தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

தமிழ் விக்கி தளம்

ஜனவரி மாதம் ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘தமிழ் விக்கி’ ஒன்றை உருவாக்கப்போகும் தனது திட்டத்தையும், அதற்காக மலேசியாவின் முக்கியத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதும் பணியில் இணையவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது ஈடுபட்டிருந்த பணிகளை முடிக்க ஒரு வார காலம் தேவைப்பட்டதால் அவகாசம் கேட்டு சற்று சாவகாசமாகத்தான் களத்தில் நுழைந்தேன். அப்போதே இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் போடப்பட்டிருந்தன. இந்த வேகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அதில் சரிபாதியாவது ஜெயமோகனால் தமிழ் விக்கிக்கு என எழுதப்பட்ட கட்டுரைகள் இருக்கும். இன்னும் சில நாட்கள் தாமதமானால் மலேசிய எழுத்தாளர்கள் குறித்து அவரே எழுதி முடித்துவிடும் தீவிரம் தெரிந்தது.

அடுத்த இரு வாரங்கள் நான் கையில் எடுத்திருந்த அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மலேசியாவின் முக்கியமான பதினாறு ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழ் விக்கி’  அறிமுகம் கண்டதும் அதன் தேவையை உணர்ந்த குழுவினர் வழி மேலும் அதிகமான கட்டுரைகளைப் பதிவேற்ற திட்டம் வகுத்துக்கொண்டேன்.

ஜெயமோகன் இப்படி ஒரு முன்னெடுப்பு செய்துள்ளதின் அவசியத்தை நான் அறிவேன். நான் நேரடியாகவே விக்கிபீடியாவின் அராஜகத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அது குறித்து கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.

***

ஜெயமோகன்

2021இல் ‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்ட பின்னர் நேர்காணலுக்காக அணுகிய ஊடகத்தினர் விக்கிப்பீடியாவில் முழுத்தகவல்களும் இருந்தால் முன்தயாரிப்புக்கு எளிது எனக்கூறினர். தோழி ஒருவர் எனக்கான பக்கம் ஒன்றை உருவாக்க முன்வந்தார். அவருக்கும் அவ்வனுபவம் புதிது. கடுமையான உழைப்பைச் செலுத்தி பக்கத்தை உருவாக்கிய மறுநாளே கனகரத்தினம் சிறீதரன் எனும் நபர் அப்பக்கத்தை அழித்துவிட்டார். காரணம் புரியாமல் மீண்டும் பதிவேற்ற, மறுபடியும் அழிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இது நிகழ்ந்தது. இது குறித்து மலேசியாவில் அதிகமான தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்கிய முத்துக்கிருஷ்ணனிடம் முறையிட்டபோது அவரே அக்கட்டுரையைப் பதிவேற்ற அப்பதிவு சுருக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் சில அடிப்படையான தகவல்களில் பிழை இருந்ததால் அவற்றை தோழி மறுபடியும் மாற்ற முயன்றார்.

முதலாவது, என்னை ‘ஊடகவியலாளர்’ எனக் குறிப்பிட்டதை ‘இதழியலாளர்’ என மாற்றினார். இரண்டாவது, என் படைப்புகள் உளவியல், சமூகம், நாட்டாரியல் எனச் சில குறிப்பிட்ட கருப்பொருள்களைக் கொண்டிருப்பதாகவும் அவற்றில் புதினமும் ஒன்று என எழுதப்பட்டிருந்தது. (புதினம்) நாவல் ஒரு இலக்கிய வகைமையே தவிர அது கருப்பொருள் இல்லை என்பதால் அதையும் நீக்கக் கோரினேன். அடுத்ததாக பிற பங்களிப்புகள் எனும் பகுதியில் நான் 15 நூல்கள் எழுதியுள்ளதாக குறிப்பிட்டவர்கள் 13 நூல்களின் பெயரையே பட்டியல் இட்டிருந்தனர். எனவே மேலும் உள்ள இரண்டு நூல்களின் பெயர்களை இணைக்கச் சொன்னேன்.

