காலையிலிருந்து பல்வலி. மனிதனுக்குக் கடுமையாக வலி கொடுக்கக் கூடியது காது வலியும் பல்வலியும் என கேள்விப்பட்டதுண்டு. இரண்டுமே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நோகாமல் தலை முழுமைக்குமாக வலியைப் பரப்பும்.
இன்றுதான் மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் ஒலிபரப்பாகும் ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியிக்காகக் குரல் பதிவு செய்ய திகதி கொடுத்திருந்தேன். அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் புனிதா சுப்ரமணியம் மீண்டும் இலக்கியம் குறித்து பேச வாய்ப்பளித்துள்ளார். அவருக்கு நன்றி. தீவிர இலக்கியத்தில் இயங்கத்தொடங்கிய காலம் முதலே இவற்றையெல்லாம் எப்படி பொதுமக்களிடம் கொண்டுச் சேர்ப்பது என்றும் ஆரோக்கியமான வாசிக்கும் தலைமுறையை எப்படி உருவாக்குவது என்றும் ஏங்கியது உண்டு. புனிதா சுப்ரமணியம் போன்றவர்களால் அந்த எண்ணம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே 13 வாரங்கள் உலக இலக்கியம் குறித்துப்பேசியது பரவலான பார்வைக்குச் சென்றிருந்தது. சிலர் மொழிப்பெயர்ப்பு எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியிருந்தனர். வானொலி போன்ற ஊடகங்கள் மிக விரைவாக ஒன்றை எளிய மனிதர்களிடமும் எடுத்துச்செல்லும் சக்தி கொண்டவை. எளிமை படுத்தி கூறுவதென்பதே அதில் உள்ள சாகசம்.







