‘நந்தலாலா’ திரைப்படம் குறித்து பல நண்பர்களிடமிருந்தும் நல்லவிதமான கருத்துகள் வரவே ஒரு முறையாவது பார்த்துவிட முடிவெடுத்தேன். இயக்குநர் மிஷ்கின்தான் அப்படத்தை இயக்கி நடித்ருந்தார். அப்படம் ஜப்பான் இயக்குநர் தகேஷி கிடானோ என்பவரால் 1999ல் இயக்கப்பட்ட ‘கிகுஜிரோ’ எனும் படத்தின் தலுவல் என இணையப்பக்கங்களில் செய்திகள் வந்திருந்தன. அதைப் பற்றி எனக்கென்ன கவலை. நான் எந்த ‘ஜிரோ’வையும் அதுவரை பார்க்காத நிலையில் நந்தலாலாவைப் பார்ப்பதில் பெரிய தடைகள் இருக்கவில்லை.
படத்தில் மிஷ்கினும் சிறுவனும் தத்தம் தாயைக் காண பயணிக்கின்றனர். தாயைச் சந்திப்பதற்கு அவர்களின் நோக்கம் மாறுபட்டிருக்கிறது. ஒன்று அன்பின் பயணம் மற்றது வெறுப்பின் பயணம். தங்கள் பயணத்தை இலகுவாக்க அவர்கள் இடையிடையில் சிலர் உதவிகளை நாடுகின்றனர். எனக்கு படத்தின் கதையையெல்லாம் தாண்டி அவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் உதவிகளில் கசிந்துள்ள மனிதமே மிக முக்கியக் காட்சிகளாக இருந்தன.
பயணங்களில் கிடைக்கின்ற உதவிகள் என்னை எப்போதும் நெகிழச் செய்பவை. வாழ்வில் ஒரு முறையே சந்திக்க நிகழும் ஒரு மனிதனிடமிருந்து கிடைக்கப்படும் எவ்வித உதவியும் பிரதிபலனை எதிர்ப்பார்க்காதது. மீண்டும் சந்திக்கும் எவ்வித திட்டவட்டமும் இன்றி பயணங்கள் தோறும் பெறப்படும் அல்லது கொடுக்கப்படும் உதவிகளில் எவ்வித அடையாளங்களும் இருப்பதில்லை. ‘நந்தலாலா’ படத்தில் அவ்விருவரும் மேற்கொள்ளும் பயணம் நெடுகிலும் அவ்வாறான உதவிகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. உதவிகள் பெருபவர்களும் தருபவர்களும் அவரவர் வழிகள் வந்தவுடன் மிக இயல்பாகப் பிரிந்துவிடுகின்றனர்.
இப்படத்தைப் பார்த்தபோது எனக்கு என் மாணவன் சரவணனின் (உண்மைப் பெயரல்ல) ஞாபகம் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. என்னிடம் ஆறாம் ஆண்டில் பயின்ற அம்மாணவன் ஓர் அன்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டான். பெரும்பாலும் பெற்றோர்களை இழந்து அனாதரவாய் இருக்கும் குழந்தைகள்தான் அவ்வாசிரமத்தில் தங்கியிருந்தனர். சரவணனுக்கு ஒரு பாட்டி இருப்பது அப்பள்ளியில் அனைவருக்கும் தெரிந்த கதையாக சில நாட்களில் மாறியிருந்தது.
பொதுவாகவே பள்ளிகளில் இது போன்று எல்லோருக்கும் தெரிந்த கதையாகச் சில செய்திகள் மாறிவிடுவதுண்டு. ஏறக்குறைய முன்னூறு மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில் விசித்திரம் மிகுந்த சிற்சில கதைகளையே விஷேட மோப்ப சக்தியுடன் மாணவர்கள் கண்டடைந்து சேமித்து வைத்திருந்தனர். நண்பனின் அம்மாவுக்குப் பேய் பிடித்தது , தோழியின் அக்கா பத்தாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டது , தோழனின் அப்பா முதலை குட்டி வளர்ப்பது இவ்வாறு வாய் மூலமே பல கதைகள் பள்ளி முழுதும் பரவிய பின்னரே ஆசிரியர்களைச் சென்றடையும். இவ்வாறு சுவாரசியம் மிக்க கதைகளுக்கு மத்தியில் சரவணனுக்குப் பாட்டி இருக்கின்ற கதை எவ்வாறு பிரபலமடைந்தது என்பதை என்னால் கணிக்க முடியவில்லை.
