திற‌ந்தே கிட‌க்கும் டைரி

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 13

இள‌ஞ்செல்வ‌னின் பேச்சைக் கேட்ப‌து இனிமையான‌ அனுப‌வ‌ம்.என்னையும் ஒரு பொருட்டாக‌ ம‌தித்து அவ‌ர் த‌ன‌து எண்ண‌ங்க‌ளைப் ப‌கிர்ந்து கொண்ட‌தை இப்போது நினைத்தாலும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ர், தான் செய்த‌ இல‌க்கிய‌ வாத‌ங்க‌ளைத் தொகுத்து ஒரு புத்த‌க‌மாக‌ப் போட‌ எண்ணியிருந்தார். “அப்ப‌டிப் போட்டா நல்லா இருக்கும்ல‌…” என‌ வின‌விய‌வ‌ரிட‌ம் என்ன‌ சொல்வ‌தென்று தெரியாம‌ல் ஒரு மார்க்க‌மாக‌த் த‌லையாட்டி வைத்தேன். “போட‌ணும்… போட‌ணும்” என்றார். அல்ல‌து த‌ன‌க்குத் தானே கூறிக்கொண்டார்.

ஒரு முறை அவ‌ரிட‌ம் நான் எழுதிய‌ முத‌ல் சிறுக‌தையை எடுத்துச்சென்று காட்டினேன். ப‌டித்துப் பார்த்த‌வ‌ர் “நான் சொன்ன‌ க‌டையில‌ புத்த‌க‌ம் எடுத்து ப‌டிக்கிறீங்க‌ளா?” என‌க்கேட்டார். பின் அவ‌ரே “நிறைய‌ ப‌டிங்க‌” என்றார்.

என்னைப் பொறுத்த‌வ‌ரை த‌ன‌க்குத் தானே பேசிக்கொள்வ‌தை த‌விர்க்க‌ இள‌ஞ்செல்வ‌னுக்குப் ப‌ய‌ன்ப‌ட்ட‌ க‌ருவி நான். அப்ப‌டி ஒரு க‌ருவியாய் இருப்ப‌து என‌க்கும் பிடித்திருந்த‌து. சொற்க‌ளைச் சேக‌ரிக்கும் பெட்டி போல்.யாருக்கும் தெரியாம‌ல் ம‌றைத்து வைத்திருக்கும் ஆண‌வ‌த்தின் குர‌லை என்னிட‌ம் காட்ட‌ இள‌ஞ்செல்வ‌னுக்கு வ‌ச‌தியாய் இருந்த‌து. என‌க்கும் அதை ஏந்தி கொள்வ‌தில் எந்த‌த் த‌டையும் இருந்த‌தில்லை. ஒரு வேளை அது ஆண‌வ‌ம் என‌ அப்போது நான் அறியாம‌ல் இருந்திருக்க‌லாம்.

புதுமைப்பித்த‌னைப் பற்றியும் ஜெய‌காந்த‌ன் ப‌ற்றியும் ஓரிரு முறை கூறியுள்ளார். புதுமைப் பித்த‌னின் சில‌ க‌தைக‌ளை அவ‌ராக‌வே கூறி அவ‌ராக‌வே விய‌ப்பார். அவ‌ருக்குத் துணையாக‌ வேறு வ‌ழியே இன்றி நானும் விய‌ப்ப‌து போல‌ பாவ‌னை செய்வேன். என‌க்கு அப்போது தெரிந்த‌தெல்லாம் வைர‌முத்து ம‌ற்றும் மேத்தா ம‌ட்டுமே. அந்த‌ மாபெரும் இல‌க்கிய‌ ஜாம்ப‌வான்க‌ளைப் ப‌ற்றி இள‌ஞ்செல்வ‌ன் பேசாத‌து வ‌ருத்த‌மாக‌ இருக்கும். அப்ப‌டி அவ‌ர் பேச‌ப்போகும் ஒரு தின‌த்தில் இடையில் புகுந்து எடுத்து விட‌ வைர‌முத்து க‌விதைக‌ள் சில‌வ‌ற்றை ம‌ன‌ன‌ம்கூட‌ செய்து வைத்திருந்தேன்.

அனேக‌மாக‌ வெல்ல‌ஸில் த‌மிழ்ப்ப‌ள்ளியில் என்னுடைய‌ வ‌ருகையும் இள‌ஞ்செல்வ‌னுட‌னான‌ ச‌ந்திப்பும் வ‌ழ‌க்க‌த்துக்குள்ளாகிவிட்ட‌ ஒரு சூழ‌லில் இள‌ஞ்செல்வ‌னைக் காண‌ அன்றும் ப‌ள்ளிக்குச் சென்றேன். ப‌ள்ளியில் அவ‌ர் கார் இல்லை. அந்த‌ப் ப‌ள்ளியில்தான் என‌து ஆர‌ம்ப‌ க‌ல்வியை முடித்திருந்த‌தால் ஆசிரிய‌ர்க‌ள் ப‌ல‌ர் ந‌ல்ல‌ப் ப‌ழ‌க்க‌ம். அதில் ஓர் ஆசிரிய‌ர் “ஆதி. கும‌ண‌ன் வ‌ந்திருக்கிறார். அவருட‌ன் வெளியேறி இருக்கிறார்” என‌க் கிசுகிசுத்தார்.

ஆதி. கும‌ண‌ன் என்ற‌தும் என‌க்கு விய‌ப்பு ஏற்ப‌ட்ட‌து. அப்போது ஆதி. கும‌ண‌ன் ச‌ர்ச்சைக் குறிய‌வ‌ராக‌வும் த‌ன‌க்கென‌ மிக‌ப்பெரிய‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌த்தைக் கொண்ட‌வ‌ராக‌வும் இருந்தார். அவ‌ரின் ‘ஞான‌பீட‌ம்’ப‌குதி ப‌ல‌ராலும் விரும்பி வாசிக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. அவ‌ர‌து ‘பார்வைக‌ள்’ க‌ட்டுரை தொகுதியையும் வாசித்து முடித்திருந்தேன். ம‌லேசிய‌ ந‌ண்ப‌ன், ம‌க்க‌ள் ஓசை, இத‌ய‌ம் என‌ பெரிய‌ ப‌த்திரிகை அதிப‌தியாக‌ விள‌ங்கினார் ஆதி.

