போயாக் : கடிதம் 4

அன்புள்ள நவீன்,sarawak-cultural-village-iban-girls-dancing

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள்,  பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப்  போல  விவரிக்கப்பட்டிருந்தது.  தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை  நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர்  என்ற மூன்று வழிகளில்  ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி.   அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.

கதைசொல்லியின் வருகை மற்றும் அந்த சூழலின் தங்கி இருத்தலால், , ஈபான் ஆதிகுடியினருக்கு  ஆங்கிலக் கல்வியும், குற்றேவல் புரிந்தால் கிடைக்கும் கூலியும் பலனாகக் கிடைக்கிறது.  சீமாவிற்கோ அவள் பழகுவதற்கு அரிதான அயலானின் அணுக்க உறவும், வாய்ப்பமைந்தால் உடலின்பமும் கிடைத்திருக்கும். சிம்பாவிற்கு தான் என்றுமே கேட்டிடாத ஆங்கிலக் கதைகள் கேட்கக்  கிடைக்கின்றது. மரவள்ளிக் கிழங்கினை நொதிக்க வைத்து பெறப்பட்ட துவாக் பானம்,  சீமாவின் இளமையும், பார்வையும், உறவிற்கு இணங்குகிறேன் என்கிற உடல்மொழி ஜாடையும்,  காற்றில் பறந்து ஆடியபடி இறங்கும் சேவலின் வாலினைப் போல அவனுக்கு போதை தருகிறது. இவைகளைத் தவிர அவன் காணும்   ஓரங் ஊத்தன், முதலைகள்,  பன்றிகள்,  நாய்கள், குச்சிகளின் மீது ஊன்றப்பட்ட மண்டை ஓடுகள், சீமாவின் வாயின் மண்புழுக்கள் என அனைத்துமே அவன் மனதில்  ஊறுணர்வு ஏற்படுத்தி உறுத்துகின்றன. கதைசொல்லியால்  உடைக்க முடியாத இந்த பாறைகளான,  படகோட்டியின் ஓரங் ஊத்தன் , ஈபான் பழங்குடிகளின், முதலை வேட்டைத் திறனும்,  சீமாவின் ‘இளங்குமரிகளுடன் உறவிருந்தால் நெற்றியில் குறி வளர வைக்கும்’ மாந்திரீக பின்புலம் கொண்ட தந்தையும், என இவை ஒவ்வொன்றுமே, அயலானின் சுரண்டலிலிருந்து  தங்களை காக்க அவரவர்களுக்கென்று அமைக்கப்பட்டு பேணப்படும் காவல் தடுப்பு போலத் தோன்றுகிறது.

இந்தக் கதையில், குறைகளாக  எனக்கு தோன்றிவைகள்,  முதலைகளின் அறிமுகமும் முதலைகளை ஈபான் பழங்குடிகள் வேட்டையாடும் நிகழ்வும், அதன் பின்னர் ஆயப்பட்டு அதனிலிருந்து பெறப்படும் கறியும் , கொழுப்பும் இன்னும் அழுத்தமான வர்ணிப்புகள் மூலம் சித்தரிக்கபட்டிருக்கலாம். உறுதியான மரத்தூண்களுடன் சுனை நீக்கப்பட்டு பிளக்கப்பட்ட மூங்கில்கள் சுவராக இருந்தன என ரூமா பராங்கில் ஆதிகுடிகளின் வாழ்வியல் சூழல் விவரிக்கப்படுகிறது. இன்னும் அழுத்தமாக அந்த சூழலின் இயற்கை வர்ணனைகள் மூலம் கதைசொல்லியின் மனவோட்டம் விவரிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை கதையின் மையமாக இதனைப் பற்றி பேசவில்லை, விளிம்பில் நிகழ்பவைகள் என்பதால்  விரிவான விவரணைகளை தவிர்க்கப்பட்டும் இருந்திருக்கலாம்.

