திற‌ந்தே கிட‌க்கும் டைரி

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 33

பெண்க‌ளுட‌ன் இருப்ப‌தும், அவ‌ர்க‌ளின் உல‌க‌த்திற்குள் ச‌ஞ்ச‌ரிப்ப‌தும் இன்ப‌ம் த‌ரும் ஒன்றாக‌ இருந்த‌து. பெண்க‌ள் சிந்திப்ப‌து… முடிவுக‌ள் செய்வ‌து… கோப‌ம் கொள்வ‌து என‌ அனைத்துமே ஆண்க‌ளின் உல‌க‌த்தோடு ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌தாக‌ப் ப‌ட்ட‌து. ஆயினும் அது பாதுகாப்பான‌து. அவ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு நிறைய‌ செய்திக‌ள் இருந்த‌ன‌. நான் க‌வ‌னிக்காத‌, க‌வ‌னிக்க‌த் த‌வ‌றிய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு முக்கிய‌ச் செய்திக‌ளாக‌ இருந்த‌ன‌. உண்மையில் பெண்க‌ள் பேசுவார்க‌ள் என‌ நான் ந‌ம்பிய‌ எதையுமே அவ‌ர்க‌ள் பேசாத‌வ‌ர்க‌ளாக‌வும் அவ‌ர்க‌ளுக்கான‌ பேச்சு சிறு சிறு கிளைக‌ள் விட்டு பிரிந்து கூர்மை கொள்வ‌தாக‌வும் இருந்த‌ன‌. அந்த‌ப் பேச்சுக‌ள் த‌ரும் இன்ப‌த்தை விட்டு ந‌க‌ர‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ளுட‌னேயே சில‌ கால‌ம் திரிந்தேன். அவ‌ளின் தோழிக‌ள் எல்லாம் என‌க்கும் தோழிக‌ளாக‌ மாறின‌ர்.

க‌விதைக்குத் தேவையான‌ துல்லிய‌ உண‌ர்வ‌லைக‌ளை எந்த‌ நூலும் ம‌னித‌னுக்குத் த‌ருவ‌தில்லை. மாறாக‌ அவை நினைவின் ம‌றைவிட‌த்தில் ப‌திந்துள்ள‌ ஏதோ ஒரு நுண்ணிய‌ உண‌ர்வின் அதிர்வை அவ்வ‌ப்போது மீட்டுக்கொண்டுவ‌ர‌ உத‌வுகிற‌து. இது போன்ற‌ நுண்ணிய‌ உண‌ர்வுக‌ள் பெண்க‌ளுட‌ன் ப‌ழ‌கும் போதுதான் என‌க்குள் உசுப்பிவிட‌ப்ப‌ட்ட‌து. மிக‌க் குறைந்த‌ ப‌ழ‌க்க‌முள்ள‌ ஒரு தோழியால் கூட‌, கால‌த்திற்கும் அழிக்க‌ இய‌லாத‌ சில‌ ப‌திய‌ன்க‌ளை ம‌ன‌தில் ஏற்ற‌ முடிந்திருந்த‌து. ப‌ழ‌காத‌வ‌ரை பெண்க‌ள் என்னுட‌ன் பேச‌ விரும்புவார்க‌ள் என‌ நான் ச‌ற்றும் எதிர்ப்பார்க்க‌வில்லை.

பெண்க‌ளுட‌ன் பேச‌த் தொட‌ங்கிய‌ போது என‌க்குத் திக்குவாய் குறைந்த‌து. நான் தூய்மையாக‌ உடுத்த‌ ஆர‌ம்பித்தேன். கூடுத‌லாக‌ என‌க்கு ஏதேனும் இருக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வம் மேலோங்கி இருந்த‌து. அதிக‌ம் ஜோக் புத்த‌க‌மெல்லாம் ப‌டித்து அவ‌ர்க‌ளை அடிக்க‌டி சிரிக்க‌ வைத்த‌ப‌டி இருப்பேன். அந்த‌ ந‌கைச்சுவை துணுக்குக‌ளை பேச்சின் இடையில் எப்ப‌டி நுழைக்க‌லாம் என‌ காத்திருந்து, ச‌ரியான‌ த‌ருண‌த்தில் ‘இப்ப‌டிதான் ஒரு நாள்…’ ஆர‌ம்பித்துவிடுவேன். சில‌ நாட்க‌ளிலேயே ஏராள‌மான‌ பெண்க‌ள் என‌க்குத் தோழிக‌ளாயின‌ர். அத்தனை நாள் நான் எழுதிய‌ க‌விதை அட‌ங்கிய‌ நோட்டு புத்த‌க‌ம் மாண‌விக‌ளின் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மான‌து. ‘ஒரு க‌விதை சொல்லேன்…’ என‌ ஒரு நாளைக்கு ஒரு தோழியாவ‌து கேட்கும் நிலை வ‌ந்த‌தும் மீண்டும் க‌விதை என‌க்குள் சுர‌க்க‌த்தொட‌ங்கிய‌து.

அவ‌ளுக்கு இதெல்லாம் அதிக‌ம் பிடிக்காம‌ல் இருந்த‌து. என் க‌வ‌ன‌ம் அவ‌ள் மீது இல்லை எனும் குற்ற‌ச்சாட்டுக‌ள் வெவ்வேறு தொனியில் அவ‌ளிட‌மிருந்து வ‌ர‌த்தொட‌ங்கின‌. நான் எந்த‌க் குற்ற‌ச்சாட்டுக்கும் ப‌தில் சொல்ல‌த் தேவையில்லாத‌ ஒரு ப‌ர‌ந்த‌ வெளியில் சுத‌ந்திர‌மாக‌ச் சுற்றித்திரிந்தேன். யாருக்கும் ப‌தில் சொல்ல‌த் தேவையில்லாம‌ல் இருப்ப‌தின் சுத‌ந்திரம் என்னை முழுதுமாக‌ப் ப‌ற்றிக் கொண்டிருந்த‌து. ஒரு சுப‌யோக‌ சுப‌ தின‌த்தில் என் காத‌ல் தோல்வியில் முடிந்த‌து.

இனி… ஒரு நாளைக்கு ஒருமுறையாவ‌து சாப்பிட்டுவிட்டாயா என‌க் கேட்க‌த் தேவையில்லை, அவ‌ள் விருப்ப‌ப்ப‌டுவ‌தை வாங்கித்த‌ர‌த் தேவையில்லை, ‘தெம்மே’ என‌ உட்கார்ந்துகொண்டு அவ‌ள் பேசுவ‌தைக் செவிம‌டுக்க‌த் தேவையில்லை, ப‌ள்ளி முடிந்த‌ பின் அவ‌ள் சைக்கிள் வேக‌த்துக்கு என் மோட்டார்வ‌ண்டியையும் உருட்டிச்சொல்ல‌த் தேவையில்லை, எந்த‌க் குற்ற‌த்துக்கும் அவ‌ளிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புக் கேட்க‌த் தேவையில்லை. தேவையே இல்லை.

ஆனாலும் நான் ஒரு நாட‌க‌த்திற்குத் த‌யாரானேன். சோர்ந்த‌ முக‌த்தோடு உட‌ல் பொருள் ஆவி இழ‌ந்த‌வ‌னாக‌த் சுற்றிவ‌ர‌த் த‌யாரானேன். சுற்றியிருப்போரின் க‌ழிவிர‌க்க‌ம் என‌க்கு அப்போது தேவைப்ப‌ட்ட‌து. அது ஆண‌வ‌த்தின் வேறொரு ப‌ரிணாம‌ம்.

-தொடரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 32

ப‌ள்ளி எரிந்த‌தால் கிடைத்த‌ இர‌ண்டு நாட்க‌ள் ப‌ள்ளிவிடுமுறையில் அனைவ‌ரும் சித‌றி கிட‌ந்தோம். நேரில் ம‌ட்டும‌ல்லாம‌ல் தொலைபேசியிலும் பேசிக்கொள்வ‌தைத் த‌விர்த்தோம். அனைவ‌ர் ம‌ன‌திலும் (சுமார் 4 பேர்) ஒரு வ‌கையான‌ இறுக்க‌ம் குடிக்கொண்டிருந்த‌து. எங்க‌ளுட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்குக் கூட‌ எங்க‌ளின் த‌னிமைக்குக் கார‌ண‌ம் தெரியாம‌ல் இருந்த‌து. ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அவ‌ர‌வ‌ர் வீட்டின் அறை ஒருவ‌கை பாதுகாப்புண‌ர்வை கொடுத்திருக்க‌ வேண்டும்.