அடித்த‌து லாட்ட‌ரி. ஆதி. கும‌ண‌னைச் ச‌ந்தித்து என‌து க‌தைகளையும் க‌விதைகளையும் கொடுத்து பிர‌சுரிக்க‌ச் செய்ய‌ வேண்டும் என‌ முடிவெடுத்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தேன். லுனாஸ் ட‌வுன் முச்ச‌ந்தியில் உள்ள‌ ‘ஹீத்தாம் மானிஸ்’ க‌டையின் ஓர‌மாக‌ இள‌ஞ்செல்வ‌னின் பென்ஸ் கார் நின்ற‌து. க‌ருப்பு க‌ண்ணாடியால் சூழ‌ப்ப‌ட்ட‌ க‌டை அது. இதுவ‌ரை நான் உள்ளே நுழைந்த‌தில்லை. வ‌ழ‌க்க‌மான‌ க‌டைக‌ளைவிட‌ அங்கே ச‌ற்று விலை அதிக‌ம் என‌க் கேள்வி ப‌ட்ட‌துண்டு. மெதுவாக‌ க‌டையை நெருங்கினேன். உள்ளேதான் அவ‌ர்க‌ள் இருக்க‌ வேண்டும். இரு கைக‌ளையும் ப‌க்க‌வாட்டில் வைத்து ஒளியை ம‌றைத்த‌ப‌டி க‌ண்ணாடியில் முக‌ம் அழுத்தி உள்ளே பார்த்தேன்.

இள‌ஞ்செல்வ‌னும் ஆதி. கும‌ண‌னும் சில‌ பீர் பாட்டில்க‌ளோடு க‌ண்ணாடி கிளாஸில் நுரை பொங்க‌ அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

– தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 12

ச‌ர‌வ‌ண‌னுக்கும் என‌க்கும் இடையில் மெல்லிய‌ இடைவெளி விழுந்திருந்த‌து. சொற்க‌ளால்… புன்ன‌கையால்… உத‌விக‌ளால் நிர‌ப்ப‌முடியாத‌ சூட்சுமமான‌ இட‌வெளி. அந்த‌ இடைவெளி குறித்து நாங்க‌ள் இருவ‌ருமே பேச‌ விரும்ப‌வில்லை. அது குறித்து பேசுவ‌து மேலும் பிரிவின் வேக‌த்தை அதிக‌ரிக்குமோ என்ற‌ எண்ண‌ம் எங்க‌ள் இருவ‌ருக்குமே இருந்தது. ம‌ன‌தின் ஓர் அந்த‌ர‌ங்க‌மான‌ ப‌குதி விம்பி புடைத்து அத‌ன் அதிர்வை உட‌ல் முழுதும் ப‌ர‌வ‌ செய்த‌ப‌டி இருந்தது. இப்போதும் அந்த‌ உண‌ர்வை அத‌ன் முழுத் த‌ன்மையோடு என்னால் மீட்டுக்கொண‌ர‌ முடிகிற‌து.

ச‌ர‌வ‌ண‌ன் வீட்டின் முன் நிர்ப்பேன். அவ‌ன் த‌ன‌து சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னோடு ப‌ள்ளிக்குக் கிள‌ம்புவான். ஓய்வு நேர‌ம் என‌க்காக‌க் காத்திருந்து சிற்றுண்டிச்சாலை நோக்கி ந‌ட‌ப்பான். வீட்டிற்கு திரும்புகையில் ஒன்றாக‌ செல்வோம். முத‌லில் அவ‌ன் வீடு வ‌ரும். நெடிய‌ மௌன‌த்தை கைவிடாம‌ல், ஹேண்ட‌லைப் பிடித்த‌ப‌டி விர‌ல்க‌ளை ம‌ட்டும் தூக்குவான். ச‌ம‌ய‌ங்க‌ளில் அதுவும் இல்லை. வீட்டிற்குத் திரும்பிய‌தும் அவ‌னிட‌மிருந்து வ‌ர‌ப்போகும் அழைப்புக்காக‌க் காத்திருப்பேன். அடிக்க‌டி அவ‌ன் வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்து குர‌ல் கேட்ட‌தும் வைத்து விடுவேன். அவ‌ன் வீட்டில் இருப்ப‌தை ம‌ட்டும் உறுதி செய்து கொள்வேன். தொலைபேசிக்குப் ப‌தில் இல்லையென்றால் அவ‌ன் என் வீடு நோக்கி வ‌ருவ‌தாக‌க் க‌ற்ப‌னை செய்து கொள்வேன். அப்படி ந‌ம்பி ஏமாறும் ப‌ட்ச‌த்தில் அவ‌ன் யாரோ ஒரு புதிய‌ ந‌ண்ப‌னுட‌ன் ஊர் சுற்றுவ‌தாக‌ எண்ண‌ம் வ‌ரும். ம‌ன‌ம் வ‌லிக்கும்.

எழுத்திலும் இல‌க்கிய‌த்திலும் நான் காட்டிய‌ தீவிர‌ம் ச‌ர‌வ‌ண‌னுக்கு ம‌ன‌த்த‌டையை ஏற்ப‌டுத்தியிருந்த‌து. அதிலும் இள‌ஞ்செல்வ‌னுட‌ன் என‌க்கு ஏற்ப‌ட்ட‌ நெருக்க‌ம் அவ‌ன் எதிர்பாராத‌து.

‘டே எழுத்தாள‌னுங்க‌ளே பொய் கார‌னுங்க‌டா… சும்மா பேப்ப‌ருல‌ எழுதி என்னாத்த‌டா கிழிச்சானுங்க‌… ஒரு த‌மிழ‌னுக்கு அடிப்ப‌ட்டு ர‌த்த‌ம் கொட்டும் போது தொடைக்க‌ தைரிய‌ம் வ‌ருமா? கொட்ட‌ சுறுங்கிங்க‌தான் எழுத‌ போவானுங்க‌…’ எழுத்து, இல‌க்கிய‌ம், இள‌ஞ்செல்வ‌ன் இதில் எது குறித்து பேசினாலும் ஆத்திர‌ம் அடைந்த‌வ‌ன் பின் த‌ன‌து நெடிய‌ மௌன‌த்தால் என்னைத் த‌ண்டிக்க‌த் தொட‌ங்கியிருந்தான். அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ங்க‌ள் என‌க்குப் பொய்யாக‌ப் ப‌ட்ட‌து. அவ‌ன் சொற்க‌ளில் அரை ஜீவ‌ன் ம‌ட்டுமே இருந்தது. நான் தொட‌ர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். ச‌ர‌வ‌ண‌ன் வில‌கி கொண்டே சென்றான்.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 11

