விஷத்தை அருந்தும் முன்
அதை முகர்ந்து பார்க்க வேண்டும்
ஆதிக்கும் ஆதியில் உலகில் இருந்தது என்னவென்று கேட்ட மாயாவிடம்
இருள் என்றேன்
அவள் வெளியே விரல்களை நீட்டி
அந்த இருளா என்றாள்.
வாகனங்களும் தெருவிளக்கும் நட்சத்திரங்களும்கூட இல்லாத
மாபெரும் ஆதி இருள்
அகப்படாது என்றேன்.
கதவையும் சன்னல்களை அடைத்து
இந்த இருளா என்றவள்
நான் பதில் சொல்லும் முன்பே
விளக்கின் விசைகளை அடைத்து
எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய தீபத்தையும் ஊதினாள்
அது அளவிட முடியாத
அடர்தியான இருள் என்றேன்
அருகில் வந்தவள்
இந்த இருளா என்றாள்
நான் அவள் முகத்தைத் தடவித்தேடி
மூடியிருந்த கண்களை அடைந்தேன்
ஆதி இருள்
இரு சிறு விழியளவு
அவளிடம்
அகப்பட்டிருந்தது.
***
ஒரு பேருந்தை தவற விடுவதுபோல
திரைப்படத்தின் ஓர் அபாரக் காட்சியில் மின்சாரம் நிர்ப்பதுபோல
இரு பறவைகள் மிகச்சரியாக நிலவுக்கு முன் பறந்து கடக்கும் தருணம்
காமிரா செயலிழப்பது போல
வரம் கேட்கும் நிமிடம் சொற்கள் திக்குவதுபோல
உணர்ச்சியற்ற ஒருவனின் முதல் கண்ணீரை அவதானிக்கும் முன்
காய்ந்து கனவாவதுபோல
முதன் முதலாய் வெளியேறும் விந்தின் சுவாரசியத்தை
நினைவில் சேமிக்காததுபோல
அத்தனை அபத்தமானவை
என்னைப்பற்றிய எல்லா புகார்களுக்குமான
தண்டனைகள் இல்லாமல் போகும் ஆச்சரியம்
நான்
பிரிவு பற்றி கூறியதை
புரிந்துகொள்ள முடியாத
உன் சூன்யப் பெருவெளிக்கு
சில உதாரணங்கள் காட்டினேன்
சட்டென சந்திக்கும் பெண்ணிடம்
எழும் காமத்தை…
காதல் தீர்ந்துவிட்ட கணத்தின்
கசப்பை…
உன் நட்பு இனி தேவையில்லை
என்ற வெறுப்பை…
இதற்காகத்தான் பழகினேன்
என்ற உண்மையை…
நான்தான் குற்றவாளி
என்ற வாக்குமூலத்தை…
எனக்கு யாருமே தேவையில்லை
என்ற இறுமாப்பை…
நான் மரணத்தை மட்டுமே விரும்புபவன்
என்ற மௌனத்தைசத்தமிட்டு சொல்லமுடியாதவரை
இந்த வாழ்க்கை
சுதந்திரமற்றதுதான்.
நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்
இவ்விரவில் தூங்கப்போகும் முன்
கதவுகளை சன்னல்களை அடைக்க வேண்டும்
காற்று அதன் ஓரங்களை உரசாமல் இருக்க
பாரங்களை நகர்த்தி முட்டுக்கொடுக்க வேண்டும்
தொலைக்காட்சி வானொலியிலிருந்து
ஓசை எழாமல் இருக்க
அதை முற்றிலும் சேதமுற செய்ய வேண்டும்
நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்.
Continue reading
சிறையிலிருந்து மீண்டு
தனியாக வாழும் அவள்
தன் வீட்டு வாசலில்
காலணிகளைச் சேகரித்து வைக்கிறாள்
பல வண்ணங்களில்
பல பிராண்டுகளில்
பல அளவுகளில்