காலில் தப்பும் பந்துகள்

football-fiesta-salisburyநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் லுனாஸில் உள்ள  கம்பங்களில். பன்மையில் சொல்லக்காரணம் இரு கம்பங்கள் சார்ந்து வாழ்விருந்ததால்தான். முதல் கம்பமான கம்போங் லாமாவில் வெளியே செல்லவே அனுமதி இல்லை. மண்ணை மிதிக்கக் கட்டுப்பாடு. பக்கத்து வீட்டு எல்லைக்குச் சென்றுவிட்டால் அணு ஆயுதங்களைவிட பயங்கரமான ஆயுதங்களால் நான் தாக்கப்பட சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் செட்டிக்கம்பத்தில் நல்ல சுதந்திரம். விசாலமான கம்பம் அது. மிக அருகாமையில் திடல் கூட இருந்தது.

கம்பத்தில் உள்ள இளைஞர்களும் சிறுவர்களும் எந்த நேரமும் திடலை மையமிட்டே இருப்பார்கள். காற்பந்தாட்டமே அங்கு பிரதானம். மாலை ஐந்தாகிவிட்டால் ஒரு சிறிய கூட்டமே அங்கு சேர்ந்துவிடும். நான் தூர நின்று அதையெல்லாம் பார்ப்பதோடு சரி. எனக்கு கம்பத்தில் நண்பர்கள் இல்லாததால் எப்படி அவர்களுடன் இணைவது என தயக்கம் இருந்தது. ஆனால் அந்த இடைவெளியெல்லாம் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் தீர்ந்தது. என்னையும் சில நண்பர்கள் மாலையில் பொதுத்திடலில் காற்பந்து விளையாட அழைத்தனர்.

அதிக நாட்களாக அவர்கள் கம்பத்தில் வசித்தாலும் இடைநிலைப்பள்ளியில்தான் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பப்பள்ளியில் நான் கெட்டிக்கார மாணவன். பின் தங்கிய மாணவர்களிடமெல்லாம் நான் சேர்வதில்லை. கெட்டிக்கார மாணவனிடம் சில அடையாளங்கள் இருக்கும். முதலில் தலையைப் படிய வார வேண்டும். பௌடரை அப்பிக்கொள்ள வேண்டும். காலுரையை முட்டிவரை இழுத்துப்போட்டிருக்க வேண்டும். நிச்சயம் நெற்றியில் விபூதி இருக்க வேண்டும். பென்சில் பெட்டியில் சாமி படம் இருந்தால் கூடுதல் சிறப்பு. இந்த அத்தனை பக்குவமும் பச்சக்கென பொருந்திய என்னிடம் பின் தங்கிய மாணவர்கள் அருகில் வரவே நடுங்கினர். ஆனால் இடைநிலைப்பள்ளி அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் களைத்துப்போட்டதால் நண்பர்கள் அதிகமானார்கள். விளைவு நான் கம்பத்தில் பந்து விளையாடப் போனேன்.

பள்ளியில் எச்சில் ஒழுக அன்பைக்காட்டி நன்றாகப் பேசிக்கொண்டிருந்த நண்பன் திடலுக்குச் சென்றதும் வேறு மாதிரியாகிவிட்டான். “”டேய் மயிறு… பந்த எத்துடானா சென மாடாடம் நிக்கிற…” என வைதான். நானும் ஒரு சில சமயம் பந்தை உதக்க முயன்றேன். அது காலில் சிக்காமல் வழுக்கிக்கொண்டு போனது. மீறி அகப்பட்டால் கால் எரிந்தது. பெரும்பாலும் பந்துவிளையாட்டு காலணி இல்லாமல்தால் நண்பர்கள் விளையாடினர். பந்து பறந்தது. என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. மீறி உதைத்தால் கால் வலித்தது. சில சமயம் பந்து என்னைச் சோதிப்பதுபோல கால்களுக்கிடையில் வந்து சரியாக மாட்டிக்கொள்ளும். நான் பதறிவிடுவேன். சுற்றி நின்று ‘இங்க இங்க’ நண்பர்கள் கத்தும் போது மயக்கமே வந்துவிடும். எங்கே யாருக்கு தட்டுவது என யோசிக்கும் முன்பே எதிர்க்குழுவில் இருக்கும் ஒருவன் பந்தை அலேக்காக அள்ளிக்கொண்டு போய்விடுவான். வசைகள் தொடரும். வசைகள் சில சமயம் உச்சத்தை எட்டி எனக்கும் சொறிநாய்க்கும் உறவு இருப்பது வரை கற்பனைகளைக் கக்கும். அன்று இரவு முழுவதும் பலவிதமான சொறிநாய்கள் கனவில் வரும். இதன் காரணமாக நான் திடலுக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன்.

