திற‌ந்தே கிட‌க்கும் டைரி

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 23

படிவம் நான்கில் விளையாட்டு தினத்தின் போதுதான் முதன் முதலாக அந்தச் சண்டை வந்தது. அந்தச் சண்டை வந்திருக்க வேண்டாம். ஒரு வகையில் அர்த்தமற்ற பல சண்டைகள் உருவாகவும் நியாயமில்லாமல் பலரைக் காயப்படுத்தவும் அந்தச் சண்டைதான் காரணமாக அமைந்தது. ஏன் ஒருவனை அடிக்க வேண்டும்? ஏன் ஒருவனை காயப்படுத்த வேண்டும்? என்ற சாதாரண கேள்விகளுக்குக் கூட காரணம் கிடைக்காத சண்டைகள்.

என‌து அனுப‌வ‌த்தில் எல்லா செய‌லுக்கும் தேவைப்ப‌டும் ச‌க்தி ஒன்றுதான். மூல‌த்தில் உற‌ங்கி கிட‌க்கும் அதை எப்ப‌டி வெளிப்ப‌டுத்துகிறோம் என்ப‌தில்தான் ந‌ம‌து வெற்றி இருக்கிறது. அந்த‌ ஆண்டில் மிக‌ச்சிற‌ந்த‌ க‌விஞ‌னாக‌ப் பெய‌ர் எடுக்க‌, நான் சேமித்து வைத்திருந்த‌ ச‌க்திக‌ள் விரய‌மான‌து இந்த‌ முத‌ல் ச‌ண்டையின் தொட‌ர்ச்சிக‌ளால்தான்.

அப்போது அசைவம் உண்பதை நானும் சரவணனும் ஒரு தியானமாகவே செய்தோம். வாத்து, உடும்பு, காட்டுப் பன்றி, என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. உண்ணும் போது மிருகமாகியிருந்தோம். உணவு ஒருவனை மன ரீதியாக விலங்காகவும் மனிதனாகவும் மாற்றுகிறது. நாங்கள் மிருகமாக இருப்பதை விரும்பினோம். எதில் இடித்தாலும் நோகாது என்ற கற்பனையான பலத்தோடு உடலை சுமந்து திரிந்தோம்.

விளையாட்டு தினங்களில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரிய அனுமதி இல்லை. மிக இரகசியமாகச் சில காதல் ஜோடிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்களே தவிர மற்றவர்கள் திடலிலும் அவரவர் குழு இல்லத்திலும் அமர்ந்திருப்பர். கழிவறையை பயன்படுத்தச் சென்ற ஓர் அந்நிய இன மாணவனை எங்கள் நண்பர்களில் ஒருவன் வம்புக்கு இழுக்க சட்டையில் சில காலணி அச்சோடு எங்களிடம் வந்து முறையிட்டான். நானும் சரவணனும் அமைதியாக இருந்தோம். சரவணனுக்கு எப்போதுமே கிருஸ்தவர்கள் மீது ஒரு வெறுப்பு இருந்தது. சற்று அதிகமாகவே கிருஸ்த இன மாணவர்களைக் கொண்டிருந்த அப்பள்ளியில் மிக ரகசியமாக தமிழ் மாணவர்களை அவர்கள் பறையர்கள் என அழைத்து வந்தனர். மொழியால் நாங்கள் ஒன்றிணைந்திருந்தோமே தவிர எங்களுக்குள் சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டிருந்தன. தமிழர்கள் பலமிக்கவர்களாக இருந்தக் காலக்கட்டதில் ஏற்படும் திமிர், பொறாமை, வஞ்சகம் என எல்லாமும் அக்காலக் கட்டத்தில் பரவியிருந்தது. பலவீனமான காலக்கட்டத்தில்தான் தமிழர்கள் இணைவார்கள் என எனக்கு அப்போதே புரிந்தது.

என் நினைவில் ச‌ரியாக‌ இருந்தால், அந்த‌ ஆண்டில்தான் அப்ப‌ள்ளிக்குப் புதிதாக‌ இரு த‌மிழ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளாக‌ வ‌ந்திருந்த‌ன‌ர். ஒருவ‌ர் குமார‌சாமி ம‌ற்ற‌வ‌ர் பிர‌காஷ். ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ர் ஏதோ ந‌ம்பிக்கையில் அவ‌ர்க‌ளிட‌ம் சென்று முறையிட்ட‌ன‌ர். ஒன்றும் ந‌ட‌ந்த‌பாடில்லை. எங்களில் சில நண்பர்கள் துள்ளி குதித்தனர். ஆறேழு பேர் அடங்கிய நண்பர்கள் சென்று செம்மையாக வாங்கிக்கொண்டும் வந்தனர். எவன் ஒருவன் எதிராளியிடம் போராடுவதற்கு முன் பின்னால் திரும்பி பார்க்கிறானோ அப்போதே அவனுக்குத் தோல்வி உறுதி. அவன் பின்னால் யாரையோ நம்புகிறான். போனவர்கள் அனைவரும் பின்னால் திரும்பி பார்த்தவர்கள்.

அடிவாங்கி வந்தவர்களின் கூச்சல் அதிகமாக இருந்தது. தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என புலம்பினர். அதற்குள் அந்நிய மாணவர்களும் நெருங்கி வரத்தொடங்கியிருந்தனர். தொலைவில் இருந்த பப்பாளி மரத்திலிருந்த பிஞ்சு பப்பாளி பழங்களை வீசின‌ர். எங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளில் சில‌ர் விலகி ஓடின‌ர். சில‌ர் த‌ங்க‌ள் மேல் ப‌ட‌வில்லை என‌ கேலியாக‌ச் சிரித்த‌ன‌ர். ந‌ண்ப‌ர்க‌ளின் ப‌ய‌மும் தீவிர‌மின்மையும் அவ‌ர்க‌ளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்திருக்க‌ வேண்டும். மிக‌ அருகில் வ‌ந்து ஒரு ந‌ண்ப‌னின் நெஞ்சில் கைவைத்துத் த‌ள்ளிய‌வ‌ன் ‘பூ…’ என்றான். (ந‌ன்கு க‌வ‌னித்துப்பார்த்தால் இதைதான் ந‌ம‌து அர‌சாங்க‌மும் செய்கிற‌து.)

என‌க்கு அறைவ‌து பிடிக்கும். குத்துவ‌தைவிட‌ அறைவ‌து எதிராளியின் ரோஷ‌த்தைச் சீண்டிப்பார்க்க‌க் கூடிய‌து. குத்துப் ப‌டுகையில் ஒருவ‌ன் வீழ்ந்துவிடுகிறான். ஓட‌ நினைக்கிறான். நிலை த‌டுமாறுகிறான். அறைத‌ல் அப்ப‌டிய‌ல்ல. அறை வாங்கிய‌வ‌ன் ஓடுவ‌தில்லை. ம‌ய‌க்க‌ம் அடைவ‌தில்லை. அறைந்த‌வ‌னின் முக‌ம் பார்த்து விழிபிதுங்கி நிற்பான். மீண்டும் தாக்க‌த் துணிவு எளிதில் வ‌ராது. த‌ன‌து அச்ச‌த்தையும் கௌர‌வ‌த்தையும் ஒரு சேர‌ காக்க‌ முய‌லும்போது அடுத்த‌ அறைவிடுவ‌து கூனிக்குறுக‌ வைக்கும்.