ஒவ்வொரு நாளும் ப‌த‌ற்ற‌மாக‌வே விடிந்தது. ஒரு பிரிய‌த்தை த‌க்க‌ வைத்துக்கொள்ளும் ப‌த‌ற்ற‌ம் அது. உருப்ப‌டாத‌வன், அஞ்ச‌டி கார‌ நாய், பொறுக்கி என்று கேட்டுக் கேட்டே ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ என் காதுக‌ளுக்கு முத‌ன் முத‌லாக‌ ந‌ம்பிக்கையான‌ வார்த்தைக‌ள் இள‌ஞ்செல்வ‌னிட‌மிருந்துதான் கிடைத்த‌ன‌. பிற‌ர் சொற்க‌ளின் மூல‌மாக‌ என்னையே நான் க‌ட்ட‌மைத்துக் கொண்ட‌ ம‌ண‌ல் சுவ‌ரு இள‌ஞ்செல்வ‌ன் மூல‌மாக‌ உதிர்ந்து உதிர்ந்து உருவ‌ம் இழ‌ந்த‌து. தொட‌ர்ந்த‌ ச‌ந்திப்புக‌ளில் இள‌ஞ்செல்வ‌ன் என் மீது வைத்த‌ ந‌ம்பிக்கையும் என்னை ந‌ம்புவ‌தற்கான‌ அடையாள‌மாய் அவ‌ர் காட்டிய‌ சின்ன‌ஞ் சிறிய‌ பிரிய‌ங்க‌ளும் ஒரு வ‌கையான‌ கூச்ச‌த்தைக் கொடுத்த‌து.

இள‌ஞ்செல்வ‌ன் வ‌ழிகாட்ட‌லில் மு.மேத்தாவையும் வைர‌முத்துவையும் முத‌ன் முத‌லாக‌ வாசிக்க‌ ஆர‌ம்பித்திருந்தேன். ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌மாக‌ புத்த‌க‌ங்க‌ள் கொடுத்த‌ அந்த‌ ஆசிரியை (‘வீரா நாவ‌ல்’ உரிமையாள‌ர்) சில‌ வார‌ங்க‌ளுக்குப் பிற‌கு ப‌ண‌ம் எதிர்ப்பார்க்க‌த் தொட‌ங்கியிருந்தார். அது குறித்து இள‌ஞ்செல்வ‌னிட‌ம் சொல்வ‌து ச‌ரியில்லை என‌ப்ப‌ட்ட‌து. தீவிர‌மாக‌ப் ப‌ண‌ம் சேர்க்க‌த் தொட‌ங்கினேன்.

முத‌லில் பினாங்கு செல்வ‌தைத் த‌விர்த்தேன். வீட்டில் ம‌ளிகைப் பொருட்க‌ள் வாங்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். பொருட்க‌ளின் விலை திடீரென‌ உய‌ர்ந்திருப்ப‌தைக் க‌ண்டு அம்மா அதிர்ச்சிய‌டைந்தார். அதோடு க‌டைக்கார‌ர்க‌ள் என்னைச் சின்ன‌ப்ப‌ய‌ல் என்று ஏமாற்றுவ‌தாக‌ ந‌ம்பினார். இப்ப‌டி இர‌ண்டு வார‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்தாலே ஒரு புத்த‌க‌ம் வாட‌கைக்கு எடுப்ப‌த‌ற்கான‌ ப‌ண‌ம் சேர்ந்துவிடும்.ஒரு புத்த‌க‌ம் என‌க்கு ஒரு வார‌த்திற்குத் தாங்க‌வில்லை. மேலும் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ வேண்டும். புத்த‌க‌ம் வாங்க‌ வேண்டும். வேறு வ‌ழியில்லை ப‌ள்ளியில் க‌விதைக‌ள் விற்க‌த் தொட‌ங்கினேன்.

அப்போது எங்க‌ள் ப‌ள்ளியில் நிறைய‌ பேர் எப்போதும் போல‌ அப்போதும் காத‌ல் வ‌ய‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ பொத்தி பொத்தி வைத்த‌ அவ‌ர்க‌ள் காத‌லை தெரிவிக்க‌வும் அன்பைப் ப‌கிந்துகொள்ள‌வும் அவ‌ர்க‌ளுக்கு அவ‌ச‌ர‌மாக‌க் க‌விதை தேவைப்ப‌ட்ட‌து. பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌மெல்லாம் ‘ம‌க்க‌ள் ஓசை’ வாங்கும்ப‌டி நான் பிர‌ச்சார‌ம் செய்து கொண்டிருந்த‌தால் ப‌ல‌ரும் என‌க்கு எழுத‌ வ‌ரும் என‌ அடையாள‌ம் க‌ண்ட‌ன‌ர். த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை நான் எப்ப‌டியெல்லாம் க‌விதையாக்க‌ வேண்டும் என்று ம‌ன‌முருகி வ‌ர்ணிப்ப‌ர். ப‌ள்ளி முடிவ‌த‌ற்குள் நான் அவ‌ர்க‌ள் சொல்ல‌ நினைத்த‌தை க‌விதையாக்கி கொடுத்துவிடுவேன். ஒரு க‌விதைக்கு 50 காசு கிடைக்கும். என் அரைகுறை த‌மிழ் அப்போதே என‌க்கு 50 காசு கொடுத்த‌து.

சில‌ர் எழுதிய‌ க‌விதையை வாசித்து காட்ட‌ச் சொல்வார்க‌ள். ஒவ்வொரு வ‌ரிக்கும் பின்ன‌ர் ‘அப்ப‌டினா… அப்ப‌டினா’ என‌க் கேட்க‌ நான் விள‌க்க‌ உரையையும் ஆற்றிய‌ப‌டி செல்வேன். ‘இத‌தாண்டா ம‌ச்சு (எங்க‌ள் ஊரில் ம‌ச்சான் என்ப‌து ம‌ச்சியாக‌ திரிந்து பின் ம‌ச்சுவாக‌ மாறியிருந்தது)நான் எதிர்ப்பார்த்தேன்…’ என‌ க‌விதையைக் க‌ண்ணில் ஒற்றிக்கொண்டு செல்வார்க‌ள். இப்ப‌டி செல்ப‌வ‌ர்க‌ள் மிக‌க் குறைவான‌வ‌ர்க‌ள்தான். பெரும்பாலோர் ‘ம‌ச்சு…அது ‘ஈ’ கிளாஸ் ப‌டிக்குதுடா இதெல்லாம் புரியாதுடா…சின்னாங்கா எழுதுடா…நான் அவ‌ள‌ ல‌வ் ப‌ண்ணுற‌ன்டா…ப‌ய‌ந்து ஓடிட‌ போகுதுடா’ என‌ கெஞ்சுவார்க‌ள்.

