ஸ்ரீவிஜி கடிதம்

நவீன் உங்களின் பணி ஆசிரியர் தொழில். புத்தக வாசிப்பு, போதனை,எழுத்து,மொழி ஆதிக்கம் என தொடர் தேடல், கற்றல் உங்களின் திறனை வளர்த்து இலக்கியத்தின் பால் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டே இருக்கிறது. அது உங்களின் நிஜமான தேடலாகவும் பரிணமித்துள்ளது பாராட்டுக்குரியதே. இப்பாணி உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் பல ஆசிரியர்கள், எனக்குத்தெரிந்த வரையில், நான் சந்தித்தவரையில், இலக்கியத்தின் பால் தீவிரம் காட்டுபவர்கள் முன்னால் இன்னால் தமிழாசிரியர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அவர்களின் கைகளில் இலக்கிய உலகம் இயங்குவதாகவும் ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. அவர்கள்தான் பெரும்பாலும் எழுத்தாளர்கள் இங்கே.

அவர்களும், அடுத்தவர் எழுத்துகளில் இலக்கணம் இல்லை, பிழை உள்ளது, சந்தப்பிழைகள் உள்ளன, சரியான வாக்கிய அமைப்புகள் இல்லை, இலக்கியம் தெரியவில்லை என நேராகவும், மறைமுகமாகவும் எங்களைப் போன்ற வளரும் எழுத்தாள வாசகர்களை தூர்வாருகிறார்கள். நாங்கள் என்ன யூனிவர்சிட்டிவரையிலா தமிழ் பயின்றோம். தமிழ் கற்றலிலா எங்களின் பணி சம்பந்தப்பட்டுள்ளது.? நேரமெடுத்து, சொந்தமாகக் கற்று, மனதில் தோன்றுவதை முகநூல் மற்றும் ப்ளாக் வாயிலாக பதிவேற்றி அங்கே வரும் ஒரு சிறிய கூட்டத்தின் விமர்சனங்களின் வழி எங்களை நாங்களே செம்மைப்படுத்தி; தொடர் வாசிப்பு, இலக்கியம், எழுத்து, நல்ல படைப்பாளிகள், நல்ல சினிமா என அடையாளங்கண்டு, ரசனை உணர்வுடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம். அதை இப்படி போகிற போக்கில் இடித்துரைத்து விளாசு விளாசு என்று விளாசினால் என்ன செய்ய.?

நீங்கள் மட்டுமல்ல நவீன், பல எழுத்துத்தாளார்களுக்கு இப்படி சாதா நிலையில் உள்ள சக வாசக எழுத்தாளர்களை நண்பர்களை வெறுப்பேற்றுவது ஒரு வேலையாகவே மாறிவிட்டது. எப்போதுபார்த்தாலும் சாதா நிலையில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதே கிடையாது.

//இளம் தலைமுறையிடம் (நான் உட்பட) பார்க்கும் பலவீனமும் இதுதான். நேரம் இல்லை என்பதை மிக எளிதாகச் சொல்லத் தெரிகிறது நமக்கு. நமது முகங்கள் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் மூழ்கி இருக்க வைக்கவும், திரையரங்குகளில் செலவிடவும், வெட்டிக்கதைகள் அடிக்கவும், தாராளப்படுத்துகிறோம். ஆனால், இலக்கியத்துக்கான காத்திரம் நம்மிடம் தணிந்து இருக்கிறது என்பதுதான் வருத்தம். அது குறித்தெல்லாம் நம்மிடையே கொஞ்சம் கூட வெட்கம் இருப்பதில்லை. அதையும் ஒரு ஸ்டேட்டஸ்டாக முகநூலில் போட்டு ‘லைக்குகள்’ வாங்கி விடுவோம்.// இங்கே நீங்கள் //நான் உட்பட// என்கிற வாசகத்தை தப்பித்தலுக்காக பயன்படுத்தியதாகவே எமக்குப்படுகிறது. நீங்கள் அப்படி இருந்தால் எப்படி உங்களின் ஆழ்மனதிலிருந்து இதுபோன்ற வாசகங்கள் உதிக்கும். ?

ஸ்ரீவிஜி.