நான் கொடுத்த‌ முத‌ல் அறை ப‌ய‌ங்க‌ர‌மான‌து. என‌து அறை மூல‌மாக‌ அவ‌னை மேலும் உசுப்பினேன். அவ‌ன் சுதாக‌ரிப்ப‌த‌ற்குள் அடுத்த‌ அறை. தொட‌ர்ந்து ப‌ல‌ அறைக‌ள். அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் யாரும் என்னை நெருங்க‌வில்லை. ச‌ர‌வ‌ண‌ன் திடீரென‌ அவ‌ன் வ‌யிற்றில் மிதிக்க‌, சுருண்டுவிழுந்தான்.

காக்க வேண்டிய‌வ‌ர்க‌ள், க‌ட‌மையைச் செய்ய‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் கைக‌ளை விரிக்கும் போது பாதுகாப்ப‌ற்ற‌ ச‌மூக‌ம் எதிர்ப்ப‌த‌ற்கும் அடிப்ப‌த‌ற்கும் எந்த‌ வ‌கையான‌ த‌ர்க்க‌ங்களையும் நியாய‌ங்க‌ளை க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌தில்லை என‌ உறுதியாக‌ முடிவெடுத்த‌க் கால‌ம் அது.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 22

நான்காம் ப‌டிவ‌ம் வேறெந்த‌ ஆண்டும் த‌ராத‌ ப‌ல‌ புதிய‌ அனுப‌வ‌ங்க‌ளைத் த‌ந்த‌ ஆண்டு. ம‌ன‌தின் ப‌ல‌ க‌த‌வுக‌ளைத் திற‌ந்து விட்ட‌ ஆண்டு. என‌து க‌விதை போக்கினை மாற்றிய‌மைத்த‌ ஆண்டு. வ‌ருட ஆர‌ம்ப‌த்திலேயே போட்டி விளையாட்டுக‌ள் ந‌டைப்பெற‌த் தொட‌ங்கின‌. முத‌லில் சில‌ வார‌ங்க‌ள் ப‌யிற்சிக‌ளும் பின்ன‌ர் தீர்மானித்த‌ ஒரு நாளில் போட்டி விளையாட்டும் ந‌டைப்பெறும். இது போன்ற‌ கால‌ங்க‌ளில் ‘உருப்ப‌டாத‌வ‌ர்க‌ள்’ என‌ முத்திரைக்குத்த‌ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ளை (ஆண்க‌ளுக்கு ம‌ட்டுமே இந்த‌ முத்திரை தேவை. பெண்க‌ளில் பெரும்ப‌லோர் திட‌லில் க‌ள‌மிற‌ங்கியிருப்ப‌ர்) ஆசிரிய‌ர்களும் த‌லைமை மாண‌வ‌ர்க‌ளும் தேடி அலைவ‌ர். திட‌லை போட்டி விளையாட்டுக்குத் த‌யார் ப‌டுத்த‌வும் ‘ரூமா சுக்கான்’ என‌ப்ப‌டும் அவ‌ர‌வ‌ர் குழுவின் இல்ல‌த்தை அல‌ங்கார‌ப்ப‌டுத்த‌வும் இந்த‌ உருப்ப‌டாத‌வ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுவார்க‌ள். அந்த‌ ஆண்டு என‌க்கு என் குழுவின் இல்ல‌த்தை அல‌ங்க‌ரிக்கும் பொறுப்பு.

வெட்டிக்கொடுக்க‌ப்ப‌ட்ட‌ சிறிய‌ ரிப்ப‌ன்க‌ளை வ‌ரிசையாக‌ ஒட்ட‌வேண்டும். ஒட்ட‌ வேண்டிய‌ இட‌ம் குழு இல்ல‌த்தின் மேல் ப‌குதியான‌தால் ஒரு மேசை மேல் ஏறி நின்று என் ப‌ணியில் க‌ண்ணாய் இருந்தேன். திடீரென‌ ‘செல‌ப‌ன் டேப்’ (Sellotape) தீர்ந்துவிட‌ எரிச்ச‌லில் ‘செல‌ப‌ன் டேப்…செல‌ப‌ன் டேப்’ என‌க் க‌த்தினேன். அடுத்த‌ நிமிட‌ம் ஒரு சிவ‌ந்த‌ சிறிய‌ க‌ர‌ம் த‌ன‌து ஐந்து விர‌ல்க‌ளிலும் க‌ச்சிதமான‌ அள‌வில் செல‌ப‌ன் டேப்பை ஒட்டிய‌ப்ப‌டி என்னை நோக்கி நீட்டிய‌து. வேலை ப‌ர‌ப‌ர‌ப்பில் அந்த‌ விர‌ல்க‌ளிலிருந்து ஒவ்வொரு செல‌ப‌னாக‌ எடுத்து இல்ல‌த்தை அல‌ங்க‌ரித்து முடிக்க‌ மும்முற‌மாய் இருந்தேன். இடையில் வேறு ப‌குதிக்கு ஒட்டும் போது மேசையை ந‌க‌ர்த்த‌ வேண்டியிருந்த‌து. மெதுவாக‌ கீழே குதித்த‌போது அவ‌ள் எஞ்சிய‌ செல‌ப‌ன்க‌ளை விர‌லில் சும‌ந்த‌ப‌டி நின்று கொண்டிருந்தாள்.

என்னால் நிச்ச‌ய‌மாக‌ச் சொல்ல‌ முடியும். அவ‌ள் அழ‌கி.

க‌ட‌ந்த‌ ஆண்டு ஒரு பால‌ர் ப‌ள்ளியின் ப‌ரிச‌ளிப்பு நிக‌ழ்வில் ந‌ட‌ன‌ம் ஆடிய‌ அவ‌ளை நிழ‌ல்ப‌ட‌ம் எடுத்த‌து நினைவுக்கு வ‌ந்த‌து. ‘ப்ள‌ஷ்’ திற‌க்காம‌ல் நிழ‌ல்ப‌ட‌ம் எடுத்த‌தால் அவ‌ள் ஒரு நிழ‌லாக‌ ம‌ட்டுமே அந்த‌ப் ப‌ட‌த்தில் இருந்தாள். ஆனால் அவ‌ள் நான் ப‌யிலும் ப‌ள்ளியில் ப‌யில்வ‌து அந்த‌ நிமிட‌ம் வ‌ரை நான் அறியாத‌து. நேராக‌ வ‌ந்து வ‌குப்ப‌றையில் புகுந்த‌தோடு சாப்பிடுவ‌த‌ற்குக்கூட‌ கெண்டீன் போகாத‌ ர‌க‌ம் அவ‌ள். ‘உங்க‌ள நான் பாத்திருக்கேன். டான்ஸ் ஆடுனீங்க‌. ப‌ட‌ம் புடிச்சேன்’ என‌ உள‌றினேன்.

அவ‌ள் என்னை ஒரு த‌ர‌ம் விய‌ந்து பார்த்தாள். ‘உண்மையாவா…எங்க‌ வீட்டுல‌ என்னை யாரும் ப‌ட‌ம் பிடிக்க‌ல‌. அந்த‌ப் ப‌ட‌ம் கிடைக்குமா? பாத்துட்டு கொடுத்துடுறேன்,’ என்றாள். என‌க்கு வேறு வ‌ழி தெரிய‌வில்லை. ‘ஓ! ரொம்போ ந‌ல்லா ப‌ட‌ம் விழுந்திருக்கு,’ என்றேன். அவ‌ள் ஆவ‌ல் இன்னும் அதிக‌மான‌து. ‘அப்ப‌ நாளைக்கே என்றாள்’. ‘ச‌ரி’ என்றேன்.

அத‌ற்கு மேல் அவ‌ள் முன் நிற்க‌ முடிய‌வில்லை. உட‌ல் மிக‌வும் ப‌ல‌வீன‌மாகிவிட்ட‌தாக‌வும் க‌ன‌மாகிப்போன‌ ம‌ன‌ம் உட‌லை பூமிக்குள் அமிழ்த்துவ‌தாக‌வும் உண‌ர்ந்தேன். வீட்டிற்குச் சென்ற‌தும் முத‌ல் வேலையாக‌ப் ப‌ட‌த்தைத் தேடி எடுத்தேன். ஒரு க‌றுத்த‌ நிழ‌ல் ம‌ட்டும் அபின‌ய‌த்தோடு இருந்த‌து. அன்று இர‌வு முழுவ‌தும் அதையே பார்த்துக்கொண்டிருக்க‌ மெல்ல‌ க‌ண்க‌ள், உத‌டு, மூக்கு என‌த் தெரிந்த‌து. என் க‌ண்க‌ளுக்கு ம‌ட்டும்.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 21

பகை எங்கிருந்து பிறக்கிறது என்பது எவ்வளவு ஆச்சரியமோ அதைவிட ஆச்சரியமானது பகையை மறப்பது. பகையை மறக்க அமைதியும் காத்திருப்பும் மட்டுமே தேவைப்படுகிறது. சில மாதங்களின் அமைதிக்குப் பிறகு நானும் சரவணனும் கை குலுக்கிக்கொண்டோம். கரங்களின் பிடி நட்பிற்கு ஆதரவாய் இருப்பதாக என்னைப்போல் அவனுக்கும் தோன்றியிருக்க வேண்டும். மெதுவாகப் புன்னகைத்தான். வயிற்றில் குத்தினான். நாங்கள் இணைந்ததைக் கண்டு கவலை அடைந்தவன் ‘அசோ’வாகத்தான் இருக்க முடியும்.

‘மகேந்திரன்’ என்பதுதான் அசோவின் உண்மையான பெயர். அவனைப் பார்த்தவுடன் பழைய நடிகர் அசோகன் போல இருந்ததால் ‘அசோ’ என செல்லமாகப் பெயரிட்டோம். அசோவை நாங்கள் முக்கியமான ஒரு செயலுக்குப் பயன்படுத்திக்கொள்வோம். அப்போது ரெஸ்லிங் உலகில் பரபரப்பாக இருந்த ரோக், ஆஸ்டின், திரிப்பல் எச் போன்றோரின் சண்டை நுணுக்கங்களை அவதாணித்து அதை பயிற்சி செய்துப்பார்க்க அசோவைத்தான் அழைப்போம். அசோ அழுதபடி வருவான். வரவில்லையென்றால் மறுநாள் பள்ளியில் அடிவிழும் என அவனுக்குத் தெரியும். அவனது தலையை கை இடுக்கு கால் இடுக்கு என பல வகையாக உள்ளே விட்டு நானும் சரவணனும் ஒரு ரெஸ்லிங் வீரனாக மாறியிருப்போம்.

எங்களின் கடைசி பயிற்சி ரிக்கிஷியினுடையது. ரிக்கிஷி வெற்றி பெரும் சமயம் தனது பிட்டத்தை எதிராளியின் முகத்தில் வைத்து தேய்ப்பான். தான் வாங்கிய எல்லா அடிகளை விடவும் ரிக்கிஷியின் அந்தச் செயல்தான் எதிராளிக்குக் சோர்வினைக் கொடுப்பவை. சரவணனும் நானும் மாறி மாறி ரிக்கிஷியாகி அசோவைக் கதர வைப்போம். இன்று ரெஸ்லிங் ஒரு அதியற்புத நாடகம் என உணர முடிந்தாலும் அதன் நாடகத்தன்மையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது.

முதல் வாரம் முழுவதும் நானும் சரவணனும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியப் படியும் ஒருவரை ஒருவர் நிராகரித்த விதத்தையும் மாறி மாறி பேசிக்கொண்டோம். அது மனதுக்கு பெரும் தெம்பினைக் கொடுத்தது. ‘வேண்டுமென்றே செய்கிறான்’ என இருவரும் மனதிற்குள் குற்றம் சாட்டிய சம்பவங்களெல்லாம் இயல்பாகவும் எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் நடந்தவை என தெரியும்போது மனம் செய்யும் சூட்சுமமான வித்தை புரியத்தொடங்கியது.

ஒன்று உடன் இல்லாதபோதும் அல்லது உணர முடியாதப் போதும், அந்த இல்லாத ஒன்று உருவாக்கும் கற்பனைகள் பாதகமானவை.

கடவுள்போல.

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 20

வ‌ன்முறைக‌ளும் திமிரும் நிர‌ம்பிய‌ ம‌ன‌தோடுதான் மீண்டும் நான்காம் ப‌டிவ‌த்தில் கால‌டி எடுத்து வைக்க‌ முடிந்த‌து. மீண்டும் ந‌ண்ப‌ர்க‌ள் கூட்ட‌ம். ஆசிரிய‌ர்க‌ள் நான்காம் ப‌டிவ‌த்தை ‘ஹ‌னிமூன் இய‌ர்’ என்ற‌ன‌ர். அர‌சாங்க‌த் தேர்வு இல்லாத‌ ப‌டிவ‌ம் அது.மூன்றாம் ப‌டிவ‌ சோத‌னையில் த‌மிழில் ம‌ட்டும் ‘ஏ’ எடுத்திருந்தேன். த‌மிழ் ஆசிரியை வாசுகிக்கு என் மீது ந‌ல்ல‌ ம‌திப்பு இருந்த‌து. (இவ‌ர் நான்காம் ஐந்தாம் ப‌டிவ‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் த‌மிழ்ப்பாட‌ம் எடுப்ப‌வ‌ர்)என‌து தீவிர‌ பிர‌ச்சார‌த்தில் அவ‌ர் என்னை எழுத்தாள‌ன் என‌ அடையாள‌ம் க‌ண்டு கொண்டிருந்தார். அதே போல‌ புதிதாக‌ த‌லைமையாசிரிய‌ரும் மாற்ற‌ம் க‌ண்டிருந்தார்.

த‌மிழ் த‌லைமையாசிரிய‌ர். அவ‌ர் பெய‌ரும் வாசுகிதான். சுங்கை ப‌ட்டாணிகார‌ர் என‌ விசாரித்து அறிந்து கொண்டோம். குள்ள‌மாக இருந்தார். அவ‌ர‌து கைக‌ள் வ‌ழக்க‌மான‌ நீள‌த்தில் இல்லாம‌ல் இடுப்போடு முடிந்து போயிருந்த‌து. முற்றிலும் வெள்ளை ந‌ரை. ஒரு த‌மிழ‌ர், இடைநிலைப் ப‌ள்ளிக்குத் த‌லைமையாசிரிய‌ராக‌ வ‌ந்த‌தும் எங்க‌ளுக்குப் பெருமை பிடிப‌ட‌வில்லை. இனி ப‌ய‌ப்ப‌ட‌ ஒன்றுமில்லை என‌ நினைத்தோம். அடுத்த‌ இன‌த்த‌வ‌ர்க‌ளால் தொந்த‌ர‌வு ஏற்ப‌டும்போது ஒரு அம்மாவிட‌ம் முறையிடுவ‌து போல‌ முறையிட்டால் பிர‌ச்ச‌னை தீர்ந்த‌து என‌ ந‌ம்பினோம்.

புதிய‌ த‌லைமையாசிரியைப் பேசினார். அவ‌ர் உரையின் முடிவில் எல்லாப் ப‌ள்ளியிலும் த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள்தான் பிர‌ச்ச‌னைக்குரிய‌வ‌ர்க‌ள் என்றும் இந்த‌ப்ப‌ள்ளியிலும் அந்த‌ நிலை இருந்தால் முற்றிலும் அதை துடைத்தொழிக்க‌ப் போவ‌தாக‌வும் உறுமினார்.