கொஞ்சம் சிந்தனை ஆற்றல் இருந்தாலே இவை மூன்றும் பிழையென எளிமையாகவே புரிந்துவிடும். இதனை மாற்றுவதால் நான் பெரும் புகழை ஈட்டிவிடப்போவதுமில்லை. மேலும் இவை மூன்றும் என்னைப் பற்றிய தவறான புரிதலையும் பிழைகளையும் கொண்டவை. ஆனால் இந்தப் பிழைகளைத் திருத்தக்கூட விக்கிப்பீடியா நிர்வாகத்தினர் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. மாறாக நான் விக்கிப்பீடியாவை விளம்பரப்பலகையாக பயன்படுத்துகிறேன் எனவும் குற்றம் சாட்டினர். முத்துக்கிருஷ்ணனே அச்சிக்கலைத் தீர்த்து வைத்தார்.

மலேசியாவைப் பொறுத்தவரை பல்கலைக்கழக ஆய்வுகளைத் தொடங்கும்போதே முதலில் வைக்கப்படும் கட்டளை ‘விக்கிப்பீடியா’வை ஒரு தரவு மூலமாக குறிப்பிடக்கூடாது என்பதுதான். அதன் அடிப்படைக் காரணம் இந்த நம்பத்தன்மையின்மைதான். விக்கிபீடியாவின் அதிகாரத் தரப்பாக செயல்படுபவர்கள் ஒரு தகவலை தங்கள் விருப்பத்துக்கு மாற்றி அமைக்கலாம். ஆனால் நேரடியாக சம்பந்தப்பட்டவரே முன்வந்து பிழைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து மாறமாட்டார்கள். என்னைப் பற்றி நானே சொன்னால் கூட அது அவர்களுக்குப் பொருட்டல்ல அவர்கள் காணும் ‘நவீன்’ மட்டுமே இறுதி உண்மை. இறுக்கமும் அதிகார குணமும் விரவிய சூழலில் அறிவுலகம் வளர்வதில்லை. விக்கிப்பீடியா அதற்கு நல்லுதாரணம்.

இது போன்ற அறிவு அடக்குமுறையில் நான் மட்டுமே அலைக்களிக்கப்படவில்லை என்பதை, அது குறித்து கட்டுரை எழுதியப்பிறகு வந்த, பலரது கடிதங்கள் வழியாகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தச் சூழலில் ஜெயமோகன் தொடங்கிய தமிழ்விக்கி முயற்சி தமிழ் அறிவுலகத்திற்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய கொடை என நான் தொடக்கத்திலேயே அறிந்துகொண்டேன். இம்முயற்சி பெரும் வரலாற்று நிகழ்வாக மாறும் எனக் கணிக்க முடிந்தது. அதில் நானும் மிகச் சிறிய பங்கு வகிக்கிறேன் என்பதே சிலிர்ப்பாக இருந்தது. 

இந்தத் தமிழ் விக்கி குறித்து எளிமையாக இப்படி வரையறுக்கலாம்:

1. முதல் கட்டமாக இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய மூன்று கூறுகள் அடிப்படையில் மட்டுமே கட்டுரைகள் தயாராகின்றன. இவை அதற்கேற்ற நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களால் சரிபார்க்கப்பட்டே பதிவேற்றம் காணும்.

2. யாரும் அவரவர் விருப்பத்துக்குக் கட்டுரைகளை மாற்றி அமைக்க முடியாது. நம்பகமான தரவுகள் அடிப்படையில் பிழைகளை ஆசிரியர் குழுவில் தெரிவித்தால் அது திருத்தி மேம்படுத்தப்படும்.

3. ஏற்கெனவே உருவாகி திரண்டிருக்கும் அறிவுத்தகவல்களை முறையாக அட்டவணையிட்டு சேகரிப்பதே இதன் தலையாய பணி.

4. இது தொடர்ச்சியாக நிகழக்கூடிய ஒரு கூட்டுச்செயல்பாடு. எனவே ஆர்வமுள்ள யாரும் ஈடுபடலாம். ஆனால் அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களால் அது பரிசீலித்த பிறகே வெளியிடப்படும்.

இந்தப் பணியின் வழி தமிழ் விக்கி குழுவினர் உருவாக்க நினைப்பதையும் இவ்வாறு எளிமைப்படுத்தலாம்.

1. தமிழ் அறிவியக்க தரப்பாக ஓர் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல்.

2. உலகெங்கும் உள்ள தமிழ் அறிவியக்கத்தை ஒன்றாகத் திரட்டுதல்.

3. இலக்கியம், கலை, பண்பாட்டு ஆய்வுகளுக்கு நம்பகமான ஓர் இணையக் களஞ்சியத்தை நிருவுதல்.

