காலையில் கண்களைத் திறக்க முடியாத போதுதான் உடல் சோர்வை முழுமையாக உணர முடிந்தது. உடல் களைத்திருந்தாலும் மனம் தெம்பாக இருந்தது. நேற்றிலிருந்து போதுமான நேரம் வழங்கப்பட்டிருந்ததால் நிகழ்வில் என்ன பேச வேண்டும் என மனதில் பதிந்திருந்தது. ஓர் எழுத்தாளனுக்கு 10 நிமிடம் மேடையில் பேசுவது பெரிய விசயமா என்ன?
காலை 8 மணிக்கெல்லாம் வரச்சொல்லியிருந்தார்கள். நேற்றைய நிகழ்வின் தாமதம் நினைவுக்கு வந்து கசந்தது. பக்கத்தில் பாலா படுத்திருந்தார். எப்போது படுத்தார் என உணர முடியாத அளவுக்கு உறங்கியிருக்கிறேன். நான் குளித்து முடிக்கவும் பாலா , சிவா எழும்பி கிளம்பவும் சரியாக மணி எட்டாகியிருந்தது. இம்முறை சரியான நேரத்திற்கு நிகழ்வினைத் தொடக்கினார்கள்.
முதல் அங்கத்தில் தமிழ்நெறிக்கழகத் தலைவர் திருமாவளவனார் பேசியது அரங்கிற்குப் புதியத் தெம்பினைக் கொடுத்தது. திருமாவளவனார் அவர்களை நான் அவ்வப்போது அவர் இல்லத்திற்குச் சென்று சந்திப்பதுண்டு. எளிமையான மனிதர். வீடு தொடங்கும் போதே நூல்கள் நம்மை வரவேற்கும். அதன் பின்னர் நூல்கள்…நூல்கள்…நூல்கள்தான். அவரது துணைவியாரின் உபசரிப்பு நெகிழச் செய்யும். சில மணி நேரங்கள் தொடரும் உரையாடலில் ஈழம், மொழி, இனம் முதல் வரலாறு , அறிவியல், இணையம் எல்லாம் இணைந்து கொள்ளும். பல புதிய தகவல்களை ஆதாரங்களோடு வழங்கும் தமிழறிஞர் அவர். மாற்றுக்கருத்துகளை பக்குவமாக எடுத்துரைப்பார். இடைநிலைப்பள்ளியில் நெறியாசிரியர் பொறுப்பில் இருப்பது அவருக்கு அத்தகைய பக்குவத்தைக் கொடுத்திருக்கலாம். அவரிடம் நான் கற்றுக்கொண்டது நிறைய. இது போன்ற பல்வேறு துறைகளில உள்ள ஆளுமைகளைச் சந்திப்பது பல நூல்களைக் கற்ற அனுபவத்தைக் கொடுக்கிறது.
அவர் பேச்சு சுவாரசியம் அடைந்து கொண்டிருக்கையில் ஒரு துண்டு சீட்டு அவருக்கு வழங்கப்பட்டது. பேச்சை முடிக்கக்கோறும் குறிப்பு அது. தமிழின் தொன்மையையும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்த மற்ற மொழி சொற்களையும் பற்றிய சுவாரசியமான பேச்சு அரை மணி நேரத்திற்குள்ளாக முடிவுபெற்றது. அதன் பின்னர் 20 ஆண்டுகளாக பூஜாங் பள்ளத்தாக்குத் தொடர்பாக ஆய்வு செய்யும் வழக்கறிஞர் வி.நடராஜா அவர்கள் தனது ஆய்வு தொடர்பாகப் பேசினர். பல அறியத் தகவல்களைக் கொடுத்தார். இன்னும் முழுமையான ஆய்வு நடத்தப்படாத பகுதி அது. அவ்வாறு ஆய்வு செய்யும் பட்சத்தில் மலேசியாவில் தமிழர்களின் பூர்வீகமும் இந்நாட்டுக்கும் அவர்களுக்குமான தொடர்பும் வெளிப்படத்தொடங்கலாம். மலாக்கா உருவாக்கத்திலிருந்து தொடங்கும் மலேசிய வரலாறு அதற்கும் முந்தைய நகரமான பூஜாங் பள்ளத்தாக்கைத் திரும்பிக்கூடப் பார்க்கத் தயாராக இல்லை. எனக்குத் தெரிந்து இது குறித்து மிக ஆழமான ஆய்வினை செய்தவர் டாக்டர் ஜெயபாரதி. அவர் தனது ஆய்வினை வெளிப்படுத்தும் போது இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.
சிறிது நேரத்தில் வழக்கறிஞர் வி.நடராஜா அவர்களுக்கும் துண்டு சீட்டு வழங்கப்பட பேச்சு நிறுத்தப்பட்டது. எனக்கு நேற்றைய நிகழ்வின் தாமதம், எவ்வித இலக்கியத்தொடர்பும் இல்லாத மாலை அணிவித்தல்கள், அவரவர் பெருமைகளை மேடையில் முழங்கியவிதம், எவ்வித ஆய்வும் இல்லாத மேடை ஒப்புவித்தல்கள் என சோர்வடைந்திருந்த நிகழ்வு நினைவுக்கு வந்து எரிச்சலை மூட்டியது. ஓர் அறிவுப்பகிர்தலுக்காக நேரம் ஒதுக்காத மாநாடு சடங்குகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது கவலை அளித்தது.
நேற்றிலிருந்து குறிப்பு எடுத்து வைத்திருந்த எனது உரையை மனம் அந்நிமிடமே நிராகரிக்கத்தொடங்கியது. அறிவை மையமாகக் கொள்ளாமல் அதிகாரத்தை மையமாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு ஏற்ற குரல் எனக்குள் உருவாகத் தொடங்கியது.
… தொடரும்
சடங்குகளுக்கு அப்பாற்பட்டதாக இலக்கியம் அணுகப்பட வேண்டும் என்பதைத்தான் என் உரையின் தொடக்கமாகவும் இருந்தது. அந்த அளவிற்கு மேடை சடங்குகளும் மாலை அணிவித்தல்களும் சோர்வை அளித்திருந்தது. ஆனால் தொடர்ந்து நம்மால் கவலைப்பட மட்டுமே முடிகிறது. மேடை நிகழ்வுகளை நிர்ணயிக்கும் சக்தியிடம் நாம் உரையாடும் வாய்ப்புக் கிட்டினால், காலப்போக்கில் தர்மசங்கடங்களையும் கருத்து முரண்களையும் தவிர்க்கலாம்.