நாங்க‌ள் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டோம். எங்க‌ளுக்கென்று யாரும் இல்லாத‌து போல‌ உண‌ர்ந்தோம். சுற்றிலும் எங்க‌ளை அக‌ற்ற‌ வேண்டிய‌ குப்பைக‌ளாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கும் ப‌ல்வேறு ச‌மூக‌த்தின‌ர் ம‌த்தியில் வ‌ன்முறையோடுதான் வாழ‌வேண்டும் என‌ அறிந்து கொண்டோம். ஒரு ச‌மூக‌ம் தன‌க்கான‌ பாதுகாப்பை அதை வ‌ழ‌ங்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து பெற‌ முடியாத‌போது அதுவே த‌ன‌க்கான‌ பாதுகாப்பு வேலிக‌ளை அமைத்துக் கொள்ளும் ஒரு ‘தீ’ எங்க‌ள் அனைவ‌ருக்கும் ப‌ற்றிய‌து. அந்த‌ உண‌ர்வை இப்போது வார்த்தைக‌ளால் சொல்ல‌முடிகிற‌து என்றாலும் அப்போது எங்க‌ளிட‌ம் எந்த‌ வார்த்தைக‌ளும் இல்லை. அடுத்த‌ இன‌த்த‌வ‌னிட‌ம் ப‌ய‌ப்ப‌டாம‌ல் வாழ‌ வேண்டும் என்ற‌ உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 19

அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்திற்குப் பிற‌கு மாமா பீர் பாட்டில்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைத்துப் பொறுப்பிலும் என்னைத் த‌விர்த்தார். அதை அவ‌ர் த‌ண்ட‌னைக்கொடுப்ப‌தாக‌க் க‌ருதியிருக்க‌லாம். என‌க்கோ அது பெரும் சுத‌ந்திர‌ம். அத‌ன் பின்ன‌ர் காப்பி, டீ க‌லக்குவ‌து ‘மீ கோரேங்’ பிர‌ட்டுவ‌து என‌ என‌து க‌வ‌ன‌த்தைத் திருப்பினேன். ‘மீ கோரிங்’கில் ருசி கூட்டுவ‌த‌ற்கான‌ இர‌க‌சிய‌ங்க‌ளும், தேநீர் க‌ல‌க்க‌ வேண்டிய‌ நுட்ப‌மும் ஓர‌ள‌வு புரிய‌த்தொட‌ங்கிய‌து. ச‌மைத்த‌ல் என்ப‌து மிக‌ உன்ன‌த‌ப் ப‌ணியாக‌ என‌க்குத் தெரிந்த‌து. நான் செய்யும் ஒரு ச‌மைய‌லை யாரோ ஒருவ‌ன் ந‌ம்பி சாப்பிட்டுவிட்டு அத‌ற்கு ப‌ண‌மும் த‌ந்துவிட்டுப்போகும் போது ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌ம் எல்லாரும் போல‌ என‌க்கும் சில‌ நாட்க‌ள் ம‌ல‌ர்ந்து பின் ம‌றைந்து போன‌து.

மாமா என்னிட‌ம் முன்பு போல் பேசுவ‌தை த‌விர்த்தார். அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தில் என்னைக் காப்பாற்ற‌ மாமா அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு அவ‌ர்களை அடித்து துரத்திவிட்டாலும் க‌டையைப் பொறுத்த‌வ‌ரையில் அது அவ‌ருக்கு ந‌ஷ்ட‌க்க‌ண‌க்கு. அவ‌ர்க‌ள் க‌ட‌ன் வைக்காத‌ ப‌ல‌ மாத‌ வாடிக்கையாள‌ர்க‌ள். மாமாவுக்கும் என‌க்கும் மெல்லிய‌ இடைவெளி விழுந்த‌து. அந்த‌க்க‌டையில் தேவையில்லாத‌ ஒருவ‌னாக‌ நான் வ‌ல‌ம் வ‌ர‌த் தொட‌ங்கினேன். தேவையில்லாத‌வ‌னாக‌ ஓர் இடத்தில் இருக்கும் கொடுமை பிந்தைய‌ நாட்க‌ளில் என்னை வாட்டிய‌து. க‌டையில் நான் விரும்பும் வேலைக‌ளைச் செய்ய‌த் தொட‌ங்கினேன். அதில் முக்கிய‌மான‌து தேனீர் க‌ல‌க்குவ‌து.

தேனீர் க‌ல‌க்குவ‌து அதிலும் ‘தே தாரேக்’ க‌ல‌க்குவ‌து என‌து முக்கிய‌ ப‌ணியாக‌ மாறிய‌ப்பின்தான் அந்த‌ ஆயுத‌த்தை க‌ண்டெடுத்தேன். தேனீர் க‌ல‌க்குவ‌து என் ஆயுத‌மான‌து. தூர‌த்தில் நின்று யாருக்கும் தெரியாம‌ல் க‌ல் எரியும் ஒரு கோழையின் ஆயுத‌ம். த‌னிய‌னாக நிற்கையில் மிர‌ட்ட‌ப்ப‌டும் போது என‌க்குக் கிடைத்த‌ ஒரே ஒரு ஆயுத‌ம்.

உண‌வ‌க‌த்தில் வ‌ந்து ஒழுங்காக‌ சாப்பிட்டுவிட்டு போன‌வ‌ர்க‌ள் புனித‌மாக‌ வெளியேறினார்க‌ள். தொட‌ர்ந்து அதிக‌ப் பிர‌ச‌ங்கித்த‌ன‌மாக‌வும் அத‌ட்ட‌லான‌ பேச்சு பேசுப‌வ‌ர்க‌ளுக்கும் தே தூள், சீனி, டின் பால் இவ‌ற்றோடு சுண்டுவிர‌ல் ந‌க‌த்த‌ள‌வு எச்சிலையும் சேர்த்து க‌ல‌க்கிக் கொடுத்தேன். (மித‌க்கும் தே தாரேக் நுரையுட‌ன் என் எச்சிலைக் குடித்து வ‌ள‌ர்ந்த‌ ம‌னித‌ர்க‌ள் இன்னும் லுனாஸில் உயிரோடுதான் ந‌ட‌மாடிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்). அது என‌க்கு பெரும் ம‌ன‌ அமைதியைக் கொடுத்த‌து. ‘டேய்…’ என‌ மிர‌ட்ட‌லாக‌ அழைத்த‌வ‌னின் நாவில் என் எச்சில் ஏறி மிதித்து ப‌லி தீர்ப்ப‌து ஒவ்வொரு இர‌வும் உற‌க்க‌த்தைக் கொடுத்த‌து.

என் கையில் கிடைப்ப‌தெல்லாம் ஆயுத‌மாகும் வித்தை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொருவிதமான‌ ஆயுத‌ம். அதில் ஆச்ச‌ரிய‌ம், நான் ஏந்தி நிர்ப்ப‌து ஆயுத‌ம் என்ப‌தை யாரும் அறிய‌வில்லை. இப்போதும்.

‍-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 18

பீர் பாட்டில்க‌ளின் எண்ணிக்கைக் குறைகிற‌து என‌த் தெரிந்த‌வுட‌ன் மாமா உஷாராகியிருந்தார்.