எனவே ஜெயமோகனின் இந்த முன்னெடுப்பு முக்கியமானதாகப்பட்டது. குறிப்பாக மலேசியாவில் கலை, இலக்கியம், பண்பாடு என மூன்று துறைகளின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளையும் ஆக்கங்களையும் வகுத்துத் தொகுக்க இது ஒரு சரியான சந்தர்ப்பம் என்றே எண்ணிக்கொண்டேன். அதனை உலகுக்கு அறிவிக்கவும் ஒரு வாய்ப்பு என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது. காலம் எனக்கு வழக்கிய மகத்தான பொறுப்பு இது என இணைந்துகொண்டேன்.

***

மா. சண்முகசிவா

2005இல் தீவிரமாக இலக்கியம் வாசிக்கத் தொடங்கியபோது நான் முதலில் எதிர்கொண்டது மெல்லிய அதிர்ச்சிதான். தமிழில் அறிவியக்கம் என ஒன்று இருப்பதை மலேசியாவில் அநேகமாகப் பலரும் அறியாமல் இருந்தனர். இயக்கங்களுக்கு, அரசியல் அமைப்புகளுக்கு, கட்சியின் தலைவருக்கு, நாளிதழ்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு எது நெருக்கமானதோ அதுவே முதன்மையானது எனும் மனப்போக்கே மிகுந்திருந்தது. பொதுவான ரசனை, கட்சி அரசியல் விவாதங்கள், விருதுகள் வழி கிடைக்கும் இலக்கிய அடையாளங்கள், ஊதிப்பெருக்கப்பட்ட போலி வரலாறுகள்,  ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்ட ஆளுமைகள், விற்பனையை மையமிட்ட பிரமிப்புகள் என தமிழ் அடையாளங்கள் சூம்பிக்கிடந்த சூழலில் தங்களுக்கு முன்மாதிரிகளாக இருந்த தமிழக இலக்கியவாதிகளே இங்கும் முன்னிறுத்தப்பட்டனர்.

எப்போது ஓர் அறிவியக்கம் உருவாகிறதோ அப்போது உடனே அதிகாரம் மெல்ல அதனை தன் வசமாக்கிக்கொள்ளும் திறனையும் திரட்டிக்கொண்டதை நான் பல சமயங்களில் கண்டிருக்கிறேன். மணிமன்றம் ம.இ.கா எனும் கட்சியின் தத்துப்பிள்ளையானது. எழுபதுகளில் திரண்டுவந்த புதுக்கவிதைக்கான குரல்கள் ‘வானம்பாடி’ எனும் வணிக இதழுக்குள் முடங்கிப்போயின. ‘இலக்கிய வட்டம்’ எனும் மகத்தான முயற்சி தொடங்க காரணமாக இருந்த ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு விசுவாசிகளாயினர். சங்கமோ இந்திய அரசியல் கட்சியின் அமைச்சர்களுக்கு விசுவாசமாக இயங்கத்தொடங்கின. ஏழை மாணவர் கல்வி உருமாற்ற முயற்சியாகக் கருதப்பட்ட ஶ்ரீ முருகன் போன்ற அமைப்புகள் அரசியல் அதிராகத்துக்கு அடங்கிய வணிக நிறுவனமாகின.

பசுபதி சிதம்பரம்

இப்படி அத்தனை அதிகார மையங்களில் இருந்தும் தப்பி, மா. சண்முகசிவாவின் முனைப்பில் தனித்த இலக்கிய ரசனையுடம் தீவிரமான வாசிப்பும் நவீன இலக்கியம் குறித்த புரிதலும் என 2005இல் ‘அகம்’ மட்டுமே இயங்கி வந்தது. அத்தனை அதிகார மையங்களுக்கு எதிரான குரலாகவும் தரவுகளையும் ஆய்வுகளையும் மட்டுமே நம்பி கருத்துகளை முன்வைக்கும் மாத இதழாகவும் பசுபதி நடத்திய ‘செம்பருத்தி’ வெளிவந்துகொண்டிருந்தது. அன்று மலேசியாவில் நான் அறிந்த அறிவார்ந்த குரல் என்பது இந்த இரு தரப்பில் இருந்து மட்டுமே உருவாயின.

