1. இலக்கிய விமர்சனம்
சமீபத்தில் ம.நவீன் வலைத்தலத்தில் கோ.முனியாண்டி நவீனுக்கு எதிராக எழுதியிருந்த எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. கலைக்கு எதிரான விமர்சனம், படைத்தவனை நோக்கிய தனிமனித விமர்சனம், இலக்கிய செயல்பாடுகளின் மீதான விமர்சனம் என விமர்சனங்களை மூன்று வகையாக முன்வைக்கலாம். ம.நவீன் முன்வைக்கும் பல விமர்சனங்கள் இலக்கியவாதிகளின் இலக்கிய செயல்பாடுகளின் மீதும் அவர்களின் நேர்மையற்ற நடவடிக்கைகளின் மீதுமாக இருக்கும். பலரின் மீது வல்லினம் முன்னெடுத்த எதிர்வினைகள் எந்தத் தனிமனிதரின் சுயநலத்துக்காகவும் அல்லாமல் இலக்கிய பொதுமையைப் பாதிக்கும் செயல்களை நோக்கியே இருந்தன.
ஆனால் அதே சமயத்தில் தனிமனித அவதூறுகள் நடக்கவே இல்லை என்றும் சொல்வதற்கில்லை. அஞ்சடி வலைத்தலத்தில் வல்லினக் குழுவிற்கும் பாலமுருகனுக்கும்(எனக்கும்) நிகழ்ந்த பெரும்பான்மையான எதிர்வினைகள் தனிமனித தாக்குதல்களாகவே இருந்ததை மறுக்க முடியாது. சில சமயங்களில் கலையை நோக்கிய விமர்சனம் பலவீனமடையும்போது அது தனிமனித விமர்சனமாக மாறிவிடும் அபாயம் நிறையவே இருக்கின்றது. இதை இப்பொழுது நாங்கள் தெளிவாகவே உணர்கிறோம்.
கோ.முனியாண்டி தன்னை 50 வருட இலக்கியவாதியாக முன்னிறுத்துவது அவருடைய உரிமையாகும். ஆனால் அதை ஒரு அதிகாரமாக நிறுவி தன் நாவல் மீதான விமர்சனத்தை மிக நேர்த்தியாக தனிமனித சண்டைக்குள் கொண்டு வருகிறார் என்பதுதான் நெருடலாக இருக்கிறது. எந்தக் கலை படைப்பாக இருந்தாலும், அதைச் சமூகத்திற்கு முன் படைத்துவிட்ட பிறகு அதன் மீது வாசகப் பார்வையும் விமர்சனமும் எழக்கூடாது என்பது நினைப்பதும், அல்லது தனக்கு சாதகமான விமர்சனங்கள்தான் வரவேண்டும் என நினைப்பதும் அபத்தமான விசயம். 50 ஆண்டு காலம் தொடர்ந்து எழுதிவிட்டால், அவர்கள் ஆளுமைகளாகிவிடுவார்களா? தொடர்ந்து எழுதுவது மட்டும் சிறந்த இலக்கியவாதியாகத் தன்னை நினைத்துக்கொள்ள போதுமான விசயமா?
ஒரு படைப்பைப் பெரும்பாலும் நிர்ணயம் செய்வது அந்தப் படைப்பு படைக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதைக் கூட்டாகவோ, தனித்தனியாகவோ வாசிக்கும் வாசகர்கள்தான். அதை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ அவர்களுக்கு முழு உரிமையை யார் கொடுத்தார் என்றெல்லாம் கேட்பது சற்று கடினமான விசயமாகும். படைப்புக்கும் படைப்பாளனுக்கும் உள்ள உறவைப் பற்றி பேசும் இதே கணத்தில், படைப்புக்கும் வாசகனுக்குமான உறவையும் பேசித்தான் ஆக வேண்டும். எடுத்துக்காட்டாக காலப் பிழைகள், கதைப்பாத்திர நம்பகத்தன்மையின்மை, பாத்திர படைப்பின் பலவீனம், பிரச்சாரத்தன்மை, நிஜ கலாச்சார சூழலோடு ஒட்டாத அந்நியத்தன்மை எனப் பலவகையாக ஒரு படைப்பை மதிப்பிடலாம். இவற்றை செய்யக்கூடாது எனத் தீர்மானிக்கும் உரிமை, ஒரு படைப்பைப் படைத்தவிட்ட பிறகு அந்தப் படைப்பாளனுக்குக் கிடையாது. படைப்பை நியாயப்படுத்துவோ அல்லது அதனை நோக்கி தர்க்கம் செய்யவே மட்டும் படைப்பாளன் அனுமதிக்கப்படுவான். இதுதான் சமூக/வாசக பரப்பின் நிதர்சனம்.
