இவ்வருடம் மலேசியாவில் கலை, இலக்கியத்தை மையமிட்டு பல்வேறு ஆக்ககரமான முன்னெடுப்புகள் ஆங்காங்கு நடக்கின்றன என்பதில் மகிழ்ச்சி. அவை மலேசிய இலக்கியத்தின் வெற்று இடங்களை நிரப்புவது கூடுதல் மகிழ்ச்சி. பொதுவாக இங்கு போலச்செய்வதிலேயே சக்திகள் விரயமாகின்றன. ஆனால், முன்னெடுக்கவேண்டியப்பகுதிகள் சீண்டுவார் இன்றி கிடக்கின்றன. புதியதைக் கண்டடையவும் அவசியமானவற்றை முன்னெடுக்கவும் கூடுதல் உழைப்பு தேவைப்படுவது காரணமாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே பிரபலமாக இருக்கும் ஒரு முன்னெடுப்பின் வழியில் செல்வதில் ஊடக கவனத்தை அடையலாம் என்பதாலும் ஒரே மாதிரியான செயல்கள் தொடர்ந்து நடைப்பெறுவதுண்டு. எப்படி இருப்பினும் மலேசியா போன்று பொருளியல் தேவை அதிகரித்துவரும் நாட்டில் இன்னமும் வாசகர் பரப்பு இருக்க எல்லோரும் அவரவரால் இயன்ற பணிகளைச் செய்துக்கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வருடம் தொடக்கம் முதலே சில முயற்சிகள் உருவாகியிருப்பதை கவனப்படுத்த விரும்புகிறேன்.
1. மழைச்சாரல் – மீராவாணியால் புலனக்குழுவாகத் தொடங்கப்பட்டு வாசிப்பை ஊக்குவிக்கும் ஓர் வாசகர் குழுவாக கடந்த ஆண்டு இறுதி முதலே வளர்ந்து வருகிறது. அண்மையில் அவர்கள் சந்திப்பும் நடந்துள்ளது. பல்வேறு இலக்கியப்பின்னணி கொண்டவர்கள் அதில் இருப்பது வரவேற்கத்தக்கது. மலேசியாவில் உள்ள இதழ்களில் / நாளிதழ்களில் வெளிவரும் படைப்புகள் குறித்த பகிர்வுகள் புலனத்தில் நடப்பதாக தயாஜி மூலம் கேள்விப்பட்டேன். அது ஆரோக்கியமானது. எதுவுமே செய்யாதவர்கள் மத்தியில் ஏதோ ஒன்றை செய்ய முனைந்த மீராவாணி பாராட்டுக்குறியவர். நாளிதழ்களில் வெளிவரும் படைப்புகள் குறித்த மௌனம் நிகழும் சூழலில், ஒரு குழுவில் அது குறித்து பேசுவது ஆரோக்கியமானது. அவற்றைத் தொகுத்து குழுவில் உள்ள யாராவது பத்திரிகைகளில் பிரசுரித்தால் எழுத்தாளர்களும் ஊக்கம் அடையலாம். அதுவே அடுத்தக்கட்டம். அந்த இடம் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் அப்படியே காலியாக உள்ளது. வாசகர் இயக்கங்கள் வருடாந்திர நிகழ்வுகளை மட்டும் கலைநிகழ்ச்சியோடு செய்யும் சூழலில் ‘மழைச்சாரல்’ போன்ற அமைப்புகள் நவீன இலக்கிய வாசிப்புக்குள் வாசகன் நுழைய ஏற்ற திறப்புகளை ஏற்படுத்தலாம் என ஒரு வாசகனாக ஆசைப்படுகிறேன்; அவ்வளவே.
‘அகம்’, ‘இலக்கிய வட்டம்’ போன்றவை இதுபோன்று முயற்சிகளால் உண்டாக்கிய மாற்றங்கள் நினைவுக்கூறத் தக்கது. அதற்குத் தேவை விரிவான உரையாடல். அவ்வுரையாடல்களின் தொகுப்பு. பெரிய வசதிகள் இல்லாத 70களில் இலக்கிய வட்டத்தினர் 26 பக்கங்களில் தங்கள் உரையாடல்களை நிகழ்த்தி அதை அச்சாக்கியத் திட்டம் நமக்கெல்லாம் ஒரு முன்னோடி உதாரணம்தான். முரண்பட்ட கருத்துகளைக்கொண்ட ஆளுமைகள் மத்தியில் நிகழும் உரையாடல்களே ஆக்ககரமானது என்ற அரு.சு.ஜீவானந்தனின் சொற்களை நினைத்துக்கொள்கிறேன். அதற்கு மாறாக விமர்சனங்கள் அற்ற குறிப்பிட்ட ஒருவரைக்கொண்டாட உருவான எந்த அமைப்பும் காலத்தால் அழிந்தது என்ற வரலாற்றையும் நினைவுக்கொள்ள வேண்டியுள்ளது. உறுதியான நிலைபாடும், அந்த நிலைபாட்டை உறுதி செய்பவர்களுடனான சந்தேகங்கள் அற்ற உரையாடல்கள் மௌனமாய் இருந்துவிடுதவற்குச் சமம். மழைச்சாரல் ஆக்ககரமான உரையாடல்களை உருவாக்கும் வாசகர் இயக்கமாக வர அத்தனைச் சூழலும் உள்ளது.
2. டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் இலக்கிய அரங்கம் – 20.3.2016 மலாயா பல்கலைக்கழகத்தில் இவ்வரங்கம் நடைபெறவுள்ளது. ரெ.கார்த்திகேசுவின் நாவல் குறித்து நான் பல்வேறு சமயங்களில் விமர்சனம் செய்து வந்துள்ளேன். அது அவரது நாவல் குறித்த எனது பார்வை மட்டுமே. அதில் இப்போதும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். ‘இலக்கிய வட்டம்’ இதழ் உருவாக்கம் தொடங்கி, நவீன இலக்கிய முன்னெடுப்பிற்குத் தொடர்ந்து உழைத்துள்ளார். இந்நாட்டில் இலக்கியத்திற்காக அவ்வாறான ஒரு நெடிய உழைப்பு அங்கீகரிக்கத்தக்கதே. இலக்கிய ரசனை ரீதியாக, நாவல் எழுத்து வகையில் நான் அவருடன் முரண்படுகிறேன். ஆனால், இந்நாட்டில் ரசனை விமர்சனம், இலக்கிய இதழ், போன்றவற்றின் ஒரு முன்னோடி அவர் . இணையம் இல்லாத காலத்தில் மலேசிய இலக்கிய இந்தியாவில் அறிமுகமாக ஒரு காரணி. இவ்வரங்கு எப்படி நடைப்பெறப்போகிறது எனத்தெரியவில்லை. எப்படி இருந்தாலும் எழுத்தாளர் சங்கம் தாங்கள் முக்கியமாக கருதும் ஓர் எழுத்தாளருக்கு அவர் வாழும் காலத்திலேயே இதுபோன்ற அமர்வுகளைச் செய்வது வரவேற்கத்தக்கது. இலக்கிய அரங்கு என்பது நேர் – எதிர் என எல்லாவகையான கருத்துகளை உள்ளடக்கியவைதான். அது பாராட்டு அரங்கமாகவோ வாழ்த்து அரங்கமாகவோ இருந்துவிடுவதில்தான் சிக்கல். எப்படி இருந்தாலும் இதுபோன்ற அரங்கங்கள் தொடர்வதும் அது பதிவு செய்யப்படுவதும் புதிய வாசகர் பரப்புக்கு ஓர் எழுத்தாளனையும் அவன் படைப்புகளையும் அறிமுகம் செய்ய உதவும்.
3. சிறுகதை நூல் வெளியீடுகள் – 1995 தொடங்கி 2007 வரை (12 ஆண்டுகளில்) இந்நாட்டில் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளின் எண்ணிக்கை 80ஐத் தாண்டுகிறது. 2005ல் காதல் இதழ் வெளிவந்ததை ஓர் தொடக்கமாகக் கொண்டு இளம் எழுத்தாளர்கள் காதல், வல்லினம் இதழ் மூலமும் தனிப்பட்ட முறையிலும் இயங்கியதை கணக்கிட்டால் 11 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 11 ஆண்டுகளில் தரம் குறித்தெல்லாம் ஆராயாமல் கணக்கிட்டால்கூட 10 சிறுகதை தொகுப்புகளாவது வெளிவந்திருக்குமா என்பது சந்தேகம்தான் என கடந்த ஆண்டு எழுதியிருந்தேன். முந்தைய தலைமுறை அவ்வளவு ஊக்கமாகச் செயல்பட்டதும் இன்று இளம் எழுத்தாளர்கள் தொய்ந்துள்ளதும் சங்கடமானது. இவ்வருடம் இரு சம்பவங்கள் அக்களைப்பைப் போக்குகின்றன. முதலாவது 26.3.2016 ல் வெளிவரப்போகும் சு.யுவராஜனின் சிறுகதை தொகுப்பு. மலேசிய இலக்கியச் சூழலில் அவர் சிறுகதைகள் தனித்துவமானவை. அதேபோல முனிஸ்வரன் குமார் அண்மையில் தனது சிறுகதை தொகுப்பு தயாராகிக்கொண்டிருப்பதாகக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல கங்காதுரை, அ.பாண்டியன், தயாஜி போன்றோரின் நூல்கள் வரும் பட்சத்தில் அது புதிய அதிர்வலைகளை இலக்கியச்சூழலில் உருவாக்கலாம்.
4. புதுக்கவிதை தொகுப்பு – இதற்கிடையில் மலேசியப்புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியும் நடைப்பெறுகிறது எனக்கேள்விப்பட்டேன். காலத்திற்கு ஏற்ற முயற்சிதான். யாரோ ஏற்கனவே செய்துக்கொண்டிருக்கும் பணியை போலச்செய்யாமல் புதிய காலி இடங்களைக் கண்டுப்பிடித்து அதை நிரப்ப முயல்வதென்பது ஆரோக்கியமானது. இத்தகையப் பணிகளை ஆளுக்கொருவராக எடுத்துக்கொண்டாலே மலேசிய இலக்கியத்தில் மிக வேகமான ஒரு பாய்ச்சலை எல்லாவித முரண்பட்ட கருத்துகளையும் சுமந்துகொண்டே பாயலாம்.அதுவே ஆரோக்கியம்.
வனத்தில் புலியாக இருந்தால் மட்டுமே பாயவேண்டும் என்பது விதியல்ல.