இது போன்ற‌வ‌ர்க‌ளுக்கு எழுதுவ‌து மிக‌ சுல‌ப‌ம்…

‘நீ ஒரு நிலா
இனிய‌ பலா’…

என்ப‌ன‌ போன்ற‌ வ‌ரிக‌ள் இருந்தால் போதுமான‌து. அவ‌ர்க‌ள் தேவை ஒன்றே ஒன்றுதான். க‌விதையில் க‌ண்டிப்பாக‌ ‘ம‌யில், நிலா, வான‌வில்…’ போன்ற‌ சொற்க‌ள் இருக்க‌ வேண்டும். இந்த‌ச் சொற்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ள் எத்த‌னை முறை வேண்டுமானாலும் ஐம்ப‌து சென் செல‌வு செய்ய‌த் த‌யாராக‌ இருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ள் மூல‌ம் என‌க்கு ஒன்றே ஒன்று புல‌ப்ப‌ட்ட‌து. ‘க‌விதை எல்லோருக்கும் புரியும்ப‌டி இருக்க‌ வேண்டும்.’

நான் ஒரு ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ க‌விஞனாக‌ உருவாகிக் கொண்டிருந்தேன்.

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 10

நான் போகும் போது இள‌ஞ்செல்வ‌ன் அலுவ‌ல‌க‌த்தில் இல்லை. ப‌ள்ளி காண்டினில் அம‌ர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருந்தார். என்னைக் க‌ண்ட‌தும் “ந‌வீன் வாங்க‌” என்ற‌வ‌ர் என‌க்கும் தேனீரை காண்டினில் ப‌ணித்தார். “உங்க‌ க‌விதையெல்லாம் ப‌டிச்சேன். ந‌ல்லா இருக்கு. நீங்க அதிக‌ம் வாசிக்க‌ணும். வாசிக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் உண்டா?” என்றார்.

“உண்டு” என்றேன் அழுத்த‌மாக‌.

“எந்த‌க் க‌விஞ‌ர்க‌ளை வாசித்திருக்கிறீர்க‌ள்” என்றார்.

“அக்கினி, ஜாசின் தேவ‌ராஜ‌ன், பா.ராமு, வ‌ன‌ஜா” என்றேன். என்னை ஏற‌ இற‌ங்க‌ பார்த்த‌வ‌ர்,

“ம‌ற்ற‌ மூவ‌ர் ச‌ரி, யார் அந்த‌ வ‌ன‌ஜா?” என்றார்.

“ந‌ய‌ன‌த்துல‌ இத‌ய‌ம் துடிக்கிற‌து ப‌குதிக்கு எழுதுவாங்க‌. பெரிய‌ க‌விஞ‌ர் சார்” என்றேன். ந‌ல்ல‌ க‌விஞ‌ர்க‌ளையெல்லாம் இள‌ஞ்செல்வ‌னுக்குத் தெரியாதது வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து. இள‌ஞ்செல்வ‌ன் கொஞ்ச‌ நேர‌ம் அமைதி காத்தார். அவ‌ர் ப‌ள்ளியில் உள்ள‌ ஒரு ஆசிரியையை அழைத்தார். அந்த‌ ஆசிரியை ‘வீரா நாவ‌ல்’ எனும் புத்த‌க‌க் க‌டையைப் ‘பாயா பெசாரில்’ தொட‌ங்கி ந‌ட‌த்தி வ‌ந்தார்.

அங்கு ச‌ற்று வித்தியாச‌மாக‌, த‌மிழ் புத்த‌க‌ங்க‌ளை வாட‌கைக்கு விடப்ப‌ட்ட‌து. புத்த‌க‌ விலையில் 25% ம‌ட்டுமே வாட‌கை. இள‌ஞ்செல்வ‌ன் அவ‌ரிட‌ம் என்னை அறிமுக‌ம் செய்து சில‌ புத்த‌க‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளைக் கூறி, என‌க்கு அவ‌ற்றைத் த‌ரும்ப‌டி ப‌ணித்தார். அந்த‌ ஆசிரியையும் எந்த‌ குறிப்பும் எடுக்காம‌ல் த‌லையை த‌லையை ஆட்டிக்கொண்டார்.

அவ‌ர் சென்ற‌வுட‌ன் இள‌ஞ்செல்வ‌ன் மிக‌ இய‌ல்பாக‌ப் பேச‌த்தொட‌ங்கினார். “நான் கொஞ்ச‌ம் ச‌ண்ட‌கார‌ன். இந்த‌ ம‌ர‌பு க‌விஞ‌ர்க‌ளோட‌ ஆர‌ம்ப‌த்துல‌ நிரைய‌ ச‌ண்டை போட்டிருக்கேன். அண்மையில‌ சீனி நைனா ‘க‌ட‌லோர‌க் க‌விதைக‌ள்’ன்னு எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம் செஞ்ச‌ புதுக்க‌விதை திற‌னாய்‌ ‘க‌ட‌லோர‌க் க‌ழுதைக‌ள்னு’ உங்க‌ள் குர‌ல்லு கிண்ட‌ல் ப‌ண்ணியிருக்கிறாரு. ப‌டிச்சீங்க‌ளா?” என‌ வின‌வினார்.

‘யார் சீனி நைனா?… லுனாஸுல‌ சீனி விக்கிற‌ ஒரே த‌மிழ் க‌டை அம்புல‌ங்க‌டை. க‌டைக்கார‌ர் பேரு அம்ப‌ல‌ம்’ என‌ கேட்க‌ நினைத்தேன்.

