எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 15

viruthuவிருதென்பது நமக்குச் சாதகமானவர், நம் கருத்துடன் ஒத்துப்போபவர் , ஒரே அலைவரிசையுடன் இயங்குபவர் என ஏதாவது ஒன்றுக்குள் அடக்கிப்பார்க்கும் கொடுக்கல் வாங்கல் அல்ல. அது அடையாளம் காட்டும் மீண்டும் மீண்டும் சமூகத்து நினைவுறுத்தும் முயற்சி. அ.ரெங்கசாமிக்கு மலேசிய இலக்கிய உலகில் போதுமான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறான ஒரு ஆளுமையை சமூகத்தின் முன் மீண்டும் கௌரவிக்க வேண்டியுள்ளது. அவ்வளவு உயர்வான பணிகளை அவர் செய்துள்ளார்.

கௌரவிப்பது என்பதிலும் எனக்கு தொடக்கத்தில் சில குழப்பங்கள் இருந்தன. ஒரு கோப்பையைக் கொடுப்பதன் மூலம் நாம் ஒருவரை கௌரவித்ததாகிவிடுமா என எண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு அதில் சில மனத்தடைகள் இருந்தன. முதலில் அதை போக்கியவர் ஆதவன் தீட்சண்யாதான். விருதுகளை நிறுவனமயமாக்காமல் எவ்வாறு தொடர்வது எனக்கூறினார். அதன் சாத்தியங்களைக் கூறினார்.

இதற்கிடையில் ஏற்கனவே அ.ரெங்கசாமியை ஆவணப்படம் செய்த பதிவு கைவசம் இருந்தது. அதே நேரத்தில் அவரும் தன் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் கடகடவென எழுதி முடித்திருந்தார். ஒரு பல்கலைக்கழக மாணவன் போல எழுதியதற்கு முறையாக கெட்டி அட்டை போட்டு , நகல் எடுத்துக்கொடுத்தார். இப்போது ‘கௌரவிப்பது’ என்றச்சொல்லுக்கு எனக்கு அர்த்தம் கிடைத்திருந்தது.  நான் இவ்விரு ஆக்கங்களையும் விருதில் இணைப்பது என முடிவெடுத்தேன். ஏற்கனவே ஜெயமோகன் கொடுக்கும் ‘விஷ்ணுபுரம் விருது’ நிகழ்வில் அவர் விருது பெருபவர்களின் நூலை வெளியீடு செய்வதின் நினைவு துணையாக இருந்தது. எழுத்தாளனுக்கு தன் நூலை வெளியிடுவதைவிட வேறென்ன கௌரவம் இருக்க முடியும்?

முதலில் ரெங்கசாமியிடம் இதுகுறித்து சொல்ல வேண்டாம் என இருந்தேன். பொதுவாகவே நான் ஒன்றைச் செய்வதென முடிவெடுத்தால் அதை செய்வதற்கான காலங்களை மிக திட்டவட்டமாக முடிவெடுத்து வைத்திருப்பேன். இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் மிக எளிதாக ஒரு நூலை உருவாக்கிவிட முடியும். ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தை மூத்த தலைமுறை அறியாததால் வழக்கமான பதற்றம் அவர்களிடம் இருக்கும். அது ஒரு பெரிய வேலையென பல ஊழல் பேர்வழிகளிடம் அதிக பணம் கொடுத்து ஏமாந்த கதையெல்லாம் கேள்விப்பட்டதுண்டு. ஒரு மூத்த எழுத்தாளர் நான் அவரது நூல் வேலையை நகர்த்தவே இல்லையென என்னிடம் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு இப்போதுவரை பேசாமல் இருக்கும் கதையெல்லாம் உண்டு.

ரெங்கசாமியிடமும் அந்தப் பதற்றம் இருந்தது. நான் அதுகுறித்த எந்த வேலையிலும் இறங்காதது அதன் காரணமாக இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போது அதைச் செய்ய வேண்டும் என்ற முன்முடிவுகள் இருந்தன.  தனது நூல் வருமா என்ற குழப்பம் அவர் சொற்களில் எப்போதும் இருக்கும். பிறகு ஒருநாள் வேறு வழியில்லாம் அவரிடம் சொல்லியே விட்டேன். வயதுக்கே உரிய அமைதி. அனுபவங்கள் எதையும் திகைப்பாக எடுத்துக்கொள்வதில்லை. சலனமில்லா நதியில் தவழும் இலைபோல அமிழ்ந்து மிதந்து நகர்கிறது அவர்களின் உணர்வுகள்.

அந்த மௌனமும் விசாலமும் அவர் விருதைப்பெற சரியான நபர் என்றே மீண்டும் பறைச்சாற்றியது.

– முற்றும்

(Visited 65 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *