பகுதி 1
கலை இலக்கிய விழா பணிகளின்போது பொதுவாக வேறு சங்கதிகளில் ஈடுபடுவதில்லை. அது
நேரத்தைச் சன்னஞ்சன்னமாக உறிஞ்சும். அதே மனநிலையில்தான் மதியழகன் முனியாண்டி தன் முகநூலில் எழுதியுள்ள குறிப்பை ஒரு முகநூல் பதிவாக மட்டுமே எண்ணி புறக்கணிக்க நினைத்தேன். எளிய கலந்துரையாடலுக்குக்கூடத் தகுதியற்ற பிதற்றல்கள் அவை. குறிப்புகளை ஒட்டி விஜயலட்சுமி எழுப்பிய சில அடிப்படையான கேள்விகளை அவர் ‘கிறுக்கல்கள்’ எனப் புறம்தள்ளி விட்டிருந்தார். சரி என அவரது முந்தைய சில குறிப்புகளை வாசித்தபோது கடும் அதிர்ச்சி. கட்டுரையைவிட அதைப் பாராட்டி எழுதப்பட்ட கருத்துகள் மேலும் குழப்பங்களையே உண்டு செய்தன. முகநூலில் போலி புத்திஜீவிகள் எவ்வாறு உருவாகின்றனர் என மதியழகன் முனியாண்டியின் முகநூலை வளம்வந்தால் போதும் எனப்புரிந்தது. எதையும் சிந்திக்க முடியாத ஒரு தரப்பு இளைஞர்கள் எத்தனை பரிதாபமாக இவ்வாறான அரைவேக்காட்டு எழுத்துமுறையில் சிக்கிக்கொள்கின்றனர் எனவும் அறிய முடிந்தது. எனவே, இந்தக் எதிர்வினை அல்லது விளக்கம் மதியழகனுக்கு மட்டுமல்ல. மதியழகனால் வெகு எளிதில் இந்த எதிர்வினையைக் கடந்து செல்ல முடியும். அதற்கு அவரிடம் Mark Zuckerberg முகநூலில் உருவாக்கிக்கொடுத்த கிண்டல் சிரிப்பு சின்னம், ‘ஹஹஹ..’ என சத்தமிட்டு சிரிக்கும் பாவனை, இது ஒரு மாற்றுக்கருத்து என்ற பெருந்தன்மையான வசனங்கள் உதவக்கூடும். எனவே கொஞ்சம் மேம்பட்டு சிந்திக்கும் ஆர்வம் இருந்தால் பிற வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.






