அன்புமிக்க சுவாமி,
முதலில் நான் உங்கள் ரசிகன். சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்தே. அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில் சமய வகுப்பு நடக்கும். நான் எங்கள் வெல்லஸ்லி பள்ளியில் பிரதான பாடகர்களின் ஒருவன். தேவாரம், திருவாசகம், மந்திரங்கள் என ஒன்று விடாமல் நல்ல மனனம். மாதத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியிலிருந்து பேருந்து உங்கள் தியான ஆசிரமத்திற்கு புறப்படும். காலையில் எட்டு மணிக்கு அங்கு வந்தால் நான்கு மணிக்குத்தான் வகுப்பு முடியும்.
பெரும்பாலும் நீங்கள் இரண்டு மணிக்குப் பிறகுதான் எங்கள் முன் தோன்றுவீர்கள். அதற்கு முன்பு வரை நீங்கள் எங்கே இருந்தீர்கள் எனத் தெரியாததால் தோன்றுவதாகவே நம்பினேன். சாமியார்கள் என்றாலே எனக்கு அப்போதெல்லாம் மந்திர சக்திதான் ஞாபகத்திற்கு வரும். நல்ல மதிய உணவுக்குப் பின்பான மயக்கத்தில் இருக்கும்போது பளீர் என்று உங்கள் காவி உடை கண்களை எளிதில் ஈர்க்கும். அடுத்ததாக நீங்கள் பாடத் தொடங்குவீர்கள்.
அப்போதும் தோன்றும் ஒரு மயக்கம் உங்கள் குரலால் எழுந்ததா, உண்ட களைப்பா என்று இப்போது என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதிக முக மாற்றம் இல்லாமல், மிக மிக குறைந்த பட்சமாக உங்கள் உதடுகள் அசைய மிக இனிய ஒரு குரல் எங்களை ஆட்கொள்ளும். ஆனால் உங்களிடம் எந்த மந்திர வித்தையும் இல்லை எனத் தெரிந்தபோது அதிக வருத்தமுற்றேன். உங்களிடம் ஒரு தேஜஸ் இருந்தது. அது போன்ற ஒரு ஒளி என் மீதும் பற்றிப் படர்ந்திருப்பதாகவே நான் அப்போது நம்பியிருந்தேன். என் அம்மா நான் முருகன் அருளால் பிறந்தவன் என நம்ப வைத்திருந்ததால் நீங்கள் ஒளி படர்ந்த என் முகத்தை எளிதில் தனித்துக் காண்பீர்கள் என நம்பினேன். நான்கு பேர் அடங்கிய சின்னக் கூட்டத்தில் கூட எளிதாகக் காணாமல் போகும் உருவம் என்னுடையது என பிறகுதான் உண்மை தெரிந்தது. என்ன முயன்றும் உங்களைப் போன்ற இசை அறிவும் ஆன்மிக அறிவும் எனக்கு அப்போது போல இப்போதும் கிட்டவில்லை.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் நான் உங்களை ஓர் இலக்கிய வாசகராக சந்தித்தபோது நீங்கள் அதிலும் பன்மடங்கு முந்தியிருந்தீர்கள். நீங்கள் அணிந்திருப்பது காவியாக இல்லாமல் ஒரு உடையாக என் கண்களுக்குத் தெரியத் தொடங்கிய தருணம் நாம் விரிவாகவே பேச முடிந்தது. ஒரு வகையில் நான் இந்நூலை வாசித்துப் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ள தாமதமானதற்கு உரையாடல் மூலம் நான் உங்களைப் புரிந்துகொண்டதும் காரணமாக இருக்கலாம். அதை பெரும்பாலும் ஒவ்வொரு தனி மனிதனின் நியாயங்களையும், தடுமாறல்களையும், பின்னடைவுகளையும், சங்கடங்களையும் கருத்தில் கொண்டு நீள்பவை. தனி மனித உணர்வுகளின் பரிணாமமே சமூக மனமாக மாறுவதை இலக்கியங்கள் மூலம் நான் அறிந்துகொள்கிறேன். அவ்வகையில் உங்களின் இந்தத் தொகுப்பில் மூன்று கட்டுரைகள் ஒரு நல்ல புனைவிலக்கியத்திற்கான மூன்று நுட்பமான இடங்களைத் தொட்டுப் பேசுவதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன்.
