குழந்தைகள் நூல் பதிப்பித்தல்

 
childrenஇன்று முழுவதும் பந்திங் நகரத்தில் கழிந்தது. பெரும் முதலீட்டில் பதிப்பகத்துறையில் இயங்கப்போகும் நண்பர் ஒருவருடன் கலந்துரையாடல். முகநூல் மூலமே அறிந்து அழைத்தார். அவர் மகள் என் வாசகியாம். வல்லினம் குறித்து விரிவாக அறிந்து வைத்திருந்தார். நல்ல நூல்களை அடையாளம் காண்பது பற்றி நான் எழுதிய சிறுகுறிப்பின் அடிப்படையில் மேலும் சில தகவல்கள் கேட்டார். எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லை. ஆனால் தோழர் வ.கீதா மலேசியா வந்திருந்தபோது குழந்தைகள் நூல்கள் பதிப்பித்தல் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் பதிப்பகத்தில் உருவான மாணவர் நூல்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அத்தனை நுட்பமாக மாணவர்களின் உளவியலை கவனத்தில் வைத்து உருவான ஒரு தமிழ் நூலையும் நான் மலேசியாவில் பார்த்ததில்லை. நண்பர் குழந்தைகள் நலனின் அக்கறைக்கொண்டிருந்ததாலும் தரத்தில் சமரசம் செய்துக்கொள்ளாததாலும் சில விடயங்களைப் பேசினோம் அதன் சாரம். அவர் டெல்லி மாணவர் நூல் கண்காட்சிக்குச் சென்ற அனுபவம் கொண்டிருந்ததால் பல புதியத்தகவல்களைக் கூறினார். பேசப்பட்டதின் சாரத்தின் அவசியமானவை:

1. வடிவமைப்பு என்றதும் நாம் படங்களை மட்டுமே யோசிக்கிறோம். எழுத்துரு மிக கவனம் செலுத்தவேண்டிய அம்சம். தகுந்த எழுத்துருவைப் பயன்படுத்துதல் மாணவர்களை சோர்வில்லாமல் வாசிக்க உதவும். ‘லதா’ எழுத்துருவை பல வடிவமைப்பாளர்களும் புறக்கணிப்பதைக் கண்டுள்ளேன். அது இணையத்துக்கானது; அச்சிதழுக்கானதல்ல என்பர். வாசிப்பு நூலுக்கு மட்டும் அல்ல; பயிற்சி நூல்களுக்கும் அந்த எழுத்துரு உதவாது. தரமான தமிழ் நூல்கள் எதிலும் அந்த எழுத்துருவைக் காண முடியாது. நல்ல எழுத்துரு இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆங்கில எழுத்துக்குப் பஞ்சமில்லை. ஓவியம் போன்ற ஆங்கில எழுத்துகள், பாட நூல்களை கதை நூல் வாசிக்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும். இதில் சாதக பாதகமான இரு அம்சங்களும் உள்ளன. படிநிலை ஒன்று மாணவர்களுக்கான வாசிப்பு நூல்களை அவர்கள் எழுத்து வடிவத்தில் வெளியிடுவது நூலை அவர்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும். ஆங்கில கதை நூல்கள் முழுக்கவே குழந்தைகள் கையெழுத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
2. நாளிதழ்/ புத்தக வடிவமைப்பாளர்கள் அனைவருமே மாணவர் நூல் வடிவமைப்புக்கு ஏற்றவர்கள் அல்ல. அது ஒரு மனநிலை. கற்பனையாற்றலும் மாணவர்கள் நூல் குறித்த நுட்பமான அவதானிப்பு உள்ளவர்களே அதற்குப் பொருத்தமானவர்கள். வடிவமைப்பினால் மாணவன் கவனம் சிதராமலும் கவனம் குவியாமலும் இருக்குமானால் அது நல்ல வடிவமைப்பல்ல. எனவே மாணவர் நூலுக்கு வடிவமைப்பாளர் வலது கை போன்றவர். குறைந்த சம்பளம் கேட்கிறார் நிபுணத்துவம் இல்லாதவரை வைத்துப்பக்கம் வடிவமைக்க வேண்டாம். அதேபோல நூலை வடிவமைக்க என்ன மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்பது முக்கியம். Microsoft Publisher போன்றவை அச்சு வடிவில் வரும்போது அதன் நேர்த்தியற்ற தன்மையைக் காட்டிவிடும். நிபுணத்துவம் கொண்டவர்கள் அதை உபயோகிப்பது குறைவு. உங்கள் வடிவமைப்பாளருக்கு indesign, Photoshop போன்றவற்றை உபயோகிக்கத் தெரிவதை உறுதி செய்யுங்கள். இதுவும் பயிற்சி நூல் மற்றும் வாசிப்பு நூல் இரண்டுக்குமே தகும். Microsoft Publisher கொண்டு உருவாக்கப்படும் பக்கங்களில் தமிழ் எழுத்துகள் நேர்த்தியில்லாமல் இருப்பதைக் காணலாம்.
3. எழுத்துகளுக்கிடையிலான இடைவெளி அவசியம். நம் நூலை வாசிக்கும் மாணவன் எவ்வாறான பின்புலம் கொண்டவன் என நாம் அறியாதது. மற்றொன்று நம் நூல்கள் ஆசிரியர் அல்லது பெற்றோர்கள் மூலம் குழந்தைகளிடம் வழங்கப்படுகின்றன. அது அவர்களுக்குத் தண்டனையாகிவிடக்கூடாது. எனவே நெருக்கலான வாசிக்கச் சகிக்காத முறையில் உருவாக்க வேண்டாம். இந்தச் சிக்கலை பாட நூல்களுக்கு வெளியில் பார்க்க முடிவதில்லை. ஆனால் பாட நூல்களில் பக்க வடிவமைப்பில் இந்த மெத்தனப்போக்கைக் காணலாம். பனுவல்களை பெரியவர்கள் பார்வையில் பார்ப்பதால் உண்டாகும் சிக்கல் இது. முடிந்தவரை வடிவமைத்தப்பின் மாணவர்கள் யாரிடமாவது கொடுத்து அவர்களை விமர்சிக்கச் சொல்லலாம்.
4. கட்டுரை நூல் என்றால் கட்டுரை எழுத இடைவெளி ஒதுக்க வேண்டாம். கருத்துணர்தல் கேள்விக்கு அவ்வாறு செய்யலாம். கட்டுரையில் ஒதுக்குவதால் இரு பாதகம் உண்டு. ஒன்று, மாணவர்கள் வழங்கும் பணத்துக்கு நாம் தேவையற்ற வெற்றுத்தாள்களை நூலில் திணித்து அதை மொத்தப் பக்கங்களின் கணக்கில் இணைக்கிறோம். உதாரணமாக 80 பக்க நூல் என பிளாஸ்டிக்கில் மூடி நூலை விற்பனைச் செய்கிறார்கள். நம்மால் அதை பணம் செலுத்தும்வரை திறந்து பார்க்க முடியவில்லை. உள்ளே 20 பக்கங்களுக்கு மேல் கோடிடப்பட்ட தாள்கள். 20% மேல் காலி. இதுதான் மலினமான வணிகம். 64 பக்கங்களில் 6 பக்கங்கள் காலியாக இருந்தாலே 10% ஏமாற்றுவேலை. அதுவும் எளிய கல்வியறிவு கொண்ட பெற்றோர்கள் தாங்கள் சுரண்டப்படுவதுகூட தெரியாது. சீனார்கள் மத்தியில் இது நடப்பதில்லை. மலாய், தமிழில் அதிகம். மற்றொன்று, நாம் ஒதுக்கும் பக்கங்களுக்குள் மாணவனால் எழுதமுடியுமா என்பது சந்தேகம். அவன் எழுத்து பெரிய அளவில் இருந்தால் கோடுகளே அவனுக்குத் தடையாகிவிடும்.
5. மும்மொழிகளிலும் வரப்போகும் அவர் நூல்களை மும்மொழி ஆளுமை உள்ளவர்களும் பிழைத்திருத்துதல் நலம். நம் கண்கள் நம்மை ஏமாற்றும்… எவ்வளவு மொழி புலமை இருந்தாலும்.
6. கருத்துணர்தல் கேள்விகளுக்குப் பதில்களைப் போடும்போது அதற்கான ஒரு வரையறை உள்ளது. அந்த நுணுக்கத்தை அவருடன் பகிர்ந்துகொண்டேன் . A. பதிலில் 4 நான்கு சொற்றொடர்கள் என்றால் B. பதிலில் அதற்கு குறைவான சொற்கள் கொண்ட பதில்களை அடுக்குவது கூடாது.
7. இறுதியாக அவரிடம் சொன்னேன். நீங்களும் நானும் செய்வது வணிகம்தான். நான் செய்வதற்கான காரணங்கள் உங்களுக்குத் தெரியும். நீங்கள் இதில் இறங்கும் காரணம் என்னவாக இருந்தாலும் அவசரமும் பேராசையும் மட்டும் எப்போதும் பட வேண்டாம். எவ்வளவு மறைத்தாலும் இவ்விரு குணங்களும் உங்கள் நூல்களில் தெரிந்தேவிடும். உங்கள் நூல்களை வாசிக்கும் மாணவன் அவ்வளவு சாதாரணமானவன் அல்ல. அவன் நாளை உங்கள் தரத்தை தீர்மாணிப்பான்.
உரையாடல் முடிந்தவுடன் உடன் இருந்த தோழி கேட்டார். பதிப்பக ரகசியங்களைச் சொல்லலாமா?
நான் சொன்னேன், தன் பலத்தின் மீது நம்பிக்கை உள்ளவனால் மட்டுமே எதிர் தரப்பினரிடம் ஆயுதங்களை அன்பளிப்பாகத் தர முடிகிறது.

 

 

 

(Visited 160 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *