அனுபவம்
புதிய ஆண்டு
புதிய ஆண்டு என்பது உற்சாகம் கொடுப்பது. என்னை நெருக்கமாக அறியும் நண்பர்களுக்குத் தெரியும் ஒரு புதிய தொடக்கத்தை நான் எவ்வளவு விரும்புபவன் என. பாம்பு தன் சட்டையைக் கலற்றுவதுபோல அது அந்தரங்கமான ஒரு தோலுரிப்பு. அவ்வாறு புத்தம் புதிதாய் தொடங்க, கடந்த ஆண்டு வாழ்வை நினைத்துப்பார்ப்பதும் உற்சாகம் தரக்கூடியதுதான். எதையெல்லாம் செய்து அந்த ஆண்டை முழுமை செய்திருக்கிறோம் என்பதற்கான பார்வை அது. இந்த ‘எதையெல்லாம்’ என்பதில் பலவும் இருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமாகச் சில மட்டுமே இருக்கும். நாம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கண்டடையும் மிகச் சில மட்டுமே அவை.
சித்தர், தமிழாசிரியர், மற்றும் வணிகம்!
நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஓர் உணவகத்தில் சந்தித்ததில் அறிமுகமாகியிருந்த மருத்துவர் திடீரென அழைத்தார். எனது எண்களை நாளிதழில் பார்த்ததாகக் கூறி சந்திக்க இயலுமா எனக் கேட்டார். மறுநாள் ‘யாழ்’ சந்திப்பை அவர் சொன்ன உணவகத்திற்கு அருகில் ஏற்பாடு செய்தேன். இரு சந்திப்பையும் ஒரே இடத்தில் வைத்துவிட திட்டம். ‘யாழ்’ சந்திப்பு முடியும் சமயம் அவர் வந்தார். நான்கு வருடங்களுக்கு முன் பார்த்தது. எளிதாக அடையாளம் காண முடிந்தது. தீர்க்கமான கண்கள். வளித்துச்சீவிய முடி. தடிமனான வெள்ளை மீசை. அப்போதைக்கு இப்போது அதிகம் வயதாகி விட்டவர் போல காட்சியளித்தார். வயது புலி போன்றது. முதலில் மிக மெதுவாகப் பதுங்கி வரும். பாய்ந்தவுடன் அதன் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து ஆக்கிரமிக்கும். என்னையும் அவர் அடையாளம் கண்டுக்கொண்டதால் வழக்கமான நல விசாரிப்புக்குப் பின்னர் விசயத்துக்கு வந்தார்.
Parnab Mukherjee : மௌனம் கொடுக்கும் வதை!
ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. பர்னாப் முகர்ஜி என்பவர் அனுப்பியிருந்தார். கல்கத்தாவைச் சேர்ந்த கலைஞர். நான் அவரை அறிந்திருக்கவில்லை. சிங்கை இளங்கோவன் மூலம் வல்லினத்தையும் என்னையும் அறிந்து, சந்திக்க முடியுமா எனக் கேட்டிருந்தார். கடந்த இருவாரமாக மேற்கல்வி பணிகள் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழலில் எப்படி நேரம் ஒதுக்கி எங்கே சந்திப்பது என்ற குழப்பம் சூழ்ந்தது. இப்படியான சந்திப்புகள் நேரத்தைச் சட்டென அபகரித்துவிடும். அல்லது கலை சார்ந்த மனிதர்களின் சந்திப்பில் நான் அவ்வாறு பிற அத்தனையையும் மறந்துவிட்டு எனது நேரத்தைக் கொடுத்துவிடுவேன்.
அபோதத்தின் ருசி
பத்திரிகைகளில் என் படைப்புகளை இடம்பெறவைக்கக் கொண்டிருந்த தீவிரம் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. இன்றுபோல அத்தனை இலகுவான சூழல் அப்போது இல்லை. அப்போது என்பது 97-98 ஐக்கூறலாம். இருந்ததே இரு தினசரிகள். அதில் ‘மலேசிய நண்பன்’ அதிகம் விற்பனை ஆனது. ‘தமிழ் நேசனு’க்கு இப்போது போலவே அப்போதும் பெரிய விற்பனை இல்லை. எழுதத்தொடங்கிய புதிதில் மலேசிய நண்பனில் படைப்பு வரவேண்டும் என எதிர்ப்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் பேராசை என்றாலும் அதற்காகப் பல வழிகளிலும் முயன்றேன். பெரிய பத்திரிகையில் பெயர் அடிக்கடி வருவதே அதற்கான குறுக்குவழி எனத் தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலம் அது. (இப்போது முகநூலில் 200/300 லைக்குகள் வாங்கி கவிஞர்கள் ஆகிவிடுவதுபோல.) துரதிஷ்டவசமாக அப்போது இருந்த ஞாயிறு பொறுப்பாசிரியர்கள் ஓரளவு இலக்கியம் தெரிந்தவர்கள் போல. தொடர்ந்து படைப்புகளை நிராகரித்தனர்.
தன்னிறைவு
தத்துவங்கள் குறித்தும் வாழ்வியல் குறித்தும் நான் மிகச்சிலரிடம்தான் கலந்துரையாடுவதுண்டு. சுவாமி பிரம்மானந்தா, மருத்துவர் சண்முகசிவா, பி.எம்.மூர்த்தி எனச்சிலரை உடனடியாகச் சொல்லலாம். ஒவ்வொருவரும் உளவியல் தொடர்பான ஆழமானப்புரிதல் உள்ளவர்கள். ஆன்மிகம் மூலமாகவும் அன்பு மூலமாகவும் சேவை மூலமாகவும் அவர்கள் வந்து அடைந்துள்ள இடம், மனவிசால ரீதியாக வேறுபடுத்திப்பார்க்க முடியாதது. ஒரு மலை உச்சிக்கு ஏற எண்ணற்ற பாதைகள் இருப்பது போல் இவர்கள் மூவருமே ஒரே மாதிரியான விடயங்களை வெவ்வேறு வடிவங்களில் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தைகள் நூல் பதிப்பித்தல்
கண்ணீரைப் பின்தொடர்தல்
சில நாள்களுக்கு முன் ஓர் அழைப்பு. சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் இருந்து மன்சூர் என்பவர் பேசினார். தன்னைத் தூக்குத் தண்டனைக் கைதி என அறிமுகம் செய்துக்கொண்டார். மின்னல் பண்பலையில் ‘வல்லினம்’ குறித்து இடம்பெற்ற எனது நேர்காணலை செவிமடுத்தப்பின் எண்களைக் குறிப்பெடுத்து அழைத்திருந்தார். ‘வல்லினத்தின் திட்டவட்டமான தூரம் என எதுவும் இல்லை; அது மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்களை உருவாக்க செயல்படுகிறது. புகழுக்கும் பணத்துக்குமான குறிக்கோளை அடைந்தவுடன் துடிப்பாக உருவாக்கப்படும் பல செயல்வடிவங்கள் தீர்ந்துபோய்விடுகின்றன. வல்லினத்தில் அது இல்லை’, என்று நான் பேசியதைக் கோடிட்டவர் “என்னைச் சந்திக்க முடியுமா?” என்றார்.