என் ப‌திலுக்குக் காத்திருக்காம‌ல், “அவ‌ருக்கு நான் ப‌திலுக்குப் போட்டேன் ‘நைனாக்க‌ள் நாக்கு வ‌ளித்த‌ மைனாக்க‌ள்’ன்னு”. அத‌ன் பின்ன‌ர் இள‌ஞ்செல்வ‌னின் பேச்சுக‌ள் நீண்ட‌து. என‌க்குப் பெரும் ப‌குதி விள‌ங்க‌வில்லை. அவ‌ர் விர‌ல்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ மெல்லிய‌ ந‌டுக்க‌ம் ம‌ட்டும் என் க‌வ‌ன‌த்தை ஈர்த்த‌ப‌டி இருந்த‌து. இள‌ஞ்செல்வ‌ன் பேச்சுக‌ளில் பெரும்பாலும் அவ‌ர் ம‌ர‌புக்க‌விஞ‌ர்க‌ளோடு செய்த‌ வாக்குவாத‌ங்க‌ளும் இல‌க்கிய‌ விவாத‌ங்க‌ளுமே இருந்த‌ன‌.அவையெல்லாம் முத‌லில் சுவார‌சிய‌மாக‌வும் பின்ன‌ர் அலுப்பையும் கொடுத்த‌ன‌. அவ‌ருக்காக‌ ஏதாவ‌து செய்ய‌வேண்டும் போல் இருந்தது. அத‌ன் மூல‌ம் அவ‌ருட‌னான‌ ந‌ட்பை வ‌லுப்ப‌டுத்த‌ எண்ணினேன்.

உட‌லில் வ‌ர்ம‌ம் உள்ள‌ இர‌ண்டு ப‌குதிக‌ளையும் அவ‌ற்றைத் தீண்ட‌ வேண்டிய‌ முத்திரைக‌ளையும் அப்போது சில‌ம்ப‌ ஆசிரிய‌ர் உத‌வியால் ஓர‌ள‌வு அறிந்து வைத்திருந்தேன். இள‌ஞ்செல்வ‌ன் சொன்ன‌ப் ப‌ட்டிய‌லில் யாராவ‌து ஒருவ‌ரின் மேல் அவ‌ற்றைப் பிர‌யோகித்துப் பார்க்கும் ஆர்வ‌ம் அப்போது ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ல் தோன்றிய‌து.

– தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 9

சட்டென தோன்றும் எல்லா ஆர்வமும் எப்போது வேண்டுமானாலும் என்னைவிட்டு நீங்கிவிடும் அபாயம் இன்றளவும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நான் திட்டமிட்டு ஆர்வமாகச் சந்திக்கச் செல்லும் நண்பர்கள், அவர்கள் வீட்டை அடையும் தருணத்தில் அலுப்புக்குறியவர்களாக மாறிவிடுகின்றனர். ஆர்வமாக வாங்கும் புத்தகங்கள் பல மாதங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. விரும்பிய நண்பர்கள் தொலைபேசி எண்களை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறேன். இளஞ்செல்வன் என்னுள் தோன்றிய தருணத்திலேயே அழியவும் தொடங்கினார். அவர் கண்களில் என் கவிதைகள் தட்டுப்படாதது வருத்தமாக இருந்தது. மீண்டும் அவரைச் சந்திக்கும் எண்ண‌ம் இல்லை. என‌க்கு இந்த‌க் க‌தை, க‌விதையெல்லாம் தோதுப‌டாது என‌ முடிவெடுத்துக் கொண்டேன்.

க‌விதையையெல்லாம் மூட்டை க‌ட்டிவைத்து விட்டு, இர‌ண்டு வார‌ங்க‌ள் ச‌ர‌வ‌ண‌னோடு சுற்றி அழைந்தேன். ‘பாடாங் கோத்தா’வில் மோட்டார் ப‌ந்தைய‌த்தில் ஈடுப‌டுவ‌து ம‌ன‌திற்கு தெம்பை அளித்த‌து. அடுத்த‌வ‌ரின் க‌வ‌ன‌ம் ந‌ம் மீது ப‌ட‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் சில‌ருக்கு வெற்றியையும் சில‌ருக்கு இழ‌ப்புக‌ளையும் த‌ருகிற‌து. அந்த‌ எண்ண‌மே என்னை அலைக்க‌ழிக்க‌ வைத்த‌து. முடி ஸ்டைலை அடிக்க‌டி மாற்றுவ‌து,கைக‌ளை விட்டு சைக்கிள் ஓட்டுவ‌து, புது பேட்ட‌னில் கால்ச‌ட்டை தைப்ப‌து என‌த் தொட‌ங்கி மோட்டார் ப‌ந்தைய‌ம் விடுவ‌தில் வ‌ந்து நின்ற‌து.

சர‌வ‌ணனிட‌ம் அப்போது மோட்டார் இருந்த‌து. ப‌ந்தைய‌ம் விடும் அள‌வுக்கு அத‌ன் த‌ர‌ம் இல்லை. ‘ பாடாங் கோத்தாவில்’ வேறு ந‌ண்ப‌ர்க‌ள் மோட்டாருட‌ன் இருப்பார்க‌ள். ப‌ல‌ நூறு ரிங்கிட் செல‌வில் அவ‌ர்க‌ள் மோட்டார், ப‌ந்த‌ய‌த்திற்கென‌ த‌யார் செய்ய‌ப்ப‌ட்டிருக்கும். கேட்டுப் பெற்றுக்கொள்ள‌லாம். அவ‌ர்க‌ள் பாயா பெசார் ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள். ஒரு வ‌ருட‌ம் வெல்ல‌ஸிலி மாரிய‌ம்ம‌ன் கோயில் திருவிழாவுக்கு வ‌ந்து இர‌வோடு இர‌வாக‌ வெட்டுப்ப‌ட்டு உயிர் இழ‌க்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ளை ச‌ர‌வ‌ண‌ன் காப்பாற்றியிருந்தான். அவ‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ஆர‌ம்ப‌த்தில் ந‌ன்றி இருந்து பின் ந‌ட்பாக‌ மாறியிருந்த‌து.

