யாக்கை சிறுகதை – கடிதங்கள் 2

விபச்சார விடுதியில் வண்ணக்காட்சிகளாகவும்,m கடலின் நடுவிலே வெள்ளை கருப்பு காட்சிகளாகவும், கதை இரண்டு தளத்திற்கும் மாறி மாறி நகர்வது சுவாரசியம்.

முதல் இரு வாசிப்புகளில் ‘ஈத்தன்’ மீதுதான் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தன. அவன் மகளையே உடலால் உறவுக்கொள்ளும் ஒரு கொடூரன் என்றும், உடல் செயலிழந்து காம உறவை தொடர இயலாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறான் என்றும் புரிதல் இருந்தது. பிறரின் கதையாக இது இருந்திருந்தால் அந்த புரிதலோடு….சரி கதை ஓகே இரகம் என கடந்திருப்பேன்.


இது நவீனின் கதை என்பதால்…
இவ்வளவு நேரடியாக கதையை சொல்ல மாட்டாரே! அப்படிச் சொல்ல நினைத்திருந்தால் இவ்வாறு சப்பென்று சொல்லிவிட மாட்டாரே! போன்ற சந்தேகங்கள் எமை தேடல்களில் புகுத்தியது!

ஈத்தன் தாயில்லா தன் மகள் மீது அளவற்ற அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு தந்தையாகவே கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதை மீள் வாசிப்புகளில் தெளிவானபோது, கதையில் வேறெதுவோ உள்ளதென்பதை அறிந்தேன்.

‘யாக்கை’ என்றால் உடல். உடல் என்பது வெறும் உறுப்புகள் நிறைந்த பொக்கிஷம் அல்ல. அது தனை ஆயுதமாகவும், தீனியாகவும், சம்பாத்தியமாகவும் மாற்றிக்கொள்ளும் என்பதை கதைச் சொல்லி வெவ்வேறு சூழ்நிலைகளில் சுட்டிக்காட்டுகிறார்.

கதையில் ஈத்தனை காப்பாற்ற தன் தந்தை அவரின் உடலை சுறா மீனுக்கு இரையாக்குகிறார். தந்தையின் பிரிவுக்குப் பின் சம்பாதித்து தனை காப்பாற்றிக்கொள்ள கேத்தரீனா தன் உடலை விபச்சாரத்தில் ஈடு படுத்துகிறாள். ஈத்தனோ தன் உடலைக் காப்பாற்ற (மகளின் நலன் கருதி) கடைசி மூச்சு வரை போராடி மீள்கிறான். மீண்டாலும் தனது சிகிச்சைக்கான பிரிவின் போது மகள் மாசுப்பட்டுள்ளாள் என்பதை அறிந்தவனாய் தன் உடல் இனி பயனற்றது எனும் விரக்தியில் மீன்களுக்கு இறையாகிறான்.

தன் காமப்பசியை போக்க வந்த கதைச்சொல்லி உடல் கவர்ச்சிக்கானது மட்டுமில்லை அது ‘தின்னக்’ கொடுக்கக் கூடியது என்பதை கேத்ரீனாவின் கதையின் வழி புரிந்துக்கொண்டு பதறி ஓட ஆயுதமாகிறான் என்று கதை முடிவதாக தோணுகிறது.

தான் சொல்ல நினைத்ததை முடிந்தவரை முழுமையாய் வாசிப்பாளன் புரிந்துக்கொள்ள வேண்டுமென கவனமாக கதைச் செல்வோருக்கு மத்தியில் ‘உடல் தின்னக்கொடுப்பது’ என்ற ‘பிலோசோப்பி’யை மட்டும் மையமாக வைத்து கதை சொல்லும் தைரியம் எத்துணைப் பேரிடத்தில் இருக்க முடியும்.

