வல்லினத்தில் வெளிவந்துள்ள எனது யாக்கைக் குறித்து நண்பர்களின் பார்வையும் விமர்சனமும்.
சிறுகதையை வாசிக்க : யாக்கை
யாக்கை என்றால் உடல். யாக்கை என்றவுடனே யாக்கை நிலையாமையும் நினைவில் வருகிறது. இக்கதை உடல் மூலதனமாகும், பயனற்று போகும் இரு சரடுகளால் பின்னப்பட்டுள்ளது. கேத்தரினா, அவள் தந்தை என மாறி மாறி பயணிப்பது நல்ல வாசிப்பை அளிக்கிறது. கதையின் மிக முக்கியமான இடம், ஈத்தன் தன் மகள் துணையின்றியே இரண்டு மாதம் இருந்திருக்கிறாள். அதுவும் ஜொலிப்புடன் என்பதை உணரும் தருணம். அங்கிருந்து கேத்தரினா இன்று பார்க்கும் தொழிலுக்கு ஒரு நேர்கோட்டு இணைவை வாசகராக கற்பனை செய்து கொள்கிறேன்.
தந்தையாக தான் தோல்வியுற்ற குற்ற உணர்வு அவரை வாட்டுகிறது. தான் நம்பிய கிழட்டு கடல் அன்னையும் கைவிட்டதாக உணர்ந்து கடலில் சென்று மரிகிறார். தனது யாக்கையை பயனற்று உணரும் கிழவன், கடலில் விழுந்து இறக்கிறான். கேத்தரினா தன் யாக்கையை மூலதனமாக கொண்டு வாழ்கிறாள். கொண்டோம் வேண்டுமா என தன்னை விற்க முயல்கிறாள். நிமிடத்திற்கு ஒருமுறை மூச்சை அடக்குவதில் இருந்து ஒரு வினாடி இழுத்து மூன்று வினாடி மூச்சை அடக்குவது, மீன்கள் முதுகை உண்பது, இரு இணை தீவுகள் என நுட்பமான சித்தரிப்பு, கதையில் ஒருவித அமைதியும் பூடகமும் திகழ்கிறது. கிழவனை உண்ணும் மீனும், கேத்தரினாவை நுகரும் கதைசொல்லியும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதாக தெரிந்தது. நல்ல கதை..சொன்ன விதம் நன்றாக இருக்கிறது.
சுனில் கிருஷ்ணன்
அன்புள்ள நவீன்
யாக்கை சிறுகதை படித்தேன். கதையின் பேசுபொருள் உடல்தான். ஆனால் அதை இரண்டு தளங்களில் பிரித்து (கேத்ரீனாவுக்கும் கதைசொல்லிக்குமான உரையாடல் மற்றும் ஈத்தனின் கடற்பயணம்) சொல்லியிருப்பது கதைக்கு ஒரு சுவாரஸ்யத்தையும் வடிவப்புதுமையையும் அளிக்கிறது. இரக்கமற்ற கிழவியாக ஈத்தன் எண்ணிக்கொண்டிருக்கும் கடல் அவனுக்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறது. இறுதியில் மகளைப் புணர்ந்தபின் அவன் அந்த கடலில் அடைக்கலம் தேடுகிறான். கதை சொல்லியிடம் கேத்ரீனா நேரடியாக சொல்லும் கூற்றாக அவள் தந்தை கடலில் இருந்து மீட்கப்பட்டு நோயில் விழுந்ததும் அவளை அடைவதும் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. சரளமான ஓட்டத்தினூடே ஒரு குரூரத்தை சித்தரிப்பது இக்கதையில் (போயாக் போல) சிறப்பாக நிகழ்ந்துள்ளது.
கதைசொல்லி ஏன் தப்பி ஓட முனைகிறான் என்பதற்கான பதில் கதைக்கு வெளியே உள்ளது. அவன் பெண்ணை தரிசிப்பது அதுவே முதன்முறை. ஒருவேளை அவன் தரிசிப்பதும் அந்த இரக்கமற்ற கிழவியைத் தானோ என்று தோன்றியது.
ஆனால் விபச்சாரம் காமத்தின் ஊடுபாவுகள் என்ற பழகிய தளத்தில் கதை நகர்வது சற்று அயர்ச்சியை அளிக்கிறது. அடுத்தடுத்த படைப்புகளில் உங்கள் மொழியும் ஆகிருதியும் இன்னும் தீவிரமாக வெளிப்பட விழைகிறேன்.
நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள்.
சுரேஷ் பிரதீப்
யாக்கை… உடல் சார்ந்த உளத்தியல். கதையின் காட்சியைச் சொற்களே உயிராய் இருந்து கடலுக்கும் விடுதி அறைக்கும் அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி நிற்கின்றது.
உடல் சார்ந்த உளத்தியலைப் பல்வேறு கோணங்களில் காட்டும் தங்களின் முயற்சி புதிய அலசல். அந்த அலசலில் மிகப் பூடகமாகச் சொல்ல வந்த உடல் சார்ந்த உளத்தியல் சில இடங்களில் வாசகனை விடையில்லா நிலைக்குத் தள்ளி கேள்விக்குறியாக்கிக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
இதில் என் வாசிப்பில் கேள்விக்குறியான இடம். கேத்தரினாவின் மிக அருகில் ஈத்தன் படுத்திருப்பதும் அவள் முதலாக தன் தந்தை ஈத்தனை அப்படி காண்பதும் மிகப் பெரிய நெருடலை உந்தச் செய்கிறது. தந்தையே மகளை புணர்திருப்பானோ என்ற கேள்வியும் அங்கு எழாமல் இல்லை. அப்படி அதுதான் நடந்திருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டு கதையைத் தொடரும்போது கதை என் நிலையில் சோர்வுற்று நகர்கிறது. அது கதைப் போக்கில் வலிந்து திணிக்கப்பட்ட நிகழ்வாகவே உணரத் தோன்றுகிறது.
உடல் சார்ந்த உளத்தியல் தத்துவத்தை உணர்த்த நிற்கும் இக்கதையில் அவ்விடம் மட்டும் ஒட்டாமல் நகர்கிறது.
இது நெறியில்லை ஒழுங்கில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. உடல் சார்ந்த மனித உளத்தியலோடும் கதை நகர்ச்சிக்கும் அவ்விடம் ஒட்டவில்லை என்பதுதான் என் எண்ணம்.
இந்த வாசிப்பும் எனக்குப் புதிய அனுபவம்தான். நன்றி நண்பா