கலை வடிவங்களை எளிமையான சொற்களில் உங்கள் முன்னனுபவம், வாசிப்பனுபவம், பிற ஆளுமைகளின் கருத்து எனும் அடிப்படையில் வெறும் கலைசார், வாழ்வுசார் விமர்சனமாக முன் வைப்பது நல்ல புரிதலைக் கொடுக்கிறது. உங்கள் விமர்சன கட்டுரைகள் ஓரளவு ஆய்வுபூர்வமான ஒப்பீடுகள் இருப்பது கூடுதல் சிறப்பு. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் முக்கியமானதாக உணர்கிறேன். கலைகள்பால் நுட்பமான ஆழமான புரிதலுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் அவசியம். தொடர்ந்து எழுதுங்கள்.//ஒழுங்குகளில் கலை வருவதில்லை. கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் கட்டுப்பாட்டை மீறாமையும் உழைப்பாளிகளை உருவாக்குமே தவிர படைப்பாளனை உருவாக்காது.// அப்படியென்றால் படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா? அல்லது எதை ஒழுங்கு ஒழுங்கின்மை என்றும் கூறுவது?
விஜயாலட்சுமி
விஜயா உங்கள் கேள்வியை முக்கியமானதாகக் கருதுகிறேன். இதற்கு பதிலாக நான் நமது கற்றல் சூழலையே உதாரணமாகக் காட்டலாம் என நினைக்கிறேன். எனக்கு 10 வயது இருக்கும். ஓவிய ஆசிரியர் மறுநாள் பள்ளியில் அட்டையில் கோப்பு செய்யச் சொல்லித்தரப் போவதாகவும் அதனால் மணிலா அட்டையை வாங்கி வரும்படியும் கூறினார். எனக்கு கோப்பு செய்ய அத்தனை ஆர்வம். எனக்கு முன்பே அக்கா பள்ளியில் கோப்பு செய்வதை நான் பார்த்திருந்ததால் நினைவில் இருந்து தொகுத்து ஒரு கோப்பு செய்தேன். அதை ஆர்வத்துடன் மறுநாள் பள்ளியில் காட்டினேன். உடனே ஆசிரியர் ஒரு அரை விட்டார். நான் செய்தவிதம் தவறு. அதே போல நான் முந்திரிக்கொட்டை எனவும் பட்டப்பெயர் கொடுத்தார். நான் செய்த கோப்பிலும் தாள்களை அடுக்கலாம் என வாதிட முயல, மீண்டும் அரை விழுந்தது. பின்னர் நான் வகுப்பின் பின்புறம் நிறுத்தப்பட்டேன். பிற எல்லா மாணவர்களும் கோப்புகளைச் செய்தனர். எல்லாம் ஒரே மாதிரி இருந்தது. என்னுடையது மட்டும் வேறு மாதிரி இருந்ததால் நிராகரிக்கப்பட்டது.
இங்கு நான் ஒழுங்கு இல்லாதவன். ஆனால் என் ஆக்கம் போலச்செய்வதல்ல. அது என் சுயம். நான் விரும்பும் கோப்பு. எனது வடிவமைப்பு. அது தவறானதாக இருக்கலாம். பயனற்றதாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் சுதந்திரமானவனாக இருந்திருக்கிறேன். என் தவறிலிருந்து நான் கற்றுக்கொள்வேன்.
ஒரு ஆவணப்படம் பார்த்தேன். ஆறு ஏழு சிலந்திகளுக்கு மதுவகைகள் கொடுக்கப்படுகின்றன. பின்னர் அவை தத்தம் கூடுகளை எழுப்புகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் உள்ளன. அவை வாழ்வதற்கோ பூச்சிகளைப் பிடிப்பதற்கோ பயனற்றவை ஆனால் அவை முற்றிலும் மாறுபட்டு அற்புதமான வடிவங்களாக இருந்தன. ஒழுங்கு என்பதை ஒரு படைப்பாளன் தனக்கான அளவுகோளின் படி தேடி கண்டடைவான். அது புறத்திலிருந்து திணிக்கப்படுவதல்ல என்பதையே அக்கட்டுரையில் வலியுறுத்தினேன்.
புறத்திலிருந்து வலியுறுத்தப்படும் எந்த ஒழுங்கும் கலைஞனுக்கு சுமைதான். அவன் அதை மீறிச்செல்லவே விரும்புவான். இல்லாவிட்டால் ஒன்று போலவே காட்சியளிக்கும் சிலந்திக்கூட்டை மட்டுமே உருவாக்குவான். அதுவும் அழகாகத்தானே இருக்கிறது என்பான்.