காலப்போக்கில் பந்தை உதைப்பதை விட சக மனிதர்களை உதைப்பது சுவாரசியமாக இருக்கவே அதை ஓரளவு திறம்பட செய்தேன். அதில் ஓரளவு உச்சத்தைத் நெருங்கும் சமயம் மற்றுமொரு பந்துவிளையாட்டு அனுபவம் கிடைத்தது.

பள்ளியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் ஆளுக்கு இரண்டு ரிங்கிட் போட்டு ஏழு வெற்றிக்கோப்பைகளை ஏற்பாடு செய்தனர். ஒரு குழுவில் 7 பேர் என அவர்களுக்குள் காற்பந்தாட்டப் போட்டி வைப்பது என திட்டம். ஆள் குறைந்ததால் என்னை இணையும்படி கேட்டார்கள். நெருங்கிய நண்பர்கள் என்பதால் சம்மதித்தேன். என்னை கீப்பருக்கு அருகில் நிர்க்க வைத்தனர். யார் வந்தாலும் அவர்களிடம் பலாத்காரமாக பந்தைப் பிடுங்கிவிட வேண்டும் என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. என் உடல் வலு மீது நண்பர்களுக்கு நம்பிக்கை. நானும் இது நமக்கு ஏற்ற ஜோலிதான் என பந்தை யார் எடுத்து வந்தாலும் பிடிவாதமாகச் சட்டையைப் பிடித்து இழுத்து பந்தைப் பிடுங்கினேன். தாராதவனை தள்ளிவிட்டேன். இதனால் என் குழுவுக்கு அதிகம் கெட்டப்பெயர். பெனால்ட்டியில் நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கவே நாசுக்காகப் பேசி என்னைக் குழுவிலிருந்து கலட்டி விட்டனர். வேடிக்கைப் பார்க்க வந்த நண்பனின் தம்பியை விளையாட்டில் இணைக்கவும் எங்கள் குழு சற்று நேரத்திற்கெல்லாம் முன்னிலைக்குச் சென்று வெற்றிக்கண்டது.

என் ஒருவனால்தான் அத்தனை பின் தங்கள் என குசுகுசுவென பேசிக்கொண்டனர். எப்படியோ ஜெயித்தாகிவிட்டதால் வெற்றிக்கோப்பையைக் கேட்டேன். முதலில் தயங்கியவர்கள் பின்னர் நண்பனின் தம்பிக்குதான் கோப்பை செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினர். நான் 2 ரிங்கிட் போட்டிருக்கிறேன். எனவே எனக்குதான் அது உரிமை என ஞாயம் பேசியும் கேட்பதாய் இல்லை. என்னால் தோல்வி அடையவிருந்த குழு நண்பனின் தம்பியால் வென்றது என மறுத்தனர். வேறு வழியில்லாமல் கோப்பையை எடுத்துக்கொண்டு ஓடினேன். அனைவரும் துரத்தினர். வெற்றிக்குப்பின்னும் கோப்பையைத் திருடிக்கொண்டு ஓடியது நானாகத்தான் இருக்கும். அதோடு விடாமல் வீடு வரை தொலைப்பேசியில் அழைத்து நான் கோப்பையைத் திருடி வந்ததாக வேறு கூறிவிட்டனர். எடுத்து வந்த கோப்பையால் எந்த பெருமையும் இல்லாமல் ஒரு மூலையில் கிடாசினேன்.