அன்புமிக்க ஸ்ரீவிஜி. உங்கள் கருத்துக்கு நன்றி. எனது கட்டுரையில் ஏதோ ஒரு பகுதி உங்களைச் சுட்டுவதாக நீங்கள் உணர்ந்துள்ளது புரிகிறது. சில விசயங்களைத் தெளிவு படுத்தும் முன் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என் புளோக் கடந்த ஒரு வாரமாக தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதை அதை திறக்க முனைந்திருந்தால் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

முதலில் எதிலிருந்தும் யாரிடமிருந்தும் தப்பிக்கும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. காரணம் நான் என் கருத்துகளால் உருவாகும் இழப்புகள் குறித்து கவலைப்படுவதே இல்லை. எனது கருத்தை நான் முழு பிரக்ஞையுடன் பதிவிடுகிறேன். அதனால் யாராவது புண்படுவார்கள் என்றோ… எனவே தப்பிக்க சில சொற்களை செருகி வைக்கலாம் என்றோ நான் மெனக்கெடுவதில்லை. உண்மையாகவே நான் பொது ஊடகங்களை அதிகமே பயன்படுத்துகிறேன். அதன் காரணமாகவே அவசியமில்லாத பொழுதுகளில் நான் அதிலிருந்து முற்றிலுமாக நீங்கியிருக்கிறேன். சில சமயம் அபத்தமான கருத்துகள் இருந்தால் அதில் பதிவிடப்போய் காலத்தை அந்த மொண்ணையான விவாதம் அழித்துவிடுவதுண்டு. என்னை நன்கு அறிந்த நண்பர்களுக்குத் தெரியும் நான் கதைப்பேசுவதில் பிரியம் உள்ளவன். பயணமும் கதையாடுதலும் எனக்கு விருப்பமானவை. எனவே நான் என்னையே பலசமயம் திட்டிக்கொள்வதுமுண்டு.

முதலில் உங்கள் குற்றச்சாட்டு என்ன என்பது எனக்கு புரியவில்லை. நான் இதுவரை யாருடைய இலக்கணப்பிழை குறித்தும் திட்டியதில்லை. சில நண்பர்களிடம் நேரடியாகவே அவர்கள் அவசரத்தால் உருவாகும் சாதாரண பிழைக்களைச் சுட்டிக்காட்டியுள்ளேன். கடிந்துகொள்ளாததற்கு மிக முக்கியக் காரணம் நானும் எழுத்துப்பிழைகள் செய்பவன்தான். முற்றிலுமாகப் பிழைகளை இன்றுவரை என்னால் நீக்க முடிவதில்லை. அதனால் யாருடைய இலக்கணப்பிழைகளையும் இடித்துரைக்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. (சுட்டிக்காட்டியதுண்டு) ஆனால், இதில் ஒரு முரண் உண்டு. “பல்கலைக்கழகத்திலா பயின்றோம்?” எனக்கேட்டுள்ளீர்கள். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பயின்றவர்கள் எல்லாம் பிழையில்லாமல் எழுதுகிறார்கள் என நீங்கள் கணித்திருந்தால் அது தவறு ஸ்ரீவிஜி. நான் சொல்லவருவதெல்லாம்/ விவாதிப்பதெல்லாம் கருத்து தொடர்பானவையே.

முதலில் சாதா நிலை எழுத்தாளர்கள் எனச் சொல்லியுள்ளீர்கள். அப்படி ஒரு குழு இருப்பது நீங்கள் சொல்லியே எனக்குத் தெரியும். ஆரம்பக்கால வாசகன் அல்லது எழுத்தாளன் என வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் எத்தனை ஆண்டுகள் வரை ஒருவன் ஆரம்ப வாசகன் என புரியவில்லை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையில் வாசகர் கடிதம் எழுதிக்கொண்டு , “நான் ஆரம்ப நிலை வாசகன்” எனச்சொல்பவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்கள் எப்போதுமே அப்படித்தான் இருக்கப்போகிறார்கள். எனது வாதம் அவர்களை நோக்கியல்ல. அதேபோல அவர்களைப் பொருட்படுத்தி நான் எந்தக்கருத்தையும் சொல்லவும் இல்லை. நீங்கள் உங்களை அவர்களில் ஒருவராகக் கருதினால் நான் சொன்ன வார்த்தை உங்களுக்கானதல்ல என இங்கேயே முடிவெடுத்து இதற்கு மேல் நீங்கள் இதை படிக்க வேண்டாம். அப்படி நீங்கள் தேர்ந்த வாசகர் என நினைத்தால் தொடர்ந்து வாசியுங்கள்.