(மாமா அம்மாவின் த‌ம்பி. அதற்கு முன் ச‌பாவில் போலிஸ் அதிகாரியாக‌ வேலை செய்த‌வ‌ர். த‌மிழ‌ர்க‌ளைக் கேவ‌லாமாக‌ பேசினார் என‌ தன‌க்கு மேல் உள்ள‌ அதிகாரியை துவ‌ச‌ம் செய்துவிட்டு வேலையை ராஜினாமா செய்திருந்தார். அம்மா என்னையும் மாமாவையும் அடிக்க‌டி ஒப்பிட்டு பேசுவ‌துண்டு. க‌ட‌ந்த‌ ஆண்டு மாமா இனிப்பு நீர் முற்றி இற‌ந்தார்) அவ‌ருக்கு உண‌வ‌க‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளின் மீது ச‌ந்தேக‌ம் எழுந்த‌து. அத்த‌னை நாட்க‌ளும் அந்த‌ உண‌வ‌க‌த்தில் பீர் பாட்டில்க‌ளுக்குப் பொறுப்பாய் இருந்த‌ ஒரு ப‌ணியாள‌ரிட‌மிருந்து பொறுப்பு ப‌றிக்க‌ப்ப‌ட்டு என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ங்குக‌ளைக் க‌ழுவிக்கொண்டே பீர் பாட்டில்க‌ளை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்ள‌ வேண்டும். க‌ட‌ந்து செல்கிற‌ க‌ண‌ நேர‌த்தில் ஒன்றிர‌ண்டு பீர் பாட்டில்க‌ள் ஊழிய‌ர்க‌ளால் க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌ அபாய‌ம் இருந்த‌து. நான் பீர் பாட்டில்க‌ளின் காவ‌ல‌ன் ஆனேன்.

சிறிது நாட்க‌ளில் பீர் குடிக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு பாட்டில்க‌ள் எடுத்துத் த‌ருவ‌து முத‌ல் அதை திற‌ந்து ஊற்றுவ‌து வ‌ரையிலான‌ வேலைக‌ள் என் த‌லையில் விடிந்த‌ன‌. அப்போது என‌க்கு பீர் பாட்டில்களின் பெய‌ர்க‌ள் கூட‌ அறிமுக‌ம் இல்லை. இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் வ‌ருப‌வ‌ர்க‌ள் அவைக‌ளுக்கு புனைப்பெய‌ரெல்லாம் வேறு வைத்திருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் பீர் கேட்கும் வித‌மும் என்னிட‌ம் பேசும் வித‌மும் எரிச்ச‌லை மூட்டும். அப்போது நான் முன் புற‌ம் உள்ள‌ முடியை ம‌ட்டும் முக‌ம் ம‌றைக்கும் அள‌வு நீள‌மாக‌வும் பின் ம‌ண்டையை ‘பொக்ஸ் க‌ட்டிங்’ எனும் ஸ்டைலிலும் வெட்டி என் அழ‌கை பேணி வ‌ந்தேன். குனியும் போதும் நிமிரும் போதும் முன்புற‌ முடி பொத்தென‌ ச‌ரிந்து காற்றில் ப‌ற‌ந்து அழ‌கு காட்டும். அதில் கை வைக்காம‌ல் முக‌த்தை ஒரு சிலுப்பு சிலுப்பினால் மீண்டும் ப‌த்திர‌மாக‌ ம‌ண்டைக்கு மேல் சென்று அம‌ர்ந்து கொள்ளும்.

இப்ப‌டி முடி ச‌ரியும் போதும் ப‌ற‌க்கும் போதும் வ‌ழ‌க்க‌மாக‌ உண‌வ‌க‌த்திற்கு பீர் குடிக்க‌ வ‌ரும் ஒரு கூட்ட‌ம் கூச்ச‌லிடும். அடுத்த‌ முறை வ‌ரும்போது இது இருக்கக்கூடாது என‌ முடியைக் காட்டி க‌ட்ட‌ளையிடும். நான் அவ‌ர்க‌ளிட‌ம் எதிர்த்து ஒன்றும் பேசிய‌தில்லை. அது அவ‌ர்க‌ளின் ப‌குதி. மேலும் ச‌ராச‌ரியான‌ இர‌ண்டு பேரை ச‌மாளிக்க‌வே நாய் பாடு ப‌ட‌ வேண்டும்; அவ‌ர்க‌ள் த‌டிய‌ர்க‌ள்.நிச்ச‌ய‌ம் என்னைத் துவைத்து காய‌ப் போட்டுவிடுவார்க‌ள். தின‌ம் இர‌வு ஏழு ம‌ணியென்ப‌து என‌க்கு ந‌ர‌க‌மாக‌வே இருந்த‌து. எப்போது ம‌ணி ப‌தினொன்று ஆகிற‌தென‌ பார்த்துக்கொண்டே இருப்பேன். ப‌தினொன்றான‌தும் என‌க்குத் தூக்க‌ம் வ‌ந்துவிடும். போட்ட‌தை போட்டப‌டி போட்டுவிட்டு திரும்பிபார்க்காம‌ல் க‌டையின் ப‌ர‌ப‌ர‌ப்பினூடே மேலே ஓடிவிடுவேன். அங்கு என‌க்காக‌ வைர‌முத்துவும் மேத்தாவும் காத்திருப்பார்க‌ள்.

அன்று பிர‌ச்ச‌னை வித்தியாச‌மான‌தாக‌ தொட‌ங்கிய‌து. என்னைக் கிண்ட‌ல் செய்யும் கூட்ட‌த்தில் ஒருவ‌ன் ‘ஐஸ்ல‌ வ‌ச்ச‌ கிளாஸ‌ எடுத்துவா’ என்றான். நான் ஒரு கிளாஸில் ஐஸ் க‌ட்டிக‌ளைப்போட்டு கொண்டு வ‌ந்து வைத்தேன். கேட்ட‌வ‌ன் எகிறினான். ‘ஏய் ஐஸ் கிளாஸ்டா’ என்றான். என‌க்கு அவ‌ன் கேட்ட‌து புரியாத‌தால் விழித்தேன். ச‌ட்டென‌ த‌ண்ணீர் க‌ல‌க்குப‌வ‌ர் குளிர்சாத‌ன‌ப் பெட்டியில் கிட‌ந்து சில்லிட்டிருந்த‌ கிளாஸை எடுத்து வ‌ந்து அவ‌ர்க‌ள் அருகில் வைத்து என்னை அந்த‌ இட‌த்திலிருந்து ந‌க‌ர‌ சொன்னார். அதோடு அவ‌ர்கள் கேலி ஆர‌ம்ப‌மான‌து. இப்போது அவ‌ர்க‌ள் சொன்ன‌ வார்த்தையெல்லாம் நினைவில் இல்லாவிட்டாலும் அவ‌ர்க‌ள் மேல் கோப‌ப்ப‌ட‌ அவ‌ர்க‌ளின் வார்த்தைக‌ளுக்கு எந்த‌ அவ‌சிய‌மும் இருக்க‌வில்லை. சாதார‌ண‌ அவ‌ர்க‌ளின் சிரிப்பும் கோப‌த்தை உந்த‌க்கூடிய‌து.

