லீனா மணிமேகலை மலேசியாவுக்கு வருகிறார் என அறிந்தப்பின் பல்வேறு விதமான ஆலோசனைகளும் எதிர்ப்புகளும் முணகல்களும் காதுகளுக்கு எட்டவே செய்தன. இது எனக்கு பழக்கமானதுதான். என்னளவில் நான் ஒருவரை அழைக்க தனிப்பட்ட காரணங்கள் இருப்பதில்லை. மலேசிய கலை இலக்கிய உலகுக்கு அவர்களின் வருகை ஏதோ ஒருவகை மாற்றத்தை உருவாக்கும் என்றே இப்பணியைத் தொடர்ந்து செய்கிறோம். ஆனால், அப்படி அழைக்கப்படுபவர் அனைவருமே அன்புக்குறியவர்கள்.
முற்றிலுமாக கலை, அரசியல் ரீதியில் முறித்துக்கொண்ட ஒருவரை வல்லினம் அழைத்ததில்லை. வேறு இயக்கங்கள், தனி நபர்கள் மூலம் அழைக்கப்பட்டவர்களை வல்லின குழுவிலும் மையப்படுத்தி உரையாடல் நிகழ்த்தியிருப்போம். ஆனால், திட்டமிட்டு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் வருகையில் கொஞ்சமும் எங்களுக்கு சுணக்கமோ நெருடலோ இருந்ததில்லை. லீனாவையும் அவ்வாறே தேர்ந்தெடுத்தோம். மாற்று சினிமா முயற்சிகளுக்கு இன்று லீனாவே இங்குள்ள இளைஞர் மத்தியில் உரையாட பொறுத்தமானவர்.
முதல்நாள் லீனா வீட்டில்தான் தங்கினார். களைப்பு. ஆனால், மறுநாள் காலையிலேயே போர்ட்டிக்சனில் ஒரு நிகழ்வில் நான் பேச வேண்டியிருந்தது. லீனாவையும் அழைத்திருந்தேன். அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது என்றாலும் போர்ட்டிக்சன் கடல்கரை நகரமாதலால் அவரைக் கவரும் என்றே நினைத்தேன். தயாஜி மற்றும் நவீன் செல்வங்கலை பயணத்தில் இணைந்தனர். அந்த நாள் அத்தனை அபத்தமாகும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
யாரோ ஒரு குண்டல் கும்பல் தலைவனின் மரண ஊர்வலம், அன்று மாலை நடக்கவிருந்த முக்கியமான காற்பந்தாட்ட போட்டி , ஒரு விபத்து என சாலை சென்டிமீட்டரில் நகர்ந்தது. ஏதோ ஒரு நகரத்தில் புகுந்தோம். நெடுஞ்சாலை நெரிசலில் இருந்து தப்பினால் போதும் என்றிருந்தது. லீனாவை பார்க்க பாவமாக இருந்தது. தூக்கத்தையும் கடலையும் கண்ணில் காட்டாத மூன்று கலவாணிகளாக அவருக்கு நாங்கள் தெரிந்திருக்கலாம். கார் இருக்கையிலேயே சுருண்டுவிட்டார்.
ஒரு சூடான காப்பிக்குப் பின்னர் மீண்டும் வீடு நோக்கி பயணம். லீனாவுக்கு மலேசியா என்றாலே இப்படித்தான் ஜேமாக இருக்கும் என அந்தச் சம்பவம் மனப்பதிவை கொடுத்திருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை என ஜேம் இல்லாத ஒரு பணத்தின் மூலம்தான் நிரூபிக்க முடியும் என நினைத்துக்கொண்டேன். வீட்டில் சேர்ந்தபோது மாலை 4. இரவு 7க்கு இளம் இயக்குனர்களுடன் உரையாடல். ஒரு சின்னத்தூக்கம் மட்டும் போட லீனாவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
தொடரும்