மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…
தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பதை பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழி என புரிந்துகொள்ளலாம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். தமிழ்மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி மரபிலிருந்து இன்று உருவாகும் நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்கள் கொடுக்கும் அதே வகையான உணர்வெழுச்சியை வழங்குவதாய் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாய் நவீன கவிதை குறித்த தீராத வாசிப்பில் இருக்கும் எனக்கு நவீன கவிதைகள் ஏதோ ஒருவகையில் சங்கப்பாடல்களோடு பொருந்தி போவதைப் பார்க்க முடிகிறது.