ஒரு முறை ர‌ஜினிகாந்தை நினைத்துக்கொண்டேன். ‘என்ன‌டா’ என்றேன். அதில் ஒருவ‌ன் மெதுவாக‌ எழுந்து ‘ஏய் என்னா பெர‌ச்ச‌னையா?’ என்றான். என் முக‌த்துக்கு நேராக‌ அவ‌ன் மார்பு சில‌ வெட்டுகாய‌ங்க‌ளோடு நின்ற‌து. உட‌னே ர‌ஜினிகாந்த் காணாம‌ல் போனார். அத‌ன் பின் எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ர‌ஜினிகாந்த் வ‌ர‌வே இல்லை.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 17

எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் ம‌து அருந்துவார் என்ப‌து நான் அதுவ‌ரை க‌ற்ப‌னை கூட‌ செய்து பார்க்க‌ முடியாத‌து. அதிலும் ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் ஆதி.கும‌ண‌ன் ப‌ட்ட‌ப்ப‌க‌லில் ம‌து அருந்துவ‌து பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த‌து. எழுத்தாள‌ன் என்ப‌வ‌ன் ஒரு போத‌க‌ன். அவன் ச‌மூக‌த்திற்காக‌ எதையாவ‌து போதித்துக்கொண்டே இருக்க‌ வேண்டும் என‌ ந‌ம்பினேன். நான் வாசிக்கும் புத்த‌க‌ங்க‌ளில் அப்போது மு.வ‌ர‌த‌ராச‌னுக்கும் முக்கிய‌ இட‌ம் இருந்த‌து. வார‌ம் ஓர் அறிவுரையைத் தேர்ந்தெடுத்து அதை க‌விதையாக்கி பெரும் ச‌மூக‌ப் ப‌ணியிலும் அப்போதுதான் ஈடுப‌ட்டிருந்தேன். ம‌து என‌க்கு இத‌ற்கு முன் கொடுத்த‌க் காட்சிக‌ள் இள‌ஞ்செல்வ‌னின் பால் இருந்த‌ ம‌ரியாதையைக் குறைத்த‌து. நான் ம‌ன‌த‌ள‌வில் இள‌ஞ்செல்வ‌னிட‌மிருந்து வில‌கினேன். அதோடு அவ‌ரைச் ச‌ந்திப்ப‌தையும் குறைத்துக் கொண்டேன்.

இறுதியாண்டு சோத‌னை முடிந்து விடுமுறை தொட‌ங்கிய‌தும் அம்மாவுக்கு ப‌ய‌ம் வ‌ந்திருக்க‌க்கூடும். ஒன்ற‌ரை மாத‌மும் நான் ச‌ர‌வ‌ண‌னோடு செய்ய‌ப்போகும் சாக‌ச‌ங்க‌ள் அவ‌ரின் க‌ற்ப‌னையில் எட்டியிருக்க‌ வேண்டும். என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கும் ஏற்ப‌ட்டிருக்கும் இடைவெளி அவ‌ர் அறியாத‌து. ப‌ள்ளி விடுமுறையில் ‘தாமான் க‌ங்கோங்கில்’ இருந்த‌ என் மாமாவின் உண‌வ‌க‌த்தில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கு இடைவெளி மேலும் விரிவ‌டைய‌ அதுவும் ஒரு கார‌ண‌மாக‌ இருந்த‌து.

முத‌லில் ம‌ங்குக‌ளைக் க‌ழுவுவ‌து மேசை துடைப்ப‌து போன்ற‌ அடிப்ப‌டையான‌ வேலைக‌ள் என‌க்குக் க‌ற்றுக்கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஒரு சில‌ நாட்க‌ளிலேயே நான் அவ‌ற்றில் தேறிவிட்டேன். குவிந்து கிட‌க்கும் எச்சில் ப‌டிந்த‌ ம‌ங்குக‌ள் முத‌லில் அலுப்பை மூட்டினாலும் பின்னாலில் ம‌ங்குக‌ளைக் க‌ழுவுவ‌தில் உள்ள‌ லாவ‌க‌மும் விர‌ல்களில் அவ‌ற்றை சுற்றி சுழ‌ற்றி அடுக்கி வைக்கும் பாவ‌னையும் ஒரு விளையாட்டு போல் ஆன‌து. க‌டித்து உரிஞ்ச‌ப்ப‌ட்ட‌ எலும்புத்துண்டுக‌ள் ம‌ட்டும் ப‌ல்வேறு வ‌கையிலான‌, அள‌விலான‌ ப‌ற்க‌ளை நினைவுறுத்துவ‌தாய் இருந்தன‌.

க‌டையிலிருந்து வீடு திரும்ப‌ என‌க்கு அனும‌தி இல்லை. க‌டையின் மேல் த‌ள‌த்தில் இருந்த‌ அறையில் த‌மிழ்நாட்டுத் தொழிலாள‌ர்க‌ளோடு த‌ங்கிக் கொண்டேன். ப‌க‌லில் க‌டுமையாக‌ உழைக்கும் அவ‌ர்க‌ளுக்கு இர‌வில் ஒரே ஆறுத‌ல் பீர் பாட்டில்க‌ள்தான். ஏற‌க்குறைய‌ நான்கு த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர்க‌ள் போதையில் என்னைப்புடைச் சூழ‌ சுவார‌சிய‌மாக‌ப் பேசிக்கொண்டிருப்பார்க‌ள். நான் போர்வையை த‌லை வ‌ரை இழுத்து மூடி தூங்குவ‌து போல் பாசாங்கு செய்து கொண்டிருப்பேன். நான் அங்குத் த‌ங்கியிருந்த‌ நாட்க‌ள் முழுவ‌தும் அவ‌ர்க‌ள் என்னை பீர் குடிக்க‌ வைக்கும் க‌டும் முய‌ற்சியில் இற‌ங்கின‌ர். மௌன‌ங்க‌ளாலும் தூக்க‌ங்க‌ளாலும் அவ‌ர்க‌ளை நிராக‌ரித்துக் கொண்டிருந்தேன். ந‌ண்ப‌ர்க‌ளால் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து கொடுமை. ப‌திலுக்குத் திட்ட‌ முடியாது. முற்றிலும் ஏற்க‌வும் முடியாது. திட்டாம‌ல் நிராக‌ரிக்கும் ஒரு மெல்லிய‌ கோட்டில் ப‌ய‌ணிக்க‌ வேண்டும்.

அதைவிட‌ பெரிய‌ கொடுமை சில‌ தின‌ங்க‌ளுக்குப் பின் என‌க்கு நிக‌ழ்ந்த‌து.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 16

உடும்பு, அலுங்கு, ப‌ற‌வைக‌ள் என‌ கொய்தியோ ம‌ணிய‌ம் என‌க்கு ஏற்ப‌டுத்திய‌ உண‌வு ப‌ழ‌க்க‌ங்க‌ள் ஏராள‌ம்.அவ‌ர‌து அசாத்திய‌ தைரிய‌ம் அவ‌ரின்பால் ஒரு ஈடுபாட்டை வ‌ர‌ வ‌ழைத்திருந்தது.ப‌ல‌வித‌மான‌ வில‌ங்குக‌ளைத் தின்ப‌து என்னையே நான் ஒரு மிருக‌மாக்கிக் கொள்ளும் ந‌ம்பிக்கையை ஏற்ப‌டுத்திய‌து. காடுக‌ளில் அலைந்து திரிய‌ அந்த‌ ந‌ம்பிக்கை முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌து.

க‌ம்ப‌த்தில் ப‌ல‌ருக்கும் கொய்தியோ ம‌ணிய‌த்தின் போக்கு பிடிக்காவிட்டாலும், பாம்புக‌ளின் புள‌க்க‌ம் அதிக‌ம் உள்ள‌ எங்க‌ள் க‌ம்ப‌த்தில் அவ‌ருக்கு முக்கிய‌த்துவ‌ம் இருந்த‌து. ப‌தினான்கு வ‌ய‌திலேயே பாம்பைக் கொள்ளும் திற‌னை நான் பெற்றிருந்தேன். செங்க‌ல் குழியில் ப‌துங்கி கிட‌க்கும் குட்டிப்பாம்பின் மேல் கொதிநீர் ஊற்றி கொள்வ‌து முத‌ல் வீட்டில் ப‌ல‌கை இடுக்கில் ப‌துங்கி கிட‌க்கும் பாம்பின் த‌லையை ந‌சுங்குவ‌து வ‌ரை பாம்புக‌ளைக் க‌ண்ட‌தும் கொன்ற‌தும் அதிக‌ம். ஆனால் காண்ப‌த‌ற்கு அறிதான‌ ஏற‌க்குறைய‌ 15 அடிக‌ளுக்கு மேல் நீள‌ம் உள்ள‌ ம‌லாய் நாக‌த்தை கொய்தியோ ம‌ணிய‌ம் ஒரு முறை த‌னியாளாக‌ அடித்துக் கொன்று அத‌ன் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்த‌ காட்சி அவ‌ர் துணிவிற்கு ஓர் எடுத்துக்காட்டு.