மூன்று கட்டுரைகள்
கட்டுரைத் தொகுப்பை ஒட்டிப் பேசும்போது உள்ள வசதி இதுதான். மிக எளிதாக நமக்கு முக்கியமானதைப் பிரித்தெடுத்துக்கொள்ளலாம். அவ்வகையில் ‘நழுவும் தழுவல்கள்’ என்ற தொகுப்பின் முதல் கட்டுரை சட்டென இத்தொகுப்பு முழுவதையும் படிக்கும் ஆர்வத்தைக் கொடுத்தது.
திருமணம் ஆகாமல் ஜோதிடர்களைத் தமிழகத்தில் தேடி அலையும் உங்கள் நண்பன். அந்தப் பயணத்தில் உறவுகளால் நிராகரிக்கப்பட்டு பசியில் வாடும் ஒரு தாய். ‘தழுவும் அன்னை’ முன் நிற்கும் ஒரு மனிதக்கூட்டம். மனிதனின் உறவுகள் குறித்த ஆர்வத்தையும் உறவுகள் குறித்த வெறுப்பையும் உறவுகள் மீதிருக்கும் நம்பிக்கையையும் நீங்கள் இக்கட்டுரையில் ஒருங்கே சொல்லிச் செல்கிறீர்கள்.
நாம் வயதுகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட வயதில் ஒரு சம்பவம் நடக்காவிட்டால் அழுத்தம் அடைகிறோம். எந்த ஒரு கட்டளையும், சட்டமும், நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும் கண்காணிப்பின் கீழ் செயல்படுவதாகவே பயந்து சாகிறோம். முப்பதுக்கு மேல் திருமணம் நடக்காவிட்டாலும், நாற்பதுக்கு மேல் குழந்தை இல்லாவிட்டாலும் வாழ்வு நிறைவாகாதது போன்ற ஒரு வெறுமை. குறிப்பிட்ட வயதில் புதிய உறவுகள் தோன்றுவது கடமையாக்கப்பட்டுவிட்டது. அது அப்போதைய அவசியம் இல்லாவிட்டாலும் கூட. ஆனால், தேடி சேகரிக்கும் உறவுகளால் மட்டுமே அத்தனை மன சிக்கல்களும் தொடங்குகிறது. இந்த முரணுக்குள்ளேயே வாழ்வு முடிந்தும் போகிறது.
ஆனால் மனித மனம் விடுவதாய் இல்லை. எங்கோ ஓர் இடத்தில் அவனே செலுத்த விரும்பாத கடப்பாடற்ற அன்பைத் தேடிப் போகிறான். ‘இங்கு நிர்ப்பந்தங்கள் இல்லாமல் அன்பு விற்பனைக்கு உள்ளது’ என்ற அறிவிப்புப் பலகை எங்குமே தொங்கவிடப்படாத நிலையில் ஏமாற்றமடைகிறான்.
அறிவிப்புப் பலகை வைக்காமலேயே அந்த வணிகத்தை திறம்படச் செய்யத் தெரிந்த ‘தழுவும் அன்னை’ போன்ற கார்ப்பரெட் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு இறுதி நம்பிக்கையையும் ஒப்படைக்கிறான்.
மனிதனின் மனதை ஒரு பொய் அமைதிப்படுத்துவது எத்தனை ஆச்சரியம் சுவாமி.
உங்கள் நண்பன் தேடிச் சென்று ஏமாறும் மதத்துக்குள் இயங்கும் அமைப்புகளுக்கும் மக்கள் கூட்டம் நாடிச்செலும் தழுவும் அன்னைக்குமான இடைவெளிதான் கட்டுரையில் முக்கியமான அரசியலைப் பேசுகிறது. இன்று இளைஞர்களிடம் எழும் மதம் தொடர்பான கேள்வியே இந்த கார்ப்பரெட் சாமியார்களின் வணிகத்துக்கு ஆதாரம். கடவுள் இல்லாத ஆன்மிகம், மதம் இல்லாத கடவுள், குண்டலினி சக்தி, ராஜயோகம், சகஜயோகா, நவீன சித்தர் என பல்வேறு பெயர்களில் புதுசு புதுசாக கிளம்பியுள்ள அமைப்புகளும் அதை சூழ்ந்துள்ள இளைஞர்கள் கூட்டத்தையும் காணும்போது உண்மையில் திகிலடையத்தான் வைக்கிறது சுவாமி.