ஒரு மழைநாளின் பின்னிரவில் நிகந்த அந்த நிகழ்வினை அறிகையில் மனம் எந்த வகையிலும் ஒப்பவில்லை. நத்தையின் தடம் போன்ற பிசுபிசுப்பான கன்னம்,  என நாசூக்காக விவரித்திருந்தாலும் ,  மனச்சமர் குலைந்து,  அந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கவே கூடாது என்றே மனதினுள் மன்றாடி வேண்டினேன்.  துருத்  துகள்களால் நிரம்பி அதனை உதிர்த்தபடியிருக்கும் ஒரு பழுஞ்சிவப்பு இரும்பு ஆணி,   மனிதத்தோலினை துளைத்தாலே, அது நாளங்களையும், நரம்பினையும் குத்தி, காயம் ஏற்படுத்தும்,   சீல் பிடிக்கும்.  அந்த காயத்திலிருந்து  முற்றிலும் மீள, நீடித்த ஆறுதலும், கவனம் குவிந்த தொடர்ந்த சிகிச்சையும் தேவைப்பட்டும்.  எதிர்க்க திராணியில்லாத சிறுமியின் மீதான பாலியல் வன்புணர்வு நிகழ்ச்சி,  மலரக் காத்திருக்கும் உறைபால் வெண்மையும் இளஞ்சிவப்பும் கலந்த ஒரு  முகிழ்ந்த மொட்டின், மீது துருத்துகள் ஆணி இரக்கமின்றி கூராக செலுத்தி கிழித்ததைப் போல இருந்தது.

சிறுமியை பாலியல் நோக்கில் சுரண்டினால், எந்த ஒரு பின்விளைவும் நிகழாது  என அறிந்து,  இந்த குரூர நிகழ்வினை நிகழ்த்தியதற்காக கதைசொல்லிதான் முதன்மைக் குற்றவாளி.  கதைசொல்லியின் காம நோக்கினை அருகிலிருந்து உணர்ந்தபின்னும், அறியாமை கொண்ட அல்லது அறிந்தும் அலட்சியத்துடன்,  சிம்பாவை தனிமையில் விட்ட  சீமாதான் இரண்டாம் குற்றவாளி.  குழந்தை சிம்பாவிற்கென எந்த ஒரு பாதுகாப்பும் தராமல், கதைசொல்லியிடம் கல்வி என்கிற சாக்கில், அனுமதித்த  ஈபான் ஆதிக்குடி மக்களான லேத்தா , லாயவும் சேர்ந்துதான் குற்றவாளிகள்.    இத்தகைய ஆழமான கதை சமகால குற்ற நிகழ்வான, கிறித்தவ மதத்தின் பரப்பு ஊழியன் என்கிற அடையாளத்தில், தென்கிழக்கு ஆசியாவில்  குழந்தை பாலியல் குற்றம் புரிந்த ரிச்சர்ட் ஹக்கில் பிண்ணனியை மட்டும் பேசவில்லை எனத் தோன்றியது.

கதைசொல்லியை காலனிய ஆங்கில, பிரெஞ்சு பேரரசு சக்திகளாகவும், முதலைகள் சீனர்களாகவும், ஈபான் பழங்குடியினர் மலேயர்களாவும், சீமாவை கங்காணிகளாக இருந்த யாழ்பாண தமிழர்கள், மலையாளிகள், மேட்டுக்குடி தமிழர்கள் எனப் பொருத்தினால்  எந்த ஒரு உயிர் பாதுகாப்பும், இன்றி மலேசியாவின் மலைக் காடுகளில்,  உழைப்பின்  செல்கள் அனைத்தையும் உருவப்பட்டு, குரூரமாக சுரண்டப்பட்டு, முகமில்லாமல் மடிந்த பறையர்கள் என ஒருமுகமாகப் பார்க்கபட்ட,  ஆதிகுடி  தமிழக மூதாதையர்கள் என் முன் தோன்றினார்கள். மலேசிய வரலாற்றினை அறிவதும் என் மண்ணின் வராலாற்றை அறிவதும் ஒன்றுதான் என நான் அந்த தருணத்தில் உணர்ந்தறிந்தேன்.

உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்,

என்றும் அன்புடன்,

சிவமணியன்

அன்புள்ள நவீன் அவர்களுக்கு,

பாேயாங் சிறுகதையை வெளியான அன்றே வாசித்து விட்டேன்.உண்மையில் அந்த விவாதம் பற்றிய மிகப் பெரிய ஆர்வம்தான் காரணம்.
உண்மையில் எஞ்சும் சாெற்கள் வரையில் அனைவருக்கும் எழுத நினைத்தேன்.அந்தந்த இதழுக்கு எழுத வேண்டும் என்பது சுணக்கம் தந்தது.எழுத்து என்பது எழுதியவருக்கும் வாசிப்பவருக்குமான அந்தரங்க செயல்பாடு என்பதைப் பாேல வாசகரின் கருத்தும் என நினைக்கிறேன்.பின் எவ்வாறு இந்த விவாதம் நிகழமுடியும்? ஆர்வம் என்று சான்னீர்களே என்ற அந்த முரண் பற்றி நீங்கள் நினைக்கலாம்.தேர்ந்த வாசக விவாதங்கள், படைப்பாளிகளின் விவாதங்கள பாெது வெளியில் நகழ்வது நல்லது என நினைக்கிறேன்.நான் எழுதுவது உங்கள் கதைக்கு புதுசூழலிருந்து கிடைக்கும் கருத்தாக இருக்கலாம்.
காெல்லிமலையின் அடிவாரத்தின் முகம் தெரியா சிறு கிராமத்தின் சூழல் வகுத்த மனத்தின் எதிர்வினை இது.
கிட்டத்தட்ட இன்னமும் சிறுகுழந்தைகள் மீதான வன்மம் தாெடங்காத இடம்.தாெலைக்காட்சிகளில் கேள்விப்படும் ஒரு செய்தி.அது எவ்வாறு மனிதமனதில், செயலில் அரங்கேறுகிறது என்பதன் உளவியல் பின்னனியை நாசுக்காக சாெல்லியிருக்கிறீர்கள்.
ஊரை சுற்றி சிறுதெய்வங்கள் ஏராளம்.அதற்கான காரணத்தில் ஒன்று உங்கள் கதையால் பிடிபடுகிறது.அந்த பயம் தேவை என்று உணர்ந்தவர்கள் ஏற்படுத்தியது எனில் முன்பு இந்த வன்முறை இருந்ததா? என்று நினைக்க வைக்கிறது.உண்மையில் முதல் வாசிப்பில் நான், கதை சாெல்லி மனதால் நினைத்ததற்காக ஊரை விட்டு பாேகிறான் என்றே நினைத்தேன்.இரண்டாவது வாசிப்பில் தான் குழந்தை மீதான வன்முறை புரிந்தது.என் சூழலின் மனம் எதிர்பார்க்காதது…அதுவும் ஆசிரியரை.அவ்வளவு நாசுக்காக அந்த இடத்தை கையாண்டிருக்கிறீர்கள்.மாெழியால் என்ன தான் முடியாது?!
பின் யாேசித்த பாேது ஆசிரியர் மதுஅருந்துவார் என்பது எங்கள் ஊரில் இன்னும் ஏற்க கூடியதாக இல்லை.நாங்கள் காெஞ்சம் பழங்குடிகள் தான் பாேல.
பயம் தான் தவறுகளை தடுக்கிறதெனில் மனிதம் என்பது?
படித்தவர்கள் எதை கற்கிறார்கள்?
முகத்திலடித்தமாதிரி மனித மனத்தின் ஒருபக்கத்தை சாெல்லியிருக்கிறீர்கள்.இறுதில் நீருக்குள் கதைசால்லிக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா.. ஆற்றை கடக்க மாட்டான் என்று தாேன்றியது.கல்வியில் வாழ்வில் ஆன்மீக மற்றும் வாழ்வின் மதிப்பீடுகளை வைத்து தன் மனதை கையாளத்தெரியாத தலைமுறையின் கதை.இது பாேன்ற வன்முறைகள் ஒருசமூகத்தை மேலும் இறுக்கமாக்குகிறது அல்லது அந்தப் பெண்களை மேலும் வீட்டிற்குள் அடைக்கிறது.காலகாலமாக நடப்பது தான்.இது தட்டையான வாசிப்பாக தாேன்றலாம்.முதலில் மனம் கவனிப்பதை எழுதியிருக்கிறன்.
இரண்டாவது வாசிப்பில் அழகியல் தெரிந்தது.அந்தஊர்…படிமம்,உணவு,ஒவ்வாமை என்று.பின் கிராமத்தின் அழகு,கூட்டு வாழ்க்கை.பின் குறியீடுகள் எல்லைகள் பற்றி.எளிதாக தந்தை தன் மகனின் இறப்பை இயற்கையை ஒட்டியதாக ஏற்றுக் காெள்வது என்ற இடம் எனக்கு இந்த பூமி நமக்காக மட்டும் படைக்கப்பட்டது என்ற இன்றைய எண்ணத்தின் மீது விழுந்த ஒரு அடியாக நினைக்கிறேன்.
இறுதியாக ஆதிஉணர்வை அடிப்படையை பேசுவதால் மனதில் இதை எழுதும் வரை கதை அப்படியே நிற்கிறது.
இது சாதாரணவாசக மனதின் கருத்து மட்டுமே.
என் பதினாேரு கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன என்ற அடிப்படையில் சாெல்ல ஒன்று உண்டு.நிறைய படிமங்களை பயன்படுத்தியிருப்பதாக தாேன்றுகிறது.இல்லை
நுண்வாசிப்பு என்ற பெயரில் நான் அவ்வாறு உணர்ந்திருக்கலாம்.
கமலதேவி

 

(Visited 153 times, 1 visits today)