பல்வேறு சர்ச்சைகளிலும் விவாதங்களிலும் அவ்வப்போது ஈடுபட்டிருந்தாலும் ‘வல்லினம்‘ இயக்கத்தின் செயல்பாடுகள் அத்தனை எளிதாய் மலேசியத் தமிழ்ச்சூழலில் மறுக்கப்படக்கூடியதல்ல. மலேசியத் தமிழ்ச்சூழலில் பதிப்புரிமை குறித்தும் ராயல்டி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அதை முறையாகக் கடைப்பிடித்தும் வருபவர்கள். முற்றிலும் இளம் தலைமுறையினரின் இணைவால் உருவாகியுள்ள ‘வல்லினம்‘ தமிழக , இலங்கை போன்ற நடுகளில் இயங்கும் தீவிர இலக்கிய இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதோடு , உலக இலக்கியத்தோடு ஒப்பிடுகையில் இருக்கும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் இடைவெளியை குறைக்கவும் செயல்படுகின்றனர். இவ்வருடம் ‘பறை‘ எனும் காலாண்டு அச்சு இதழை மலேசிய இலக்கிய உலகுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வருடம் தொறும் வல்லினம் நடத்தும் ‘கலை இலக்கிய விழா‘ குறித்து அறிய ‘வல்லினம்‘ மற்றும் ‘பறை‘ இதழின் ஆசிரியர் ம.நவீனைச் சந்தித்தோம்.
கேள்வி : முதலில் வல்லினம் எதை நோக்கி செயல்படுகின்றது என்பது குறித்து கூறுங்கள்?
ம.நவீன் : மாற்றத்தை நோக்கிதான் செயல்படுகிறது. வல்லினத்தின் எந்த முயற்சியும் இதற்கு முன் மலேசிய தமிழ்ச்சூழலில் நடைப்பெறாதது என உறுதியாகச் சொல்வேன். ‘வல்லினம்’ அச்சு இதழ் மூலம் சிற்றிதழ் சூழலை உருவாக்கியது முதல், நூல் பதிப்புக்கு ராயல்டி தருவது , நவீன வீதி நாடகம் நடத்தியது, அறிவுத்துறைகளான மார்க்ஸிம், இருத்தலியம், தலித்தியம் போன்றவற்றை இளம் தலைமுறைகளிடம் பட்டறைகள் மூலம் சேர்ப்பித்தது, நிழல்பட மற்றும் ஓவிய கண்காட்சிகள் நடத்துவது, குறும்படப்பட்டறை நடத்துவது என கலைசார்ந்த அத்தனை விடயங்களிலும் மாற்றங்களை புகுத்த முனைகிறோம். தெளிவாகச் சொல்வதென்றால், எங்கள் நோக்கம் பொது புத்தியில் இதற்கு முன் இருக்கின்ற கலைகளை மீண்டும் தூக்கிப்பிடிப்பதல்ல. இந்தக் கலை வடிவங்களில் மாற்று அரசியலைப் புகுத்துவதே.
கேள்வி : இந்நிலையில் முதன் முதலாக ‘வல்லினம் விருதினை ‘அறிவித்துள்ளீர்கள். அதில் ஏதேனும் புதுமை உண்டா?
ம.நவீன் : விருது என்பது பணம் கொடுப்பதோடு முடிந்துவிடுகிறது. ஒரு படைப்பாளிக்கு பணம் மட்டுமே அங்கீகாரம் என நாங்கள் கருதவில்லை. பணம் யாரிடமும் இருக்கும். யாரும் யாருக்கும் கொடுக்கலாம். அது காலத்தால் கரைந்துவிடும். எனவே முதல் ‘வல்லினம் விருதளிப்பு’ நிகழ்வில் விருதைப்பெறும் மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்களுக்கு 5000 ரிங்கிட் பணம் வழங்குவதோடு, அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் பதிப்பித்து வெளியிடுகிறோம். அதோடு அவரது ஆவணப்படத்தையும் இதே நிகழ்வில் வெளியிடுகிறோம். இந்த நூலும் ஆவணப்படமுமே அ.ரெங்கசாமியின் எழுத்தையும் வாழ்வையும் காலத்துக்கும் பேசும்.
கேள்வி : ஆவணப்படம் குறித்துக்கூறுங்கள்…
ம.நவீன் : இந்தத் திட்டம் இரண்டு வருடங்களுக்கு முன் வகுக்கப்பட்டது. ஓர் ஆளுமை நம் மத்தியில் இல்லாமல் போகும் போது நாம் அவரது நினைவுகளை மனதில் மட்டுமே சுமந்திருக்கிறோம். அவரது குரல், அசைவுகள், வாழ்வு குறித்து சுய பதிவுகள் எதுவும் நமது சேமிப்பில் இருப்பதில்லை. இந்த பலவீனத்தைக் களையவே ஆளுமைகளை ஆவணமாக்கும் முயற்சியில் இறங்கினோம். ஒவ்வொரு மூத்த இலக்கிய ஆளுமைகளைகளையும் நேர்காணல் செய்து அவர்கள் வாழ்வை குறுந்தட்டில் பதிவு செய்வதன் வழி வருங்கால சந்ததியனருக்கு நல்ல ஆவணமாக இருக்கும். ஓர் மூத்தப்படைப்பாளி பேசும் போது அவரைப்பற்றி மட்டும் பேசுவதில்லை. அவர் வாழ்ந்த சமூக சூழலையும் சொல்கிறார். வருங்கால சந்ததியினருக்கும் ஆய்வாளர்களுக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
கேள்வி : அ.ரெங்கசாமி குறித்து கொஞ்சம் பகிருங்கள்.