க‌ம்ப‌த்தில் ஒரு வீர‌னாக‌ விஷ‌ ஜ‌ந்துக‌ளுக்குச் ச‌வாலாக‌ இருந்த‌ கொய்தியோ ம‌ணிய‌ம் ஒரு நாள் த‌ற்கொலை செய்து கொண்டார்.

அன்று ம‌து அருந்திவிட்டு அடிக்க‌ வ‌ந்த‌வ‌ரை ஓல‌ம்மா சொன்ன ஒரு வார்த்தை அவ‌ரைத் த‌ற்கொலைக்குத் தூண்டியிருந்த‌து.வ‌ழ‌க்க‌மாக‌க் குடிக்கும் பீருட‌ன் புற்க‌ளுக்கு அடிக்கும் ம‌ருந்தையும் க‌ல‌ந்து குடித்திருந்தார். ஓல‌ம்மா ஒன்றும் பேசாம‌ல் அழுத‌வாரே அவ‌ர் அருகில் இருந்தார். அம்மாவும் அப்பாவும் அவ‌ரை ம‌ருத்துவ‌ ம‌னைக்கு அனுப்ப‌ ஏற்பாடுக‌ள் செய்த‌ன‌ர். நான் கொய்தியோ ம‌ணிய‌த்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். வ‌லியில் துடித்த‌ப்ப‌டி கொய்தியோ ம‌ணிய‌ம் அம்மாவிட‌ம் முண‌ங்கினார்,” என்னை அந்த‌க் கேள்வி கேட்டுடிச்சி…”. ‘எந்த‌க் கேள்வி’ என‌ அம்மாவும் கேட்க‌வில்லை. என‌க்குத் தெரிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருந்த‌து. அந்த‌ வ‌ய‌தில் தெரிந்த‌ சொற்ப‌மான‌ கொச்சை வார்த்தைக‌ளை வ‌ரிசை ப‌டுத்தி எதுவாக‌ இருக்கும் என‌ யூகித்தேன். க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை.

ம‌ருத்துவ‌ ம‌னையிலிருந்து வீடு திரும்பிய‌ ம‌றுநாள் கொய்தியோ ம‌ணிய‌ம் மீண்டும் ம‌துவில் புல் ம‌ருந்தை க‌ல‌ந்து குடித்து இற‌ந்திருந்தார். ஓல‌ம்மா வாயிலும் வ‌யிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். பின்ன‌ர் ஓரிரு மாத‌ம் அவ‌ரும் அதிக‌மாக‌ ம‌து அருந்தி இற‌ந்துவிட்டார். என் வாழ்வில் இர‌ண்டாவ‌தாக‌ நான் பார்த்த‌ ம‌து சார்ந்த‌ ம‌ர‌ண‌ங்க‌ள் அவை.

இன்றும் ஓல‌ம்மா என்ன‌ வார்த்தை சொல்லி கொய்தியோ ம‌ணிய‌த்தைத் திட்டியிருப்பார் என‌த் தெரிய‌வில்லை. ச‌தா ஏச்சுக‌ளையும் இழிச் சொற்க‌ளையும் கேட்டே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ கொய்தியோ ம‌ணிய‌த்தை கொல்ல‌ அப்ப‌டி எந்த‌ச் சொல்லுக்கு வ‌லு இருந்த‌து என‌வும் தெரிய‌வில்லை.

ஆனால் ஒன்று ம‌ட்டும் உறுதி… ஓல‌ம்மா நிச்ச‌ய‌ம் இந்த‌ச் ச‌மூக‌ம் ந‌ம்பிக்கொண்டிருக்கும் ‘கெட்ட‌ வார்த்தை’க‌ளில் ஒன்றையும் உப‌யோகித்திருக்க‌ மாட்டார். அவைக‌ளுக்கு அத்த‌னை ச‌க்தி கிடையாது.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 15

கொய்தியோ ம‌ணிய‌த்தையும் ஓல‌ம்மாவையும் அநேக‌மாக‌ லுனாஸ் வ‌ட்டாராத்தில் தெரியாத‌வ‌ர்க‌ள் குறைவு. கொய்தியோ ம‌ணிய‌ம் பெரிய‌ தாதாவாக‌ ஒரு கால‌த்தில் வ‌ள‌ம் வ‌ந்த‌வ‌ர். அந்த‌மான் தீவிலிருந்து விடுவிக்க‌ப்ப‌ட்டு லுனாஸில் த‌ஞ்ச‌ம் அடைந்திருந்தார். உடும்பு வேட்டியாடுவ‌தில் அவ‌ருக்கென‌ த‌னி உக்திக‌ளை வைத்திருந்தார். இள‌மை கால‌த்தில் இருவ‌ர் முக்கிக்கொண்டு தூக்கும் மூட்டைக‌ளை த‌னி ஒருவ‌ராக‌ தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போவ‌தை அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஒரு கால‌த்தில் இருந்த‌ உட‌ற்க‌ட்டு அவ‌ரின் எழுவ‌தாவ‌து வ‌ய‌திலும் ‘விட்டுப்போவேனா’ என‌ அவ‌ர் உட‌லிலேயே கொஞ்ச‌மாய் த‌ங்கியிருந்த‌து. கொய்தியோ ம‌ணிய‌மும் ஓல‌ம்மாவும் எங்க‌ளுக்கு அண்டை வீட்டுக்கார‌ர்க‌ளானார்க‌ள்.

நாங்க‌ள் அங்கு சென்ற‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் ஓல‌ம்மா அல‌ரிய‌ப‌டி எங்க‌ள் வீடு நோக்கி ஓடி வ‌ந்தார். அவ‌ர் த‌லையில் இர‌த்த‌ம். என் ஞாப‌க‌த்தில் அவ்வ‌ள‌வு ம‌னித‌ ர‌த்த‌ம் பார்த்த‌து அதுதான் முத‌ன்முறை.

இர‌ண்டு வார‌த்திற்கு ஒரு முறையாவ‌து ஓல‌ம்மாவின் இர‌த்த‌த்துளிக‌ள் எங்க‌ள் வீட்டின் அஞ்ச‌டியில் சொட்டு விட்டிருக்கும். கொய்தியோ ம‌ணிய‌ம் பெரிய‌ ம‌ர‌க்க‌ட்டையைச் சும‌ந்த‌ப‌டி ‘இனிமே இந்த‌ வீட்டுப்ப‌க்க‌ம் வ‌ராத‌டி’ என‌த்தொட‌ங்கி ஓல‌ம்மாவின் க‌ற்பு குறித்தும் அவ‌ர் அம்மாவின் க‌ற்பு குறித்துமான‌ ச‌ந்தேக‌ம் க‌ல‌ந்த‌ வார்த்தைக‌ளை கொச்சையாக‌ உமிழ்வார். ஓல‌ம்மாவும் தான் பாதுகாப்பாக‌ இருக்கும் தைரிய‌த்தில் எங்க‌ள் வீட்டிலிருந்த‌ப‌டியே கொய்தியோ ம‌ணிய‌த்தின் சொல் அம்புக‌ளை சில‌ உப‌ரிக‌ளோடு இணைத்து மீண்டும் அவ‌ரை நோக்கியே பாய்ச்சுவார். என் அம்மா காதை மூடிய‌ப‌டி ஒரு மூலையில் அம‌ர்ந்து கிட‌ப்பார். ஓல‌ம்மாவின் கோப‌ம் தீர்ந்த‌தும் அவ‌ர் காய‌த்திற்கு ம‌ருந்து போட்டுவிடுவார். அது போன்ற‌ ச‌மய‌மெல்லாம் என‌க்கு அம்ம‌வின் மீது கோப‌மாக‌ இருக்கும். ‘இவ‌ங்க‌ளுக்கெல்லாம் எதுக்கு உத‌வி செய்றீங்க‌’ என‌ க‌த்துவேன். அம்மா, “உத‌வின்னு கேட்டு வ‌ந்தா செய்யாம‌ இருக்க‌க் கூடாது” என்பார்.