நான் இந்தத் தரப்புடன்தான் என்னை இணைத்துக்கொண்டேன். இது ஒரு திட்டமிடப்படாத தொடர்ச்சி. அறிவு என்பது தீ என்றால் அது சரியான திரியைக் காணும் தோறும் பற்றிப்படர்கிறது. காலம், சூழல், தீவிரத்தைப் பொறுத்து தன்னை பெரிதாகவும் சிறியதாகவும் உருமாற்றிக்கொள்கிறது. நானும் வல்லினம் நண்பர்களும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தரப்பை கவனப்படுத்தும் பணியைத்தான் இடைவிடாது செய்து வருகிறோம்.

இப்படி உலகெங்கும் உள்ள அறிவுத்தரப்பை ‘தமிழ் விக்கி’ இன்னும் வலுவாகத் தொகுத்தளிக்கும் பங்கினை வழங்குகிறது என்பதுதான் உற்சாகம் தருகிறது. மலேசியத் தமிழ் இலக்கியம், பண்பாடு, கலைத்துறைகளில் பங்களித்தவர்களில் முக்கியமானவர்களையும் முதன்மையான ஆக்கங்களையும் இனி நிறுவ முடியும் என்பது அறிவுச்சூழலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சித்தரக்கூடிய செய்தி.

***

தமிழ் விக்கிக்காக நான் பதினாறு கட்டுரைகளைத் தயார் செய்தபோது இந்தத் தளம் ஏன் உருவாக வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை என் மனம் இயல்பாகவே உருவாக்கிக்கொண்டது. அவற்றைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்:

அ. பிழையான தகவல்கள்

கோ. சாரங்கபாணி

நான் முதலில் உருவாக்கியது கோ. சாரங்கபாணி அவர்களின் பக்கம்தான். மலேசிய இந்தியர்களிடையே இன்று மொழி நிலைத்திருக்க அவர் ஒரு முக்கிய காரணி என அனைவரும் அறிவர். ஆனால் அவர் பிறந்த திகதி ஏப்ரல் 19 என விக்கிப்பீடியாவில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் பக்கத்தை உருவாக்கும்போதுதான் பார்த்தேன். மேலும் அவர் மரணமடைந்த திகதியோ ஆண்டோ   குறிப்பிடப்படவில்லை. 1903இல் ‘மலாயா’ என்றே மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் அறியப்பட்டன. ஆனால் விக்கிப்பீடியாவில் ‘கோ.சாரங்கபாணி சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றியவர்’ என எழுதப்பட்டுள்ளது. அவர் தமிழ் முரசை சிங்கப்பூருக்கு மட்டுமா நடத்தினார்? அல்லது அவர் போராடி உருவாக்கிய மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம் சிங்கையில் இருக்கிறதா? கோ. சாரங்கபாணி குறித்து தகவல் தேடுவது அப்படி ஒன்றும் சிரமமானதல்ல. இன்று அவர் மகள் ராஜம் சிங்கையில்தான் வசிக்கிறார். ந.பாலபாஸ்கரன் விரிவாகவே அவர் குறித்து நூலை வெளியிட்டுள்ளார். இத்தனை இருந்தும் அவர் பக்கம் முழுமையடைவில்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு.

மலேசியாவில் உருவாகி ‘திருமுகம்’ சிற்றிதழும் முதல் சிறுகதை நூலும் வெளியிட்ட மா.செ.மாயதேவன் குறித்து விக்கிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ள வாக்கியம்தான் இன்னும் அதிர்ச்சிக்குரியது. அவர் ‘முனியாண்டி’ எனும் புனைப்பெயரில் அறியப்பட்டாராம். அவரது இயற்பெயரே முனியாண்டிதான். எழுத்துக்காக ‘மாயதேவன்’ என மாற்றியமைத்துக்கொண்டதை சரிபார்க்கவோ திருத்தவோ விக்கிப்பீடியா குழுவில் யாருக்கும் நேரமில்லை.

இவற்றையெல்லாம் விட ஆய்வாளர் மா.ஜானகிராமன் தான் ஆய்வு செய்து சமூகத்துக்குப் புதிய தகவலைக் கொடுப்பார் என்றால், ‘அவளுக்கென்று ஒரு மனம்’  எனும் நாவலை அவர் எழுதியுள்ளதாக அவரே அறியாத தகவலைக் கூறி ஜானகிராமனையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர் விக்கியினர்.

