூகம் இலக்கியவாதிக்கென்று கட்டி எழுப்பியுள்ள ஞான முகத்தை உடைப்பதே எங்கள் பணி. இலக்கியம் படைப்பவன் எப்போதும் ‘உம்’மென முகரையை வைத்துக்கொண்டு, எதைப் பேசினாலும் ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்தவன் போல ஞான உபதேசம் செய்துக்கொண்டு, வெள்ளை நிற தொள தொள உடைகளை அணிந்துகொண்டு இருக்கும் ஜோடனைக்கெல்லாம் வல்லினத்தில் இடமே இல்லை.
பயணம் முடிந்து இரவு திரும்புபோது சாலை சமிக்ஞையில் ஒரு வெளிச்சம். சமிக்ஞைகளிலும் சில கலைஞர்களை மூங்கிலானா வாத்தியக்கருவிகளை வாசித்துக்கொண்டு இருப்பதைக் காண முடியும். ஆனால் அன்று பெண் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்களும் வண்ணங்களும் அந்த இரவில் தனித்த கிளர்ச்சியைக் கொடுத்தது. ஆடி முடித்தவுடன் சிலரிடம் பணம் கேட்டாள். கொடுத்தனர். சிலர் மறுத்தனர். எங்களிடம் அப்போதிருந்த சிக்கல் எல்லாம் சில்லரை இல்லாததே. அவளை அழைத்தோம். எந்த வாகனத்திலும் தன் உடல் படாமல் குதித்து வந்தாள். அவள் முகத்தை அருகில் பார்த்தேன். நிச்சயம் அவள் ஜாவா பெண்ணாக இருக்கவே முடியாது. ஜாவா மக்கள் ஐந்து அடிக்கும் உயரம் குறைந்தவர்கள். கூர்மையான தட்டையான முக அமைப்பு உள்ளவர்கள்.
இவள் அழகி.
கையில் இருந்த மலேசிய ரிங்கிட்டைக் கொடுத்தோம். பெற்றுக்கொண்டு வந்ததுபோல குதித்துச் சென்றாள். வேன் புறப்பட்டது. மலேசிய ரிங்கிட்டை தன் தோழனுடன் ஆவல் பொங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.
பணம் சிலரிடம் இருக்கும்போதுதான் மதிப்பைப் பெறுகிறது.
தொடரும்
ரோட்டில் கூத்துக்காட்டி கும்மாளமெல்லாம் போட்டு, ஊர் விட்டு ஊர் சென்று கௌரவப் பிச்சையெல்லாம் எடுத்துவிட்டு – கலையாமே.! நல்லாயிருக்கே நியாயம்..
அற்புதம் அற்புதம்.. ரொம்ப ஜாலியாக இருந்தது. உங்களோடு நானும் பயணித்தேன். சூப்பர். உங்களின் மகிழ்வின் ஆரவாரத்தை நானும் உள்வாங்கிக்கொண்டேன்.