போயாக் : கடிதம் 5

kumang_gawai

குறிப்பு : இவை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்டு இன்னும் பிரசுரமாகாத கடிதங்கள்.

எனக்கு இந்தக் கதையை படிக்கும் போது உளப்பகுப்பாய்வு கோட்பாட்டைத் தான் நினைத்துக்கொள்ள முடிகிறது. மேல் மனதிற்கும் அடி மனதிற்கும் இடையேயான இடியாப்பச் சிக்கலைப் பற்றியது அது. அடி மனம் பழங்குடிகளுக்கானது. உள்ளுணர்வையே நம்புவது, கட்டற்றது ஆனால் நாம் வாழும் சமூகம் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டது. மேல் மனம் அதற்க்கேற்றார் போல அடி மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒரு போராட்டம் அல்லது சிக்கல் உருவாகிறது. அந்தச் சிக்கல்தான் கதையின் நாயகனின் சிக்கலும் கூட.

கதையின் உச்சகட்ட சிக்கல் என்பது இந்த இடம்தான் “நான் முதன்முறையாக அவளை அவ்வளவு அருகில் பார்த்தேன். ஏதோ காட்டு மலரைச்சூடியிரு ந்தாள். அவ்வதிகாலையில் அதன் மனம் கிறங்க வைத்தது. எப்போதும்போல இல்லாமல் நடுவகிடெடுத்து தலை வாரியிருந்தாள். வகிடிலிருந்துகோடு வரைந்தால் மார்பின் மையம் வரை சரிசமமாகப் பிரியும். அவளது தோள்ப்பட்டையும் கைகளும் இடுப்பு சிறுத்திருந்தன. அதற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத மார்புகள். மென்மையை தொடாமலேயே பார்வையின் வழி அறிய முடியும் என எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அசையாமல்அப்படியே இருந்தாள். நான் அவளைப் போகச் சொன்னேன். அவள் அசையவில்லை. அவளுக்குப் புரியவில்லை என தோள்களைப் பற்றி மெல்ல தள்ளமுயன்றேன். அது அவ்வளவு மிருதுவானது. வலுவான எலும்புகளை உடைய தோளில் அவள் எங்கிருந்து அவ்வளவு மென்மையையும் சதைப்பற்றையும்சேகரித்து வைத்தாள் என்பது தெரியவில்லை. நான் கைகளை எடுக்கவில்லை. வாய் மட்டும் போகச்சொல்லிக்கொண்டே இருந்தது. நான் விரல்களைஅவள் அங்கம் முழுவதும் அலையவிட்டேன். கைலியை இறுக்கிக் கட்டியதில் அழுத்தம் பெற்று, இருமார்புகளுக்குமான இடைவெளி குறைந்திருந்தது. நான் அந்த குறைந்த இடைவெளியில் விரலை வைத்தபோது அறிவும் எழுந்துகொண்டது. நெற்றியைப் பிடித்துக்கொண்டு ஓடினேன். கண்ணாடியைப்பார்த்தேன். தூரத்தில் நின்றே அவளைப் போகச்சொல்லி சைகை செய்தேன். அவள் ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள். நான் சத்தமேவராமல் உரக்கக் கத்தும் பாவனையில் கழுத்து நரம்புகள் புடைக்க போய்விடும்படி குதித்தேன். மூங்கில் தரையின் உரசல் அதிகாலை மௌனத்தில்வன்மமாக ஒலித்தது. அவள் அதே நிதானமான பார்வையுடன் திரும்பி நடந்தாள். “

அடி மனதிற்கும், மேல் மனதிற்குமான போராட்டமாக இதைப் பார்க்க முடிகிறது. அடிமனதிலிருந்து பீரிட்டு வருகிற காமத்தை அடக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிற அவனது போராட்டம் இது. காமத்தை வெளிப்படுத்தத் துடிக்கிற அடிமனம், அது மனிதனின் இயல்பு. அவளது அப்பா சமூக காரணியாக அவனைப் பயமுறுத்துகிறார். முகத்தில் ஆண் குறி வந்தால் தான் ஒரு காமுகன் என எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற பயம் அவனுக்கு. அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறான். தலையில் துணியை கட்டிக்கொள்கிறான். அவளுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், இது மிக எளிய நிகழ்வாக இருக்கிறது. எந்த எதிர்ப்பையும் காட்டிக்கொள்ளாதவளாக, எதற்கும் கவலையில்லாதவளாக இருக்கிறாள். காமம் இயல்பானதாக, காட்டு மிருகங்களைப் போல எளிதாகப் பார்க்கிறாள். அவனோ பல்வேறு விதமாக யோசிக்கிறான், ஒருவேளை உறவு கொண்டுவிட்டு கல்யாணம் செய்யாமல்விட்டால், அப்படியில்லாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டால். கடைசியில் வென்றது அவனது மேல் மனம்.