ஆ. உருவாக்கப்படாத பக்கங்கள்

சுப. நாராயணன்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செயலற்றுபோன மலேசியத் தமிழ் இலக்கியத்தை, தான் எழுதிய ‘ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்’ நூலின் மூலமாக 1946-க்குப்பின் உயிர்த்தெழ வைத்தவர் ‘சீ.வி.குப்புசாமி’. மலேசிய எழுத்தாளர் சங்கம் உருவாக வித்திட்டவர்களில் ஒருவர். ஆனால் அவர் குறித்த எந்த பதிவும் விக்கிப்பீடியாவில் இல்லை. அதுபோல 1950களில் கதை வகுப்பைத் தோற்றுவித்து எழுத்தாளர்களை உருவாக்கிய ‘சுப. நாராயணன்’ குறித்த எளிய அறிமுகப் பதிவுகூட இத்தளத்தில் இல்லை. மேலும் மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை வெளியிட்டு அதற்கான மாநாட்டையும் நடத்தியவர்களின் ஒருவரான ‘எம்.ஏ.இளஞ்செல்வன்’, ‘வானம்பாடி’ இதழ் வழி அதை வளர்த்தெடுத்த ‘அக்கினி சுகுமார்’, தமிழ் இலக்கியத்தில் தனது தன்வரலாற்று நூலில் தனி இடம்பெற்ற ‘முத்தம்மாள் பழனிசாமி’ போன்றவர்கள் குறித்த ஒற்றை வாக்கியம்கூட இல்லாதது எவ்வளவு பெரிய மெத்தனம்.

இ. புதுப்பிக்கப்படாதவை

அ.ரெங்கசாமி

இவை ஒருபுறம் இருக்க, உருவாக்கப்பட்ட பல பக்கங்கள் அதற்கு பிறகு கவனிப்பாரற்றுக் கிடப்பதையும் காணமுடிகிறது. பொதுவாக வாழும் ஆளுமைகளின் வரலாற்றில் புதிய அத்தியாங்கள் ஏற்படுவது இயல்பு. அதனைக் கவனத்தில் வைத்துக்கொள்வது அப்படி ஒன்றும் சிக்கல் அல்ல. மலேசியாவில் வரலாற்று நாவல் வளர்ச்சிக்குப் பங்காற்றிய அ. ரெங்கசாமி, நவீன இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த சை.பீர்முகம்மது, மா.சண்முகசிவா, கோ. புண்ணியவான், அரு. சு. ஜீவானந்தன்  குறித்த பக்கம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தாலே விக்கிபீடியாவின் செயலூக்கத்தை அறிந்துகொள்ளலாம்.

ஈ. தனித்தப்பங்களிப்பு

மா. இராமையா

விக்கிப்பீடியாவை பொறுத்தவரை அனைத்தும் ஒன்றே. ஓர் எழுத்தாளரின் முக்கியமான பங்களிப்பு என்னவென்று ஆய்ந்து எழுதும் போக்கு அவர்களிடம் இல்லை. உதாரணமாக, மா. இராமையாவின் இலக்கியப் பங்களிப்பு என்பது 1996இல் கடும் உழைப்பில் வெளியிட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்’ நூல்தான். அந்த நூலை அடிப்படையாகக்கொண்டே பல ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. அதை அவர் சொல்ல வேண்டியதில்லை. தொடர்ந்து இலக்கியச் சூழலை கவனிக்கும் ஒருவரால் அதனைக் கணித்துவிட முடியும்.

அதுபோல, மலேசியாவில் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சீ. முத்துசாமி குறித்து ‘மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவர்’ என ஒற்றை வரி குறிப்பு மட்டுமே உள்ளது. மலேசியப் புதுக்கவிதை மாநாடு நடத்திய மூவரில் ஒருவர் என்பதோ, தனித்த மொழிநடை மூலம் மலேசிய நவீன இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர் என்பதோ விக்கிப்பீடியாவுக்கு அவசியமற்றது. மேலும் ரெ.கார்த்திகேசு மலேசிய நவீன இலக்கியத்துக்குச் செய்த முக்கியப் பங்களிப்பான ‘இலக்கிய வட்டம்’ இதழ் குறித்தோ, உலக இலக்கியத்துக்குச் செய்த கொடையாக ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ எனும் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது குறித்தோ ஒற்றை வரித் தகவல்கூட அவர் பக்கத்தில் இல்லாதது ஏமாற்றம்.

விக்கிப்பீடியா செயல்பாட்டின் வழி நான் புரிந்துகொண்டதை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.

