சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 4

கண் விழித்தபோது பொன்னுருண்டை கையில் இல்லை. எரிந்துகொண்டிருந்த விளக்கொளி சூரிய வெளிச்சத்தில் அமிழ்ந்துவிட்டன. நல்லவேளையாக நேற்று இரவு பால்கனியின் திரைசீலையைத் திறந்துவிட்டதால் விடிந்துவிட்டது தெரிந்தது. அலாரம் வைத்திருக்கவில்லை. களைப்பில் அப்படியே தூங்கிவிட்டது மூளைக்கு உரைத்தபோது துள்ளிக்குதித்து எழுந்தேன்.

கைப்பேசியைத் தேடி மணியைப் பார்த்தேன். காலை 7.15. அதிர்ச்சியடையக் கூட அவகாசம் இல்லை. 7.45க்குப் பயணத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். பரபரப்பாகக் கிளம்பினேன். எனக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அவசரமாக எதைச் செய்தாலும் கோளாறாகிவிடும். ஆனால் இப்போது அவசரமன்றி வேறு வழியில்லை. பல் துலக்கிக்கொண்டே எதையும் தவற விட்டுவிடக்கூடாது என மனதிலேயே கணக்கிட்டுக்கொண்டேன். நேற்று கருத்தரங்கு குழுவைச் சேர்ந்தவர் அந்தச் சிகப்பு நிற அட்டையை அவசியம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்றது மட்டும் நினைவில் இருந்தது.

வேகமாக உடுத்திக்கொண்டு, கழுத்தில் அட்டையை மாட்டிக்கொண்டு, கதவோரக் கருவியில் செருகியிருந்த கார்ட்டை கையில் எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டேனா என என்னையே நான் பத்துமுறை தடவித் தடவிப்பார்த்துக்கொண்டு அறையில் இருந்து உருண்டு ஓடினேன். காலை உணவை முடித்துக்கொண்டு அவசரமாக அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பேராசிரியர் ஃபான், “நீ இன்னும் கிளம்பவில்லையா? சரியாக 7.50க்குப் பேருந்து வந்துவிடும். 8.00 மணிக்குப் புறப்பட்டு விடும்” என்றார் எச்சரிக்கைக் குரலில்.

அப்போதுதான் அவ்வளவு கவனமாக இருந்தும் முக்கியமான தவறு ஒன்றைச் செய்துவிட்டதே உரைத்தது. நான் ஜீன்ஸும் டி-சட்டையுமாக வெளியேறியிருந்தேன். மீண்டும் வேகமாக அறைக்கு ஓடி கார்ட்டை கதவில் வைத்தால் எந்த எதிர்வினையும் இல்லை. “திறந்திடு சீஸே…” என எத்தனை முறை சொன்னாலும் அமைதியாகவே இருந்தது. கார்ட்டில் ஏதோ கோளாறு என மீண்டும் லாபியை நோக்கி ஓடினேன். லாபி எங்கோ கண் காணாத தேசத்தில் இருந்தது.

நல்லவேளையாக அங்கு பணிபுரியும் மூதாட்டி ஒருவர் வழியிலேயே எதிர்கொண்டார். அறைகளைச் சுத்தம் செய்பவர். சீனாவில் ஆங்கிலப் புழக்கம் இல்லை. எனவே ‘கதவு பூட்டிக்கொண்டது. அறையைத் திறக்க வேண்டும்’ என்பதை விரல்களில் பலமாதிரி செய்துகாட்டியபோது ஏதோ விவகாரமாகப் பேசுகிறேன் என என்னைப் பார்த்து பயந்தவர் பின்னர் புரிந்துகொண்டார். நான் அழைத்த இடத்திற்கு வந்தார். கார்ட்டை கதவில் வைத்துக்காட்டினேன். அவர் என்னைப் பார்த்து, ‘இந்தக் கார்ட்டு இல்லை’ என்பதாகத் தலையை ஆட்டி, சீனத்தில் ஏதோ கூறி இன்னொரு கார்ட்டை காட்டினார். பின்னர் அறை எண்ணைத் தான் கையில் வைத்திருந்த கருவியில் தட்டியபோது விடுவிடுவென சீன எழுத்தில் ஏதேதோ தகவல்கள் வந்தன. மொத்த ஜாதகத்தையும் கரந்துவிட்டார்கள் போல. விருட்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் என எழுதியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கூடவே என் கடப்பிதழ் படம். அக்கருவியை என் முகத்துக்குப் பக்கத்தில் வைத்து நான்தானா என உறுதி செய்துக்கொள்ள கண்களை உருட்டினார்.  பின்னர் தான் வைத்திருந்த கார்ட்டைக் கொண்டு அறையைத் திறந்துவிட்டபோது உயிர் வந்தது. அதே சமயம் சீனாவில் நுழையும் ஒருவரின் தகவல்கள் எவ்வளவு கவனமாகச் சேகரிப்படுகின்றன என்பதையும் புரிந்துகொண்டேன்.