பாடாங் கோத்தா ப‌ட்ட‌ர்வோர்த்தில் உள்ள‌ ப‌குதி. ந‌ன்கு அக‌ல‌மான‌ சாலை. இர‌வில் அத‌ன் போக்குவ‌ர‌த்து குறைந்திருந்த‌தால் மோட்டார் ப‌ந்தைய‌ம் விடும் இட‌மாக‌ கால‌ப்போக்கில் மாறிருந்தது. அதை சில‌ர் ச‌ட்ட‌விரோத‌ மோட்டார் ப‌ந்தைய‌ம் என்ற‌ன‌ர். ச‌ட்ட‌ம் ப‌ற்றியெல்லாம் அப்போது எங்க‌ளுக்கு அவ்வ‌ள‌வாக‌த் தெரியாத‌தால் அது ப‌ற்றியெல்லாம் க‌வ‌லை ப‌ட‌வில்லை. மேலும் ஏதாவ‌து ஒன்றை மீறுவ‌தை ம‌ட்டுமே அப்போதைய‌ வாழ்வின் முக்கிய‌மான‌ க‌ட‌மையாக‌ச் செய்து வ‌ந்தோம். இப்போதும்.

என‌க்கு ஒரு ப‌ந்தய‌ம் தேவைப்ப‌ட்ட‌து. ப‌ந்த‌ய‌த்தின் மூல‌ம் ம‌ன‌ம் அட‌ங்கிய‌து. ப‌ந்தைய‌த்தின் மூல‌ம் ஆண‌வ‌த்துக்கு ஆகார‌ம் கிடைத்த‌து. ம‌ன‌துட‌ன் போட்டியிட‌ முடிந்த‌து. எழுத்தை… க‌விதையைச் சோம்பேரிக‌ளுக்கான‌ சாத‌ன‌மாக‌ ந‌கைக்க‌ முடிந்த‌து. க‌விதை எழுதுகையில் வ‌ன்முறை இல்லை. இட‌ரினால் உயிர் இழ‌ப்போம் என்ற‌ அபாய‌ம் இல்லை. இர‌த்த‌ம் இல்லை. எதிரி இல்லை.

பாடாங் கோத்தாவிலிருந்து ப‌க்க‌ம்தான் ‘ப‌ந்தாய் பெர்ஸே’. திருந‌ங்கைக‌ளின் சாம்ராஜிய‌ம் நிர‌ம்பிய‌ இட‌ம். ப‌ந்ய‌த்தில் தோல்வி அடைந்தாலும் வெற்றி அடைந்தாலும் (பெரும்பாலும் தோல்விதான்) இறுதியில் அங்குதான் த‌ஞ்ச‌ம் அடைவோம். அங்கு ச‌ர‌வண‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் உண்டு. அவ‌னுக்காக‌ அவ‌ர்க‌ள் செல‌வு செய்ய‌த் த‌யாராக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளோடு பேசிக்கொண்டிருக்கும் க‌ண‌ங்க‌ள் இன்ப‌மான‌து. சீண்ட‌ல்க‌ளிக‌ளிலும் கிண்ட‌ல்க‌ளிலும் நேர‌ம் போவ‌து தெரியாது. அவ‌ர்க‌ள் காட்டும் பொய்யான‌ கோப‌மும் காம‌மும் சோக‌மும் இர‌சிக்கும்ப‌டியாக‌ இருந்த‌ன‌. ச‌ர‌வ‌ண‌ன் அவ‌ர்க‌ளிட‌ம் ப‌கிர‌ங்க‌மாக‌வே ‘ஓவ‌ரா ந‌டிக்காதிங்க‌டி’ என்பான். ஆப‌த்து இல்லாவிட்டால் பொய்கூட‌ சுவார‌சிய‌மிக்க‌தாக‌வே என‌க்குப் ப‌டும்.

நாட்க‌ளை க‌ண‌க்கில் எடுக்காம‌லேயே எந்த‌வித‌ ஆர்வ‌மும் செலுத்தாம‌லேயே ச‌ரியாக‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் இள‌ஞ்செல்வ‌னின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. மீண்டும் ஒருமுறை போய் பார்த்தால் என்ன‌ என்று தோன்றிய‌து.

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 8

என் உயிர் எழுத்து…

இர‌ண்டு மாத‌ங்க‌ளில் 5 க‌விதைக‌ள் ‘ம‌க்க‌ள் ஓசை’ நாளித‌ழில் பிர‌சுர‌ம் ஆகியிருந்த‌து. ஓர‌ள‌வு ந‌ண்ப‌ர்க‌ள் ம‌த்தியில் நானும் என்னால் ம‌க்க‌ள் ஓசை ப‌த்திரிகையும் பிர‌ப‌ல‌ம் ஆன‌து. த‌மிழ் ப‌டிக்க‌த் தெரிந்த‌ அனைவ‌ரும் ‘ம‌க்க‌ள் ஓசை’ ப‌டிப்பார்க‌ள் என‌ முத‌லில் ந‌ம்பியிருந்தேன். லுனாஸ் ட‌வுனில் அப்போது ஒரே ஒரு ஒட்டுக்க‌டையில் த‌மிழ்ப் ப‌த்திரிகைக‌ள் விற்றுக்கொண்டிருந்தார்க‌ள். அங்கு மொத்த‌மே வ‌ருவ‌து 5 ‘ம‌க்க‌ள் ஓசைக‌ள்’ தான். ஒன்றை நான் வாங்கிவிடுவேன். மீத‌ம் உள்ள‌ நான்கை வாங்குக் அதிஷ்ட‌சாலிக‌ளை தேடியும் கிடைக்க‌வில்லை.

என் க‌வித‌யைப் ப‌ற்றி பேசுவ‌த‌ற்கோ அத‌ன் ‘உன்ன‌த‌ங்க‌ளை’ என்னிட‌ம் கேட்டு அறிந்து கொள்ள‌வோ ந‌ண்ப‌ர்க‌ள் எவ‌ரும் இல்லை. அப்போதுதான் எழுத்தாள‌ர் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் நான் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌‌ ‘வெல்ல‌ஸிலி த‌மிழ்ப்ப‌ள்ளிக்குத்’ த‌லைமை ஆசிரிய‌ராக‌ வ‌ந்துள்ளார் என‌ கேள்விப்ப‌ட்டேன். இள‌ஞ்செல்வ‌ன் எழுத்தாள‌ர் என்ப‌தோ அவ‌ர் என்ன‌ எழுதியுள்ளார் என்ப‌து ப‌ற்றியோ அப்போது ஒன்றுமே என‌க்குத்தெரியாது. அவ‌ர் நிச்ச‌ய‌ம் ‘ம‌க்க‌ள் ஓசை’ வாங்கியிருப்பார் என‌ ம‌ட்டும் ந‌ம்பினேன். அதிலும் ‘ம‌.ந‌வீன், லூனாஸ்’ என‌ பிர‌சுர‌மாகியிருக்கும் என‌து க‌விதைக‌ளைப் ப‌டித்து ‘யார் அந்த‌ நவீன் அதுவும் இந்த‌ ஊரில்…’ என‌த் தேட‌த் தொட‌ங்கியிருக்க‌வும் கூடும் என‌ ஆழ் ம‌ன‌ம் அழுத்த‌மாக‌ ந‌ம்பிய‌து. அவ‌ரைச் ச‌ந்திக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வம் துளிர்விட‌ தொட‌ங்கிய‌ போது ஒரு நாள் சைக்கிளை எடுத்துக்கொண்டு புற‌‌ப்ப‌ட்டேன்.