சரவணன் வித்தியாசமான உருவம் கொண்டவனாக இருந்தான். குள்ளமாகவும் உருண்டை வடிவாகவும் இருப்பது போன்றதொரு தோற்றம். கழுத்து உடலோடு ஒட்டியிருக்கும். கைகள் இடுப்போடு முடிந்து போயிருக்கும். மாணவர்கள் நிரம்பிய கூட்டத்தில் தனித்துத் தெரிவான். ஒவ்வொரு நாளும் யாரிடமாவது இருபது சென் வாங்கி தன் பாட்டியிடம் தொடர்புக் கொள்ள பள்ளியினுள் இருக்கும் பொது தொலைபேசி கூண்டுக்கு ஓடிவிடுவான். ஒரு சமயம் நான், பாட்டியிடம் தினமும் என்ன பேசுகிறாய் எனக் கேட்க, “இன்னும் பேசவில்லை சார். பேசுவதற்குதான் எண்களைத் தேடிக்கொண்டிருக்கேன் ” என்றான். தனது நினைவில் மங்கலாக இருக்கும் எண்களை அவன் தினம் தினம் மீட்டுக்கொண்டுவர முயல்வது எனக்கு அப்போதுதான் புரிந்தது. சரவணனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய சமயத்தில் அவன் பள்ளியிலிருந்து ஒரு நாள் காணாமல் போயிருந்தான்.
காலையில் ஆசிரமத்து மூடுந்தில் பள்ளிக்கு வந்து இறங்கிய அவன் வகுப்பினுள் நுழையவில்லை என்ற தகவல் பள்ளி முழுதும் பரவியது. ஆசிரமத்தின் பொறுப்பாளர்கள் அவனைத் தேடத்தொடங்கியுள்ளனர் என்ற தகவல் மட்டும் இறுதியாகக் காதுகளுக்கு எட்டியது. அன்று வெள்ளிக்கிழமை. மீண்டும் திங்கள் பள்ளிக்கு வந்தபோது சரவணன் அங்கு இருந்தான். சனிக்கிழமை அவனைச் செராஸில் இருக்கும் அவன் பாட்டி வீட்டில் கண்டுப் பிடிந்திருந்தனர். அச்சமயத்தில் அவன் தன் பாட்டியின் மடியின் உறங்கி கொண்டிருந்தானாம்.
நான் சரவணனிடம் பேசத் தொடங்கியபோது அவனிடம் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லை.
“எப்படி பாட்டி வீடு தெரிஞ்சது?”
“ஒரு தரம் போயிருக்கேன் சார்”
“ஒரு தரம் போனா ஞாபகத்துல இருக்குமா? எனக்கு இருக்காதே”
“பாட்டிய புடிக்கும் சார்… அதான் ஞாபகத்துல வச்சிக்கிட்டேன்”
“எப்படி இங்கயிருந்து செராஸ¤க்குப் போன”
“நடந்துதான் சார்”
“50 கிலோமீட்டருக்கு மேல இருக்குமே?”
“தெரியல சார். ஆனா காலையில நடக்க ஆரம்பிச்சி ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் சேந்துட்டேன்”
“கால் வலிக்கலயா?”
“பாட்டிய புடிக்கும் சார்”
அதற்கு மேல் நான் சரவணனிடம் ஒன்றும் கேட்கவில்லை. கல்லூரியில் நான் கற்றிருந்த மாணவர் மனோவியல் எவ்வகையிலும் எனக்கு உதவி செய்யவில்லை. சரவணன் பிரச்சனைக்கான மிக எளிய தீர்வு அவனை அவன் பாட்டியிடம் சேர்ப்பதுதான் என எனக்குத் தோன்றியது. ஆனால் ஜென் பீஜியட் (Jean Piaget), பி.எ·ப். ஸ்கீனர் (B.F. Skinner) போன்ற மனோவியல் மேதைகள் கல்லூரி புத்தகங்களில், ‘பாட்டியின் வீட்டில் விடலாம்’ என்று சொல்லாத பட்சத்தில் கல்விக்கூடங்களும் ஆசிரமங்களும் எப்படி ஒரு மாணவனின் சுதந்திரத்திற்கு அனுமதிக்கும்?