நவீனின் தீவிர வாசகனாய் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்…நாகம், போயாக்..இப்போது யாக்கை என்று தொடர்ச்சியாக காமம், உடலுறவு, உறுப்புகள் என்றே இருப்பதைப்போல் தொடராமல் தங்களின் அடுத்த கதையை வேறொரு பாணியில் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
கலைசேகர்

பாலியல் தொழில் விடுதி மற்றும் கடல் என்று கதைகள் இரண்டு கிளைகளாக பிரிந்து நகர்கிறது. இளைஞர் இன்பம் தூய்க்க பாலியல் தொழில் விடுதிக்கு செல்கிறார். வழக்கமாக எந்த வாடிக்கையாளர்களும் எடுக்காத அந்த பெண்ணை எடுக்கிறார். எல்லா ஆண்களும் அந்த தொழில் செய்யும் பெண்களிடம் கேட்கும் சம்பிரதாய கேள்வியை இவரும் கேட்கிறார். கேத்தரினா என்ற அந்த பெண் தன் தந்தை கடலில் குதித்து இறந்து விட்டதால் இந்த தொழிலுக்கு வந்து விட்டதாக சொல்கிறாள். அவருக்கு அது வழக்கமாக தான் கேட்கும் காரணங்களில் ஒன்றாக படுகிறது. பொழுது போக வேண்டும் என்று கேட்டு வைக்கிறார். அவளும் தந்தையின் வரலாற்றை சொல்கிறாள்.மகளை கரை சேர்க்க போராடும் ஒரு தந்தையாக தான் கதையின் மத்திய பகுதி வரை ஈத்தான் நமக்கு தெரிகிறார். மகளை மற்ற ஆண்களிடம் இருந்து காக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணம் வேண்டும் என்று கடலுக்கு போகிறார். கடல் வாழ்க்கை மற்றும் அதை சார்ந்த விடயங்களும் அவருக்கு அத்துப்படி. கூடுதலாக கடலில் நீந்தவும் கடலில் மிதப்பதும் அவருக்கு கை வந்தக் கலை.

கேத்தரினாவுக்கும் அவ்வப்போது கடலுக்கு சென்று வரும் பழக்கம் இருந்ததால் அவளும் தந்தை ஈத்தானிடம் சில விடயங்களை கற்று வைத்து இருக்கிறாள். ஒரு கட்டத்தில் ஈத்தான் கடலில் தவறி விழுந்து விடுகிறார். ஆனாலும் தன்னை சமாளித்து கொள்கிறார். நீந்தியும் மிதந்தும் தாக்கு பிடிக்கிறார். சில மீன்களும் அவரை பதம் பார்க்கிறது. நடுக் கடலை ஒரு கிழவியாக அதுவும் ஒரு இரக்கமற்ற உணர்ச்சிகள் இல்லாத ஒரு கிழவி என்று நினைப்பவர் பிறகு ஒரு கட்டத்தில் அந்த கிழவியை கேத்தரினாவுக்கு தாய் போன்றவள் என்று மனதை மாற்றிக் கொள்கிறார். ஒரு வழியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனை யில் சேர்க்க படுகிறார். இரண்டு வார சிகிச்சை பிறகு இரண்டு மாதம் சுய நினைவின்றி இருக்கிறார். அதில் இருந்து விழித்தவுடன் கேத்தரினாவிடம் புது பொழிவை காண்கிறார். அவருக்கு உண்மை புரிகிறது தன் மகள் சோரம் போய் விட்டாள் என்று. கதையை கேட்கும் இளைஞர் ஏன் உன் தந்தை கடலில் குதித்து இறந்தார் என்று பொய் கூறினாய் என்று கேட்கிறான். அவளின் பதிலை கேட்டு அவனுக்கு அவளை எடுக்கும் எண்ணம் போய் விடுகிறது. தந்தையே மகளை புணர்ந்து இருக்கிறார் என்று புரிந்துக் கொள்கிறான். வயதான தந்தை அப்போது தான் முதல் முதலாக பார்த்தேன். அவர் பலகீனமாக காணப்பட்டார் என்று கேத்தரினா கூறும் இடத்தில் கதையின் முடிச்சு அவிழ்கிறது. மீன்கள் கடலில் ஈத்தானை தோலை கடித்து உண்ணுவது தன் பெண்ணின் நிலையை காட்டும் குறியீடுகள் என்பது என் புரிதல்.இறுதியில் தானும் ஒரு மீனாக கடலில் குதித்து விட்டார் ஈத்தான்.

ரா.மகேந்திரன்

 

சிறுகதையை வாசிக்க

(Visited 94 times, 1 visits today)