குறிப்பு: நயனம் வார இதழில் கோ.முனியாண்டியின் நாவலை 15 வாரங்கள் தொடர்ந்து படித்திருக்கிறேன். மேலும் நாவல் வெளியான பிறகு அதனை விமர்சிக்க ஒரு பிரதியைக் கேட்டு அவருக்கும் அழைத்துக் கூறினேன். ஆனால் அவர் விமர்சனங்களை விரும்பாதவர் போல. ஆகவே அவர் நாவலை அனுப்பி வைக்கவில்லை. என்னுடைய விமர்சனம் அவருக்கு அநாவசியமாகக்கூட இருந்திருக்கலாம். வேறு எங்காவது நாவல் வாசிக்கக் கிடைத்தால் அதனை விமர்சிப்பதால் நானும் ஒரு சட்டாம்பிள்ளையாகக் கருதப்படமாட்டேன் என நினைக்கிறேன். விமர்சனத்தை எந்த விருப்பும் வெறுப்புமின்றி அணுகும் சூழல் மலேசியத் தமிழிலக்கியச் சூழலில் உருவாக வேண்டும் என்றே நினைக்கிறேன். முதலில் நாம் முன்வைக்கும் விமர்சனம் எதனை நோக்கியது என்கிற விழிப்புநிலையும் நமக்கு வேண்டும். படைப்பை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு நம்முடைய அதிகாரத்தைச் சோதித்துப் பார்ப்பதும், பிறருடைய ஆளுமையைக் களைத்துப் பார்ப்பதும் பச்சையான அபத்தம்.
2. வல்லினம் வாசகர்கள்:
தன் நாவலைத் தக்கவைத்துப் பேசுவதற்கு, அல்லது அந்த நாவலைப் பற்றி ம.நவீன் தன் சொந்த வலைத்தலத்தில் விமர்சித்ததற்கு எதிர்வினையாற்ற முயன்ற கோ.முனியாண்டி, தன் 50 ஆண்டு இலக்கிய ஆளுமையைப் பயன்படுத்தி, ‘பரிதாபத்திற்குரிய வல்லின வாசகர்களே” எனச் சொல்லக் காரணம் என்ன? வல்லினத்தை வாசிக்கும் அனைவரையும் பரிதாபத்திற்குரியவர்கள் என அவர் சொல்ல வருவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கடந்த காலங்களில் வல்லினத்தின் வழி தன் படைப்புகளை பொதுபார்வைக்கும் உலகப் பார்வைக்கும் கொண்டு போனதன் வழியாக அவர் அடைந்த விரக்தியா அல்லது திருப்தியின் வெளிப்பாடா?
இன்று வல்லினம் அடைந்திருக்கும் சாத்தியங்கள் என்ன? உலகம் முழுக்க வல்லினத்திற்கு வாசகர்கள் இருக்கிறார்கள். 800 பேர் மட்டும் வாங்கி வாசித்துக்கொண்டிருந்த வல்லினம் இதழ், பிறகு இணைய இதழாக மாறி இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாசகர்களை அடைந்துள்ளது. ஒரு வேளை உலக இலக்கியம் ஒன்றைப் படைத்தவிட்டதாலும் அவர் இலக்கிய chief என்பதாலும் வல்லினத்தின் ஒட்டுமொத்தமான உலக வாசகர்களைப் பரிதாபத்திற்குரியவர்கள் என நினைத்துவிட்டாரா? அல்லது அவரது நாவலில் சிறு பிழையைக்கூட கண்டுபிடிக்கக்கூடாது என்கிற அதிகாரத் தொணி அவரிடம் இருப்பதால் அதைச் செய்யும் யாராகினும் அவர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மாற்றிவிடும் முயற்சியா?
என்னுடைய முதல் நாவலில் கூட நிறைய பிழைகள் இருக்கின்றன. இதை வாசகன் சுட்டிக்காட்டினாலும் அல்லது விமர்சகன் எடுத்துரைத்தாலும் ஒரு படைப்பில் இது போன்ற தவறுகள் நிகழ்வது இயல்பான ஒன்றாகும். இதனைச் சரிக்கட்ட முனியாண்டி ஏன் வல்லினம் வாசகர்களைப் பரிதாபத்திற் குரியவர்களாகப் பாவிக்க வேண்டும்? வல்லினத்தை வாசிப்பவர்கள் என்ன வேறெதையும் வாசிக்காமல் சந்தா கட்டி வல்லினத்தை மட்டும் வாசித்துக் கொண்டிருப்பவர்களா? இன்று ஒரு வாசகன் என்ன ஒரு இதழை மட்டுமா வாசித்துக் கொண்டிருக்கிறான்? குறிப்பிட்டு அதென்ன வல்லினம் வாசகர்கள் எனும் அடையாளத்தை அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது? 50 ஆண்டு கால பழம் பெரும் எழுத்தாளருக்கு ஓர் எதிர்வினையைக் கூட நியாயமாக நேர்த்தியாக முன்வைக்கத் தெரியவில்லை என்பதை நினைக்கும்போது, உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள் வல்லினம் வாசகர்கள் அல்லர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
குறிப்பு: அவருடைய நாவல் பிரசுரம் குறித்தோ, அவருக்கும் நவீனுக்கும், யுவராஜனுக்கும் மத்தியில் நிகழ்ந்ததைக் குறித்தோ நான் எதுவும் பேசவில்லை. அது நடந்ததைப் பற்றி எனக்கெதுவும் தெரியாது.