காதல் இதழ் தொடங்கியது முதல் நான் பலருடைய எழுத்துகளையும் கேட்டு, கெஞ்சி வாங்கி பிரசுரித்ததுண்டு. ஒரு நபரிடம் நல்ல எழுத்து வருமென்றால் முடிந்தவரை மெனக்கெட்டு அவரிடம் படைப்பை வாங்கி பதிப்பிப்பதுண்டு. அப்படித்தான் மஹாத்மனிடம் சிறுகதைகள் வாங்கினேன். அப்படித்தான் பா.அ.சிவத்தை மலாய் கவிதைகளை மொழிப்பெயர்க்க வைத்தேன். அப்படித்தான் பாலமுருகனிடம் குழந்தைகள் வாழ்வை மையப்படுத்தும் சினிமா கட்டுரைகளை எழுதச்சொன்னேன். அப்படித்தான் யோகியின் வாழ்க்கை அனுபவத்தை கேட்டுக்கேட்டு நூலாக்கினேன். பாண்டியனிடம் மலாய் இலக்கியம் குறித்து எழுதச்சொன்னதும், கங்காதுரையிடம் சீன இலக்கியம் குறித்து எழுதச்சொல்வதும் , இன்று நவீன் செல்வங்கலை மற்றும் விஜயாவிடம் எழுதுங்கள் எழுதுங்கள் எனக் கேட்டுப் பிரசுரிப்பதும் அவர்களின் ஆற்றலை அறிந்துள்ளதால் மட்டுமே. அவர்களிடம் ஆற்றல் இல்லாமல் எவ்வளவு முக்கினாலும் இத்தனை அற்புதமான ஆக்கங்கள் வராது. ஸ்ரீவிஜி, என்னால் யாரையுமே எழுத்தாளராக்க இயலாது. அவர்கள் இயல்பாகவே திறமையானவர்கள். அதை நான் கண்டடைகிறேன். அதை வெளிப்படுத்த முயல்கிறேன். ஒரு பிரகாச விளக்கில் ஒட்டியுள்ள நீராவியை ஊதி அகற்றுகிறேன். அவ்வளவே. பின்னர் ஒளி எல்லோருக்குமே தன்னால் தெரியவரும். ஒளி யாரையும் தேடிப்போகாது. அதன் பிரகாசமே சுற்றியுள்ளவரை ஈர்க்கும்.நானும் அவர்களுடன் கூடி நின்று அவ்வொளியை ரசிக்கிறேன்.

