தத்துவங்கள் குறித்தும் வாழ்வியல் குறித்தும் நான் மிகச்சிலரிடம்தான் கலந்துரையாடுவதுண்டு. சுவாமி பிரம்மானந்தா, மருத்துவர் சண்முகசிவா, பி.எம்.மூர்த்தி எனச்சிலரை உடனடியாகச் சொல்லலாம். ஒவ்வொருவரும் உளவியல் தொடர்பான ஆழமானப்புரிதல் உள்ளவர்கள். ஆன்மிகம் மூலமாகவும் அன்பு மூலமாகவும் சேவை மூலமாகவும் அவர்கள் வந்து அடைந்துள்ள இடம், மனவிசால ரீதியாக வேறுபடுத்திப்பார்க்க முடியாதது. ஒரு மலை உச்சிக்கு ஏற எண்ணற்ற பாதைகள் இருப்பது போல் இவர்கள் மூவருமே ஒரே மாதிரியான விடயங்களை வெவ்வேறு வடிவங்களில் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
சில நாள்களுக்கு முன் பி.எம் மூர்த்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகனின் ‘விதிசமைப்பவர்கள்’ குறித்த பேச்சு வந்தது. அவரும் அதை வாசித்திருந்தார். விதிசமைப்பவர்கள் சலுகைகளை எதிர்ப்பார்ப்பதில்லை; அவர்கள் தன்னிறைவானவர்கள் எனக்கூறினேன். அவரும் அதை ஆமோதித்தார். பேச்சு தன்னிறைவு பற்றி போனது. உண்மையில் அது மகத்தான வார்த்தை. நான் தன்னிறைவு குறித்து முதன் முதலாக சீ.முத்துசாமியிடம்தான் அறிந்துகொண்டேன். அவர் தனக்கே உரிய மிகக்குறைந்த சொற்கள் மூலமாக அதை விளக்கினார். “இலக்கியம் மற்றவர்களுடனான போட்டி இல்லப்பா… அது உனக்கே நீ உருவாக்கிக்கிற சவால்.”
எப்போதெல்லாம் மனதில் அவசரமும் பிறருடனான ஒப்பீடும் அதன் மூலம் பொறாமையும் வருகிறதோ அப்போது இந்த வரிகளை நினைத்துக்கொள்வேன். மனம் அப்படியே அமுங்கிவிடும். உண்மையில் நாம் நம்மை பிறருடன் ஒப்பிட்டே கணித்துக்கொள்ளும் அனுபவம் அபத்தமானது. சில ஆளுமைகளின் அருகாமையே என்னை கீழ்மையிலிருந்து மீட்டுள்ளது என நினைக்கிறேன். எனது நேற்றை, இன்றையோடு ஒப்பிடுவது மட்டுமே செயலூக்கமாக எப்போதும் இருக்கிறது. ஒன்றும் செய்யத்தோன்றாத கணங்களில் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருப்பது என்னை வதைத்ததே இல்லை. மூர்த்தி அவர்களும் அதைத்தான் கூறினார். லாலான் புற்களுக்கு மத்தியில் விட்டாலும் வாழ்வின் நுட்பங்களைத் தேடிக்கண்டடைய முடியும் என்றார்.
நான் அன்று முழுவதும் தன்னிறைவு குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு துறையில் ஒருவர் செய்வதுபோலவே அவசர அவசரமாக இன்னொன்றைச் செய்து பெருமூச்சுவிட்டுக்கொள்ளும் நபர்களை நண்பர்கள் அடையாளம் காட்டும்போதெல்லாம் முன்பு சிரிப்பு வரும்; இப்போது பரிதாபமாக இருந்தது. எவ்வளவு மன உளைச்சல் அவர்களுக்கு. முதலில் அவர்களுக்குப் பொறாமையைத் தூண்டும் நபரை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்நபர், ஒரு திட்டத்தை செயல்வடிவாக்கும்போது இவர் தீராத மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும். தாங்கள் சிறியதாகிவிட்டதாக உள்ளூர குமைந்து அதேபோல ஒன்றை அவசரமாகச் செய்ய வேண்டும். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வாதிட வேண்டும். அதற்கு உடன்பட ஆட்களைப் பிடிக்க வேண்டும். ஆனால் இத்தனைக்குப் பிறகும் அத்திட்டத்தின் ஆயுள் மிகக்குறைவாக இருக்கும். பின்னர் தொடராமல் அடுத்தத்திட்டம், அடுத்த அறிவிப்புகள். பாதியில் நின்றுவிட்டவைகளைப்பற்றி அவர்கள் யாருமே கவலைப்படுவதில்லை. அவர்களுக்கான தேவை சமூக வலைத்தளங்களில், நாளிதழ்களில் தங்களுக்கான கவனிப்பு. உண்மையில் தன்னுணர்வுடனும் தன்னிறைவுடனும் உருவாக்கப்படும் எந்தத்திட்டமும் பாதியில் நிர்ப்பதில்லை. இந்த உண்மை அவர்கள் முன் வந்து நிற்கும்போது ஏற்படும் மன உளைச்சல் கொடுமையாகத்தான் இருக்கும் எனக் கணிக்க முடிந்தது.
மூர்த்தி அவர்களிடம் பேசிய விடயங்கள் மனதை விட்டு மறையும் முன்பே இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. அது ஒரு சீன உணவக வளாகம். அங்கு பார்வையற்ற ஒரு மலாய்க்காரர் இசைக்கருவி துணையுடன் பாடல் பாடிக்கொண்டிருந்தார். அருகே ஒரு இந்திய முதியவர் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தார். அவர் உடை, தோற்றம் அனைத்துமே அவர் யாருடையப்பராமரிப்பிலும் இல்லை என்பதைப் புரிய வைத்தது. அவர் சட்டைப்பையில் சீனப்பெருநாளுக்கு யாரோ அவரிடம் கொடுத்த ஆங்பாவ் இருந்தன. அதில் உள்ள நோட்டுகளை ஒவ்வொரு பாடலுக்குப் பின்பும் மலாய்க்காரர் உண்டியலில் போட்டுக்கொண்டிருந்தார். நானும் நண்பரும் அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்.
தனக்குத் திருமணம் ஆகாததால் குழந்தைகள் இல்லையென்றும் இங்குதான் பரதேசியாக சுற்றுவதாகவும் கூறினார். ஆனால் தான் அனாதை இல்லை. கடவுள் தனக்கு இருப்பதாகக் கூறி மேல் நோக்கி வணங்கினார். தன்னால் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாட முடியும் என்றவரால் ஓரிரு ஆங்கிலச் சொற்களையும் பேச முடிந்தது. உணவுண்ண அழைத்தபோது வயிறு நிரம்பியிருப்பதாக மறுத்தார். பொதுவாகவே இதுபோன்று கைவிடப்பட்டவர்களுக்குப் போதைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கும். அதற்காகவே அவர்கள் எவ்வழியாகிலும் பணம் சம்பாதிக்க முயல்வர். வேறுவகையில் பணத்தை இழக்கவும் மாட்டார்கள். அம்முதியவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை எனப் பேச்சிலேயே தெரிந்தது. நாளைக்காகவோ குறைந்த பட்சம் அன்றைய இரவுக்கோ கூட உணவுண்ண அவர் பணத்தைச் சேர்த்துவைக்கும் பிரக்ஞையில் இல்லை. ஒவ்வொரு பாடலுக்குப் பின்பும் அவர் ஆகாயத்தை நோக்கி ஆண்டவனைத் தொழுதார். வேறு யாராவது மலாய்க்காரர் உண்டியலில் பணம் செலுத்தினால் அவர்களைப்பற்றி கடவுளிடம் சொல்லி வாழ்த்தினார். கொஞ்ச நேரம் அமந்தவர் அந்த பார்வையற்றவரின் இசையில் கிரங்கி மேலும் மேலும் ரசனையில் உச்சம் நோக்கிச் சென்றார். நாங்கள் அவரை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தோம். அப்போது எங்கள் கைத்தவறி சில சில்லரைகள் சிதறி கீழே விழுந்தன. பொறுமையாக அவற்றைப் பொறுக்கிக்கொடுத்தவர், அந்த மலாய்க்காரர் உண்டியலில் மொத்தப்பணத்தையும் போட்டுவிட்டு ; வாழ்த்திவிட்டு அகன்றார்.
நான் நண்பரிடம் சொன்னேன். அந்த பார்வையற்ற கலைஞருக்கு இவர் நிலை குறித்து எப்போதும் தெரியப்போவதில்லை. இவர் ஆங்கிலப்பேச்சு , தொடர்ந்து பணம் செலுத்தி வாழ்த்தும் பாணி அத்தனையும் அவர் கற்பனையில் ஒரு பிரமாண்ட நபரை உருவகித்திருக்கும். அவர் முழு நிறைவுடன்தான் தனது இசையை வெளிப்படுத்துகிறார். முதியவரும் ரசிப்பதை மட்டுமே முழுநிறைவுடன் செய்கிறார். இருவருக்கும் அதைத்தவிர வேறு உறவுகள் இல்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் பூர்ணமாக இருக்கிறார்கள்.
“அம்முதியவர் பெயரைக்கேட்கவில்லையே” என்றார்.
“தன்னிறைவு என இருக்கலாம்” என்றேன்.