எனக்கு நெருக்கமாக தான் இது உருவாகி உள்ளது… மனசிலாயோ… எனக்கு நிர்மலா அக்கா தான் நினைவுக்கு வந்தார்… முழுக்க முழுக்க ஒரு தனிமை பயணத்தில் ஆன்ம வடிக்கால் தேடும் சூழல். கேரளாவுக்கு ஏற்கனவே சென்றிருந்ததால் வரிகள் அனைத்தும் காட்சிகளாகவே விரிந்தன. கூடவே தனிமை பயணம் என்பதால் என்னுடைய பெலாகா பயண அனுபவங்களும் இணைந்து கொண்டு அனுபவ சுகத்தை விரிவாக்கின.
புனைவுகளில் எனக்கு அவ்வளவு வாசிப்பு சுகம் ஏற்படுவதில்லை. நடந்த அனைத்தும் இயல்பாக சொற்களில் வெளிப்படும் போது அதன் ரசம் என் எண்ண நாளங்களில் பிணைந்து கொள்கிறது. இப்போது இந்த சுகம் எனக்கு தேவையானதாகவே நான் கருதுகிகருதுகிறேன். கடந்த மூன்று மாதங்களாக நான் விரும்பும் பயணங்களும் மேற்படிப்புக்கான பணிகளும் கோரோனாவும் என்னை மிகுந்த அயர்ச்சிக்கு ஆட்படுத்தி விட்டன. இவை அனைத்தும் ஒன்று திரண்டு ஏகமாக அழுத்திவிட்டன. இந்த நேரத்தில் மீண்டுமொரு குறுகிய விடுதலை தேவையானபோது தான் இந்த புத்தகம் வந்து சேர்ந்தது.
2012ஆம் ஆண்டில் நான் சென்றிருந்த கேளர பயணம் மீண்டும் உயிர்பெற்று அதே ஆழபுழா, செய்ண்ட் ப்ரான்சிஸ் தேவாலயம், வாஸ்கோ டே காமா, சீன வலை பகுதி, கொச்சின் இரவு நேர நடை உலா என இப்படி நிறைய நினைவலைகள். அவர் யூதர்கள் கோட்டத்துக்கும் சென்றிருக்கலாம். ஆழபுழாவில் நவீன் சந்தித்த நபர்களை நானும் 8 வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கலாம். படகோட்டி அம்மா போன்றோரை அங்கே நிறைய பார்த்த ஞாபகம். புத்தகம் முழுக்க வலம் வந்ததில் சாரா என்னை போலவே இருப்பதாக ஒரு நுண்ணுணர்வு. அதே தனிமை பயணம், அதிகப்பட்ச உணர்ச்சி வெளிப்பாடு, தெளிந்து தெளிந்து குழப்பமடையும் ஒரு தேக்க நிலை, மலை பிரதேச சகவாசம், அந்நியர்களுடனான உரையாடல் என பல விஷயங்களில் என்னை பிரதிபலிப்பதாகவே உணர்ந்தேன்.
சாமுண்டீஸ்வரி கோயில் பற்றி விவரித்ததும் அங்கு போன அனுபவமும் கோயிலின் வெள்ளை கட்டிட தோற்றமும் முதன்முறையாக அங்கு தான் நான் ருசித்த ரவா லட்டின் சுவையோடே கோவில் முற்றத்தில் நெடுநேரம் அமர்ந்திருந்த ஒரு சாமியாரும் காட்சிக்கும் வந்து போனார்கள். மொத்தத்தில் ‘மனசிலாயோ’ நவீனின் அனுபவங்களுக்குள்ளே நான் மறந்து போன என் நினைவுகளின் மீட்சி.