சரவணன் முதிர்ந்த தெளிவுடன் பேசக்கூடியவன் என்பதை அந்தச் சம்பவத்துக்குப் பிறகே என்னால் அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு என் பாடங்களில் அவனுக்கு அதிகம் பேச வாய்ப்பு கொடுத்தேன். அவனுக்கும் பேசுவதற்குப் பிடித்திருந்தது. அவன் பேச்சுகளில் எப்படியும் பாட்டி இணைந்து கொள்வார். மிக சொற்ப காலமே பாட்டியுடன் இருந்த அவன் வாழ்வில், எப்படி அவர் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கும் என குழப்பமாக இருக்கும். சில சமயங்களில் அவன் கற்பனையாகவே பாட்டியை எல்லா சமயங்களிலும் இணைத்துக்கொள்வதாகத் தோன்றும். அவ்வாறு இணைத்துக் கொள்வதில் அவன் தன் பாட்டியை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அடையாளம் காண்டான். தன் வாழ்நாள் முழுவதும் பாட்டியுடனான ஒரு உரையாடலை சுயமாகவே ஏற்படுத்திக்கொண்டான். என்னால் முடிந்தது அவனைப் பேச வைப்பது மட்டுமே. அதன் மூலம் அவனால் தன் நிகழ்கால தனிமையை கற்பனையின் கடக்க முடியும் என நம்பினேன்.
ஆச்சரியம் மிகுந்த சரவணனின் பயணம் ஒட்டிய பேச்சுகள் பள்ளியில் அடங்குவதற்குள் மீண்டும் சரவணன் ஒரு காலையில் காணாமல் போயிருந்தான். அவன் பாட்டி வீட்டுக்குதான் போயிருப்பான் என்று தெரிந்ததால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சரவணனால் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு சரியக்கூடுமென பல ஆசிரியர்கள் மத்தியிலும் பதற்றம் ஏற்படத்தொடங்கியது. இருக்கின்ற மிச்ச நாட்களில் எப்படிச் சரவணனின் மூளையில் பாடங்களைத் திணிப்பது என பலவாறான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மதியம் பள்ளிவிடும் நேரத்தில் ஒரு போலிஸ் வண்டி பள்ளியின் முன் வந்து நிர்க்க சரவணன் உள்ளே இருந்து அமைதியாக வெளிவந்தான். நெடுஞ்சாலையில் சரவணன் தனியனாக பள்ளி உடையுடன் நடந்ததைப் பார்த்த போலிஸார் அவனை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். சரவணன் போலிஸ் வண்டியிலிருந்து இறங்குவதை பள்ளிக்கூடமே வேடிக்கை பார்த்தது. போலிஸ் வண்டி பள்ளியினுள் நுழைந்ததால் பள்ளி கௌரவம் கெட்டுவிட்டதாகப் பரவலாக முணுமுணுப்புக் கேட்டது. சரவணன் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வகுப்பில் புகுந்தான்.
அன்றிலிருந்து சரவணனுக்கு விஷேச பாதுகாப்புகள் உருவானது. அவன் பொதுத்தொலைப்பேசி கூண்டுக்குச் செல்வது கூட தடுக்கப்பட்டிருந்தது. சுற்றியிருந்தவர்களிடம் சரவணன் தனது பேச்சை மெல்ல குறைத்திருந்தான். என் வகுப்பிலும் அவன் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் எவ்வளவு தண்டனை பெற வேண்டுமானாலும் தயாராக இருந்தான். சொற்களின் மூலம் கடந்த அவன் ஏக்கங்கள் பொய்யானவை என அவனுக்கு உறைத்திருக்கக் கூடும். தான் கண் முன் இருந்தும் இல்லாத ஓர் உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தினான். யு.பி.எஸ்.ஆர் சோதனையிலும் அவன் மிக விரைவாக சோதனை தாளில் ஏதோ கிறுக்கிவிட்டு மேசையில் படுத்துவிட்டதாக சோதனைக்கு வேறு பள்ளியிலிருந்து வந்திருந்த பொறுப்பாசிரியர் வருத்தத்துடன் கூறினார். சரவணனின் போக்கு எங்கள் யாருக்கும் புரியாததாய் இருந்தது.
அவன் மௌனமாகவே தன்னைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளை எதிர்த்துள்ளான் என்பது யு.பி.எஸ்.ஆர் தேர்வின் முடிவு வந்த போதுதான் உணர முடிந்தது. அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் சுற்றியெழுந்த வசைகளின் மத்தியில் கம்பீரமாக வந்து தேர்வு முடிவை பெற்றுக்கொண்டபோது ஒருமுறை என் கண்களைச் சந்தித்தான். என்னையும் அவன் தன் எதிரிகளில் ஒருவனாக நினைத்திருப்பானோ என குழப்பமும் கவலையும் பற்றிக்கொண்டது.
அன்று பொறுப்பாசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது. யு.பி.எஸ்.ஆரை நிராகரிக்க நினைத்தவன் எதையும் எழுதாமல் விட்டிருக்கலாம். அவன் பொருட்படுத்தி எழுதும் அளவிற்கு ஏதோ இருந்திருக்கிறது என்பதே எனக்கு அப்போதைய பெரும் கேள்வியாக இருந்தது. சரவணனிடமே கேட்கலாம் என நினைத்தபோது மனதிற்குள் ஏதோ தடை எழவே செய்தது. நானும் அவனுக்கு ஏதோ துரோகம் செய்துவிட்டதாகவே உணர்ந்தேன்.
வீட்டிற்கு வந்தபோதும் அவன் தாளில் என்ன எழுதியிருப்பான் என்ற கேள்வியே மீண்டும் மனதில் நின்றது. ஒருவேளை சோதித்துப்பார்த்தால் ‘பாட்டி’ என எழுதப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
‘அன்பு’ மட்டுமே மனிதத்தை நெறிப்படுத்தும் உன்னதக் கருவி.மிகக் கவனமாகவும் சரியாகவும் பயன்படுத்துவோமானால் சராசரி மனிதனை ‘உயர்ந்த உள்ளம்’ கொண்டவனாகவும் மாற்றிவிட முடியும். ‘மனவியல்’ஆய்வாளர் ஆபிரஹாம் மாஸ்லோவின் ‘பிரமிட் தத்துவம்’ ஆன்மீகம் சார்பற்ற பிரக்ஞையாளர்களுக்கு கோடிகாட்டுவதும் அதைத்தான். தாய்ப்பாசம் கிடைக்காத பட்சத்தில் பாட்டியே அடைக்கலம் என்று அவனுக்குத் (சரவணன்) தெரியாமலேயே எழுந்த ஒர் இயல்பூக்கம். தனக்குத் தெரிந்த நபரிடம்(பாட்டி) இருந்து கிடைக்கும் பாதுகாப்புத் தன்மை, பாசம், உறைவிடம் என அனைத்தும் அவனை 50 கி.மீ தூரம் நடக்கவைத்திருக்கிறது. இதைவிட ஆச்சரியமான காரியங்களை நடத்தவல்லது அவனது ஆழ்மனம். அது அவனுக்கும் புரியாமல் இருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் அதுவே அவனை தீய காரியங்களில் ஈடுபடுத்தவும் தயார் படுத்திவிடும் என்பதை ‘உணராமல்’ பள்ளியின் நடைமுறைச்சிக்கல்கள் சரவணனது ‘பிரச்னைகளை’ கண்டும் காணாமல் நகர்த்திவிடுகின்றன.
சுலபமாகக் கூறிவிட முடியும்.அது அவனது ‘விதிப்பயன்’.அவன் கேட்டா வந்தது அந்த வாழ்க்கையும் பிரச்னைகளும்?