2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
நான் ஓர் எழுத்தாளன். மொழியைப் பாதுகாக்க நான் எழுத்தாளனாக இருக்கிறேனா எனக்கேட்டால் திட்டவட்டமாக ‘இல்லை’ என்பதே பதில். ஆனால், நான் மொழியின் மூலமாக சில விடயங்களைச் செய்ய நினைக்கிறேன். ஓர் ஓவியன் வண்ணங்களைக் கொண்டு என்ன செய்ய நினைக்கிறானோ… அதையே. ஆனால், இந்த மொழியின் மீது எனக்கு தீராத மோகம் உள்ளது. அதனால் மட்டுமே வேறெந்த கலை வடிவத்தைவிடவும் எழுத்து எனக்கு நெருக்கமாகிறது. வாசிப்பு எனக்கு அவசியமாகிறது.
அ.ரெங்கசாமி அவர்களின் ‘விடிந்தது ஈழம்’ வரலாற்று நூலை செம்பருத்தி பதிப்பில் இலவசமாகக் கொண்டுச்செல்ல அதன் பணிகளைச் செய்தபோது எனக்கும் அவருக்கும் மொழி சார்ந்த விடயத்தில்தான் கொஞ்சம் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. கிரந்த எழுத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். அதற்கான நியாயங்கள் அவரிடம் இருக்கவே செய்தன. பாக்கிஸ்தான் என்பதை பாக்கிசுத்தான் என்றே எழுதினார். அதேபோல எம்.ஜி.ஆர் எனும் பெயரை எம்.சி. ஆர் என எழுதினார். எனக்கு இதில் கொஞ்சம் சிக்கல் இருந்தாலும் அதை பெரும் குறையாகப் பார்க்கவும் முடியவில்லை. இலங்கை எழுத்தாளர்கள் பலரும் இன்னமும் இவ்வாறான எழுத்து முறையைத்தான் பயன்படுத்துகின்றனர். ஜப்பான் என்பதை யப்பான் என எழுதுவதை நானே பலமுறை வாசித்துள்ளேன். ஆனால் அதில் ஒரு நேர்த்தி இருக்குமே தவிர வலுக்கட்டாயம் இருக்காது. வேறெந்த அறிஞர்களின் கூற்றைவிடவும் நமது உச்சரிப்பு முறையே ஒரு சொல் உருவாவதற்கான நீதிபதியாக உள்ளது. எந்த இலக்கண நூலும் இலக்கியம் மற்றும் மனிதர்களின் பேச்சு வழக்கை கணக்கில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்குமே தவிர இலக்கணத்தை அடிப்படையாக வைத்து மொழியும் இலக்கியமும் பிறக்கவில்லை என்பது உறுதி.
‘காகம்’ என்ற சொல்லில் இருக்கும் இரண்டாவது ‘க’ வை நாம் வழக்கமான முறையில் உச்சரிப்பதில்லை. அதை நமக்குச் சொல்லிக்கொடுத்தது யார்? எதற்கும் சிரமப்பட்டு ‘காகம்’ என்ற சொல்லில் உள்ள இரண்டு ‘க’வையும் ஒரே ஓசையில் ஒலிக்க முயன்று பார்ப்போம். நிச்சயம் அது நம் நாவில் ஒட்டாது . காரணம் நாம் இலக்கணம் கற்றதால் அல்ல. தமிழை அடிப்படையாகக் கொண்டு சாமானிய மனிதன் ஒவ்வொருவருக்கும் இயல்பாக அவன் மூளையில் பதிவான விடயம் அது. மேற்சொன்ன ‘காகம்’ உதாரணத்தின் அடிப்படையில் இச்சொல்லைச் சொல்லிப்பார்க்கலாம்.