கால‌ப்போக்கில் என‌க்கும் இந்த‌ சூழ‌ல் ப‌ழ‌கிவிட்ட‌து. கொய்தியோ ம‌ணிய‌ம் போதையில் ஒருவ‌ராக‌வும் தெளிந்த‌ நிலையில் வேரொருவ‌ராக‌வும் காட்சிய‌ளித்தார். தெளிவாக‌ இருக்கும் பொழுதுக‌ளில் கொய்தியோ ம‌ணிய‌ம் தாத்தாவிட‌ம் பொழுதைக்க‌ளிப்ப‌து சுவார‌சிய‌மான‌து. அவ‌ர் சில‌ மூலிகைக‌ள் குறித்து அறிந்து வைத்திருந்தார். கால் க‌ட்டைவிர‌லால் புற்க‌ளைத் த‌ட‌விய‌ப‌டி ந‌ட‌ப்ப‌வ‌ர் திடீரென‌ ‘தெ…இதுதான்’ என‌ சிறிதாய் இருக்கும் ஒரு வ‌கை இலையைப் ப‌றித்து மெல்வார். அந்த‌ இலையில் உள்ள‌ பால் இர‌த்த‌த்தில் க‌ல‌க்கும் போது அது வெளிப‌டுத்தும் வாடை பாம்புக‌ளை அச்ச‌ம் கொள்ள‌ச்செய்யும் என்பார்.

கொய்தியோ ம‌ணிய‌ம் வேட்டைக்குப் போவ‌தைப் பார்க்க‌வே ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும். வெரும் லாஸ்டிக் ம‌ட்டுமே அவ‌ர் ஆயுத‌ம். கூட‌வே இர‌ண்டு நாய்க‌ள் ஓடும். அரைகால் ச‌ட்டை ம‌ட்டுமே அணிந்திருப்பார். வெற்றுட‌ல். சிறு த‌ழும்புகூட‌ இல்லாம‌ல் அவ‌ர் சுற்றிவ‌ரும் காட்டிலிருந்து போன‌மாதிரியே மூட்டைநிறைய‌ உடும்புக‌ளை அள்ளிக்கொண்டு வ‌ருவார். காடு அவ‌ருக்கு ப‌ழ‌க்க‌மான‌ பிர‌தேச‌ம். காட்டுக்குள் நுழையும் போது அவ‌ர் ம‌து அருந்தி நான் பார்த்த‌தில்லை.

ஒரு முறை அவ‌ரோடு பொழுதைக் க‌ழித்துக் கொண்டிருக்கும் போது க‌த்தி வீசுவ‌து குறித்து என்னிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்தார். க‌த்தி ந‌ம்மை நோக்கி வ‌ருகையில் அதை எப்ப‌டி கையாள்வ‌து என‌ அவ‌ரே வீசி அவ‌ரே த‌டுத்தும் காண்பித்தார். ச‌த்த‌த்துட‌ன் இட‌து கையால் க‌த்தியை வீசி லாவ‌க‌மாக‌ ஆள்காட்டி விர‌லுக்கும் ந‌டு விர‌லுக்கும் ந‌டுவில் அதை அட‌ங்க‌ச்செய்வ‌தை ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிற‌கு க‌த்தியை என் கையில் கொடுத்து வீச‌ச் சொன்னார். கைக‌ள் ந‌டுங்கின‌. க‌த்தி த‌ன்னால் கீழே விழுந்த‌து.

கொய்தியோ ம‌ணிய‌ம் என்னை ‘பொட்டை’ என்றார்.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 14

ம‌து குறித்த தீராத‌ க‌ற்ப‌னையும் ப‌ய‌மும் அந்த‌ வ‌ய‌தில் என‌க்கு இருந்த‌து. ஒவ்வொரு மாத‌மும் வீட்டிற்கு வ‌ந்து சேரும் ‘ப‌ய‌னீட்டாள‌ர் ச‌ங்க‌ குர‌ல்’ ப‌த்திரிகையும் ‘ம‌துவை ஒழிப்போம்… ம‌தியை வ‌ள‌ர்ப்போம்’ என்று பிர‌ச்சார‌ம் செய்து கொண்டிருந்தது. நான் வாழ்ந்த‌ லுனாஸ் ப‌குதி சாராய‌த்திற்குப் பேர் போன‌து. எண்ப‌துக‌ளில் ந‌ச்சுக்க‌ல‌ந்த‌ சாராய‌ம் குடித்து லுனாஸ் தோட்ட‌த்தில் உள்ள ப‌ல‌ வீடுக‌ளில் பிண‌ங்க‌ள் வ‌ரிசைப் பிடித்து நின்ற‌தையும் ஒப்பாரி ஓல‌த்தில் லுனாஸ் மூழ்கி போய் கிட‌ந்த‌தையும் இன்றும் ப‌ல‌ர் நினைவில் நிறுத்தி விசாரிப்ப‌துண்டு.

கெடாவைத் தாண்டி உள்ள‌ ம‌க்க‌ளிட‌ம், நான் என‌து ஊர் பெய‌ரைச் சொல்வ‌தில் ஆர‌ம்ப‌த்திலிருந்தே சில‌ ம‌ன‌த்த‌டைக‌ள் இருந்த‌ன‌. பிண‌ வாடையிலிருந்து தொட‌ங்கும் உரையாட‌ல்க‌ளை எதிர்கொள்வ‌து அருவருப்பான‌தாக‌ இருந்த‌து. ப‌ய‌னீட்டாள‌ர் ச‌ங்க‌ம் வெளியிட்ட‌ ஒரு கையேடும் லுனாஸில் ந‌ட‌ந்த‌ இந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தைப் ஒப்பாரிப் ப‌ட‌ங்க‌ளோடு காட்டியிருந்த‌து.

நான் ஆர‌ம்ப‌க்க‌ல்வி ப‌யின்ற‌ வெல்ல‌ஸிலி ப‌ள்ளியின் அருகேதான் அந்த‌ வ‌ர‌லாற்றுக்குரிய‌ சின்ன‌ங்க‌ள் காடும‌ண்டி கிட‌ந்த‌ன‌. பாதியாய் உடைக்க‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ளின் ம‌தில்க‌ளுக்குப் பின்னே ‘அச்சிக்கா’ விளையாட‌ வ‌ச‌தியாய் இருக்குமென்றாலும் க‌ண்ணுக்குத் தெரியாத‌ பிண‌ங்க‌ளின் நிழ‌ல்க‌ள் அங்கு அசைவ‌தாக‌வும் ம‌து அருந்துவ‌தாக‌வுமே என் க‌ண்க‌ளுக்குத் தெரிந்த‌ன‌.

என‌து ப‌த்தாவ‌து வ‌ய‌தில் க‌ம்போங் லாமாவிலிருந்து க‌ம்போங் செட்டிக்கு வீடு மாறி வ‌ந்த‌வுட‌ன் ம‌துவின் வாச‌னை என்னை வேறு வ‌கையாக‌த் துர‌த்தி வ‌ந்த‌து.

-தொட‌ரும்