இன்று காலையில் ஒருவர் வீட்டுக்கு மணிமொழியுடன் சென்றிருந்தேன். பறை இதழ் கேட்டிருந்தார். 50 வயதைக் கடந்த பெண்மணி. “எனக்குத் தெரியும் தம்பி. நீங்க தீபாவளியெல்லாம் கொண்டாட மாட்டீங்க. எம்பையன்தான் சொல்வான். கம்ப்யூட்டர்ல உங்கள படிப்பான். ஆனா பாருங்க நம்மால அது முடியாது. பெருநாள் வந்தாதான் சொந்தங்களையெல்லாம் பார்க்க முடியுது. அப்புறம் நான் நல்லா சாமியெல்லாம் கூம்பிடுவேன்” என்றார் .
“அதனால என்னம்மா… அவங்க அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. நான் அதிலெல்லாம் தலையிடுவதில்லை. என் பகுத்தறிவுக்கு மீறி என்னால் ஒன்றைச் செய்வது சிரமம். அவ்வளவே. அவ்வாறு செய்து எனக்கே நான் பதில் சொல்ல முடியாமல் சிரமப்பட்டுள்ளேன். ஆனா இன்னும் எச்சரிக்கையாயிடுவேன். நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு நான் உண்மையா இருக்கனும் அவ்வளவே…” என இதழைக்கொடுத்து அகன்றேன். எவ்வளவு மறுத்தும் 5 ரிங்கிட்டை கையில் திணித்தார்.
ஒரே அலைச்சல். புக்கிட் பிந்தாங் பகுதியில் ஓர் இடம் தேடி சுற்றிவிட்டு செந்தூலுக்கு வந்தேன். பசி. ஒருவர் அடையாளம் கண்டவராக அருகில் வந்தார். முகநூலில் என்னைத் தொடர்பவராம். அறிமுகம் செய்துக்கொண்டார். “அதாவது பாருங்க தம்பி எனக்கு இந்தப் பண்டிகை எதுலயுமே பெரிய நம்பிக்கை இல்லை… என்ன பிள்ளைங்களுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுப்பேன்…” என ஆரம்பித்தார். அவரை ஒரு பெரியாரிஸ்டாகவும், மார்க்ஸியராகவும் பகுத்தறிவுவாதியாகவும் காட்டிக்கொள்ள அவ்வளவு முயன்றார். ஒழுங்காக சாப்பிட விடாமல், அவர் ஒரு மணி நேரம் போட்ட ரம்பத்தில் நாங்கள் தெரிந்துகொண்டது; அவருக்கு மதம் சார்ந்த எந்தப் பண்டிகையும் பிடிக்காது. வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. பொதுவுடமையே வாழ்க்கையாகக் கொள்கிறார். அதோடு தன் மனைவியும் தன்னைப்பின் பற்றி எதிலும் உடன்படாமல் வாழ்கிறார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். கலை இலக்கிய விழா கார்ட்டை ஒரு பொதுவுடமையாளருக்கு அன்பளிப்பாகத் தருவதில் மகிழ்ச்சியடைந்தேன்.
அவர் போனப்பிறகு அவர் முகநூலை ஆராய்ந்தேன். செந்தூல் சிவன் கோயிலில் பட்டையும் கொட்டையுமாக நிர்க்கும் படம் ஒன்று இருந்தது. அது நிச்சயம் அவர்தான். இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தேன். நல்ல பக்தி பழம்தான். பத்துமலை கோயில் முதல் ஜொகூர் கண்ணாடி கோயில் வரை அவர் திருப்பாதம் படாத இடங்கள் இல்லை. குடும்பமே நகையலங்காரத்தில் ஜொலித்தது. அவர் கைகளில் பெரிய பெரிய மோதிரம். பொதுவுடமை சிரிப்பாய் சிரித்தது. அவர் மனைவி மலையாளப் பெண்ணாக இருக்க வேண்டும். பல படங்களிலும் அவருடன் கலாச்சார உடையில் விபூதி சகிதமாய் சிரித்துக்கொண்டிருந்தார். கையில் எப்போதும் பூ தட்டு. அங்கிருந்து அவர் மனைவியில் முகநூலில் புகுந்தால் (அவர் என் நண்பர் பட்டியலில் இல்லை) தலையே சுற்றியது.
அவரை முகநூலில் இருந்து நீக்கும் முன் இவ்வாறு ஒரு கடிதம் எழுதினேன்…
“ஐயா, உண்மையைத் தாண்டி ஓர் அற்புதம் இருக்கப்போவதில்லை. நீங்கள் ஏதோ ஒரு கொள்கையுடன் காட்சி கொடுத்துதான் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுடன் பழக எனக்கு சம்மதமே. ஆனால் போலிகளுடன் பழக முடியாது. போலிகளின் முகம் எதுவென்றே தெரியாத போது என்னவென்று பழகுவது. ஆனால் உங்களிடம் சமாளிக்க ஏராளமான சொற்கள் இருக்கும். ‘குடும்ப நன்மைக்காக… பிள்ளைகளுக்காக… சும்மா கோயிலைச் சுற்றிப்பார்ப்பதற்காக…’ எனத் தொடங்கி சமாளிக்க உங்களிடம் இன்னும் சொற்கள் இருக்கும். அந்த கேவலமான பதில் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னிலும் மூத்தவர். மீண்டும் சொல்கிறேன். நீங்கள் யாரோ அதுவாக இருங்கள். அதில் தவறே இல்லை. எனக்கு ஒவ்வாததாக செயல்களைச் செய்பவராக இருந்தாலும் உண்மைக்காகவே ஒருவரும் பழகலாம். எனது பெரும்பான்மையான நண்பர்கள் அவ்வாறவானவர்களே. நான் அவர்களை மட்டுமே மதிப்பேன்… மற்றபடி ‘பொதுவுடமை’ என்ற சொல்லை தெரிந்து வைத்திருப்பதற்காக என் வாழ்த்துகள்… உங்களிடம் செலவு செய்த ஒரு மணிநேரத்துக்கு வருந்துகிறேன். முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் நீங்கள் யார் என்பதை எளிதாகக் காட்டிக்கொடுக்கும் சூழலில் இனி கவனமாகப் பொய் சொல்லுங்கள்…”
வீடு திரும்பும் போது அந்த அம்மாவின் முகம் நினைவில் வந்துக்கொண்டிருந்தது. அவர் இன்று ஏதாவது ஒரு கோவிலுக்குப் போகலாம். பண்டிகையில் மூழ்கியிருக்கலாம். ஆனால், அவரிடம் எவ்விதமான மன அழுத்தமும் இருக்காது. அவருக்கு எந்த பயமும் இருக்காது. அவர் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. அவர் தனக்குள் உண்மையாக இருக்கிறார். காய்ச்சல் வந்தால், ‘விபூதிய முழுங்குடா காய்ச்சல் ஓடிடும்’ என பாட்டி சொல்வாரே அந்த உண்மை. அதுபோன்றவர்கள் தங்கள் சொற்களைச் சந்தேகிப்பதில்லை.
அப்போதெல்லாம் முகமூடிகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை போல. முகநூல் கண்டுப்பிடிக்கப்படாதது போல…