விடுமுறைக்குப் பிற‌கு போலிஸ்கார‌ர்க‌ள் ப‌ள்ளிக்கு வ‌ந்த‌ன‌ர். எங்க‌ளைவிட‌ வ‌ய‌தில் குறைந்த‌ ஓர் ந‌ண்ப‌னை கைது செய்த‌ன‌ர். அந்த‌ மாண‌வ‌ன் அடிக்க‌டி சில்ல‌ரை திருட்டின் கார‌ண‌மாக‌ச் சிறைக்குச் செல்ப‌வ‌னாக‌ இருந்த‌தாலும் ப‌ள்ளிக்கூட‌ம் தீப்பிடித்த‌ அன்று அவ‌னை ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் பார்த்த‌தாக‌க் கிடைத்த‌ சாட்சிய‌த்தாலும் அவ‌ன் குற்ற‌வாளியாக்க‌ப்ப‌ட்டான். நாங்க‌ள் செய்வ‌த‌றியாது ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொண்டிருந்தோம். பய‌ உண‌ர்ச்சியின் கார‌ண‌மாக‌ மௌனித்திருந்த‌ வேறு இரு கிருஸ்த‌வ‌ ந‌ண்ப‌ர்க‌ள் முற்றிலுமாக‌ என்னுட‌னும் ச‌ர‌வ‌ண‌னுட‌னும் பேசுவ‌தை நிறுத்திக்கொண்ட‌ன‌ர். (இன்றுவ‌ரையும் பேசுவ‌தில்லை)

அடுத்த‌டுத்து வ‌ந்த‌ நாட்க‌ளில் ப‌ள்ளியில் ஒரு வ‌கையான‌ அமைதி நில‌வுவ‌தைக் காண‌ முடிந்த‌து. மாண‌வர்க‌ளிடையே எந்த‌ வ‌கையான‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளும் இல்லை. ப‌ள்ளி எரிப்புச் ச‌ம்ப‌வ‌ம் எல்லோர் ம‌ன‌திலும் வெவ்வேறு வ‌கையான‌ பாதிப்புக‌ளை ஏற்ப‌டுத்தியே இருந்த‌து. இர‌ண்டு மோட்டாரில் வ‌ராம‌ல் நானும் ச‌ர‌வ‌ணனும் ஒரே மோட்ட‌ரில் வ‌ர‌த் தொட‌ங்கியிருந்தோம். ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்க்க‌ முடியாது என்ப‌தால் மோட்டாரில் வ‌ரும்போது பேசிக்கொள்வ‌தோடு ச‌ரி… வ‌குப்ப‌றையிலும் ப‌ள்ளி வ‌ளாக‌த்திலும் அமைதியைக் க‌டைப்பிடித்தோம். முக‌த்தைப் பார்ப்ப‌தைத் த‌விர்த்துக்கொண்டோம். ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக்கொள்வ‌து உண்மையைப் பார்த்துக்கொள்வ‌த‌ற்கு நிக‌ரான‌து. உண்மையைச் ச‌ந்திப்ப‌தை நாங்க‌ள் விரும்ப‌வில்லை.

அப்போது என‌க்கு அவ‌ள் தேவைப்ப‌ட்டாள். அவ‌ளிட‌ம் நிச்ச‌ய‌ம் ஒரு பாதுகாப்பான‌ கூடு இருக்கும். அதில் ப‌த்திர‌மாக‌ இருக்க‌லாம் என‌த் தோன்றிய‌து. பெண்க‌ளின் உல‌க‌ம் வெம்மையான‌து. அத‌ற்குள் முழுதுமாக‌ச் ச‌ர‌ணாக‌தியாகும்போது புதிய‌ உடைக‌ளைத் த‌ரித்துக்கொள்வ‌தாக‌வும் புதிய‌ காற்றைச் சுவாசிப்ப‌தாக‌வும் தோன்றும். அங்கு வெளியில் நாம் காணும் பிர‌ச்ச‌னைக‌ள் இல்லை… மாறாக‌ அவ‌ர்க‌ளுக்கே உண்டான‌ சில‌ பிர‌ச்ச‌னைக‌ளை க‌ண்க‌ளுக்குத் தெரியாம‌ல் சும‌ந்திருப்பார்க‌ள். நான் மீண்டும் அவ‌ளை நாடிச் சென்ற‌ போதுதான் நான் எத்த‌னை பெரிய‌ கோழை என்ப‌தை உண‌ர்ந்தேன். அத்த‌னை நாள் நான் ந‌ம்பிய‌ என‌து கால்க‌ளும் கைக‌ளும் உட‌லும் ஒன்றும் செய்ய‌ வலுவ‌ற்ற‌வையாக‌ என்னைக் கேலி செய்த‌ன‌.

போலிஸில் பிடிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ன் காலுடைந்து ஜாமினில் வ‌ந்திருந்தான். காலின் மூட்டுப் ப‌குதி உடைந்து விட்ட‌தாக‌க் கூறினான். அவ‌ன் குடும்ப‌த்தார் வ‌ழ‌க்க‌றிஞர் (க‌ர்பால் சிங் என‌ நினைவு) மூல‌மாக‌ காலை உடைத்த‌ போலிஸார் மீது வ‌ழ‌க்குத் தொடுத்த‌ன‌ர். குற்ற‌த்தை ஊர்ஜித‌ப்ப‌டுத்தாம‌ல் ப‌ள்ளி உடையில் அவ‌ன் சிறையில் அடைத்த‌ அராஜ‌க‌ம் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ப் ப‌த்திரிகைகளில் பேச‌ப்ப‌ட்ட‌ன‌. அவ‌ன் காலுடைந்து கைதாங்க‌லாக‌ வ‌ரும் ப‌ட‌ம் ப‌ல‌ரையும் சின‌ம் கொள்ள‌ச்செய்த‌து. உற‌க்க‌ம் வ‌ராம‌ல் நான் க‌ண்ணீர் விட்ட‌ தின‌ங்க‌ள் அவை.

முக்கிய‌ அறிவிப்பு:

(இந்த‌ வார‌ டைரி இன்னும் நீண்டிருக்க‌ வேண்டும். எஸ்.பி.எம்.மில் (SPM) த‌மிழ்ப் பாட‌த்தின் நிலை ஒரு வ‌கை ம‌ன‌ உளைச்ச‌லைக் கொடுத்துக் கொண்டிருக்கிற‌து. ‘எஸ்.பி.எம்மில் ப‌த்துப்பாட‌ங்க‌ளை ம‌ட்டுமே எடுக்க‌ முடியும் என்ற‌ அமைச்ச‌ர‌வையின் முடிவில் மாற்ற‌ம்… இனி 12 பாட‌ங்க‌ள் எடுக்க‌லாம்’ என‌ ஆய்வு ம‌ன‌ப்போக்கும் இல்லாத‌ப் ப‌த்திரிகைக‌ள் முத‌ல் ப‌க்க‌த்தில் செய்தி வெளியிட்டிருக்கின்ற‌ன‌. இதில் நாம் கொண்டாட‌ எந்த‌ ம‌கிழ்ச்சியும் இல்லை என்ப‌தை பிற‌மொழி ப‌த்திரிக்கைக‌ளைப் ப‌டித்த‌ப் பின்பே உண‌ர‌ வேண்டியுள்ள‌து.

“Pokoknya 10 subjek utama itu kekal tetapi memberi kelonggaran bahawa pelajar boleh membuat pilihan untuk mengambil mata pelajaran bahasa Cina atau Tamil dan sastera Cina atau sastera Tamil,” katanya kepada pemberita selepas mempengerusikan mesyuarat Majlis Tanah Negara Ke-65 di sini hari ini.

Beliau berkata keputusan mata pelajaran tambahan itu tidak akan diambil kira dalam pemberian biasiswa dan sebagainya.

“Mereka boleh mengambil 12 atau 11 subjek tetapi itu tidak mengambil kira dalam perkara 10 subjek asas dan elektif.

“Sebelum ini, mereka tidak boleh mengambil, jadi kita tidak mahu sekat dan memberi mereka kelonggaran,” katanya.

ந‌ன்றி : Malaysiakini

அதாவ‌து:

1. தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளப‌டி அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.

3. தமிழாசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ந‌ன்கு ஆராய்ந்து பார்க்க‌ வேண்டிய‌ கூற்று இது. வெறும் இடைநிலை ப‌ள்ளி ம‌ட்டும‌ல்லாது நாளை த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ளின் வேரைக் கூட‌ அசைத்துப்பார்க்கும் ப‌டியான‌ முடிவாக‌ இது உள்ள‌து. இத‌ன் தொட‌ர்பான‌ விள‌க்க‌க் கூட்ட‌ம் தோட்ட மாளிகையில் வருகின்ற 12.12.2009 நடப்பதாக அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். காலை 10 ம‌ணிக்குத் தொட‌ங்கும் இதில் அனைவ‌ரும் வ‌ந்து க‌ல‌ந்துகொள்வ‌த‌ன் வ‌ழி சில‌ தீர்க்க‌மான‌ முடிவுக‌ளை எடுக்க‌ முடியும் என‌ ந‌ம்ப‌லாம்.