சில சமயம் பேத மனமும், மறு சமயம் அபேத மனமும் மாறி மாறி வென்றுவிடுகிறது. அதன் சரியான படிமம் முதலை. நிலத்தில் தோல்வியும், நீரில் வெற்றியும் பெறுகிறது. கட்டற்ற அவனது காமம் சிம்பா மேல் வெளிப்படுகிறது. மேல் மனதால் அடக்கி வைக்கப்பட்ட அடி மன ஆசை பீரிட்டுக்கொண்டு வெளியேறிவிடுகிறது, எப்படி அலுவலகத்திலிருக்கும் போபத்தை கணவன் வீட்டிலிருக்கும் மனைவி மேல் காட்டுவானோ அவ்வாறு. மேல் மனதால் கட்டுப்படுத்தப்பட்டு தோற்றுப்போன அது இம்முறை வென்றுவிட்டது.

அதற்காக மேல் மனம் தப்பிக்க காரணம் தேடுகிறது. அந்தக் காரணம் தான் இது” சிம்பாவின் அப்பா இளம்குமரிகளுடன் உறவுவைத்துக்கொள்பவனுக்கு மட்டும்தானே  நெற்றியில் ஆண்குறி வளர வைப்பார் எனும் குழப்பம் அச்சமாக எழுந்தபோது ஒப்பந்தப்படி ஆற்றில்இருப்பதால் நாங்கள் முதலைகளின் இரையாகலாம் எனப்படகோட்டி சொல்வதாகப் புரிந்துகொண்டேன்”

“ஓராங் ஊத்தான் ஏறி தனக்கான இடத்தைத் தாராளமாக்கிக்கொண்டது”  என்றது கூட முதலையைப் போல படிமமாகப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. அது அடிமனம் என்றால் நாயகன் மேல் மனம்.  வேண்டும் போது அது தன் இடத்தைத்  தாராளமாக்கிக்கொள்கிறது.

இது அர்ஜீனன் குழப்பம் போன்றது. போரிடவும் முடியாமல், தவிர்க்கவும் இயலாமல், காண்டீபம் நழுவுகிற கதையிது. ஒருவகையில் நம் அனைவரின் கதையிது.

கதையின் சித்தரிப்புக்கள் மற்றும் நுண் தகவல்கள் கதையின் பலம். கதையின் உள்ளே பயணிக்க முடிகிறது. அதே வேளையில் கதையின் ஒருமையில் இன்னும் கவனம் செலுத்திருந்தால், நிச்சயமாக இன்னும் நல்ல கதையாக அமைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ஆங்காங்கே வாசக இடைவெளி அதிகம் இருப்பதால், குறுநாவலாக எழுதியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் என்பது அடியேனின் கருத்து.

மகேந்திரன்

அன்புள்ள ஜெ

நவீனின் போயாக் ஒரு நல்ல சிறுகதை என்பதில் ஐயமில்லை. அதை பலவகையாக வாசிக்கிறார்கள். அடிப்படை இச்சைகள் என்னும் இட் தான் கதை. அதனுடன் இணைந்த குற்றவுணர்ச்சி.  குற்றவுணர்ச்சியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஐதீகங்கள்

அக்கதையின் முக்கியமான உணர்ச்சியான அருவருப்பைப்பற்றி எவருமே எழுதவில்லை. ஆகவேதான் நான் எழுதுகிறேன். அந்த முதலையிறைச்சியில் இருந்து அது ஆரம்பமாகிறது. அவன் அதைக்குடித்து வாந்தி எடுக்கிறான். அந்தப்பெண்கள் புழுக்களை தின்றுகொண்டிருக்கிரார்கள். ஆனால் அவர்களின் உடல்வனப்புக்கு அதுதான் காரணம் என அவன் எண்ணுமிடத்தில் அருவருப்பும் அழகும் ஒன்றாக ஆகிவிடுகிறது

அந்த மனநிலையின் உச்சம்தான் அவன் அப்பெண்களில் ஒருத்தியிடம் எல்லை மீறுவது. அவன் மீறிய எல்லை என்பது அவன் வாழ்ந்த நீருக்கு உள்ல எல்லை. அருவருப்பை அப்படித்தான் அவன் தாண்டுகிறான். அது அழகாகவும் காமமாகவும் மாறிவிடுகிறது. இந்த எல்லைமீறலைத்தான் அக்கதை சொல்லிக்கொண்டிருக்கிறது

இதையெல்லாம் நவீன் எண்ணியிருக்காமலிருக்கலாம். ஆனால் கதையில் வந்திருக்கிறது. அறியாமல் வந்திருந்தால் இன்னும் விசேஷம்

மனோகர்

அன்புள்ள எழுத்தாளருக்கு…

முதலில் கதை நிகழும் நிலமும் அந்தப் பழங்குடியினரின் பழக்கங்களும் தமிழகத்திலிருந்து பார்க்கையில் முதல் ஆச்சரியம்.

ஒருநிலையில் பார்த்தால், கதையில் வரும் அனைவருமே முதலைகளாகவே தெரிகிறார்கள்.