ஆனால் எனக்கு இது போதுமா என்றால் போதாது. அவ்வளவு இருக்கிறது உழைக்க. அவ்வளவு மலேசிய வாழ்வில் தொடப்படாத பகுதிகள் உள்ளன. அவற்றை நிரப்ப இந்தத் தலைமுறை தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது. ஆனால், ஆற்றல் உள்ள பல இளம் எழுத்தாளர்கள் ஏதோ ஒரு எளிய திருப்தியில் முடங்கிவிடுகின்றனர். நான் அவர்களிடமிருந்து வரும் எழுத்து அடுத்தத் தலைமுறை இலக்கியப் பாய்ச்சலுக்கு ஓர் உந்துதலாக இருக்கும் என்றே அத்தனை மெனக்கெடுகிறேன். ஓர் இடைவெளியை இன்றைய சூழலில் நிரப்பும் போது அடுத்த தலைமுறை அதை தாண்டியே யோசிக்கும். என் எண்ணம் இதுமட்டுமே. மற்றபடி நூல் பதிப்பப்பதில் பணமெல்லாம் இந்நாட்டில் சம்பாதிக்க இயலாது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுவும் வல்லினம் நடத்தும் வெளியீட்டின் ‘கரார்’ தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதை என் பணியாகவே நான் முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன். இது குறித்து என்னிடம் புகார்கள் இல்லை. இதுவரை ஒருமுறைக்கூட நூல் பதிப்பது குறித்தோ, வல்லினம் அல்லது பறை நடத்துவது குறித்தோ ஓர் அங்கலாய்ப்புச் சொல்கூட என் நாவிலிருந்து வந்திருக்காது. காரணம் யாரின் கட்டளைக்கு அடிபணிந்தும் நான் இதைச்செய்யவில்லை. இதை செய்வதே என் முழுமையை அடையும் வழி. அதனால் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறேன். இதில் நான் வருந்துவது ஒன்றில்தான். முன்பு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக எழுதவும் புதிய இலக்கிய முயற்சிகள் செய்துப்பார்க்கவோ களம் இல்லை. பத்திரிகை ஆசிரியர்களின் புனிதத்தைப் போற்றும் தன்மை தடையாக இருந்தது. இன்று சுதந்திரமாகக் களம் இருந்தும் ஒரு மெத்தனப்போக்கு உள்ளது. இதற்கு முந்தைய தலைமுறையினரிடம் கலை குறித்த பிரக்ஞை அதிகம் இல்லாத போதும் படைப்புகளை உருவாக்க தீவிரம் இருந்தது. இன்று கலை குறித்த பிரக்ஞை உண்டு ஆனால் முனைப்பு குறைவாக உள்ளது என்பதே வருத்தம். நமது நேரங்களை மேற்சொன்ன பொது ஊடகங்கள் அபகரிக்கின்றன. ஆனால் அவற்றை விட்டு முற்றிலும் நீங்கவும் முடியாது. அதற்கான தேவை இன்று அவசியமாகிவிட்டது.

இந்த நிலையில் தகுதியும் தரமும் கொண்ட எழுத்தாளர்கள் இந்த பொது ஊடங்களில் மாட்டிக்கொள்வதைதான் வருத்ததுடன் சொல்லியிருக்கிறேன். கடந்த ஆண்டு இறுதி முகநூல் விவாதம் எதிலும் பங்குகொள்வதில்லை என முடிவெடுத்து இப்போதுவரை கடைப்பிடிக்கிறேன். முகநூல் விரிவான மொழி ஆளுமையை நசுக்குவதாக உணர்ந்த சமயம் இம்முடிவை எடுத்தேன். விரிவான விளக்கங்களுக்கு அவ்வூடகம் ஏற்றதல்ல என்றே தேடிவரும் எந்த விவாதத்திலும் கலந்துகொள்வதில்லை. ஆனால், நேரம் இல்லை எனச்சொல்லும் எழுத்தாளர்கள் அதில் அமிழ்ந்து கிடப்பதுதான் வருத்தம். அதற்கு காரணம் அவர்களுக்கு அங்கு ‘லைக்’ கிடைக்கிறது. உடனடியான பின்னூட்டங்கள். உடனடியான பாராட்டுகள். என் அனுபவத்தில் சொல்கிறேன். முகநூல் லைக்குகளை நான் நம்புவதே இல்லை. அவ்வாறு லைக் போடும் பலரிடம் நான் குறிப்பிடும் நிகழ்வு குறித்து பேசினால், ‘அப்படியா?’ என விழிப்பார்கள். அல்லது வேறொன்றை தவறாகப் புரிந்துவைத்திருப்பார்கள். எனவே 50% பேராவது கருதி படிப்பார்கள் என நம்பிக்கையில் கட்டுரைகளைப் பகிர்வதுண்டு.

ஸ்ரீவிஜி, நான் மீண்டும் சொல்கிறேன். சாதா எழுத்தாளர், வாசகர் என ஒரு குழு ஜீவிக்கிறது என நான் அறிந்திருக்கவில்லை. நான் அவர்களுக்காக எதையும் சொல்லவில்லை. நான் சொல்வது ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கானது. அவர்கள் எழுத வேண்டும் என நான் முழு மனதுடன் விரும்புகிறேன். நான் எழுதுவதைக் காட்டிலும்…

ம.நவீன்

(Visited 82 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *