தமிழ் விக்கிப்பீடியாவும் தரங்கெட்ட நிர்வாகமும்

‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்ட பிறகு நேர்காணலுக்காக அணுகிய சில ஊடகத்தினர் விக்கிப்பீடியாவில் முழு விபரங்களும் இருந்தால் முன் தயாரிப்புக்கு உதவியாக இருக்கும் என்றனர். என் புளோக்கிலேயே அனைத்து தகவல்களும் உள்ளதை நான் சுட்டிக்காட்டினேன். பொதுவான ஒரு தளத்தில் இருப்பது தங்களுக்கு எளிது என்றதால் என் ஆசிரியர் தோழி ஒருவர் எனக்கான விக்கிப்பீடியாவை உருவாக்க முன் வந்தார்.

அவரும் விக்கிப்பீடியாவை உருவாக்குவது முதன்முறை என்பதால் தடுமாறிதான் போனார். நான் ஈப்போ முத்துகிருஷ்ணன் அவர்களுடன் (விக்கிப்பீடியாவில் மலேசியாவைப் பிரதிநிதித்து அதிகக் கட்டுரைகள் எழுதியவர்) தொடர்பை ஏற்படுத்தியவுடன் அவரால் சரியான வடிவத்தில் செய்து முடிக்க முடிந்தது. பின்னர் அதில் அவர் இணைத்த பாதி தகவல்கள் நீக்கப்பட்டதாக சொன்னார். நான் அதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

சில வாரங்களுக்குப் பின்னர் அதனை பார்வையிட்ட போதுதான் சில தகவல் பிழைகள் உள்ளது தெரியவந்தது. அதனைப் பலமுறை திருத்தியபோதும் மறுபடி மறுபடி நான் செய்யச் சொன்ன திருத்தங்களை மாற்றி பிழையாகவே பதிவிட்டனர். யார் என ஆராய்ந்ததில் Kanags ( கனகரத்தினம் சிறீதரன்) என்பவர் எனத் தெரியவந்தது. இறுதியில் முத்துக்கிருஷ்ணன் அவர்களே சிக்கலைத் தீர்த்துக்கொடுத்தார்.

இறுதி வடிவத்தைப் பார்வையிட்டபோது மூன்று தவறுகள் இருந்ததால் நானே அவற்றைத் திருத்த முயன்றேன். முதலாவது, என்னை ‘ஊடகவியலாளர்’ எனக் குறிப்பிட்டிருந்ததை ‘இதழியலாளர்’ என்று மாற்றினேன்.

இரண்டாவது கருப்பொருட்கள் எனும் பகுதியை நீக்கினேன். என் புனைவுகள் அப்படிக் குறிப்பிட்ட நான்கு கருப்பொருள்களை மையமிட்டு அடங்குபவை அல்ல என்பது என் எண்ணம். கருப்பொருள் பகுதியை நீக்குவதை அவர்கள் அனுமதிக்கவில்லை. சரி, அதில் புதினம் என உள்ளதை மட்டும் நீக்கினேன். காரணம் புதினம் (நாவல்) என்பது இலக்கிய வகையே அன்றி கருப்பொருள் அல்ல.

மூன்றாவது, பிற பங்களிப்புகள் எனும் பகுதியில் நான் 15 நூல்கள் எழுதியுள்ளதாக குறிப்பிட்டவர்கள் 13 நூல்களின் பெயரையே பட்டியல் இட்டிருந்தனர். எனவே மேலும் உள்ள இரண்டு நூல்களின் பெயர்களை இணைத்தேன்.

இதை நான் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் மாற்றங்கள் ஏற்கப்படவில்லை என கூறப்பட்டது. மேலும் தனிப்பட்ட விளக்கமாக ‘நவீன் மனோகரன் என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் விளம்பரநோக்கில் அமைந்திருந்ததால், மீளமைக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப்பலகையாகப் பயன்படுத்துதல் விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும்.’ என கூறப்பட்டிருந்தது.

விக்கிப்பீடியாவில் அதிகமான கட்டுரைகள் எழுதிய அமரர் புன்னியமீன்(இலங்கை), முத்துக்கிருஷ்ணன்(மலேசியா) என் நண்பர்கள்தான். புன்னியமீன் வேண்டுகோளினால் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதும் பயிற்சி ஒன்றையும் 2011லேயே மலேசியாவில் ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் ஒருபோதும் எனக்கான தளம் ஒன்றை உருவாக்கிக்கொடுக்கும்படி நான் கேட்டுக்கொண்டதோ முனைந்ததோ இல்லை. எனக்கு அது அவசியமாகவும் தோன்றவில்லை. இந்நிலையில் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எப்படி விளம்பரமாகும் எனக் குழப்பமே மிஞ்சியது.

இந்த மாற்றங்களை செய்வதும், கடிதம் எழுதியதும் கனகரத்தினம் சிறீதரன் என்ற இலங்கைத்தமிழர் என்பதும் அவர் தற்போது சிட்னியின் வசிப்பதும் தெரியவந்தது. நான் அவரின் அறிவை மெச்சி குறிப்பொன்று எழுதினேன். அவரைப்போன்ற அறிவாளிகள் விக்கிப்பீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் வரை தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்கள் ஆய்வுலகத்தில் மதிக்கத்தகுந்த  ஊடகமாக என்றும் இருக்கப்போவதில்லை என்றேன்.

நான் குறிப்பிட்ட மூன்று தவறுகளும் அடிப்படை தமிழ் அறிவு உள்ள எவரும் உணர்ந்துக்கொள்ளக்கூடியவைதான். ஊடகவியலாளர் என்பதற்கும் இதழியலாளர் என்பதற்கும் அடிப்படை புரிதல் அற்றவர்களும் புதினம் என்பது ஒரு புனைவின் கருப்பொருளுக்குள் வராது என அறியாதவர்களும் தத்தம் குறை அறிவுடன் பிறருடைய ஆக்கங்களைத் திருத்துவதெல்லாம் தமிழ்ச் சூழலில் மட்டுமே நிகழும் அபத்தமாக இருக்க முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு தவறு நடக்கும்போது அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நானே முன்வந்து அத்தவற்றைச் சுட்டிக்காட்டுகிறேன். அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகத்தினரால் உருவாக்கப்படும் பிற கட்டுரைகளுக்கு எவ்வகையான நம்பகத்தன்மை உண்டு என இனி சந்தேகிக்க வேண்டியுள்ளது.

15 வருடங்களுக்கு முன்பே எழுத்தாளன் எந்த ஊடகம், அமைப்பு, கட்சி ஆகியவற்றின் முன்னும் அடையாளத்துக்காகப் பணிந்துப்போக வேண்டியதில்லை என்பதை நம்பி அதன்படி செயல்படுபவன் நான். விக்கிப்பீடியா போன்ற தளத்தினால் நான் விளம்பரமோ அடையாளமோ தேடிக்கொள்ள ஒன்றுமே இல்லை. ஆனால் ஒன்றை இங்கே அழுத்தமாக சொல்லவே இதை எழுதுகிறேன்.

தமிழ் மொழியின் வழி மேம்பட்ட பணிகளைச் செய்ய வேண்டிய தளங்களில் எல்லாம் இதுபோன்ற ஓரிரு மொண்ணைகள் அமர்ந்துகொண்டு அதன் வளர்ச்சியைத் தடுப்பதும் தங்களின் அடிப்படைவாத புத்தியால் அசட்டுத்தனங்களைக் காட்டுவதும் தொடர்ந்து நடந்தே வருகிறது. ஏதாவது வித்தை செய்துக்காட்டி இந்த ஒட்டுண்ணிகளால் தங்களை ஜீவிக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கான பாவனையுடன் உலாத்துவது, தேவைப்படும் இடங்களில் குறுகி ஒடிவது என சாகசமெல்லாம் செய்யத்தக்கவர்கள் இவர்கள். ஆனால் அதற்கு எதிரான அறிவியக்கம் என ஒன்று தமிழில் இருந்தால் மறுப்புக்குரலும் ஒலிக்கப்படவேண்டும்: அது எவ்வளவு சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும்.

விக்கிப்பீடியா நிர்வாகிகள் கனகரத்தினம் சிறீதரன் போன்ற ஆளுமையற்றவர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்திருக்கும் சூழலில் இதுபோன்ற அராஜகங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். அதை பிற நிர்வாக உறுப்பினர்கள் ஆராய வேண்டும். அத்தளத்தின் நம்பகத்தைக் காத்துக்கொள்வது அவர்கள் பொறுப்பு.

ம.நவீன் விக்கிப்பீடியா

(Visited 668 times, 1 visits today)