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 31

போலிஸ்கார‌ர்க‌ளின் வ‌ருகையும் த‌ண்ட‌னைக‌ளும் எங்க‌ளை ப‌ள்ளியில் இன்னும் ந‌ன்கு அடையாள‌ப்ப‌டுத்திக்காட்ட‌ உத‌விய‌து. த‌மிழ் ஆசிரியையைத்த‌விர‌ ம‌ற்ற‌ அனைவ‌ருமே எங்க‌ளை அப்ப‌ள்ளியின் குப்பைக‌ள் போல‌வே பார்த்த‌ன‌ர். குறிப்பாக‌ க‌ட்டொழுங்கு ஆசிரிய‌ர் எங்க‌ள் பெய‌ர் ‘ப்ளேக் ரெக்கோட்டில்’ ப‌திவாகிவிட்ட‌து என்றும் அத‌னால் எங்க‌ளுக்கு அர‌சாங்க‌ வேலை இனி கிடைக்காது என‌வும் ப‌ய‌முறுத்திய‌ப‌டி இருந்தார்.

அர‌சாங்க‌ வேலை எங்க‌ளுக்குக் கிடைக்காத‌து ப‌ற்றியெல்லாம் அப்போது க‌வ‌லை இல்லை. ஆனால் ‘ப்ளேக் ரெக்கோட்’ என்ற‌ வார்த்தை ம‌ட்டும் எங்க‌ளை அமைதி இழ‌க்க‌ செய்த‌து. ‘ப்ளேக்’ என்றால் க‌றுப்பு. எங்க‌ள் பெய‌ர் க‌றுப்பு ப‌திவேட்டில் ப‌திக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌ தென்றும், க‌றுப்பு ப‌திவேடு எப்ப‌டி இருக்கும் என்றும் க‌ற்ப‌னையில் ஆழ்ந்தோம். மிக‌ப்பெரிய‌ ஒரு க‌றுப்பு புத்த‌க‌த்தில் உட்புற‌மும் க‌றுப்பு ஏடுக‌ள் ப‌ட‌ப‌ட‌க்க‌ எங்க‌ள் பெய‌ர்க‌ள் ப‌ளிச்சென‌ அதில் எழுதிவைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாய் தோன்றி ப‌ய‌முறுத்திய‌து. அந்த‌க் க‌றுப்பு புத்த‌க‌த்தை எப்ப‌டியும் திருடிவிட‌ வேண்டும் என‌ முடிவெடுத்தோம். பின்ன‌ர் விசாரித்துப்பார்த்த‌தில் அப்படியொரு புத்த‌க‌ம் இல்லை என்றும் பெய‌ர்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ க‌ணினியில்தான் செலுத்த‌ப்ப‌ட்டிருக்கும் என்றும் கூறினார்க‌ள்.

இப்போது க‌ணினியை எப்ப‌டி திருடுவ‌து என்ற‌ குழ‌ப்ப‌ம் வ‌ந்த‌து. க‌ணினிக்கும் என‌க்குமான‌ தொட‌ர்பு ஒரு திருடும் முய‌ற்சியிலிருந்து தொட‌ங்கியிருந்த‌து. க‌ணினியைப் ப‌ற்றிய‌ எந்த‌ அறிவும் அப்போது இல்லை. திருடுவ‌த‌ற்கு அந்த‌ அறிவும் தேவையில்லாம‌ல் இருந்த‌து. எவ்வ‌ளவு திட்ட‌மிட்டும் அலுவ‌ல‌க‌க் க‌ணினியை எங்க‌ளால் நெருங்க‌ முடியாம‌ல் இருந்த‌து. அலுவ‌ல‌க‌ ஊழிய‌ர் எங்க‌ள் ந‌ண்ப‌ரான‌தால் அவ‌ர் உத‌வியோடு ஒரு த‌ர‌ம் அலுவ‌ல‌க‌த்தினுள் யாரும் இல்லாத‌ போது நுழைந்தோம். அலுவ‌ல‌க‌த்தில் குமிந்துகிட‌ந்த‌ க‌ணினிக‌ளைக் க‌ண்டு உண்மையில் நாங்க‌ள் திருட‌வேண்டிய‌ க‌ணினி எது என்ற‌ புதிய‌ குழ‌ப்ப‌ம் அப்போதுதான் எழுந்த‌து.

அன்று இர‌வு நாங்க‌ள் ஒன்று கூடினோம். ‘ப்ளேக் ரெக்கோட்’ என்ற‌ வார்த்தை கொடுத்த‌ ப‌யம் எங்க‌ளுக்குக் குறைந்திருந்தாலும் க‌ணினியில் அட‌ங்கியுள்ள‌ எங்க‌ள் பெய‌ரை அழிப்ப‌து ஒரு ச‌ட‌ங்குபோல‌ ஒட்டிக்கொண்டிருந்த‌து. எந்த‌க் கார‌ண‌மும் எழுப்பாம‌ல் செய்தே தீர‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் ச‌ட‌ங்குக்கு ம‌ட்டும்தான் வாய்த்திருக்கிற‌து. நாங்க‌ளும் ச‌ட‌ங்கு செய்ய‌ முடிவெடுத்தோம்.

ம‌றுநாள் இர‌வு எங்க‌ள் ப‌ள்ளி தீப்பிடித்துக்கொண்ட‌து. அலுவ‌ல‌க‌த்தோடு சேர்த்து அதை ஒட்டியிருந்த‌ ஆசிரிய‌ர் அறைக‌ளும் வ‌குப்ப‌றைக‌ளும் பெரும் தீயில் பொசுங்கி கொண்டிருந்த‌ன‌. த‌ங்க‌ளின் ப‌ல‌ நாள் உழைப்பு க‌ருகி விட்ட‌தாக‌வும்… வைத்திருந்த‌ பொருள் பொசுங்கிவிட்ட‌தாக‌வும்… ஆசிரிய‌ர்க‌ள் விட்ட‌ க‌ண்ணீர் ப‌ற்றி அறியாம‌ல் மூன்று மாடி க‌ட்ட‌ட‌த்தை முழுதுமாய் விழுங்கிய‌ப‌டி பெரும் தீ எழுந்து நின்ற‌து. என் வாழ்வில் நான் இறுதியாய் பார்த்த‌ பெரும் யாக‌த் தீ அது.

த‌த்த‌ரிகிட‌ த‌த்த‌ரிகிட‌ தித்தோம்…

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 30

சமாதான‌ம் செய்வ‌து உயிரை வ‌தைக்க‌க்கூடிய‌து. மௌனித்திருக்கும் ஓர் உயிரிட‌ம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் நான் கோப‌ம் அடைந்துவிடும் அபாய‌ம் நிக‌ழும். என‌க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு க‌டிகார‌ம் சமாதான‌ம் செய்வ‌த‌ற்கான‌ நிமிட‌ங்க‌ளைச் ச‌ரியாக‌க் காட்டிய‌ப‌டியே இருக்கும். அந்த‌ நிமிட‌ முள் அத‌ன் எல்லைக‌ளுக்குப் பின், ந‌க‌ர்ந்த‌தே இல்லை. ப‌ணிவாக‌, தொனி குறைந்து, துக்க‌த்தின் க‌ர‌ க‌ர‌த்த‌ குர‌லில் வாடியிருக்கும் என‌து ஆன்மாவில் பேய்க‌ளின் நிழ‌ல் ப‌டிய‌ தொட‌ங்கும். கோப‌ம் கொண்டு என்னைப் பிரியும் ஒவ்வொருவ‌ருக்கும் என் ஆழ்ம‌ன‌ம் முழுச்ச‌ம்ம‌த‌த்தோடுதான் விடைக்கொடுக்கிற‌து. பிரித‌ல் என்ப‌து சுத‌ந்திர‌ம்.

இந்த‌ வ‌ரியை எழுதும்போது எப்போதும் ம‌ன‌தில் தோன்றும் யாரும‌ற்ற‌ வெறுமையின் சூன்ய‌ ஒலி காதை அடைத்துக் கொள்கிற‌து. பிரிவுக்குக்கான‌ துக்க‌ முக‌ங்க‌ளோடு அறிவும் ம‌ன‌மும் என்னை நாட‌க‌மாட‌வைத்த‌ நிமிட‌ங்க‌ளில் ஆன்மா மிக‌ அமைதியாக‌ அந்த‌ப் பிரிவை எதிர்ப்பார்த்து நிழ‌லாடுகிற‌து. என் மீது ப‌திந்திருக்கும் எல்லா அடையாள‌த்தையும் வீசி எரிந்துவிட்டு யாருக்கும் தெரியாத‌ ஓர் ஊரில் மீண்டும் ஆடுக‌ளோடு திரியும் ஒரு காட்சி எப்போதும் போல் இப்போதும் தோன்றுகிற‌து. அப்ப‌டி என்னை செய்ய‌விடாத‌து எது?