மதத்தை விவாதத்திற்குட்படுத்தாமல், விமர்சனத்திற்கு வெளி ஏற்படுத்தாமல் அதை இறுக வைக்கும்போது அதிலிருந்து மூச்சு முட்டி திணறி வெளியாகுபவன் மாட்டிக்கொள்ளும் இடம் இன்னும் பயங்கரமானதாக உள்ளது. அந்த பயங்கரத்தை எதிர்த்தே ‘வானவில்லுக்கு கண்டனம்’ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலும் நீங்கள் பேராசிரியர் ஒருவரை கடுமையாகவே சாடுகிறீர். அதில் பல அம்சங்களில் எனக்கு ஒப்புதல்தான் சுவாமி. ஆனாலும் நீங்களும் சில இடங்களில் மதத்தின் இறுகிய தன்மையைப் பிடித்து நிற்கிறீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. ‘தன்னம்பிக்கையை வளர்க்கும் அடிப்படை இறை நம்பிக்கை” என்ற கூற்றிலிருந்தே நான் உங்களிடம் முரண்படத் தொடங்கிவிட்டேன் சுவாமி.
சற்றும் பொருந்தாத படிமத்துடன் சரஸ்வதியின் உருவத்திற்கு பேராசிரியர் பொருள் கொடுத்துள்ளது தவறுதான். நீங்கள் சொன்ன பேராசிரியர் இதுவரை மூன்றோ நான்கோ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இன்னும் அதன் எண்ணிக்கை கூடலாம். ஆனால் இதுவரை தனது ஆய்வேட்டை யாருக்குமே காட்டியதில்லை என்பதுதான் எனது வருத்தம். அதை எங்கேயோ ரகசியமாக வைத்திருக்கலாம். பல நூற்றாண்டுக்குப் பிறகு அது பண்டிதர்களால் கண்டடையப்பட்டு தொகுக்கப்படலாம். பாவம் அவரை விட்டுவிடுவோம்.
வேத ஆகமங்கள் துணையுடன், ரிஷிகள் தங்கள் மேலான பரஞானத்தில் உருவாக்கிய வடிவாக சரஸ்வதியை நீங்கள் கூறும்போது அங்ஙனமே எனக்கு அவ்வுருவம் அந்நியமாகிவிட்டது. கலை என்பதும் கடவுள் உருவம் என்பதும் அதை உருவாக்கும் மனிதக் குழுவின் கூட்டு அடையாளமாக இருக்க வேண்டும். அவன் அரசியலைப் பேச வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. இப்படிப் பல சமய அறிஞர்கள் பவ விடயங்களுக்கு அறிவுப்பூர்வமாகத்தான் அர்த்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சாமிக்குப் பழத்தை எப்படிப் படைக்க வேண்டும் என்று விளக்கமெல்லாம் கொடுக்கிறார்கள். அதன் மரபுகளையெல்லாம் பேசுகிறார்கள்.அதை பசியில் இருப்பவனின் வாயில் வைக்க ஒருவருக்கும் தெரிவதில்லை. அது போலவே சரஸ்வதியையும் அவர் உருவத்தின் அர்த்தத்தை பற்றியும் பேசிக்கொண்டிருக்கும் விவாதித்துக்கொண்டிருக்கும் இடைவேளையில் ஒரு சிறுவனுக்குக் கல்வியை கற்பித்துக் கொடுத்துவிடலாம் எனத் தோன்றுகிறது.
ஆனால் சுவாமி இப்படிப் பேசும் நீங்கள்தான் எனது இரண்டாவது விருப்பமான கட்டுரையில் (எளிய நானும் முனியாண்டி சாமியும்) மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகிறீர்கள். நிச்சயம் இவ்விரு கட்டுரைக்கான இடைவெளி சில ஆண்டுகளாவது இருக்கும் என நம்புகிறேன்.மொழியிலும் சொல்லும் முறையிலும் சிந்தனை முறையிலும் ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கான திறன் வந்துவிட்டது.
உங்களைக் காண வரும் பால்ய நண்பர்களிடம், அவர்கள் பொறுப்பேற்றிருக்கும் கோயிலில் பூஜை மற்றும் ஹோமம் செய்து தர ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அதே கோவிலில் உள்ள முனியாண்டி, பேச்சாயி, மதுரை வீரனுக்குப் பூஜை செய்ய மறுக்கிறீர்கள். அதில் உருவாகும் உங்கள் ஞான செருக்கை சுய கிண்டலும் செய்துகொள்கிறீர்கள். ஆனால் தோட்டத்தில் நுழையும்போது உங்களை முனியாண்டி சாமியின் நினைவுகள் தொற்றிக்கொள்கிறது. உங்களை அந்தச் சாமி ஆக்கிரமித்த தருணங்கள் நினைவில் சூழ்கிறது.
எந்தச் சாமியும் சிறு தெய்வமல்ல எனும்போது உங்கள் பார்வை உயர்ந்து நிற்கிறது. முனியாண்டியும் பேச்சாயியும் மதுரை வீரனும் தோட்டத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்த மலேசியத் தமிழர்களின் வாழ்வோடும் நினைவுகளோடும் கலந்தவை. இடைத்தரகர் இல்லாமல் போகிற போக்கில் ஒரு புகாரை வைக்கத் தோதாகிற முனியாண்டி சாமி தோட்டப் பாட்டாளிக்கு ஒரு தோழனாக, பாதுகாவலனாக நினைவில் நின்று உலாவிய அனுபவக் கதைகள் ஏராளம் இருக்கின்றன. இன்றும் அவை செவி வழி கதைகளாக எங்கும் நிறைந்து கிடக்கின்றன.
எந்தச் சடங்கையும் வேண்டாமல் கொடுத்ததைத் தின்னும் முனியாண்டி சாமி எளிய மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு முனீஸ்வரராகி போகும் அவலம்தான் உங்கள் தோட்டத்திலும் நடந்திருப்பது மட்டும் நாம் ஒப்பனைகளை எப்படியெல்லாம் விரும்புகிறோம் என்பதற்கு சான்றாக நிற்கிறது.
இந்த இரண்டு கட்டுரையிலிருந்தும் மிகத் தனித்து நிற்கிறது “எளிய நண்பர்களும் ஆன்மீகவாதியும்” என்ற உங்கள் இறுதிக் கட்டுரை. அக்கட்டுரையின் முடிவு பல நல்ல சிறுகதைகள் கொடுக்கும் அதே உணர்வெழுச்சியைக் தூண்டுகிறது.
உங்கள் தோட்டத்துக்குச் செல்லும் நீங்கள் பழைய நண்பர்களைப் பார்க்கிறீர்கள். ஒவ்வொருவராத அடையாளம் கண்டு கொண்டு பேசுகிறீர்கள். எல்லோரும் உங்களை மிகப்பெரிய ஆன்மீகவாதியென போற்றுகின்றனர். தொட சங்கடப்படுகின்றனர். நீங்களே நெருங்கி சென்று பேசுகிறீர்கள். இறுதியில் ஊடார் கணேசன் எனும் நண்பர் குறித்து உங்கள் காதுக்குப் புகார் வருகிறது. அவர் குடித்து குடித்தே குட்டிச்சுவராகிவிட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்.
நீங்களும் அவருக்கு அறிவுரை கூறுகிறீர்கள். அதற்கு அந்த நண்பர் ‘குடிக்கிறதுல என்ன தவறு? பறக்க பறக்க பாடுபடறேன். அலுப்பு தீர குடிக்கிறேன். இதுல என்ன தப்பு?” என்கிறார். அதோடு நிற்காமல், “என் வாழ்க்கை ஒரு பக்கம் கிடக்கட்டும்… உனக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி சாமியாரா போயிட்ட? உனக்கு என்ன குறை?” என அவர் கேட்கும்போது உங்களுக்கு “நல்லா இருப்பதின்” அர்த்தம் புரிந்துபோகிறது.
வாழ்வை நமது கண்கள் அளப்பதுதான் எவ்வளவு பெரிய அபத்தம்.
“சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே. பெரியகட் பெரினே
யாம் பாடத் தாம் மகிழ்ந்துண்டும் மன்னே” (புறம் 235)
என ஔவை தன் நண்பன் அதியனின் விருந்தோம்பலை புகழ்வதை ‘குவார்டர்’ மட்டும் இருந்தால் எனக்குக் கொடுத்து விடுவான்; ‘புல்லாக’ இருந்தால் இருவரும் சேர்ந்து அடிப்போம் என நவீன உரை எழுதலாம் என்கிறார் பேராசிரியர் அ. மார்க்ஸ். பாடல் எழுதிய ஔவைக்கும் அலுப்பிருக்கும்போது உடல் உழைப்பு தொழிலாளிக்கு இருப்பதிலும் அதைக் களைய மேற்கொள்ளும் அவனது அணுகு முறையிலும் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போகும். அவரது கவலையெல்லாம் பாவம் உங்களைப் பற்றியதாகவே உள்ளது. நீங்கள் எதையும் சொல்லி உங்கள் ஆனந்தத்தைப் புரிய வைக்க முடியாது. மனிதர்கள் அனைவருமே தனியர்கள் என்பதை மட்டுமே இன்னொருதரம் உறுதி செய்துகொள்ளலாம்.
இறுதியாக
சுவாமி! இந்நாட்டில் எழுத்தாளர்கள் பலர் ஆசிரியர்களாக உள்ளனர். அல்லது அதிக பட்சம் தமிழ் தெரிவதால் ஆசிரியர்கள் எழுத்தாளர்களாகிவிடுகின்றனரா என்றும் தெரியவில்லை. எழுத்து வாழ்வின் எதார்த்தத்தையும் வாழ்வின் இருண்ட பகுதியையும் பேசுகிறது. நமது கல்வி முறை வழுவாத வாழ்வை பிடிவாதமாகக் கட்டி இழுக்கிறது. இதுதான் முரண்நகை.
எழுத்தாளர்களாகும் ஆசிரியர்கள் பலர் கல்வி கோட்பாட்டை எழுத்தில் திணிப்பதே இலக்கியத்தின் வேலை என நினைக்கின்றனர். அதோடு ஒத்துப்போகும் மு.வ. போன்றவர்களை இலக்கிய ஆசான்களாகிவிட்டனர்.
நீங்களும் ஆசிரியராக இருந்தவர்தான். ஆனால், இக்கட்டுரைத் தொகுப்பில் உங்கள் எழுத்தின் போக்கு ஓர் ஆசிரியர் மன நிலையில் தொடங்கி ஓர் எழுத்தாளரின் மனநிலையில் முடிகிறது. அதன் பொருட்டே ஆசிரியராக நீங்கள் எழுதியுள்ள பல கட்டுரைகள் குறித்து ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அக்கட்டுரைகள் பலவற்றில் நீங்கள் கேள்விகளை முன் வைத்தாலும் அவை முடிவுகளைச் சொல்லும் கேள்விகள். “பசித்தால் சாப்பிட வேண்டும் இல்லையா?” என்பது போல இங்கே ‘சாப்பிட வேண்டும்’ என்பதுதான் முடிவு. அல்லது தீர்ப்பு. அது கேள்வியாகத் தொணிக்கிறது. அவ்வளவே. மற்றபடி சில இடங்களை வாசிக்கும்போது எனக்குள் கேள்விகள் உதித்தபடி இருந்தன.
உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன். “கிளிங்” அல்லது பறையன் எனத் திட்டும் மலாய்க்காரர்கள் மேல் உங்களுக்கு சீற்றம் வருகிறது. கீழோர்க்கு அஞ்சாமல் குன்றென நிமிர வேண்டும் என்கிறீர்கள். பாவம்! அவனுக்கு அதன் உள் அர்த்தமெல்லாம் தெரியாது. ஒரு வசை சொல்லாக அதை உபயோகிக்கிறான் அவ்வளவே. மற்றபடி அச்சொற்களைக் கண்டு கோபப்பட ஒன்றுமில்லை. ஆனால் வசை சொல்லாகப் பயன்படுத்தாமல் நாட்டில் தத்தம் சாதியை தூக்கிப் பிடிக்கும் சாதி சங்கங்களுக்கும், மனிதனை வர்ணம் பிரித்துக் காட்டும் வர்ணாசிரமத்திற்கும், மனுவுக்கும், இவற்றை உள் இழுத்து இயங்கும் இந்து மதத்துக்கும் நீங்கள் எவ்வாறான எதிர்வினையாற்றப் போகிறீர்கள் என்பது குறித்துதான் எனது எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன.
டிசம்பரில் வெளியாகப்போகும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் நூலுக்கு எழுதிய உரை