பீசுமர் – பீஷ்மர்
முதல் சொல்லில் ‘ஷ்’க்குப் பதிலாக ‘சு’ சேர்க்கப்பட்டதால் ‘பீ ‘ என்ற அதற்கு முந்தைய எழுத்தின் தடித்த ஓசையும் அவ்வாறு ஒலிகாமல் வழக்கமான ஓசையில் அடங்கிவிடுகிறது. இப்போது ஒரு கேள்வி எழலாம். “அப்படியானால், கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவரை வரவேற்கிறீர்களா?” என கோபமும் நண்பர்களுக்கு வரலாம். முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுப்படுத்திக்கொள்வோம். காலச்சுவடு இதழில் வந்த கட்டுரையில் கிரந்தம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
“கிரந்தம் என்பது வடமொழியை எழுதத் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு எழுத்து முறை (லிபி – வரிவடிவம்). முற்காலப் பல்லவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்ததாக அறிஞர்கள் கருதும் இந்த எழுத்து முறை, பிற்காலச் சோழர்கள் காலத்தில் தரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் உள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள், தற்காலத் தமிழ், முற்காலத் தமிழ் வட்டெழுத்துகள் எனப் பல்வேறு கலப்பு முறைகளில் காணப்படுகின்றன. ” (காலச்சுவடு 132). இதில் ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிரந்தம் சமஸ்கிருத எழுத்து அல்ல. மாறாக சமஸ்கிருதத்தில் உள்ள ஓசைகளை தமிழில் பயன்படுத்த தமிழ் எழுத்துருவுக்கு ஏற்ப தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒலி வடிவம். அது வடமொழி அல்ல.
அடுத்தப்பிரச்னை இன்று தமிழில் அதைப்பயன்படுத்தலாமா என்பதுதான். நான் முடிந்தவரை கிரந்த எழுத்துகளை தவிர்த்தே படைப்புகளை உருவாக்குகிறேன். நல்ல தமிழ்ச் சொற்களை உபயோகிக்க எத்தனிக்கிறேன். ஆனால், ஊர்களின் பெயர்களையும் அறிமுகமான நபர்களின் பெயர்களையும் அவர்கள் உருவாக்கியுள்ள ஓசையின் அடிப்படையில் எழுதவே எனக்கு எண்ணமுண்டு. அதற்கான வசதி பிற மொழிகளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதற்கான வசதிகொண்ட தமிழில் அதை முறையே பயன்படுத்துவது தவறல்ல என்றே நினைக்கிறேன்.
இந்த விடயத்தில் ரெங்கசாமி அவர்கள் ஓரளவு பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். அவர் ஊர்களின்/ நபர்களின் பெயர்களை கிரந்தம் இல்லாமல் எழுத முயல்கிறாரே தவிர தமிழ்ப்படுத்த முயலவில்லை. ஆனால் சில ‘தமிழ் வெறியர்கள்’ (அவர்கள் அவ்வாறுதான் அழைத்துக்கொள்கின்றனர்) நிறுவனங்களின் பெயர்களையே தமிழ்ப்படுத்தி விடுகின்றனர். உதாரணமாக Microsoft என்பதை மைக்குரோசாப்டு, மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் என எப்படியும் தமிழில் எழுதலாம். ஆனால் “நுணுக்கு மென்மை” என வலிந்து எழுதினால் அது அந்த நிறுவனத்தைக் குறிக்கப்போவதில்லை. நமது சுய இன்பத்துக்காக வேண்டுமானால் அதை செய்துக்கொள்ளலாம். டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகின்றது என வாசித்துள்ளேன். எனவே தாராளமாக நாமும் அப்பெயரை பயன்படுத்தலாம்.