ஆண‌வ‌ம்தான்.

அவ‌ளை நான் சாமாதான‌ம் செய்வ‌த‌ற்கு ச‌கித்துக் கொண்டு போவ‌த‌ற்கும் கார‌ண‌மாய் இருந்த‌தும் இதே ஆண‌வ‌ம்தான். ஆண‌வ‌ம் ஒரு ப‌ச்சோந்திபோல‌. எத‌ன்மீது நிற்கிற‌தோ அத‌ன் வ‌ர்ணம் பெற்றுவிடும். இறுதியில் ஆண‌வ‌த்தை அடையாள‌ம் காண்ப‌து அவ்வ‌ள‌வு எளிதாக‌ இருக்காது. ப‌தினேழு வ‌ய‌தில் நான் தேடி வைத்துக்கொண்ட‌ அவ‌ளின் சுமையை இற‌க்க‌ முடியாம‌ல் திரிந்த‌ தின‌ங்க‌ளில் என் அடையாள‌த்தைத் தொலைப்பதாக‌ உண‌ர்ந்தேன்.

ஒரு நாளைக்கு ஒருமுறையாவ‌து சாப்பிட்டுவிட்டாயா என‌க் கேட்ப‌து, அவ‌ள் விருப்ப‌ப்ப‌டுவ‌தை வாங்கித்த‌ருவ‌து, ‘தெம்மே’ என‌ உட்கார்ந்துகொண்டு அவ‌ள் பேசுவ‌தைக் செவிம‌டுப்ப‌து, ப‌ள்ளி முடிந்த‌ பின் அவ‌ள் சைக்கிள் வேக‌த்துக்கு என் மோட்டார்வ‌ண்டியையும் உருட்டிச்சொல்வ‌து என‌த்தொட‌ங்கி நான் ச‌ண்டையிட்ட‌த‌ற்கு அவ‌ளிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புக் கேட்ப‌தில் வ‌ந்து நின்ற‌து. ஒவ்வொரு முறையும் ச‌ண்டையிட்ட‌ப்பின் அவ‌ளிட‌ம் என் நியாய‌ங்க‌ளை விள‌க்கிக்கொண்டிருப்ப‌து என் முக‌த்தில் நானே காரி உமிழ்வ‌தற்கு நிக‌ராக‌ப் ப‌ட்ட‌து. ‘ந‌வீனோட‌ ச‌ர‌க்கு செம்ம‌ அழ‌குடா’ என்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளின் போற்றுத‌லை இழ‌க்க‌ விரும்பாம‌ல் என் காத‌ல் தொட‌ர்ந்து கொண்டிருந்த‌து. என‌க்கு ந‌ண்ப‌ர்க‌ளின் அந்த‌ வார்த்தைத் தேவைப்ப‌ட்ட‌து. யாரிட‌மும் இல்லாத‌ ஒன்று என்னிட‌ம் இருப்ப‌து போன்று பாவ‌னை செய்வ‌த‌ற்கும், ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌யிற்றெரிச்ச‌லை உசுப்பிவிடுவத‌ற்கும் அவ‌ள் என‌க்குத் தேவைப்ப‌ட்டாள்.

அவ‌ளைச் ச‌மாதான‌ம் செய்துகொண்டிருக்கும் அதே த‌ருண‌த்தில் ம‌ன‌ம் அவ‌ளைப் பிரிவ‌த‌ற்கான‌ எல்லா ஆய‌த்த‌ங்க‌ளையும் செய்துக்கொண்டிருக்கும். பிரிவு எப்ப‌டி நேர்த்தியாக‌ அமைய‌ வேண்டும் என்றும் யோசிக்க‌த்தொட‌ங்கும். நான் அந்த‌ப் பிரிவை ஏற்ப‌டுத்திய‌தாக இருக்க‌க் கூடாது. அவ‌ளாக‌ விரும்பி ஏற்ப‌டுத்திய‌தாக‌ இருக்க‌ வேண்டும். ஒரு காத‌ல் தோல்வியின் மென்மையான‌ போர்வை என் உட‌ல் முழுதும் ப‌டிய‌ வேண்டும் என‌ எதிர்ப்பார்த்தேன். அந்த‌ப் போர்வை ஒருவ‌கை பாதுகாப்பைத் த‌ர‌க்கூடிய‌து. மீண்டும் வேறொரு காத‌லையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 29

இன்று வ‌ரை எழுதுவ‌தற்கான‌ உந்துத‌ல் ஏற்ப‌டும்போதெல்லாம் அதை முறிய‌டிப்ப‌து போல‌தான் ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌மும் வாய்த்துவிடுகின்ற‌து. அவ‌ற்றை மீறியே எழுத்து ப‌ற்றி யோசிக்க‌வும் செய‌லாற்ற‌வும் வேண்டுயுள்ள‌து. சிறுக‌தை வாசிப்ப‌திலும் எழுதுவ‌திலும் ஆர்வ‌ம் பொங்கிய‌ கால‌ம் அது. வார‌ப்ப‌த்திரிகைக‌ள் மாத‌ இத‌ழ்க‌ள் ஞாயிறு ப‌க்க‌ங்க‌ள் என‌ ஒன்றுவிடாம‌ல் தேடித்தேடி சிறுக‌தைக‌ள் வாசித்தேன். அன்றைய‌ ஞாயிறு ப‌த்திரிகைக‌ளில் என் பெய‌ர் அடிக்க‌டி இட‌ம் பெற‌ சிறுக‌தைக‌ளைப் ப‌ற்றிய க‌ருத்துக‌ளை வாச‌க‌ர் க‌டித‌மாக‌ எழுதி அனுப்புவேன். ஒவ்வொரு வார‌மும் என‌து பெய‌ருட‌ன் க‌ருத்து க‌டித‌ம் வ‌ருவ‌து ம‌ன‌துக்கு இன்ப‌மாக‌ இருக்கும். இப்ப‌டி இன்ப‌மாக‌ப் போன‌ என் எழுத்து வாழ்வில் ம‌ற்றுமொரு இடைவெளி விழுந்த‌து.

இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் என‌க்குத் துள்ளிய‌மாக‌ நினைவில் உண்டு. இடைநிலை ப‌ள்ளியில் நாங்க‌ள் இறுதியாக இற‌ங்கிய‌ வ‌ன்முறை இது. அப்போதெல்லாம் காலையில் ம‌ணிய‌டித்த‌வுட‌ன் தேசிய‌கீத‌ம் பாட‌லும் தொழுகையும் ஒலிப‌ர‌ப்பாகும். எல்லா மாண‌வ‌ர்க‌ளும் இசையைக்கேட்ட‌வுட‌ன் நின்ற இட‌த்திலேயே நிற்க‌ வேண்டும். முத‌ல் நாள் நான்காவ‌து வ‌குப்ப‌றையில் (பெர்டாகாங்கான்) த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். தொழுகையின் போது அம்மாண‌வ‌ர்க‌ளைத் ம‌று தாக்குத‌ல் செய்ய‌ வேண்டும் என‌ ச‌ர‌வ‌ணன் முடிவெடுத்திருந்தான்.

தேசிய‌கீத‌ம் பாட‌த்தொட‌ங்கும் போதே அம்மாண‌வ‌ர்க‌ள் நின்ற‌ இட‌த்தில் குழுமினோம். தொழுகை ஆர‌ம்பித்த‌து. நான் அம்மாண‌வ‌ர்க‌ளைக் கோப‌ப் ப‌டுத்தும் வித‌மாக‌ …………. ம‌ஹா பூத்தோ என்றேன். அவ‌ர்க‌ள் பார்வை என் ப‌க்க‌ம் கோப‌மாக‌த் திரும்பிய‌து. ‘என்ன‌ முறைக்கிறாய்’ என‌ ச‌ர‌வ‌ண‌ன் தொட‌ங்க‌. க‌ல‌வ‌ர‌ம் ஆர‌ம்பித்த‌து. எங்க‌ள் தாக்குத‌லை முன்ன‌மே அறிந்திருந்த‌ அம்மாணவ‌ர்க‌ள் சிறிய‌ க‌த்திக‌ளை த‌யார்செய்து வைத்திருந்த‌ன‌ர். பின்ன‌னியில் தொழுகை ஒலியோடு வ‌ன்முறை மேலும் உக்கிர‌மாக‌ அர‌ங்கேறிய‌து.

வ‌ன்முறை போன்ற‌ சுத‌ந்திர‌ம் இல்லை. ஒவ்வொரு ப‌டைப்பாளனும் வ‌ன்முறையாள‌ன்தான். இதுவ‌ரைக்குமான‌ ச‌ட்ட‌ங்க‌ளையும் க‌ட்டுப்பாடுக‌ளையும் ச‌ன்ன‌ம் ச‌ன்ன‌மாக‌ த‌க‌ர்ப்ப‌திலிருந்து வ‌ன்முறை கிள‌ர்த்தெழுகிற‌து. ஓர் ஆளும் வ‌ர்க்க‌ம் த‌ன‌து வ‌ச‌திக்கேற்ப‌ க‌ட்ட‌மைத்துள்ள‌ ச‌ட்ட‌த்தின் மைய‌த்தை நோக்கி எட்டி உதைக்கும் போது ஏற்ப‌டுக்கிற‌ கிள‌ர்ச்சியை ப‌டைப்புக்கான‌ ச‌க்தியாக‌ நான் நினைக்கிறேன். அன்றும் அதுதான் ந‌ட‌ந்த‌து. எங்க‌ளின் நியாய‌த்தை நிலைநாட்ட‌ நாங்க‌ள் போராடிக்கொண்டிருக்கையில் க‌ட்டொழுங்கு ஆசிரிய‌ர் குறுக்கிட்டார். ஏற்க‌ன‌வே ம‌த‌வாதியாக‌ நாங்க‌ள் அடையாள‌ம் க‌ண்டிருந்த‌ அவ‌ர் த‌ன‌து த‌குதிக்கு மீறி தானும் ஒரு மாண‌வ‌ன் போல‌ எங்க‌ளைத் தாக்க‌த் தொடங்கினார். அதிகார‌ம் த‌லைவிரித்தாடும்போது அதை ஒடுக்குவ‌துதானே முறை. மொத்த‌மாக‌ ஆறு பேர் இணைந்து அவ‌ரைத் தாக்கினோம்.

அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் வெற்றுட‌லோடு போலிஸ் முன்னிலையில் நின்று கொண்டிருந்தோம்.

(குறிப்பு : 17 வ‌ய‌திலேயே போலிஸை ரொம்ப‌வும் நெருக்க‌த்தில் பார்த்துவிட்ட‌தால் சில‌ர் போலிஸில் ரிப்போர்ட் செய்தும் தொலைபேசியில் மிர‌ட்டியும் பாவ‌லா காட்டும்போது என் ம‌யிர் கூட‌ அசைவ‌தில்லை.)

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 28

அல‌மாரியில் ப‌ல்வேறு புத்த‌க‌ங்க‌ளையும் ஆராய்ந்தேன். அப்பாவும் க‌தை எழுதுவார் என அப்போதுதான் தெரிந்த‌து. ஒரு சிறிய‌ டைரியில் குட்டி குட்டி க‌தைக‌ள், விடுக‌தைக‌ள், அறிஞ‌ர்க‌ளின் பொன்மொழி என‌ எழுதியும் ஒட்டியும் வைத்திருந்தார். இடையிடையே ஜோக்குக‌ளும் இருந்த‌ன‌.

ஒருவ‌ன் நெடுநேர‌மாக‌ ம‌ணி எங்கே என்று தேடிக்கொண்டிருப்பான். காலையில் வெளியில் சென்ற‌ ம‌ணி இன்னும் திரும்பியிருக்க‌ மாட்டான். இன்றைக்கு ம‌ணி வ‌ந்தால் இருக்கிற‌து பூசை என‌ எஜ‌மான‌ன் க‌டுப்பில் இருப்பான். க‌தையின் முடிவில்தான் அவ‌ன் காத்திருந்த ம‌ணி ஒரு நாய் என்ப‌து வாச‌க‌னுக்குத் தெரியும். அப்பா எழுதிய‌ ஒரு க‌தை இவ்வாறுதான் இருந்த‌து. ப‌டித்த‌வுட‌ன் பிடித்துப்போன‌து இக்க‌தை.

இதே போல் க‌ண்ண‌தாச‌னின் குட்டிக்க‌தையில், ஒருவ‌ன் ம‌ண்ச‌ட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடுவான். திடீரென‌ அவ‌ன் கீழே விழ‌ ம‌ண்ச‌ட்டி சித‌றும். பின்ன‌ர் வ‌லியை ம‌ற‌ந்து சிரிக்கும். அவ‌ன் கார‌ண‌ம் கேட்ட‌த‌ற்கு ‘நான் நேற்று ம‌ண்ணாக‌ இருந்தேன், பிற‌கு ம‌ண்ச‌ட்டியாக‌ மாறினேன், இப்போது மீண்டும் ம‌ண்ணாக‌ இருக்கிறேன், நாளை மீண்டும் மண்ச‌ட்டியாவேன்… ஆனால் நீ?’ என்ற‌ கேள்வியோடு க‌தை முடியும். அப்போது பெரிய‌ தாக்க‌த்தை இக்க‌தை ஏற்ப‌டுத்திய‌து. கொஞ்ச‌ நேர‌ம் யோசித்த‌தில் க‌தை எழுதுவ‌து எளிதான‌தாக‌ப் ப‌ட்ட‌து. அப்பாவின் குட்டிக்க‌தையையும் க‌ண்ண‌தாச‌னின் க‌தையும் ஒன்றாக‌ இணைத்து க‌ல‌வை செய்தேன்.

ம‌ணிக்குக் காத்திருக்கும் எஜ‌மான‌ன், ம‌ணி (நாய்) வ‌ந்துவிட‌ நாயை அடிக்க‌ பானையை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். அப்போது கீழே விழ‌ பானை சித‌றி க‌ண்ண‌தாச‌னின் வ‌ச‌ன‌த்தைப் பேசும். ஏற‌க்குறைய‌ இர‌ண்டு பக்க‌ அள‌வில் இருந்த‌ இக்க‌தை வான‌ம்பாடியில் குட்டிக்க‌தை என த‌லைப்பிட்டு வ‌ந்த‌து. அந்த‌ வார‌ம் இர‌ண்டு வான‌ம்பாடிக‌ள் வாங்கினேன். ஒன்றை வீட்டிலும் ம‌ற்ற‌தை ப‌ள்ளியின் த‌மிழ்மொழிக்க‌ழ‌க‌ ப‌ல‌கையிலும் ஒட்டினேன். ஒவ்வொரு நாளும் குறைந்த‌து ஒருவ‌ராவ‌து அந்த‌க் க‌தையைப் ப‌டிக்கும் ப‌டி செய்தேன்.

என் திற‌மையைத் த‌மிழ் ஆசிரியை வாசுகி ந‌ன்கு அடையாள‌ம் க‌ண்டிருந்தார். (த‌லைமையாசிரிய‌ரின் பெய‌ரும் வாசுகிதான்). ப‌ல‌ரின் ஊக்குவிப்பாலும் பாராட்டுத‌லாலும் இனி எழுதினால் சிறுக‌தைதான் என‌ முடிவெடுத்தேன். சிறுக‌தைக்கு உள்ள‌ ம‌க‌த்துவ‌ம் என‌க்கு அப்போதுதான் புரிந்த‌து. இப்ப‌டி முத‌ல் க‌தையிலேயே காப்பிய‌டித்த‌ சிறுக‌தையால் ந‌ன்கு பிர‌ப‌ல‌மான‌து நானாக‌த்தான் இருக்கும்

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 27

இள‌ஞ்செல்வ‌ன் இல்லாத‌ வெறுமையைப் நிர‌ப்பும் வ‌கையில் கும‌ர‌ன் இருந்தார். பாராட்டுக‌ளைத் த‌விர‌ வேறெதுவும் அவ‌ரிட‌மிருந்து வெளிப்ப‌டாத‌து உற்சாக‌மாக‌ இருக்கும். ‘ந‌ல்லா எழுதுற‌டா’ எனும் அவ‌ரின் வார்த்தைக‌ளால் ஒவ்வொரு நாளும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று நான்கு க‌விதைக‌ளாவ‌து பிற‌ப்பெடுக்கும். கும‌ர‌ன் அண்ண‌ன் போல‌வே எல்லோரும் என‌து க‌விதைக‌ளைப் பாராட்டுவார்க‌ள் எனும் ந‌ம்பிக்கை அசைக்க‌ முடியாம‌ல் வ‌ள‌ர்ந்த‌து. அதுவும் ச‌மூக‌த்திற்குப் ப‌ல‌ ந‌ட்க‌ருத்துக‌ளைச் சொல்லும் என் க‌விதைக‌ள் உட‌ன‌டியாக‌ அச்சில் ஏற ‌வேண்டும் என‌ முடிவெடுத்தேன். புத்த‌க‌ம் பிர‌சுரிக்க‌ ஐயாயிர‌ம் ரிங்கிட் தேவை என‌ முன்பு இள‌ஞ்செல்வ‌ன் சொன்ன‌து நினைவிற்கு வ‌ந்த‌து. அந்த‌ வார‌ம் சிங்க‌ப்பூரிலிருந்து விடுமுறைக்கு வ‌ந்திருந்த‌ அப்பாவிட‌ம் சென்று உட‌னே ஐயாயிர‌ம் ரிங்கிட் வேண்டும் என்றேன். அப்பா ஒரு முறை விய‌ந்து பார்த்தார். கார‌ண‌த்தைத் தெரிந்து கொண்டு, இன்னும் நிறைய‌ எழுதி பேர் வாங்கினால் த‌ருவ‌தாகக் கூறினார். நான் எப்ப‌டிப் பேர் வாங்குவ‌தென‌ சிந்திக்க‌த்தொட‌ங்கினேன்.