அறையின் வரவேற்பறை

உள்ளே நுழைந்தவுடன் முதல்நாள் கொடுத்த உறையை எடுத்து ஆராய்ந்தேன். ஆம்! வெள்ளை வண்ணத்தில் ஒரு கார்ட் இருந்தது. அது கதவைத் திறக்க; நீலக்கார்ட் அறைக்கு உயிர்க்கொடுக்க.

ஓடிச்சென்று அவசரமாக சட்டையும் கோர்ட்டும் அணிந்துகொண்டு மறக்காமல் இரண்டு கார்ட்டுகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் உணவுண்ணும் இடத்திற்கு ஓடினேன்.

எப்படியும் பேருந்து 8 மணிக்குப் புறப்படும். அதற்குள் ஒரு காப்பியாவது குடித்துவிட வேண்டுமென ஏக்கம் எட்டிப்பார்த்தது. காலையில் காப்பி குடிக்காவிட்டால் மூளை விழிக்காது. நான் போன நேரம் இன்னும் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அஸ்ரின் தான் அமர்ந்துள்ள இடத்தை 20 நிமிடங்களுக்கு முன்னரே அடையாளம் கூறி அனுப்பியிருந்தார்.

தங்கும் விடுதிகளில் காப்பியை ஊற்றி நாமாக சீனி, பவுடர் போட்டுக் கலந்துகொள்வது எனக்குப் பிடிக்காது. நல்லவேளையாக அங்கேயே ஒரு மெஷினில் நமக்குத் தேவையான பதத்தில் காப்பி கிடைத்தது. ஒரு கல்லூரி மாணவி அங்கு நின்று உபசரித்துக்கொண்டிருந்தாள். கைகாட்டிய காப்பியை மிஷினில் இருந்து எடுத்துக்கொடுத்தாள். காப்பியை எடுக்கும்போதே சுற்றிலும் கண்களை மேயவிட்டேன். குறைந்தது 20 வகையான உணவு வகைகள் இருந்தன. பெரும்பாலும் மாமிசங்கள்.

எல்லா இறைச்சி வகைகளும் என் வகுப்பு மாணவர்கள் போல எழுந்து நின்று ‘காலை வணக்கம் ஐயா’ என்றன. நான் விரக்தியுடன் ஒரே ஒரு ரொட்டியை எடுத்து அவசரமாகக் கடித்துக்கொண்டே காப்பியைக் குடித்து முடித்தேன். அஸ்ரின் மிகுந்த பொறுமையாக எனக்குக் காத்திருந்தார். அதுவே எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

நான் நேர ஒழுங்கை முறையாகக் கடைப்பிடிப்பவன். ஆனால் பதற்றமும் அவசரமும் என்னை ஒரு கேனையனாகவே உலகுக்கு வெளிபடுத்துகின்றன. இரண்டு அனுபவங்களைச் சொல்லலாம்.

என் நண்பன் ஒருவன் ‘செண்டோல்’ விற்பனை செய்பவன். இடைநிலைப்பள்ளி காலங்களில் எங்காவது திருவிழா நடந்தால் அவனும் அவன் அப்பாவும் செண்டோல் கடை போடுவார்கள். அப்படி ஒருமுறை அவன் அப்பா தாமதமாக வந்து வியாபாரத்தில் இணைவதாகக் கூற அவன் மட்டுமே லூனாஸ் மாரியம்மன் கோயில் திருவிழாவில் கடை போட்டிருந்தான். திடீரென என்னை அழைத்து “டேய்… பால் முடிஞ்சி போச்சிடா… அப்பாவுக்குத் தெரிஞ்சா தொலைச்சிடுவாரு. வர நேரம்… போயி பால் வாங்கி வந்துடுடா… ப்ளீஸ்,” என்றான்.

கழிப்பறை, குளியல் அறை

நண்பனுக்கு உதவுவதென்றால் உயிரையும் கொடுப்பான் நவீன் என நிரூபிக்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதி ஓடோடி சென்று வாங்கி வந்து பாக்கெட்டை நீட்டினேன். “என்னடா இது… தேங்கா பாலு கேட்டா மாட்டுப்பாலு வாங்கி வந்திருக்க…” எனக் கெட்ட வார்த்தையில் திட்டினான்.

உண்மையில் எனக்கு செண்டோலில் தேங்காய்ப்பால் ஊற்றுவார்கள் என்பதே அன்றுதான் தெரியும். நான் கனவுலக வாசி. செண்டோலில் மிதந்துகொண்டிருக்கும் பலவண்ண கலவைகள் மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரியும்; எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதையெல்லாம் நான் கவனித்ததே இல்லை.