வெல்ல‌ஸ்லி த‌மிழ்ப்ப‌ள்ளிக்கும் எங்க‌ள் வீட்டுக்குமான‌ இடைவெளி ஐநூறு மீட்ட‌ர்தான். அது ஒரு சாயுங்கால‌ வேளை. ப‌ள்ளியில் திரு.ராமு மாணிக்க‌ம் (எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌னின் இய‌ற்பெய‌ர்) த‌னியே அம‌ர்ந்து கோப்புக‌ளைச் ச‌ரி பார்த்துக்கொண்டிருந்தார். யார் அனும‌தியும் இல்லாம‌ல் அலுவ‌ல‌க‌த்தைக் க‌ட‌ந்து அவ‌ர் அறைக்க‌த‌வைத் த‌ட்டினேன். ஏறிட்டு கேள்விக்குறியோடு பார்த்தார்.என்னை ஓர் எழுத்தாள‌னாக‌ அறிமுக‌ம் செய்து கொண்ட‌போது கேள்விகுறிக‌ள் உட‌னே வில‌கி ஆச்ச‌ரிய‌க்குறி தொற்றிக்கொண்ட‌ன‌. அத‌ற்கு மேல் ஒன்றும் பேசாம‌ல் என் க‌விதைக‌ளைக் காட்டினேன்.

ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் க‌விதைக‌ளைப் புர‌ட்டினார். என்னை ந‌ம்பிக்கையோடு ஏறிட்ட‌வ‌ர் ‘என் ம‌க‌ளுக்குத் திரும‌ண‌ ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌… ரொம்ப‌ பிஸியா இருக்கேன்… நீங்க‌ இர‌ண்டு வார‌ம் க‌ழிச்சி வ‌ந்து பாருங்க‌… ம‌ற‌ந்துடாதிங்க‌… என்னை உங்க‌ள் க‌விதைக‌ள் க‌வ‌ராட்டினா வ‌ர‌ வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்… உங்க‌ளால் க‌விதை எழுத‌ முடியும்… க‌ண்டிப்பா வ‌ர‌ணும். ‘என் க‌விதைக‌ள் இள‌ஞ்செல்வ‌ன் கையில் இருந்த‌ன‌. ‘க‌விதைக‌ள் ப‌த்திர‌ம் சார்’என்றேன். அன்போடு சிரித்தார். த‌ட்டிக்கொடுத்தார்.

‘உங்க‌ளால் க‌விதை எழுத‌ முடியும்’ என‌ அவ‌ர் சொன்ன‌து ஆண‌வ‌த்திற்கு உறுத்த‌லாக‌ இருந்த‌து. அதிலும் அவ‌ர் என் க‌விதைக‌ளைப் ப‌டித்த‌தில்லை என்ப‌து மேலும் அதிர்ச்சியையும் ஏமாற்ற‌த்தையும் கொடுத்த‌து. நான் அவ‌ரிட‌ம் க‌விதை க‌ற்க‌ போக‌வில்லை. நான் எதிர்ப்பார்த்த‌து அங்கீகார‌ம். ‘ரொம்ப‌ ந‌ல்லா இருக்கே உன் க‌விதை’ என்ற‌ சில‌ சொற்க‌ள். அவ‌ர் யார் என‌க்கு க‌விதை இனிதான் வ‌ரும் என்று சொல்ல‌… வெறுப்பாக‌ இருந்தது. வீட்டிற்குச் சென்ற‌தும் குவிந்து கிட‌ந்த‌ ந‌ய‌ன‌ம், வான‌ம்பாடி, ம‌க்க‌ள் ஓசை, ஞாயிறு இத‌ழ்க‌ள் என‌ ஒன்றுவிடாம‌ல் புர‌ட்டினேன். ஒன்றிலும் எம்.ஏ.இள‌ஞ்செல்வ‌ன் என்ற‌ பெய‌ர் கொண்ட‌ ப‌டைப்புக‌ள் ஒன்று கூட‌ இட‌ம்பெற‌வில்லை. த‌ர‌ம் இல்லாத‌தால் அவ‌ர் ப‌டைப்புக‌ள் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்டிருக்க‌க் கூடும் என‌த் தோன்றிய‌து. ம‌ன‌ பார‌ம் கொஞ்ச‌ம் குறைந்து நிம்ம‌தியாக‌ இருந்த‌து. ‘நிச்ச‌ய‌ம் ந‌ம்மைவிட‌ இள‌ஞ்செல்வ‌ன் பெரிய‌ எழுத்தாள‌ர் இல்லை’ என‌ முடிவெடுத்துக்கொண்டேன்.