க‌விதைக‌ள் சிறிய‌வை. பெரும்பாலான‌ என் க‌விதைக‌ளை கூட்ட‌த்தோடு கூட்ட‌மாக‌வே ப‌த்திரிகைக‌ளில் பிர‌சுரித்தார்க‌ள். என‌வே பெரிதாக‌ எதையாவ‌து செய்வ‌தென‌ தீர்மானித்தேன். அப்போது என் க‌ண்ணுக்குத் தெரிந்த‌ வாச‌கிக‌ள் அம்மாவும் அக்காவும்தான். அம்மா தொட‌ர்க‌தைக‌ளை விரும்பி ப‌டிப்பார். அக்காவுக்கும் ம‌ர்ம‌க்க‌தைக‌ள் ப‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் இருந்த‌து. அக்கால‌க் க‌ட்ட‌த்தில் வானொலியில் ஒலிப‌ர‌ப்பாகும் ம‌ர்ம‌தொட‌ர் நாட‌க‌ங்க‌ளையும் அம்மாவும் அக்காவும் செவிம‌டுத்து வ‌ந்த‌ன‌ர். ம‌ர்ம‌ தொட‌ரின் ப‌ல‌ம் என‌க்குப் புரிந்த‌து. நிறைய‌ வாச‌க‌ர்க‌ளைக் க‌வ‌ர்ந்து பேரெடுக்க‌ ம‌ர்ம‌ தொட‌ர்க்க‌தை எழுத‌லாம் என‌ முடிவெடுத்தேன்.

ம‌ர்ம‌க்க‌தை எழுதுவ‌தில் நிறைய‌ குழ‌ப்ப‌ங்க‌ள் இருந்த‌ன‌. ப‌லவாறாக‌ யோசித்தும் ஒன்றும் பிடிப‌ட‌வில்லை. த‌ற்செய‌லாக ஒருநாள் அக்காவின் அறையில் இருந்த‌ ஒரு ம‌ர‌ அல‌மாரியில் ம‌ர்ம‌ நாவ‌லைக் க‌ண்டெடுத்தேன். எழுதிய‌து யார் என்று நினைவில் இல்லை. ஆனால் புத்த‌க‌த்தின் த‌லைப்பு ‘ப‌ற‌க்கும் கூண்டில் ப‌ன்னீர் இள‌வ‌ர‌சி’. அந்த‌ ம‌ர்ம‌ நாவ‌லைப் ப‌ல‌முறை ப‌டித்தேன். எத்த‌னை முறை ப‌டித்தும் சுவார‌சிய‌ம் குறையாம‌ல் இருந்தது. அது போன்ற‌ ஒரு தொட‌ர்க‌தை எழுத‌ வேண்டும் என‌ முடிவெடுத்தேன். ப‌ல‌ முறை எழுதிப் பார்த்தும் ஒழுங்காக‌க் க‌தை வ‌ராம‌ல் த‌க‌ராறு செய்த‌து. வேறு வ‌ழி கிடைக்க‌வில்லை. எத‌ற்கு அது போன்ற‌ ஒரு தொட‌ர்க‌தை என்று அதையே தொட‌ர்க‌தையாக‌ எழுதிவிட்டேன்.

அப்போது ம‌ர்ம‌க் க‌தைக‌ளைப் பிர‌சுரித்த‌ வான‌ம்பாடிக்கு ‘ப‌ற‌க்கும் கூண்டில் ப‌ன்னீர் இள‌வ‌ர‌சியை’ முழுமையாக‌ எழுதி என் பெய‌ரிட்டு அனுப்பிவைத்தேன். ‘ப‌ற‌க்கும் கூண்டில் ப‌ன்னீர் இள‌வ‌ர‌சியை’ என்னை த‌விர வேறு யாரும் ப‌டித்திருக்க‌மாட்டார்க‌ள் என‌ முழுவதுமாக‌ ந‌ம்பினேன். ப‌ல‌ மாத‌ங்க‌ள் காத்திருந்தும் பிர‌சுர‌ம் காணாத‌தால் வெறுப்ப‌டைந்து அடுத்த‌ முய‌ற்சியாக‌ சிறுக‌தை எழுத‌லாம் என‌ முடிவெடுத்தேன். என்ன‌ சிறுக‌தை எழுத‌லாம் என‌ யோசித்த‌போது மீண்டும் ம‌ர‌ அல‌மாரியின் நினைவு வ‌ந்த‌து. தொட‌ர்க‌தைக்கு வ‌ழிகாட்டிய‌ அல‌மாரி சிறுக‌தைக்கு வ‌ழிகாட்டாதா என‌ திற‌ந்தேன்.

க‌ண்ண‌தாச‌னின் குட்டிக்க‌தைக‌ள் முன்புற‌மே இருந்தது.

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 26

நிராக‌ரிப்பு அதிக‌ ச‌க்தி கொண்ட‌து. நிராக‌ரிப்புக் கொண்டிருக்கும் க‌ர‌ங்க‌ள் ஒருவ‌னை வ‌ன்முறையாள‌னாக்க‌வும் சாதனையாள‌னாக்க‌வும் ஒரே அள‌விலான‌ அக்க‌றையைக் கொண்டிருக்கிற‌து. என்னை அங்கீக‌ரித்துக் கொண்டிருந்த‌ ஒரே ஆத்மா அல‌ட்சிய‌ப்ப‌டுத்திவிட்ட‌தாக‌ உண‌ர்ந்தேன். எப்ப‌டியும் பெரிய‌ எழுத்தாள‌னாக‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ம‌ட்டும் ஆழ‌ வேரூன்றிய‌து. எதையாவ‌து செய்து என்னை நான் இள‌ஞ்செல்வ‌னிட‌ம் நிரூபிக்க‌ வேண்டும் என‌ விரும்பினேன். ஆழ்ந்து யோசித்த‌தில் கையில் கிடைத்த‌து ச‌மூக‌ அக்க‌றை எனும் ஆயுத‌ம். நான் திடீரென‌ ச‌முக அக்க‌றை நிறைந்த‌ ஒருவ‌னாக‌ ப‌ரிணாம‌ம் எடுத்தேன்.

த‌மிழ்ச் ச‌மூக‌த்தில் உற‌ங்கி கிட‌க்கும் வீர‌த்தைத் த‌ட்டி எழுப்புவ‌தாக‌வும் மூட‌ப்ப‌ழ‌க்க‌ங்க‌ளைச் சாடுவ‌தாக‌வும் என‌க்குள்ளிருந்து க‌விதைக‌ள் உத‌ய‌மாக‌த் தொட‌ங்கின‌. இப்ப‌டிப் புர‌ட்சி க‌விதை எழுதுப‌வ‌ர்க‌ளெல்லாம் ஏதாவ‌தொரு ப‌ட்ட‌ப்பெய‌ரை வைத்திருப்ப‌தால் நானும் என‌க்கான‌ ப‌ட்ட‌ப்பெய‌ரைத் தேட‌த்தொட‌ங்கினேன். புர‌ட்சி கவி, புர‌ட்சி வீர‌ன், புர‌ட்சி இளைஞன் என‌ ப‌ல‌வாறாக‌ பெய‌ரிட்டும் ஒன்றும் ச‌ரிவ‌ர‌வில்லை. என் பெய‌ர் ‘நக‌ர‌’ வ‌ரிசையில் தொட‌ங்கிய‌தால் ப‌ட்ட‌ப்பெய‌ரோடு சேர்த்து உச்ச‌ரிக்கையில் ஓசை இன்ப‌ம் என் பெய‌ரில் இல்லாத‌து அத‌ற்கு முக்கிய‌க் கார‌ண‌ம். பெரும் சோகத்தோடு புர‌ட்சி என்ற‌ வார்த்தையைக் கைவிட்டேன். ‌’ந‌க‌ர‌’ வ‌ரிசைக்குத் தோதாக‌ எந்த‌ப்ப‌ட்ட‌ப்பெய‌ரும் இல்லாத‌தால் ‘ம‌க‌ர‌’ வ‌ரிசைக்குத் தோதாக‌த் தேடி (அப்பாவின் முத‌ல் எழுத்துக்கு ஏற்றார் போல‌) கிடைத்த‌து ‘ம‌க்க‌ள் க‌விஞ‌ன்’ எனும் ப‌ட்டப்பெய‌ர்.

‘ம‌க்க‌ள் க‌விஞ‌ன் ம‌. ந‌வீன்’ என்ற‌ பெய‌ரை ஒரு த‌ர‌ம் உச்ச‌ரித்த‌ப் போது உட‌ல் சிலிர்த்த‌து. செல்லும் இட‌மெல்லாம் ‘ம‌க்க‌ள் க‌விஞர்’ எனும் அடைமொழியோடு என்னை அழைக்க‌ப்போகும் திர‌ளான‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்தை நினைக்கையில் ஆன‌ந்த‌க்க‌ண்ணீர் சொரிந்த‌து. பெய‌ரை வைத்தால் ம‌ட்டும் போதுமா? அதை பிர‌ப‌ல‌ப் ப‌டுத்த‌ முடிவெடுத்தேன். அப்போது ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் ப‌த்திரிகையில் ஒரு சொல் கொடுத்து அச்சொல்லுக்குக் க‌விதை எழுதும் போட்டி வாரா வார‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. வெற்றிபெரும் க‌விதைக்குப் ப‌ரிசும் கொடுத்தார்க‌ள். அந்த‌ப் போட்டிக்கு நானும் எழுதினேன் ‘ம‌க்க‌ள் க‌விஞ‌ன்’ எனும் அடைமொழியோடு.

ஒருவேளை போட்டியில் வெற்றிபெற்றால் என‌து பெய‌ர் அத‌ன் அடைமொழியோடு பிர‌ப‌ல‌மாகும் என‌ ந‌ம்பினேன். ம‌றுவார‌ம் வெறும் பெய‌ரோடு ப‌த்திரிகையில் என் க‌விதை பிர‌சுர‌மான‌து. ப‌ரிசு கிடைக்க‌வில்லை. என் ப‌ட்ட‌ப்பெய‌ர் இல்லாம‌ல் க‌விதையைப் பிர‌சுரித்த‌ ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன் மேல் கோப‌ம் வ‌ந்த‌து. இந்த‌த் த‌வ‌றுக்கு முக்கிய‌ கார‌ண‌ம் அப்ப‌த்திரிகையின் ஆசிரிய‌ர் ஆதி. கும‌ண‌னாக‌த்தான் இருக்க‌வேண்டும் என‌ ந‌ம்பினேன். அன்றே ஆதி. கும‌ண‌னுக்கு ஒரு க‌டித‌ம் எழுதினேன். அதில் நான் எத்த‌கைய‌ ம‌க‌த்தான‌ க‌விஞ‌ன் என்றும், அந்த‌ப் ப‌ட்ட‌ப்பெய‌ருக்கான கார‌ண‌த்தையும் விரிவாக விள‌க்கி எழுதி அனுப்பினேன்.

அடுத்த‌வார‌ம் அத‌ற்கு அடுத்த‌ வார‌ம் என‌ என‌து க‌விதைக‌ள் வெறும் பெய‌ரோடே வெளிவ‌ந்த‌ன‌. நானே என‌க்கு இட்டுக்கொண்ட‌ ப‌ட்ட‌ப்பெய‌ரை யார் நீங்கியிருப்பார் என‌ இன்றுவ‌ரை தெரிய‌வில்லை. பெரும் ம‌ன‌ச்சோர்வுட‌ன் என் ப‌ட்ட‌ப்பெய‌ர் திட்ட‌த்தை நான் கைவிட்டேன். ஆனாலும் என் ‘ச‌மூக‌ அக்க‌றை’ குறைந்த‌பாடில்லை. வேறொரு திட்ட‌த்திற்குத் த‌யாரானேன்.

-தொடரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 25

ப‌ல‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு இள‌ஞ்செல்வ‌னைப் பார்க்க‌ச் செல்வ‌து என்ன‌வோ போல் இருந்த‌து. என‌து இடைவெளி அவ‌ரிட‌ம் என்னென்ன‌ கேள்விக‌ளை ஏற்ப‌டுத்தியிருக்கும் என்றும் அத‌ற்கு நான் என்னென்ன‌ ப‌தில்க‌ள் த‌ர‌ வேண்டும் என்றும் சிந்தித்த‌ப்ப‌டி சென்றேன். வாழ்வில் திடீரென‌ ஒருவ‌ர் கார‌ண‌மில்லாம‌ல் ம‌ற‌க்க‌ப்ப‌டுவ‌தும் பின்ன‌ர் நினைக்க‌ப்ப‌டுவ‌தும் எல்லா கால‌க்க‌ட்ட‌ங்க‌ளிலும் த‌விர்க்க‌ முடியாத‌தாகி விடுகின்ற‌து. என‌து வ‌ருகையை அலுவ‌ல‌க‌ உத‌வியாள‌ரிட‌ம் கூறி சிற்றுண்டி சாலையில் காத்திருந்தேன். அப்போது காலைப் ப‌ள்ளி முடிந்துவிட்டாலும் இள‌ஞ்செல்வ‌ன் ஏதோ வேலையாக‌ இருந்திருக்க‌ வேண்டும். சிறிது நேர‌ம் க‌ழித்துதான் வ‌ந்தார். அந்த‌ வ‌ருகையும் எனக்கான‌த‌ல்ல‌. என‌க்கு முன் காத்திருந்த‌ இருவ‌ரிட‌ம் நெடுநேர‌ம் உரையாடிய‌ப‌டி இருந்தார். என‌து இருப்பு அவ‌ருக்கு எந்த‌வ‌கையான‌ அவ‌சிய‌த்தையும் ஏற்ப‌டுத்தாம‌ல் இருந்த‌து. அவ‌ர்க‌ள் சென்ற‌தும் என் ப‌க்க‌ம் திரும்பினார். ந‌ட்போடு புன்ன‌கைத்தார்.

புதிதாக‌ எழுதிய‌ சில‌ காத‌ல் க‌விதைக‌ளைக் காட்டினேன். வாசித்துப் பார்த்து சாங்கிய‌த்திற்கு ‘ந‌ன்றாக‌ உள்ள‌து’ என்றார். ஏதோ சில‌ க‌விதை புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றி கூறினார். அவை த‌ன் வீட்டில் உள்ள‌ன‌ என்றும் ஒரு நாள் தான் அதை எடுத்து வ‌ந்து த‌ருவ‌தாக‌வும் கூறினார். அவ‌ர‌து இல்ல‌ம் என‌க்கு ப‌ரிட்ச‌ம் இருந்த‌தால் நானே அவ‌ற்றை அவ‌ர் வீட்டில் வ‌ந்து பெற்றுக்கொள்வ‌தாக‌க் கூறினேன். அத‌ற்கு இள‌ஞ்செல்வ‌ன், “நீங்க‌ இப்ப‌ வ‌ர‌ வேண்டாம். ந‌ல்லா எழுத‌ ஆர‌ம்பிச்ச‌ப் பிற‌கு என் வீட்டுக்கு வ‌ரலாம்” என்றார். வாழ்வில் என‌க்கு விழுந்த‌ மிக‌ மோச‌மான‌ அறை அது.

அத‌ற்குப் பிற‌கு நான் ஒன்றும் பேச‌வில்லை. அவ‌மான‌ உண‌ர்ச்சி சூழ்ந்து கொண்ட‌து. இள‌ஞ்செல்வ‌ன் என‌து ம‌ன‌நிலையை அறிந்து கொண்ட‌வ‌ராக‌வும் தெரிய‌வில்லை. அவ‌ர் எப்போதும் போல‌ பேசிக்கொண்டிருந்தார். என‌க்கு உட‌னே க‌ண்ணாடியைப் பார்க்க‌ வேண்டும் போல் தோன்றிய‌து. ஏதோ கார‌ண‌ம் சொல்லி புற‌ப்ப‌ட்டேன். அவ‌ர் மெர்ஸ்ச‌டிஸ் பென்ஸ் காருக்குப் ப‌க்க‌த்தில் இருந்த‌ என‌து சைக்கிளை எடுக்கும் போது ம‌ன‌தின் க‌ன‌ம் தாளாம‌ல் கீழே விழுந்து விடுவேனோ என்றுகூட‌ ப‌ய‌மாக‌ இருந்த‌து. சைக்கிளை ஓட்டாம‌ல் உருட்டிக்கொண்டே சென்றேன்.

வீட்டுக்குச் சென்ற‌தும் முத‌ல் வேளையாக‌ க‌ண்ணாடியைப் பார்த்தேன். விள‌க்கொளி இல்லாத‌ என் அறையில் முக‌த்தைப் பார்க்க‌ சிர‌மமாக‌ இருந்தது. எழுத்தின் மேலும் இல‌க்கிய‌த்தின் மேலும் வெறுப்பு ஏற்ப‌ட்ட‌து. ஒருவ‌ர் வீட்டுக்குச் செல்ல‌ எதிர்ப்பார்க்க‌ப்ப‌டும் த‌குதி, நான் க‌ன‌விலும் எண்ணாத‌து. அன்று முழுதும் யாரிட‌மும் பேச‌வில்லை. மிஞ்சிப்பேசினால் ப‌ல‌ நாட்க‌ளாக‌ இல்லாம‌ல் இருந்த‌ திக்குவாய் அதிக‌மாக‌ ஆக்கிர‌மித்த‌து.