ம.நவீன் : 82 வயது மூத்தப்படைப்பாளி. மலேசிய தமிழர்களின் இக்கட்டான வரலாற்றை நாவல் வடிவில் தொடர்ந்து கொடுத்துவருகிறார் . அதற்காக உழைக்கிறார். கள ஆய்வு செய்கிறார். மொழிக்காக இன்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து இயங்குகிறார். அப்படிப்பட்ட படைப்பாளியை இந்நாட்டில் பலரும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தமே. வல்லினமும் செம்பருத்தியும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் நூலை வெளியீடு செய்தது. இம்முறை அவர் ஆளுமை முழுமையாக வெளிக்கொணர இவ்விருதை ஏற்பாடு செய்துள்ளோம்.
கேள்வி : விருதென்றால் சர்ச்சைக்குள்ளாவது தமிழ்ச்சூழலில் சாதாரணமாகிவிட்ட சூழலில் வல்லினம் விருது நேர்மையாக எவ்வாறு இயங்கும்.
ம.நவீன் : விருதுகள் இன்று நிறுவனமயமாகிவிட்டன. அதனால் அதை ஒட்டிய சர்ச்சை எழுகிறது. பொதுவாகவே விருது அல்லது பரிசு என்பது வாங்குபவரின் தகுதியைக் காட்டுவதில்லை. கொடுப்பவரின் தகுதியையே காட்டுகிறது. ‘சாகித்திய அகாதமி’ விருதின் நடுவர் குழுவை கொஞ்சம் ஆராய்ந்தால் அதன் மாற்றத்துக்கேற்ப விருது பெருபவர்களின் ஆளுமையும் மாறியுள்ளதை உணரலாம். வல்லினம், இலக்கியம் அல்லது கலை குறித்த தெளிவான தீவிர சிந்தனையுடன் இயங்கும் குழு. எங்களிடம் சமரசங்கள் இல்லை. சடங்குக்காக வல்லினம் விருதை வருடம் தோறும் நடத்தவும்போவதில்லை. அ.ரெங்கசாமி போல சுயநலமற்ற சமூகத்துக்காக உழைக்கும் ஆளுமை நம் கவனத்துக்கு வரும்போது நிச்சயம் வழங்குவோம்.
கேள்வி : விருது வழங்கும் நிகழ்வைத் தவிர கலை இலக்கிய விழா 6ல் என்னென்ன அங்கங்கள் உள்ளன.
ம.நவீன் : வருட ஆரம்பத்திலேயே நாங்கள் இம்முறை ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதென முடிவெடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் இயக்குனர் கவிஞர் லீனா மணிமேகலை தமிழகத்திலிருந்து இந்நிகழ்வில் கலந்துகொள்வார். அவரது 13 ஆவணப்படங்களின் தொகுப்புக்காட்சிகள் இந்நிகழ்வில் இடம்பெற்று கலந்துரையாடலும் நடக்கும். லீனா மணிமேகலை இலங்கையில் போருக்குப் பின்பு அங்குள்ள தமிழர்களின் இக்கட்டான சூழலை ‘வெள்ளை வேன் கதைகள்’ எனும் தலைப்பில் ஆவணப்படம் செய்ததும் அது இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றத்திற்கு ஓர் ஆதாரமாக செவன் சேனலில் ஒளிபரப்பானதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.முழுத்திரைப்படமாக ‘செங்கடலும்’ இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. மேலும் நாங்கள் உருவாக்கியுள்ள ‘யாழ்’ இதழும் இந்நிகழ்வில் அறிமுகம் காணும்.
கேள்வி : யாழ் யாரை முன்வைத்து நடத்தப்படுகிறது?
ம.நவீன் : மாணவர்களுக்காக நடத்தப்படும் இதழ் யாழ். குறிப்பாக சிறந்த மாணவர்களை மட்டுமே கவனத்தில் கொண்டு பயிற்சிகள் உருவாக்கும் கல்விச்சூழலில் யாழ் மெதுநிலை மாணவர்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யூ.பி.எஸ்.ஆர் தொடங்கி பி.எம்.ஆர் மற்றும் எஸ்.பி.எம் என தமிழ்ப்பாடத்தைப் பிரதானமாகக் கொண்டு இவ்விதழ் பறையுடன் இலவச இணைப்பாக வருகிறது.
கேள்வி : கலை இலக்கிய விழா 6ன் மேல் விபரங்களைக் கூறுங்கள்.
ம.நவீன் : முதலில் இந்நிகழ்வுக்கு வர முன்பதிவு அவசியம். தங்கும் விடுதியில் நடப்பதால் எங்கள் பட்டியலில் இல்லாத பெயர்களை உள்ளே அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படலாம். 2.11.2014ல் கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் மதியம் 2 .00 முதல் நடைப்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள 0163194522 என்ற எண்ணில் என்னை அழைத்து முன்பதிவு செய்துகொள்ளலாம். மேல் விபரங்களுக்கு www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் காணலாம். நன்றி.