அன்று இரவே கிராண்ட் பசிப்பிக் விடுதியில் 10க்கும் மேற்பட்ட திரைத்துறையைச் சார்ந்தவர்களோடு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. லீனா மணிமேகலையின் தேவதை மற்றும் செங்கடல் படம் ஒளிபரப்பாக பின்னர் விவாதங்கள் நடந்தன. லீனா நண்பர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார். எல்லா கேள்விகளையும் சந்தேகங்களையும் விடவும் ஒரு படைப்பாளியின் நேர்மையான ஆக்கமே பல விடயங்களைப் பேசும் என நான் நம்புபவன். எனவே லீனாவின் ஆவணப்பட முயற்சி எதை பேச விரும்புகிறது என்ற பிரக்ஞையை உருவாக்கியிருக்கும்.
பொதுவாகவே மலேசியத் திரைத்துறை மீது எனக்கிருக்கும் அதிருப்தி ஒன்றுதான். அவர்களிடம் எதையொட்டியும் தீவிர தேடலோ வாசிப்போ இல்லை. போலச் செய்தலே இங்கு நிகழ்கிறது. ஒரு சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய கூறிய அரசியல் பார்வை இல்லாதது பெரும் குறைபாடு. லீனாவைத் தனித்துவமாகக் காண்பதே பெரும்பான்மையைப் பிரதிநிதிக்கும் தமிழ்ப்பட திறைத்துரையில் பிரிந்து சிறுபான்மையினரிடம் கவனம் செலுத்துகிறார் என்பதுதான். ஆனால், வாழ்வே அத்தனை அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டும் இங்கு கலை என்பது ரசிப்பதற்கு எனும் வகையில் வெளிப்படுத்தப்படுவதுதான் அபத்தம்.
துல்லியமான தனித்துவமான விசித்திரமான வாழ்வியலைக் கொண்ட மலேசியத்தமிழன் இன்னமும் தன்னை தமிழகத் தமிழனின் வாரிசு போல திரையில் காட்டிக்கொள்ளும் கோமாளித்தனம் நிகழும் போது மலேசிய திரைத்துறை குறித்த சந்தேகங்களே எழுகின்றன.
அன்று இரவு தாமதமாகத்தான் திரும்பினோம். லீனாவினால் மலேசிய தமிழர் வாழ்வில் சொல்லக்கூடிய அத்தியாயங்கள் சொல்லப்படாமல் இருப்பதை தெளிவாக உணர முடிந்தது. அதை ஏன் இன்னும் சொல்லவில்லை என்ற கேள்வியும் இருந்தது. பாதுகாப்பு வளையத்தில் மாட்டிக்கொண்டு இருக்கும் மனம் அதற்கு சிறந்த காரணியாக இருக்கலாம்.
‘அசாதரணமான தைரியம் மட்டுமே எந்த ஒரு புதிய துவக்கத்துக்கும் மாற்றத்திற்கும் காரணமாக இருக்கும்.’ என லீனா பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார்.
– தொடரும்