சிங்கையிலிருந்து புறப்பட்ட அன்றுதான் லீனாவும் அந்த தவறை கவனித்தார். சூழல் பரபரப்பானது. அவர் சிங்கை வந்து சேரும் நேரம் மாலை ஆறு. எனவே அதற்குப்பின்பே விமான டிக்கெட் போட வேண்டும். ஒரு உணவகத்தில் அமர்ந்தேன். மீண்டும் டிக்கெட் போட்டபோதுதான் நிம்மதி. முதலில் இரவு 11 மணிக்குப் போடலாமா என யோசித்தோம். மூன்று மணி நேரம் காத்திருப்பதா என யோசித்து ஒன்பது மணிக்கு போட்டேன்.
ஆனால் மீண்டும் ஓர் அதிர்ச்சி. விமானம் சிங்கை வந்து சேரவே தாமதமாகிவிட்டது. இரவு 9 மணிக்கு விமானம் என்றால் லீனா 8 மணிக்குதான் பாஸ்போர்ட் செக்கிங்கில் வரிசை நின்றுக்கொண்டிருந்தார். அவர் வாட்சப்பில் அனுப்பிய தகவலிலேயே படபடப்பு இருந்தது. அப்போதைக்கு வட்சப் மட்டுமே எங்களுடனான உரையாடலுக்கு ஊடகம். நான் கொஞ்சம் பரபரப்பானாலும் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இதுபோன்ற நிமிடங்களில் நான் அதன் இறுதி நிலையை மட்டுமே கற்பனை செய்துப்பார்ப்பது வழக்கம். கடைசி நிலைகளில் பெரிதாக சுவாரசியம் இருக்காது. அது மட்டுமே அடுத்து என்ன செய்வதென நிதானம் கொடுக்கும்.
அதிக பட்சம் லீனா இந்த விமானத்தையும் தவற விடுவார். விட்டால் 11 மணி விமானத்தைப் போட்டுவிட வேண்டியதுதான் என நிதானமானேன். வீட்டுக்குப் போகாமல் காரிலேயே காத்திருந்தேன். விமானம் ஏறினால் நிதானமாகக் கிளம்புவது. இல்லையென்றால் மீண்டும் எங்காவது அமர்ந்து ஆன்லைனில் டிக்கெட் போடுவது. ஆனால், லீனா எப்படியோ யாரிடமோ பேசி விமானம் ஏறியிருந்தார்.
அவர் வந்து இறங்கும் நேரம் இரவு மணி 10. வழக்கம்போல சலையை மேம்படுத்துகிறோம் என என நெடுஞ்சாலையில் நெரிசலை உருவாக்கி வைத்திருந்தனர். நான் சென்றபோது இரவு 11.30 . லீனா பசியில் வாடிப்போயிருந்தார். காரில் ஏற்றி தலைநகர் நோக்கி விட்டபோதுதான் அவ்வளவு நேரம் கழுத்தைப் பிடித்திருந்த அழுத்தம் கொஞ்சம் இலகுவானது.
2006ல் முதன் முதலாய் லீனாவைப் பார்த்தேன். அதன் பின்னர் 2011ல் அவர் வீட்டில் தங்கியிருந்து சென்னையைச் சுற்றினோம். 2014ல் பார்த்தபோதும் விடுபடாத அன்புடன் இருந்தார்.
– தொடரும்