இந்தக் கசப்பாலெல்லாம் அதற்குப் பின் காற்பந்தை நான் எட்டிப்பார்ப்பதே இல்லை. ஆசிரியர் பயிற்சி கல்லூரி கிடைத்தபோது ஏதாவது மூன்று விளையாட்டுகளைப் பட்டியலிடக் கேட்டு பாரம் இருந்தது. ஆண்கள் விளையாட்டில் மூன்றுதான் இருந்தது. அதில் ஒன்று காற்பந்து. எனவே என் தேர்வில் அதை மூன்றாவதாகப் போட்டு முதல் இடத்தில் பூப்பந்தாட்டத்தைப் போட்டேன். ஆனால், நான் விட்டாலும் காற்பந்து என்னை விடாமல் துரத்தி வந்தது. நான் கல்லூரி காற்பந்து குழுவில் சேர்க்கப்பட்டேன்.
முதல் நாள் திடலுக்கு வரும்போது காற்பந்து விளையாட்டுக் காலணி அணிந்துவர வேண்டுமென பயிற்சியாளர் பணித்திருந்தார். கடை முழுவதும் தேடி விலை மலிவான காலணி கிடைக்கவே இல்லை. எனவே ‘டோப்பர்’ ரக காலணியை அறுபது ரிங்கிட்டுக்கு வாங்கினேன். அந்த வாரம் புறப்பாட நடவடிக்கையில் டோப்பர் ரக காலணியுடன் திடலில் இறங்கிய என்னை நண்பர்கள் ஆர்வம் பொங்க பார்த்தனர். கல்லூரிக்குச் செல்வதற்கு முன் வீட்டிலேயே ஜிம் செட் இருந்ததால் உடல் ஒரு விளையாட்டு வீரனுக்கு ஏற்ற வடிவத்தில் இருக்கும். எனவே நான் ஒரு படுபயங்கரமான காற்பந்து விளையாட்டு வீரன் என அவர்களாகவே முடிவெடுத்து விட்டனர். இரு குழுவாகப் பிரிந்து இருந்தவர்கள் என்னை அவரவர் குழுவில் இணைக்க போராட்டமே நடத்தினர். ஒரு குழுவில் எப்படியோ சேர்ந்தேன்.

விளையாட்டு தொடங்கியது. முடிந்தவரை பந்து என் பக்கம் வராமல் பார்த்துக்கொண்டேன். என் அருகில் உள்ளவரிடம் பந்து கிடைத்தால் உடனே தூர ஓடி வெறியோடு பந்தைப்பார்ப்பேன். நண்பர்கள் எப்படியும் என் காலுக்கு பந்து கிடைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். பந்து கிடைத்தவுடன் நான் அதை லாவகமாகத் தட்டி எடுத்துப்போய் போடப்போகும் கோலுக்குக் கைத்தட்ட ஆர்வமாக இருந்தனர். அது நடந்தது.

அன்றைய விளையாட்டுக்குப் பின் என்னை எல்லோரும் ஏற இறங்க பார்த்தனர். உடல் முழுவதும் கூசியது. எவனாவது ஏதாவது பேசினால் வன்முறையை பிரயோகித்துவிடலாம் என நினைத்தேன். மௌனம். அதுவே மிகக் கொடுமையாக இருந்தது.

மறுவாரம் முதல் என்னைப்போலவே பந்தின் மீது அலர்சி கொண்ட நண்பரோடு திடல் ஓரம் பந்து விளையாட வைத்துவிட்டார் பயிற்சியாளர். நண்பர் அங்கிருந்து உதைக்க; அதை தடுத்து நான் இங்கிருந்து உதக்க என மூன்று வருட பயிற்சியும் இப்படியே கழிந்தது. புறப்பாட நடவடிக்கையில் நல்ல புள்ளிகள் கிடைத்தது. நம் நாட்டு கல்விக்கொள்கைமீது அலாதி பிரியம் அப்போதுதான் எனக்கு வந்திருக்க வேண்டும்.

(Visited 227 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *