இன்று உறங்காமல் இருப்பதென முடிவெடுத்தது ஒரு நாவலை வாசிக்க. இடையில் கொஞ்சம் ‘வைன்’ தேடினேன். ஒரு மாதத்திற்கு முன் நண்பர் சரவணன் அன்பளிப்பாகக் கொடுத்தது. என் ரசனை அறிந்தவர். சிகப்பு ‘வைன்’னை பருகுவதைவிட கிளாஸில் ஊற்றுவது சுவாரசியமானது. அதற்கேற்ற கிளாஸைத் தயார் செய்து ஐஸ் கட்டிகளை நிரப்பி பாட்டிலைக்கவிழ்க்கும்போது வெளிபடும் ஓசை; இசை. சிவப்பு வைன் பொருத்தமான கிளாஸில் அழகாகக் காட்சியளித்தது.
இடைவேளையில் அ.பாண்டியன் பிளாக்கைத் திறந்தேன். மீண்டும் ‘விடைபெறுதல்’ கவிதையை வாசித்தேன். எழுதப்பட்ட அன்றே அது நல்லக் கவிதையாகப் பட்டது. பின்னர் மாறுநாள் படித்தால் அப்படி இருக்காது போல என விட்டுவிட்டேன். சில சமயம் நமது மனநிலைகூட சாதாரண கவிதைகளை மிகச்சிறந்த கவிதைகளாகக் காட்டிவிடுவதுண்டு. அ.பாண்டியனை கவிஞராக என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் ஆதாரப்பூர்வமாக தர்க்க சிந்தனையுடன் பேசுபவர். கவிதைக்கு அவை ஒவ்வாது. இதற்கு முன் அவரது ‘தேடல்’ என்ற கவிதையைத் தவிர மற்ற எதுவும் என்னைக் கவர்ந்ததில்லை. ஓரிரு நாட்களுக்குப் பின் அவர் புளோக்கை உருவாக்கும் பணியில் இருந்தபோது மீண்டும் ‘விடைபெறுதல்’ கவிதையை வாசித்தேன். கொஞ்சம் பொறாமையாக இருந்தது. செ…செ… இருக்காது என விட்டுவிட்டேன். இப்படியே இருபதுமுறைக்கும் மேலாக வாசித்து இன்று இரவு அக்கவிதை கண்ணீரை வர வைத்தது. ‘வைன்’ ஏதோ கோளாறு செய்கிறது போல என முதலில் குழம்பினேன். கொஞ்ச நேரம் கண்களை மூடியபோது என் பதின்ம வயது நினைவுக்கு வந்தது.
அப்போதெல்லாம் நான் கொஞ்சம் மூர்க்கமாக இருப்பேன். ஆனால் வெகுளி. அதனால் அவசரப்பட்டு கை நீட்டி விடுவேன். என் கோபத்தால் நெடுநாள்கள் நெருக்கம் காட்டியவர்கள் குறைவு. ஆனால் என்னை நண்பர்கள் புறக்கணிப்பதைக் கண்டுப்பிடிக்கவே முடிந்ததில்லை. அதையெல்லாம் அறியாமல் அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் மத்தியில் அமர்ந்து ஜோக்கெல்லாம் அடித்துக்கொண்டிருப்பேன். யாரும் சிரிக்க மாட்டார்கள். சகஜமாக வீட்டுக்குச் செல்வேன். தூங்குவதாகத் தகவல் வரும். என்னை விட்டு விட்டு போபவர்கள் பின்னால் வெட்கமே இல்லாமல் ஓடிப்போய் இணைவேன். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்கள் என்னை நீக்கியிருப்பார்கள். பின்னர் அவர்கள் புறக்கணிப்பு கடைசிவரை தெரியாமல் நானாகத் தனித்துத் திரிவேன். தனிமை பழகிவிட்டிருக்கும். அவர்கள் திட்டமிட்டே என்னை கலட்டிவிட்டது அந்தத் தனிமையில்தான் தெரியவரும்.
கொஞ்ச நேரம் மனம் கனத்தது. மீண்டும் கவிதையின் இறுதி பகுதியை வாசித்தேன்.
கோடையில்
இலை
கண்ணீரும்
கையசைத்தலும்
இன்றி
தன் கிளையில் இருந்து விடுபட்டு
வெப்பக் காற்றில்
மிதக்கிறது
மீண்டும் உணர்ச்சிகள் அலைக்கழிந்தன. இப்போது என்னைவிட்டு பிரிந்தவர்கள் நினைவுகள் வந்தன. எவ்வித வருத்தமும் விடைபெறுதலும் இல்லாமல் தூரமாய் போனவர்கள் சட்டென ஒரு இலையால் வெப்பக்காற்றில் மிதந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் பிறகெப்போதும் நினைத்துக்கூட பார்க்காத அளவு வாழ்வு பெருக்கெடுத்து ஓடுவதை நினைத்துக்கொண்டேன். மனம் கனமாய் இருந்தது. கொஞ்ச நேரம் கண் அயர்ந்தேன். மீண்டும் முதல் பகுதியை வாசித்தேன். ஏன் மரம் தான் இலைகளை உதிர்க்கப்போவதை மறைத்து வைத்தது என கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த இலைகள் எத்தனை நம்பிக்கையில் கிளைகளைப் பற்றியிருக்கும் என்று தோன்றியது. கவிதையின் பொருள் இப்போது சுய வாழ்க்கை அனுபவத்திலிருந்து வேறொரு தளத்தில் பயணித்தது. முற்றிலுமாக உள்ளுணர்வைச் சென்று தொட்டது.
ஓர் உணவுப்பிரியனின் நாவில் என்ன சுவை அமர்ந்தாலும் அதன் உன்னதத்தை இதுவரை தான் உண்ட மிகச்சிறந்த உணவுகளின் பட்டியலில் இயல்பாகச் செறுகிவைப்பது போல, தமிழில் வாசித்த மிகச்சிறந்த கவிதைகள் கொடுத்த அனுபவத்தை இக்கவிதை கொடுத்தது. மீண்டும் முகநூலில் நுழைந்தபோது நித்தியா வீரராகு கவிதை.
/ நான் ஒரு மாமிசம் விரும்பும் கழுகின்முன்
தாவரமாயிருக்கிறேன்
அது உதிரம் கசிய என் கனிகளை வருடுகிறது./
நானெல்லாம் இனி எதுக்கு கவிதைன்னு ஒன்ன எழுதனும் என ‘வைன்’னை குடித்து முடிக்க ஆரம்பித்தேன்.
அ.பாண்டியன் கவிதையை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்.