நான் சினிமா விமர்சகன் இல்லை. இதை பலமுறை பல சூழலில் சொல்லியிருக்கிறேன். இதை இப்படி அழுத்தமாகச் சொல்லக்காரணம், அவ்வாறான போலி அடையாளம் எப்போதும் என்மீது விழக்கூடாது என்பதால்தான். சினிமா என்பது பல்வேறு கலைகளின் கூட்டு வடிவமைப்பு. இசை, ஒப்பனை, வசனம், ஒளி, ஒலி, பாடல், நடனம், நடிப்பு என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ள அதில் ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு சினிமா விமர்சனம் செய்கிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம். அல்லது நூறு படங்களுக்கு மேல் ஒருவன் பார்த்துவிட்டால் அவன் செய்யும் விமர்சனங்கள் நம்பகத்தன்மையானவை என்பதெல்லாம் வேடிக்கை.
கவனிக்க! நான் இங்கு விமர்சனம் செய்வதை வேடிக்கை எனச் சொல்லவில்லை. ஒரு படைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது முழுமையானது என நம்பவைக்க இதற்கு முன்பாக பார்த்துவிட்ட திரைப்படங்களின் பட்டியலைத் தூக்கிக்கொண்டு அலைவதெல்லாம் பசப்பல். இந்தச் சூழல் இலக்கியத்திலும் உண்டு. தமிழகத்தில் பல இலக்கிய நண்பர்களிடம் அவர்கள் கருத்தை மறுத்துப்பேசும் போது படபடப்புடன் அவர்கள் வாசித்த உலக இலக்கியங்களின் பட்டியலை வாந்தியெடுப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். கலை சார்ந்த புரிதலில் நான் அவ்வகையான பட்டியலைச் சுமக்க விரும்புவதில்லை. இதற்கு முன்பு எடுத்தப் பதக்கங்களை பொதுவில் வைத்துவிட்டு சண்டைக்குத் தயாராகும் உக்தி WWF ல் வேண்டுமானால் சாத்தியப்படலாம்.
முக்கியமாக வேறெதைவிடவும் ஒரு படத்தின் திரைக்கதையை உள்வாங்கவும் அதன் போதாமைகளை அறியவும் அல்லது அதன் நிறைவை உணரவும் மட்டுமே என் சிற்றறிவுக்கு வாய்த்துள்ளது. எனவே, ‘காவியத்தலைவன்’ திரைப்படத்தை அதன் அடிப்படையில் மட்டும் வைத்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன். அதன் மூலம் கலையையும் ; கலை மூலம் வாழ்வையும் புரிந்துகொள்ளும் ஒரு தருணமாகவே கருதுகிறேன்.
முதலாவது, படம் இரண்டு கதைகள் உள்ளது போல ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. முதலாவது பொறாமை. மற்றது காதல். ஆனால் இவை இரண்டும் கலையின் தீவிரத்தை வெவ்வேறு மொழிகளில் விளக்கமே உபயோகப்படும் கருவிகளாகின்றன.
நாடகங்களில் ராஜபார்ட் வேடம் போடுபவன்தான் சூப்பர் ஸ்டார். அப்படி ஒரு ஸ்டாராக வர துடிக்கும் பிருத்திவிராஜ், அவரைவிட திறமையாக நடிக்கும் சித்தார்த் மீது பொறாமை கொள்கிறார். பொறாமையில் எழும் வன்மம் எவ்வாறு கொலை வரை தொடர்கிறது என மட்டுமே அப்படத்தைப் பார்த்தால் படத்தின் ஜீவனை நாம் நழுவ விடலாம்.
கலை என்பதை முதலிலிருந்து வலியுறுத்திக்காட்டுகிறார் வசந்தபாலன். நாடகத்தின் அசுரன் கதாப்பாத்திரத்தை பிருத்திவிராஜ் மற்றும் சித்தார்த் தங்கள் குருவான நாசரிடம் நடிக்க பிருத்திவிராஜ் அப்பாத்திரத்தை இதற்கு முன் செய்தவரைவிட உணர்ச்சி பூர்வமாக்குகிறார். சித்தார்த் அப்பாத்திரத்தின் ஆக்கிரோஷத்தை இறக்கி புதுமை செய்கிறார். நாசர் சித்தார்த்தை ராஜபார்ட் ஆக்குகிறார். ‘கலை என்பது போலச் செய்வதல்ல, அது புதியதைக் கண்டடைவது’ என தன் மொழியில் தன் நியாயத்தை நாசர் விளக்குவதிலிருந்து படம் கூர்மை அடைகிறது.
இதற்கிடையில் பிருத்திவிராஜ் தனது தன்னொழுக்கத்தின் மீது அபார மதிப்பை வைத்துள்ளார். மது அருந்தும், பெண் சவகாசம் உள்ள சித்தார்த்துக்கு கிடைக்கும் பாராட்டு முழுமையான ஒழுங்குடன் இருக்கும் தனக்குக் கிடைக்காதது பற்றி கவலை கொள்கிறார். இந்தக் காட்சி உடனே எனக்குக் கல்விக்கூடங்களை நினைவு படுத்திவிட்டது. ஒழுங்குகளில் கலை வருவதில்லை. கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் கட்டுப்பாட்டை மீறாமையும் உழைப்பாளிகளை உருவாக்குமே தவிர படைப்பாளனை உருவாக்காது. பிருத்திவிராஜ் உழைப்பாளியாக இருக்கிறார். சித்தார்த் கலைஞனாக இருக்கிறார். இந்த இரு முரண்பட்ட பாத்திரங்களும் அதன் போராட்டங்களையும் சமகால வாழ்வில் ஒவ்வொரு கணமும் சந்திக்க முடிகிறது.
நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிய எத்தனையோ படைப்பாளர்கள் தங்களின் ஆக்கம் குறித்து எவ்வித பொருட்படுத்தலும் இல்லாதது குறித்தும் ஓரிரு கதைகள் எழுதியவர்களுக்கு கிடைக்கும் அடையாளங்கள் குறித்து பொறுமுவதையும் அடிக்கடி பார்ப்பதுண்டு. சுந்தர ராமசாமி ஒரு முறை சொன்னது போல, நூறு கதைகள் எழுதியவர்களுக்கு தொழிலாளர் தினத்தில் சிறந்த தொழிலாளி என விருது கொடுக்கலாம். ஆனால் கலை எண்ணிக்கை ஒட்டியதல்ல. அதேபோல தொழில்துறைகளில் பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் ஒருவருக்கு ஒரு இசை கலைஞனின் , ஓவியனின், கவிஞனின் தன்னிறைவு குறித்த குழப்பங்களையும் சந்தித்ததுண்டு. போலச் செய்வதற்கான உழைப்புக்கும் , புதுமை உருவாக்கும் உழைப்புக்கும் உள்ள நுண்ணிய வேற்றுமையே வெகுசன மற்றும் தீவிர படைப்புக்கான இடைவெளியாக உள்ளது.
காவியத்தலைவனில் முக்கியமான அம்சமே இருவருமே போட்டிப்போட்ட ராஜபாட்டை வேடங்கள் அர்த்தம் இழந்து போவதுதான். அதிக கிராக்கி இருந்த புராண நாடகங்களின் மைய பாத்திரத்தில் நடிக்க போட்டியிடக்கூட ஆள் இல்லாமல் காலியாகிறது. கலைஞனுக்கும் போலச்செய்பவனுக்குமான பேதத்தை தொடர்ந்து காட்டிச்செல்கிறார் வசந்தபாலன். சித்தார்த்திடம் இயல்பிலேயே நாட்டின் மீது பற்று உள்ளதை ஆங்காங்கே காட்டிச்செல்கிறார் இயக்குனர். அதன் முழுமையான வடிவம் சிறை செல்லும் போது நடக்கிறது. கலைஞன் யாராக இருந்து; யாருக்காக இயங்குகிறான் என்ற கேள்வி எழுகிறது. புராண நாடகங்களைத் தவிர்த்துவிட்டு சுதேசி நாடகங்களைப் போடுகிறார். மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்துகிறார். புராண நாடகம் மீதான மயக்கம் மக்களுக்குத் தெளிகிறது. கலை போதைக்கான வேலையை மட்டுமே செய்தால் அது தெளிவதும் நியாயம்தானே. எனவே பிருத்திவிராஜ் நஷ்டமடைகிறார்.
படம் இறுதிப்பகுதி வழமையான சினிமா எனலாம். அது அவசியம் கூட இல்லை என்றே தோன்றியது. ஒரு பார்வையாளனாக காலம் தோறும் அலங்கரித்து வளர்க்கப்பட்ட புராண நாடக கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பு மக்களுக்குக் குறைந்து பிருத்திவிராஜ் நாடகக் கொட்டையில் கூட்டம் குறையும் போதே படம் முடிந்துவிட்டது. அதற்கு பின்பான எந்தக் காட்சியும் அலுப்பேற்றக்கூடியதுதான். அதை வசந்தபாலன் திறம்படச்செய்துள்ளார்.
வாழ்வில் எதையெதையோ முக்கியமென தேடி அலைகிறோம். காலம் ஒரு சமயம் நம் கைகளில் நாம் தேடியதை அழுத்தமாகக் கொடுத்தாலும் அதன் அவசியம் இல்லாமல் செய்துவிடுகிறது. “அதனால இப்ப என்ன?” என்ற ஏளனமான வார்த்தையை நாம் பேராசைகளில் தேடிக்கண்டடையும் எதன் மீதும் வாழ்வு பரிகசித்தபடியே உமிழ்கிறது. கனத்துக்கு கனம் மாறும் இந்த வாழ்வில் புகழ், பொருள் , உறவுகள் என எதைக்கொண்டு நாம் பெருமைப்படுவது என்ற கேள்வியை மையமாய் வைக்கிறது படம். அப்படி ஏதோ ஒன்றுக்காக மட்டுமே இயங்கும் போலி கலைஞன் காலத்தால் காணாமல் போகிறான். கொஞ்சம் அதிஷ்டம் இருந்தால் சாகும் வரையாவது அவன் புகழ் மயக்கம் பின்னே வரும்.
கலையின் உக்கிரமும் அதன் வீரியத்தில் பலமும் அறிந்தவன் மட்டும் அதை அக்னி பந்து போல ஓயாமல் கைகளில் சுழற்றிக்கொண்டே இருக்கிறான். வசந்தபாலனுக்கும் அது புரிந்தால் சரி.