நீரில் இறங்கினால் முதலைக்கு உணவு; நிலத்திற்கு வந்தால் முதலையே உணவு. இது ஓர் ஒப்பந்தம். அவரவர் வலுவாய் இருக்கும் இடங்களில் வேறொருவர் வருகையில் அங்கே உணவாய்க் கொள்ளப்படுகிறார்கள்.  இங்கே நகர் ஒரு பகுதி. அங்கே ‘நாகரீகமாய்’ வாழ்கின்றார்கள் சிலவகை மனிதர்கள். ஆற்றுக்கு இப்புறம் கூட்டுச்சமூகமாய் தம் நம்பிக்கைகளோடு பழங்குடி மனிதர்கள் வாழ்கின்ற மற்றொரு பகுதி. ஓரிடத்தைச் சேர்ந்தவர் இடம்மாறிச் சென்றால் உணவாக வேண்டியது தான். ஆனால் இத்தகைய ஒப்பந்தம் இருவரும் ஒப்புக்கொண்டு ஒழுகினால் மட்டுமே செல்லுபடியாகும். நகரம் இத்தகைய ஒப்பந்தத்தை மீறுகின்ற மனிதர்களால் ஆனது. அதன் அடையாளமாகவே ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வருகின்ற ஆசிரியன், தான் உணவாகாமல் ஆங்கிலக்கதை சொல்லும் சின்னஞ்சிறு சிறுமியை உணவாக்கிக் கொள்கிறான். அவன் ஒரு ‘போயாக்’.

நகரிலிருந்து வரும் ஆசிரியனை தம்முடன் நிரந்தரமாக இருக்கச் செய்தல், உணவாக்கிக் கொள்ளல் போன்றது தான். உணவை உண்ட பின்பு சக்கை வெளியேறிச் சென்ற பின்னும் சத்து உடலிலேயே இருந்து விடும். அது போல், ஆசிரியனுடைய கற்றல் திறமையை அங்கு வளரும் சிறார்கள் சத்தாக உண்டு வெல்லல் வேண்டும் என்பதற்காக ‘எட்டிப் பார்க்கும் போதும் ஏவல் செய்ய’த் தயாராய் அப்பழங்குடியினர் இருக்கிறார்கள். நகருடனான அவர்களுடைய சொல்லா ஒப்பந்தப்படி அவர்களும் போயாக்குகளே.

கறுத்த தமிழனைத் தனக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்களாலும் தழுவல்களாலும் பொன்னிளமைக் கன்னிமையாலும் முயல்கின்ற சீமாவும் ஒரு போயாக்காகவே செயல்படுகிறாள்.
அந்த உராங்-உட்டான் மிக சொகுசாக அந்தப் படகே தனக்குத் தான் என்பது போல் படுத்துக் கொள்வதும் பணி செய்வதும் தான் எதைச் சொல்கின்றது என்று புரியவில்லை. அல்லது ஒன்றுமே அதில் இல்லாமலிருக்கலாம்.

நவீனுக்கு வாழ்த்துக்கள்.

நன்றிகள்,
இரா.வசந்தகுமார்.

அன்புள்ள ஜெ,

ம.நவீனின் போயாக் குறித்து என் கருத்தை எழுதுகிறேன். இத்தனைநாட்கள் கழித்தும் தொடர்ச்சியாகக் கருத்துக்கள் வந்துகொண்டே இருப்பதிலிருந்தே அந்தக்கதை ஆழமான பாதிப்பை உண்டுபண்ணியிருப்பதுதான் தெரிகிறது. மிகவும் பாராட்டத்தக்க விஷயம் இது

என்னுடைய பாராட்டும் அந்த அடிப்படையில்தான். இங்கே கதைகளை எழுதி வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரவர்க்கத்தினர். ஆகவே திரும்பத்திரும்ப நடுத்தரவர்க்கக் கதைகள்தான் எழுதப்படுகின்றன. அவற்றை வாசித்து வாசித்து மிகப்பெரிய சலிப்பு உருவாகி வருகிறது. என்னதான் சொன்னாலும் நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையைச் சார்ந்த பிரச்சினைகளில் என்ன புதுமை இருக்கப்போகிறது. புதிய கதைக்களத்தையும் அதையொட்டிய கூர்ந்த கவனிப்புகளையும் கொண்டுவந்து கதையை நம்மை பாதிக்கும்படி எழுதியிருக்கிறார் நவீன்
இன்றையவாழ்க்கையில் இலக்கியத்தின் பணிகளில் ஒன்று மூளையை கொஞ்சம் உயிர்கொள்ள வைப்பதுதான். திரும்பத்திரும்ப அதே ஃபில்டர் காபி மாதிரி கதைகள் சலிப்பூட்டுகின்ரன. இந்த வரிசையிலேயே போயாக் தான் எனக்குப்பிடித்தமான கதை

ஜெகதீஷ்

போயாக் சிறுகதை

(Visited 79 times, 1 visits today)