கடந்த ஆண்டு இறுதியில் வல்லினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டோம். தாஜ் கார்ட்னில் அந்தக் கூட்டம் நடந்தது. அதில் முக்கியமாக மாற்று சினிமா அல்லது ஆவணப்படம் தொடர்பான சிந்தனைகளை இளம் தலைமுறை இயக்குனர்களிடம் விதைப்பதாய் எங்கள் திட்டம் இருந்தது. லீனா மணிமேகலை அடுத்த ஆண்டு வந்துகலந்துகொள்வார் என நான் முடிவெடுத்துக்கூறியபோது நண்பர்கள் அனைவரும் சம்மதித்தனர். ஆனால் அதுவரை லீனாவிடம் முன் அனுமதியோ அவரது கால அட்டவணையையோ கொஞ்சமும் சோதிக்கவில்லை.
இவ்வாறு அடிக்கடி நடப்பதுண்டு. ஆழமாக ஒன்றை நம்பிச்செய்தால் அது சிக்கல் இல்லாமல் இயல்பாக நடப்பதை பல தருணங்களில் அனுபவித்தவன் நான். 2014 தொடங்கியும் நான் லீனாவிடம் அது பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆனால், சிங்கை அரசாங்கமே லீனாவை அழைத்திருந்ததும் என் வேலை சுலபமானது. அந்தத் திகதியின் அடிப்படையில் கலை இலக்கிய விழாவை 2.11.2014 என முடிவு செய்தோம்.
இம்முறை கலை இலக்கிய விழா மிக விசித்திரமானது. எப்போதையும் விட கொஞ்சம் பிரமாண்டத்தை அது கொடுத்தது. ஆனால் எப்போதையும் விட கொஞ்சம் வேலை பலு குறைந்திருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று எனக்கு இந்த வேலைகள் பழகிவிட்டன. நூல் பதிப்பிப்பது அத்தனை சவால் மிக்கதாய் இல்லை. மற்றது வல்லினத்தில் இணையும் புதிய நண்பர்களின் ஊக்கமும் முயற்சியும் ஆச்சரியமானது.
கலை இலக்கிய விழா குறித்து ஊடகங்களில் வர வேண்டிய தேவை இம்முறை அதிகம் இருந்தது. ஒரு படைப்பாளிக்கு விருது தர வேண்டும் என முடிவெடுத்தப்பின் அதை எளிமைப்படுத்துவது சரியாகப்படவில்லை. பொதுவாகவே விருது வழங்கும் விழாக்கள் மலேசியாவில் அமைச்சர்களை வைத்து செய்யப்படுவது ஊடகங்களின் கவனம் மிக இயல்பாக நிகழ்வின் மேல் விழுந்துவிடும். ஆனால், வல்லினத்தில் எப்போதும் அதற்கு இடமில்லை. வல்லினம் படைப்பிலக்கியத்தையும் செயல்பாட்டையும் நம்பி மட்டுமே இயங்குவதால் சரியானவற்றுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என நம்பினேன்.
ஊடகங்களை அணுகும் பொறுப்பை விஜயலட்சுமி முழுமையாக ஏற்றுக்கொண்டார். அயராத உழைப்பு அவரது. விஜயாவை முதலில் சந்திக்கும் எவரும் அவரிடம் மென்மையான வேலைகளைக் கொடுக்கலாம் என முடிவெடுப்பது இயல்பு. மெல்லிய குரலில் பேசுவார். ஆனால், ஊடகங்களை அணுகி வல்லினம் நிலைப்பாட்டை விளக்கி ஒரு வாரம் வானொலி , தொலைக்காட்சி என அறிவிப்புகளைத் தொடர வைத்தார். அது எளிதன்று. ஊடகங்களிடம் நமது நியாயங்களையும் நிலைப்பாட்டையும் புரியவைக்க நம்மீது நமக்கு ஒரு ஆழமான நம்பிக்கைத் தேவைப்படுகிறது. உண்மையைவிட வேறொரு சிபாரிசு தேவையா என்ன?
இருமாதங்களுக்கு முன்பே வீட்டில் பெரிய பெரிய அட்டைகளை ஒட்டத்தொடங்கியிருந்தேன். ஒரு நிகழ்வை என்னால் பெரிய எழுத்துகள் மூலம்தான் திட்டமிட முடியும். ‘யாழ்’ இதழ் விநியோகம், அ.ரெங்கசாமி நூல் பதிப்பு, குறுந்தகடு தயார் செய்தல், இவற்றோடு கலை இலக்கியவிழாவுக்கான பணத்தேவை என கழுத்துவரை வேலைகள். ஆனால், அவை எல்லாம் விரும்பி ஏற்றுக்கொண்ட வேலைகள் . வெளியில் நிர்பந்தம் இல்லாதவை. எனவே எதற்காகவும் உளைச்சல் அடைய தேவையில்லை என்பதை அடிப்படை கட்டளையாக எனக்கு நானே வைத்துக்கொண்டேன். பொதுவாகவே கலை, இலக்கிய செயல்பாடுகள் ‘சேவை’ என காட்டிக்கொள்ளப்படுவதாலேயே அதை முன்னெடுப்பவர்கள் தியாக முகங்களைச் சுமக்க வேண்டியுள்ளது. “இந்தச் சமுதயாத்துக்கு…” என ஆரம்பித்து தங்கள் பொருளாதார இழப்பைப் பற்றி புலம்ப வேண்டியுள்ளது. பின்னர் பெரும் மனவிரக்தியில் செயலற்று முடங்க வேண்டியுள்ளது. எல்லாம் முடிந்த பின்னர், அடுத்த தலைமுறையிடம் “அந்தக்காலத்துல…” என ஆரம்பிக்க வேண்டியுள்ளது. வல்லினத்தில் இந்தப்புலம்பலுக்கெல்லாம் இடமேயில்லை.
மனதுக்கு மகிழ்ச்சி தருவதை செய்கிறோம். திட்டமிட்டுச் செய்வதால் புலம்பல்கள் இல்லை. ஆனால் குழப்பங்கள் உண்டு. இந்தக் குழப்பத்தில்தான் சிங்கைக்கு லீனா மாலை 6 மணிக்கு வந்து சேர்வார் எனத் தெரிந்தும் ஏதோ ஞாபகத்தில் மதியம் 2க்கு சிங்கையிலிருந்து மலேசியாவுக்கு டிக்கெட் போட்டிருந்தேன்.
– தொடரும்