3. இந்துத்துவ ஜால்ராக்கள்
ஓர் இலக்கியப் படைப்பை விமர்சிக்க ஒருவர் யாருடைய ஜால்ராக்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஜெயமோகன் அவர்கள், ஆன்மீகம், இலக்கியம், இலக்கியச் செயல்பாடுகள் (ஊட்டி சந்திப்பு, விஷ்ணுபுரம் அமைப்பு), தத்துவம், வரலாறு, இந்திய ஞானம் எனப் பல துறைகளில் தன் எழுத்தின் வழி இயங்கக்கூடியவர். அவரை வாசிக்கும் வாசகர்களும் தனக்கு உடன்பாடுடைய விசயத்தில் ஜெயமோகனை அணுகுகிறார்கள். ஆகையால் அவருடைய எல்லாம் வாசகர்களையும் அவருடைய ஜால்ராக்கள் எனச் சொல்வதும் அல்லது அவருடன் 100 சதவிகிதம் ஒத்துப்போகக்கூடியவர்கள் என முடிவுக் கட்டுவது பெரும் அபத்தம்.
எனக்கு ஜெயமோகனின் சிறுகதைகள் மிகவும் பிடித்தமானது. நான் ஜெயமோகனை அவருடைய சிறுகதைகளின் வழி வந்தடைகிறேன். ஒருவேளை எனக்கு ஜெயமோகனின் மற்ற எழுத்துகளில் உடன்பாடு இல்லாமல் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக மாவோயிஸ்ட் பற்றி அவர் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கும். இது வாசக சுதந்திரம். மேலோட்டமான புரிதலை வைத்துக்கொண்டு அவனுடைய இயங்குதளத்தை வரையறுக்கும் ஆற்றலை எப்படிப் புகழ்வது எனத் தெரியவில்லை. ஜெயமோகன் மலேசிய வந்தபோது ஆக மேலொட்டமான கேள்விகளை அவரிடம் கேட்டவர் கோ.முனியாண்டித்தான். நாவல்களின் பெயர்களை மட்டும் சொல்லி அது எப்படிப்பட்ட நாவல் இது எப்படிப்பட்ட நாவல் என வரிசையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஓர் இந்துத்துவ எழுத்தாளரின்( அவர் சொல்வது போல) நாவலைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள கோ.முனியாண்டிக்கு என்ன அவசியம் நேர்ந்தது?
மேலும் அவர் சொல்லியிருப்பது போல அவருடைய இலக்கியப் பிரதியான நாவல் வெளியீட்டுக்கு அரசியல்வாதிகளை முதன்மைப்படுத்தி அழைப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஒரு சமூக நிகழ்விற்கும் பொது நிகழ்விற்கும் அரசியல்வாதிகளை அழைத்து அவர்களைக் கௌரவப்படுத்தி சிறப்பித்து அவர்களின் தலைமையில் நிகழ்வை நடத்துவது இயல்பான ஒன்றாகும். ஆனால் இலக்கிய மேடையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவதன் காரணம் என்ன? அவர்களை நிகழ்விற்கு அழைக்கக்கூடாது என்பதல்ல என் கேள்வி. அவர்களை மட்டும் அழைத்து நாவல் வெளியீட்டை அவர்களின் கையில் ஒப்படைப்பதன் அடிப்படை காரணம் என்ன?
குறிப்பு: அவருடைய எதிர்வினையை வாசிக்க நேர்ந்ததன் வழி உருவான விமர்சனம் இவை. யார் விருப்பு வெறுப்புக்கும் உடபட்டவை அல்ல. ஒருவேளை அவர் என் எதிர்வினைக்குப் பதிலளித்தாலும் நான் திரும்பவும் எழுதி என் நேரத்தை வீணடிக்கப்போவதில்லை. என் கேள்விகளைச் சமூகத்திற்கு முன் வைத்துவிட்டேன். நன்றி.
கே.பாலமுருகன்