இள‌ஞ்செல்வ‌ன் போன்ற‌ உய‌ர‌ம் இல்லை; நிற‌ம் இல்லை; தெளிவான‌ பேச்சு இல்லை; மெர்ஸ்ச‌டிஸ் வ‌ண்டி இல்லை. இப்ப‌டி என்னிட‌ம் இல்லாத‌வ‌ற்றைப் ப‌ற்றியே அதிக‌ம் எண்ணிக்கொண்டிருந்தேன். இனி இளஞ்செல்வ‌னைப் பார்ப்ப‌தில்லை என‌ ம‌ன‌திற்குள் முடிவெடுத்துக்கொண்டேன்.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 24

முத‌ல் நாள்…

இர‌ண்டாவ‌து நாள்…

மூன்றாவ‌து நாளுக்குப் பிற‌கு அவ‌ள் தன‌து நிழ‌ல்ப‌ட‌ம் கேட்ப‌தை ம‌ற‌ந்திருந்தாள். புகைப்ப‌ட‌த்தை என்னிட‌ம் கேட்டுப்பெறுவ‌தைத் தாண்டி நாங்க‌ள் உரையாட‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் இருந்த‌ன‌. நிழ‌ல்ப‌ட‌ம் குறித்தான‌ பேச்சுக‌ளை அவ‌ளே த‌விர்த்தாள் என்றுதான் சொல்ல‌வேண்டும். அதற்கு ப‌திலாக‌ நான் அதுவ‌ரை எழுதி சேமித்து வைத்திருந்த‌ க‌விதைக‌ள் அட‌ங்கிய‌ப் புத்த‌க‌த்தை அவ‌ளிட‌ம் கொடுத்தேன். ஒரு த‌ர‌ம் வாசித்து விய‌ந்தாள். சில‌வ‌ற்றிற்கு அர்த்த‌ம் கேட்டாள். என் அறிவை பிழிந்து புதிது புதிதாக‌ அர்த்த‌ங்க‌ள் சொன்னேன். என‌து சில‌ க‌விதைக‌ள் அவ‌ளைக் க‌வ‌ர்ந்த‌து என‌ உறுதியாக‌க் கூற‌ முடியும். அதுபோல‌ என் க‌விதைக‌ள் எல்லா பெண்க‌ளையும் க‌வ‌ரும் என‌ தீர்க்க‌மாக‌ ந‌ம்பினேன். என‌க்குள் காத‌ல் க‌விதைக‌ள் ஊற்றெடுக்க‌த் தொட‌க்கின‌. அவை ப‌தினாறு வ‌ய‌தில் இருக்கும் அனைத்து அழ‌கான‌ பெண்க‌ளுக்கும் உடைய‌வை.

பொய்க‌ள் என‌க்கு நெருங்கிய‌ தோழ‌னாக‌ மாறிய‌து. பேசும் மூன்று வாக்கிய‌த்தில் ஒரு பொய்யாவ‌து நிச்ச‌ய‌ம் இருக்கும். க‌ற்ப‌னையின் எல்லா சாத்திய‌ங்க‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ பொய் மிக‌ப்பெரிய‌ வாக‌ன‌ம். இல்லாத‌ பெண்க‌ளுக்காக‌வும், இல்லாத‌ வாழ்வுக்காக‌வும், இல்லாத‌ சோக‌த்திற்காக‌வும் என்னை நான் எப்போதும் த‌யாராய் வைத்திருந்தேன். மிக‌ விரைவில் நாங்க‌ள் காத‌லிக்க‌ ஆர‌ம்பித்திருந்தோம்.

எங்க‌ள் காத‌ல் என‌க்கு ச‌ந்தோச‌மாக‌வும் அவ‌ளுக்குத் துக்க‌முமாக‌வுமே ஒவ்வொரு நாளும் வ‌ள‌ர்ந்த‌து. நூல‌க‌ம், சைக்கிள் நிறுத்தும் ப‌குதி, ம‌ர‌த்த‌டி என‌ எங்கு அவ‌ளைப் பார்த்தாலும் ச‌ட்டென‌ பின்னால் கால்ச‌ட்டைப் பையிலிருந்து க‌விதையை உருவி வாசிக்க‌த் தொட‌ங்கிவிடுவேன். ஏதோ சொல்ல காத்திருந்த‌ அவ‌ளுக்கு எந்த‌ இட‌மும் த‌ராம‌ல் என‌து க‌விதைக‌ள் காலி இட‌ங்க‌ளை நிர‌ப்பிவிடும். க‌விதை இல்லாத‌ ச‌ம‌ய‌த்தில் ஆக‌க் க‌டைசியாக‌ என்னிட‌ம் அடிப‌ட்ட‌வ‌னைப் ப‌ற்றி பேச‌த்தொட‌ங்குவேன். எத‌ற்கும் அவ‌ள் ப‌தில் கூறிய‌தில்லை. அவ‌ளுக்குக் காத‌லிக்க‌த் தெரிந்திருக்க‌ வேண்டும். ஏக்க‌மான‌ பார்வைக‌ளோடு நித்த‌ம் நித்த‌ம் என்னைக் க‌ட‌ந்த‌வ‌ளின் அதிர்வுக‌ளை அறியாம‌ல் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ன‌ என‌து காத‌ல் க‌விதைக‌ள்…

காத‌ல் க‌விதைக‌ள் வ‌ற்றாம‌ல் பெருக்கெடுக்கும் அதிச‌ய‌ம் நிக‌ழும் என‌க்குள்ளான‌ இட‌ம் எப்போதும் க‌ன‌த்துத் தொங்கும். இதை எழுதும் இந்த‌ நிமிட‌ம் கூட‌ அந்த‌ ம‌ன‌ நிலையை மிகுந்த‌ நுட்ப‌த்தோடு உண‌ர‌ முடிகிற‌து. அந்த‌ச் ச‌ம‌ய‌ங்க‌ளில் என‌க்கு இருந்த‌ ஒரே ஒரு நெருக்க‌மான‌ வாச‌க‌ர் கும‌ர‌ன் அண்ண‌ன்.

“ந‌ல்லா இருக்குடா…வைர‌முத்து க‌விதை மாதிரி இருக்குடா…” எனும் அவ‌ரின் பாராட்டு எழுத‌ மேலும் தெம்பினைக் கொடுத்த‌து. இன்று சிங்க‌ப்பூரில் வேலை செய்யும் அவ‌ர் என்னைவிட‌ ஒரு வ‌ய‌து மூத்த‌வ‌ர். அவ‌ர் வாசிக்கும் ஆங்கில‌ நாவ‌ல்க‌ளும், பெரியாரிய‌லும், விடுத‌லைப்புலிக‌ள் தொட‌ர்பான‌ செய்திக‌ளும் அந்த‌க்கால‌க்க‌ட்ட‌த்தில் என‌க்கு அந்நிய‌மாய் இருந்த‌ன‌. வெல்ல‌ஸிலி மாரிய‌ம்ம‌ன் கோயில் த‌லைவ‌ரின் ம‌க‌னான‌ அவ‌ர், ஆர‌ம்ப‌த்தில் கோயில் அர்ச்ச‌க‌ராக‌ப் ப‌குதி நேர‌மாக‌ப் ப‌ணியாற்றி பின்ன‌ர் பெரியாரால், குடும்ப‌த்தோடு ஒத்துப்போக‌ முடியாம‌ல் த‌னி ஒரு அறையில் த‌ங்கியிருந்தார். லுனாஸ் எனும் ஒரு சிற்றூரில் த‌ன்ன‌ந்த‌னியாக‌ இருந்த அவ‌ர் என‌க்கு ஏற்ப‌டுத்திய‌ சிற்றித‌ழ் அறிமுக‌ங்க‌ள், பெரியாரிய‌ல், மார்க்ஸிய‌ம், ஓஷோ என‌ எல்லாமுமே அப்போது ப‌ய‌ன்ப‌ட‌வில்லை.

என்னிட‌ம் இருந்த‌வை காத‌ல் க‌விதைக‌ள். சில‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு அவ‌ள் மீண்டும் அழுத்த‌மாக‌க் கேட்டாள்.

“என் ஃபோட்டோ எங்க‌?”

‘க‌விஞ‌னாய் ம‌ட்டுமே
இருந்த‌ நான்
முத்த‌மிட்டு முத்த‌மிட்டே
வ‌ர்ண‌ம் க‌லைந்த‌ உன் புகைப்ப‌ட‌த்தால்
ஓவிய‌னானேன்
முத‌ன் முதலாய்’ என்றேன்.

இப்ப‌டி என்னிட‌ம் இருந்த‌வை காத‌ல் க‌விதைக‌ள் ம‌ட்டும்தான்.

-தொடரும்