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நுழைந்த முதல்நாள் இப்படிதான் ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு வழங்கப்பட்ட அறையில் இருந்த அலமாரியில் பூட்டு இல்லாததால் அதை வாங்கி வரச் சென்று தாமதமாகிவிட்டது. அன்று சரியாக மதியம் 2 மணிக்குத் திடலில் இறங்க வேண்டுமென அறிவிப்பு வந்தது. கட்டாயம் கொடுக்கப்பட்ட குடையையும் பளபளக்கும் கறுப்பு நிற பையையும் கையுடன் கொண்டு வர வேண்டும் எனக் கண்டிப்பாகச் சொல்லப்பட்டது.

நான் இருப்பதிலேயே நல்ல சட்டையாக எடுத்து இஸ்திரிபோட்டு உடுத்திக்கொண்டு கல்லூரிக்காகவே வாங்கிய புதிய கருப்பு நிற காலணியை அணிந்துகொண்டு திடலுக்கு ஓடியபோது எல்லோரும் வினோதமாகப் பார்த்தார்கள். திடலுக்குச் சென்று வரிசையில் நின்றபோதுதான் அன்று பதிந்தபோது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட டி – சட்டையும் விளையாட்டு காற்சட்டை, காலணி அணிந்துவர வேண்டும் என்பதே தெரிந்தது. அதை அத்தனை முறை அறிவித்தும் பதற்றத்தில் காதில் விழுந்திருக்கவில்லை.

முதல் நாளே கல்லூரி மாணவிகள் சிரிக்க, சீனியர்கள் அப்படியே நிற்கச் சொல்லிவிட்டார்கள். அக்குளில் குடையை வைத்துக்கொண்டு முழு அதிகாரபூர்வ உடையில் திடலில் நின்றுகொண்டிருந்த என்னைக் கல்லூரி வரலாறு மறக்காது.

இப்படி என் வாழ்க்கையில் நிறைய சம்பங்கள் இருந்தாலும் வயது ஏற ஏற பக்குவம் வந்துவிட்டதாக நானாக நினைத்துக்கொண்டது தவறாகிவிட்டது. சரியாக 7.50க்கு லாபிக்குச் சென்றோம். வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட எங்களுக்கான பிரத்தியேகப் பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் ஏறிக்கொள்ளலாம் எனச் சென்றபோது, பெயர் உள்ள பேருந்தில்தான் ஏறவேண்டும் என்றார்கள். எங்கள் பெயர் முதல் பேருந்தில் இருந்தது. பெயரைக் கேட்டு அடையாளமிட்டப்பின்னரே ஏற அனுமதித்தார்கள். சன்னலோர இருக்கையில் அமந்தேன். அஸ்ரின் இன்னொரு சன்னல் இருக்கையைப் பிடித்துக்கொண்டார். அவருக்குக் காட்சிகளைப் படம் பிடிப்பதில் அதிக விருப்பம் இருந்தது.

அது சீனாவில் இலையுதிர் காலத் தொடக்கம். ஆங்காங்கு இலைகள் காய்ந்து மரத்துக்கு அடியில் வளையங்கள் போட்டிருந்தன.

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து
தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது.
இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை
அது தன் கழுத்து என்று சொன்னதும்
கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்

தேவதேவன் நினைவுக்கு வந்தார்.

இன்னும் அகலாதப் பனித்திரையில் துலங்கித்தெரியும் வண்ணங்களை இரசித்தபடி சென்றுகொண்டிருந்தோம். இரு பக்கமும் அனைத்து வாகனங்களும் எங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ”நாம் அரசு விருந்தினர்கள் என்பதால் அனைத்து வாகனங்களும் நமக்காக வழிவிடுகின்றன,” என்றார் ச்சாய் சியா.

சாலையில் ஆங்காங்கே ‘லியாங்சு கலாசார கருத்தரங்கு’ குறித்த அறிவிப்புகளும் கொடிகளும் ஊன்றப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த நகரமே இந்தக் கருத்தரங்கை அறிந்து வைத்துள்ளதுபோல தோற்றம்.

பேருந்து ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் முன் நின்றதும், இறங்கி துவக்க விழா மண்டபத்தை நோக்கி நடந்தோம். மண்டபத்திற்கு வெளியே இருந்த பெரிய பலகையில் யார் எங்கே அமர வேண்டுமென முன்னமே தீர்மானிக்கப்பட்டிருந்தது. அப்படி என் பெயரும் தவறாக எழுதப்பட்டு பலகையில் இருந்தது. எங்களை இன்முகத்துடன் வரவேற்று நாங்கள் சென்று அமர வேண்டிய இடத்தை ஓர் இளம் சீனப்பெண் காட்டினாள். அவள் முகம் கண்ணாடிபோல பளபளத்தது. அவள் கட்டளையிட்டால் முள்ளிருக்கையிலேயே அமர்வேன்; மெத்தை நாற்காலியில் அமர மாட்டேனா!

  • தொடரும்

அறியப்படாத நூறு மலர்கள் – 1

அறியப்படாத நூறு மலர்கள் – 2

அறியப்படாத நூறு மலர்கள் – 3

(Visited 134 times, 1 visits today)