பெயரையும் ஊரையும் எழுதும் போது கிரந்தத்தைப் பயன்படுத்தலாம் என பெருஞ்சித்தனார் ஒப்புக்கொண்டபோதும் அதற்காக எழுந்த எதிர்ப்புகளை மறுப்பதற்கில்லை. இவ்விடத்தில் இன்னுமொரு சிக்கலும் உள்ளது. ரெங்கசாமி உட்பட பலர் எழுதும் புனைவுகளில் மிக எளிதாக தெலுங்கு, மலையாளம் போன்ற சில வேற்றுமொழிகள் சேர்ந்துவிடுகின்றன. ஆனால், அவையும் தமிழில் இருந்து உருவானவையே என்பது இவர்கள் வாதமாக உள்ளது. நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட திராவிட மொழியை ஆராய்ந்த மொழி ஆய்வாளர்கள் ஆதி திராவிடம் எனும் ஒரு மொழியிலிருந்து உருவானவைதான் திராவிட மொழிகள் அனைத்தும் எனக் கூறுகின்றனர். இதற்கு மாற்றான கருத்தும் இருக்கவே செய்கிறது.
உண்மையில் திராவிட மொழிக்குடும்பத்தில் உருவான இலக்கியங்களைவிடவும் தமிழில் உருவான இலக்கியங்கள் தொன்மையானவை. அதேபோல நோம் சோம்ஸ்கி தொல்காப்பியத்தை வாசித்தவரல்ல எனும் கூற்றும் பரவலாக உள்ளது. (இது குறித்து விரிவான ஆதாரங்கள் உள்ளவர்கள் விளக்கலாம்) இதன் அடிப்படையில் தமிழே திராவிட மொழிகளுக்கு வேர் எனும் கருத்தையும் முன்வைக்கின்றனர்.
முன்பே சொன்னது போல நான் மொழி ஆய்வாளன் அல்ல. ஆய்வாளர்களின் கருத்துகளே எனக்கு முக்கியம். அதில் ஆதாரங்கள் இருக்க வேண்டுமே தவிர உணர்ச்சி மிகுந்திருக்கக் கூடாது. உணர்ச்சிகளிடம் அறிவுகொண்டு பேசுவது சாத்தியமே இல்லை. ஆனால், ஒரு புனைவாளனாக என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். தமிழ் என்பது ஒன்றல்ல. ஒவ்வொரு நாடு,ஊர், வர்க்கம் சார்ந்து தமிழின் பேச்சு மொழி மாறுகிறது. ஒருவன் தான் பேசும் மொழியில் தன் வாழ்வை , இலக்கியத்தைப் படைப்பது அவனது முழு சுதந்திரம். “நீ இப்படித்தான் எழுத வேண்டும்” என்பது அதிகாரம். எந்த வடிவத்தில் இருந்தாலும் அதிகாரத்தை நாம் எதிர்க்கவே வேண்டியுள்ளது. புனைவுக்கான சுதந்திரத்தை விசாலமாக்கமாக்க வேண்டியுள்ளது.
சிலர் தூய்மை வாதத்தைக் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் ஒரு வாசகம், மொழிகிண்டல்களுக்கும், பிடிவாதங்களுக்கும், மொழிவெறிக்கும் ஊடாக புகுந்து பதில் சொல்வதாகக் கருதுகிறேன். பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்னதாக ஜெயமோகன் குறிப்பிட்ட அது இவ்வாறு ஒலிக்கிறது…
“எந்த தூய்மை வாதமும் இன்றியமையாததே, அது முன்னகர்வை சிதறலாக அல்லாமல் நிலைநிறுத்தும் நங்கூர சக்தி.”
– தொடரும்
Arumayana pathivu nanbare! Valtukkal. Dr.MU.VA; Dr.R.P.Sethupillai; A.K.Paranthamanar pondravargalin araichi noolgalil unggal vathangalai parkindren!For your info a theory claims a group called Dravidians by than known as Termins lived in the island of Creata;later the Termins became Termila eventually Tamila than to Tamil;the history is some 5000 yrs.The theory claims NEGROTTAS is the first race lived in India than to ASTROLYDES than to MONGOLS. Dravidians takes the fourth place!
நுணுக்கு மென்மை// haha