அ. தங்களைப்பற்றிய பிழைத் தகவல்களை அந்த எழுத்தாளர்களே வந்து திருத்தினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மூன்றாம் தரப்பு ஒருவேளை தவறாக ஒன்றை இணைத்தால் இப்பக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆ. ஒவ்வொரு எழுத்தாளரும் சிறியதும் பெரியதுமாக பெற்ற விருதுகள் இக்குழுவினருக்கு முக்கியமே தவிர; அவர்களது முக்கியமான பங்களிப்பு அவசியமல்ல.

இ. கிடைக்கும் தகவல்களைத் தொகுத்துப் போடுவதே அவர்கள் கடமையே தவிர; தமிழ் அறிவுக்களஞ்சியம் ஒன்றை அதன் உள்ளடக்கத்தால் மேம்படுத்துவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை.

ஈ. பொதுத்தளங்களில் சர்ச்சை, விவாதம், விருது, புகழ் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட ஒன்றே விக்கிபீடியாவின் கவனத்தில் குவிவது.

உ. ஆளுமைகளின் பெயரைக் கூட இவர்களின் மொழிக் கொள்கைக்கு ஏற்ப மாற்றி எழுதும் அசட்டுத்தனமும் இறுக்கமான மொழிக்கொள்கையும் கொண்டவர்கள். அதையே தங்கள் அதிகபட்ச அறிவுச் செயல்பாடு எனக் கருதுபவர்கள்.

இந்த அசட்டுத்தனமான சூழலில் இருந்து அறிவார்ந்த நோக்கில் நகர்த்தப்படும் தமிழ் விக்கி இனிவரும் காலங்களில் ஆய்வுலகிற்கும் அறிவுலகிற்கும் பெரும் கொடையாக இருக்கும் என உறுதியாகச் சொல்லலாம். மலேசியாவில் ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைவதன் வழி மேலும் ஆக்ககரமான பதிவுகளை இதில் இணைக்க முடியும். தனிப்பட்ட முறையில் என்மீது பிணக்கு கொண்டவர்கள் நேரடியாகவே திட்டமிடப்பட்ட வடிவத்தில் கட்டுரைகளை உருவாக்கி ஆசிரியர் குழுவுக்கு அனுப்பலாம். அவர்கள் அதன் முக்கியத்துவம் நம்பகம் ஆராய்ந்து பதிவிடுவர். நம் மொழிச்சூழலில் அறிவார்ந்த நிலை மேம்பட வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் நம் பணி என இதில் இணையலாம்.

மலேசியத் தமிழர்களுக்கென்றே உள்ள நாட்டார் கதைகள், தனி அடையாளம் பெற்றுள்ள பண்பாட்டு விழாக்கள், தனித்துவமான இசை வகைமைகள், இயக்கங்களின் வரலாறுகள் என நாம் எழுதுவதற்கு ஏராளம் உண்டு. நானறிந்து அவை இன்றுவரை எங்குமே தொகுக்கப்படவில்லை. இத்தளம் அதற்கானது. தொகுக்கப்படும் பெரும் அறிவுச்செல்வம், நம்பகமான இடத்தில் உள்ளது என பொதுவாசகர்களின் நம்பிக்கையைப் பெறத்தக்கது.

தனிப்பட்ட முறையில் இந்த பதினாறு பதிவுகளுக்குப் பிறகு மலேசிய இலக்கியச் சூழலை இன்னும் ஆழமாகவே அறிந்துகொண்டேன். ஒரு படைப்பாளிக்கு இது அவசியம் என்றே கருதுகிறேன். ஒன்று வரலாற்று நிகழ்வுகள் மேலும் துல்லியமாக மனதில் பதிகின்றன. இரண்டு, பெரும் ஆளுமைகளின் வரலாற்றைத் திருப்பிப் பார்ப்பது நாம் எவ்வளவு சிறியவர்கள் என உணர வைக்கிறது. இவை இரண்டுமே படைப்பாளிக்கு அவசியமானது.

வரலாற்றுக்கு நமது முன்னோடிகள் கொடுத்துள்ள பங்களிப்பை அறிவதன் வழியாகவே எஞ்சிய காலங்களில் இன்னும் துடிப்புடன் செயலாற்ற முடியும். எவ்வளவு ஆளுமைகள் தங்கள் உழைப்பில் உருவாக்கிக் கொடுத்த நிழலில் நாம் நிற்கிறோம் என உணர்ந்தால் மட்டுமே நமது பொறுப்புணர்ச்சி அதிகமாகும்.

(Visited 1,471 times, 1 visits today)