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 7

க‌விதைக‌ளுட‌னே வாழ்ந்த‌ கால‌ம் அது.க‌ண்ணில் அக‌ப்ப‌டும் அனைத்தையும் க‌விதையாக்கிவிட‌ ம‌ன‌ம் துடித்த‌து. முத‌லில் என்னை அந்நிய‌னாக‌ப் பார்த்த‌ ச‌ர‌வ‌ண‌ன் பின்ன‌ர் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஏற்றுக்கொண்டான். நாங்க‌ள் இருவ‌ருமாக‌ச் சேர்ந்து மொழி ஆராய்ச்சியில் இற‌ங்கினோம். அதுவ‌ரை பிர‌யோக‌த்தில் இருந்த‌ அத்த‌னைக் கெட்ட‌ வார்த்தைக‌ளும் எங்க‌ளுக்கு அப‌த்த‌மாக‌ப் ப‌ட்ட‌து. அத்த‌னையும் வெறும் உட‌ல் உறுப்பின் பெய‌ர்க‌ள் அல்ல‌து பிற‌ப்பு குறித்தான‌ எள்ள‌ல்க‌ள். கொஞ்ச‌ம் அதிக‌ம் போனால் ந‌ம‌க்கு நெருங்கிய‌ உற‌வின் உட‌ல் உறுப்புக‌ள். மொத்த‌மே இவ்வ‌ள‌வுதான் கெட்ட‌வார்த்தை. இவ‌ற்றிற்கு கெட்ட‌வார்த்தை என‌ப் பெய‌ர் வைத்த‌தே த‌வ‌று என‌ப் ப‌ட்ட‌து. த‌மிழில்தான் இந்த‌ க‌தி என்றால் சீன‌, ம‌லாய் மொழியிலும் இதே நிலைதான். கெட்ட‌ வார்த‌தைக‌ள் என்ப‌தே ந‌ம்மை ஏமாற்றும் க‌ற்ப‌னை என‌ புரிந்து போன‌து. என‌வே நாங்க‌ளே எங்க‌ளுக்கான‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை உருவாக்குவ‌து என‌ முடிவெடுத்தோம்.

இந்த‌ விஷ‌ய‌த்தில் ச‌ர‌வ‌ண‌னுக்கு நான் தான் குரு. அத‌ற்கு முன்பு கெட்ட‌வார்த்தைக‌ளாக‌ அங்கீகார‌ம் பெற்றிருந்த‌ சில‌ சொற்க‌ளைச் சேர்த்தோம். அவ‌ற்றோடு இய‌ல்பான‌ இன்னும் பிற‌ சொற்க‌ளை புகுத்தி மூன்று நான்கு சொற்றொட‌ரில் ஒரு சில‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை உருவாக்கினோம். அவை ஒரு காட்சியைக் கொடுத்தன‌. ஒரு க‌விதை போல‌ எதிர்பாராத‌ அதிர்ச்சியைக் கொடுத்த‌ன‌. உறுப்புக‌ளின் செய‌ல்பாடுக‌ளில் முர‌ண்க‌ளை புகுத்திப் பார்ப்ப‌து எங்களின் கெட்ட‌ வார்த்தைத் த‌த்துவ‌ங்க‌ளில் முத‌ன்மையான‌து. எந்த‌க் கார‌ண‌த்தைக் கொண்டும் நாங்க‌ள் த‌யாரித்த‌ கெட்ட‌வார்த்தைக‌ளில் யாதொரு உற‌வையும் குறிப்பிடாம‌ல் பார்த்துக்கொண்டோம். த‌வ‌று செய்த‌வ‌னைத் திட்டும் போது அது அவ‌ர்க‌ள் சார்ந்த‌ யாரையும் குறிப்பிட‌க்கூடாது என்ப‌து ச‌ர‌வ‌ண‌னின் கோட்பாடு. உல‌க‌ம் போற்ற‌ப்போகும் புதிய‌ இல‌க்கிய‌ வ‌டிவை உருவாக்கும் தீவிர‌த்தில்தான் நானும் ச‌ர‌வ‌ண‌னும் செய‌ல்ப‌ட்டோம்.

நாங்க‌ள் உருவாக்கிய‌ கெட்ட‌ வார்த்தைக‌ளை ம‌ன‌ன‌ம் செய்து கொண்டோம். த‌வ‌றுதலாக‌ உச்ச‌ரித்தால் அத‌ன் காத்திர‌ம் குறைந்து போக‌லாம். ந‌ண்ப‌ர்க‌ளிடையே பேசும்போது சாத‌ர‌ண‌மாக‌வே கொச்சையில் திட்டிக்கொள்ளும் வ‌ழ‌க்க‌ம் அப்போது இருந்த‌து. எங்க‌ள் கெட்ட‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் ச‌ரியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திற்குக் காத்திருந்தோம். ப‌டியாத‌ சுருட்டை முடி கொண்ட‌வ‌னான‌தால் ச‌ர‌வ‌ண‌னை நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ‘ஒட்ட‌டை’ என்றே அழைப்ப‌ர். ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அழைக்க‌த் துணிவில்லை. அன்று பேச்சினூடே ஒருவ‌ன் இய‌ல்பாக‌ ச‌ர‌வ‌ண‌னை ‘ஒட்ட‌டை’ என‌ அழைக்க‌த் தொட‌ங்கினான். கிடைத்த‌து ச‌ந்த‌ர்ப்ப‌ம்… சேமித்து வைத்திருந்த‌ அத்த‌னையையும் அவ‌ன் ஒருவ‌னுக்கே செல‌வ‌ழித்தோம்.

ப‌லியான‌வ‌ன் விழி பிதுங்கி நின்றான். எங்க‌ள் கெட்ட‌ வார்த்தைக்கு நிக‌ராக‌ அவ‌னிட‌ம் ஒரு சொல் கூட‌ அக‌ப்ப‌ட‌வில்லை. அவ‌னுக்கு எங்க‌ள் கெட்ட‌ வார்த்தையைப் புரிந்து கொள்ள‌வே நிறைய‌ அவ‌காச‌ம் தேவைப்ப‌ட்ட‌து. எங்க‌ள் சொற்க‌ளின் வ‌ன்மையை க‌ற்ப‌னை செய்த‌வ‌ன் க‌ண்க‌ல‌ங்க‌த் தொட‌ங்கினான்.

வெற்றி… வெற்றி… எங்க‌ள் முத‌ல் முய‌ற்சி வெற்றிய‌டைந்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் முத‌ன்முத‌லாக‌ என்னைக் க‌விஞ‌னாக‌ ஏற்றுக்கொண்டான். அவ‌ன் க‌ணிப்பில் க‌விஞ‌னுக்கான‌ த‌குதி கெட்ட‌ வார்த்தையில் இருந்திருக்கிற‌து.

– தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 6

என்ன‌தான் ஹீரோஹிச‌மெல்லாம் செய்தாலும் ப‌ள்ளியைப் பொருத்த‌வ‌ரை ப‌ந்து விளையாடுப‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ க‌தாநாய‌க‌ர்க‌ள். ப‌ந்து விளையாடுப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ள‌வு தோழிக‌ள் இருந்த‌ன‌ர். என‌க்கு ப‌ந்தை பார்த்தாலே அல‌ர்ஜி. இன்றுவ‌ரை எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ஒரு ப‌ந்துகூட‌ நான் உதைத்துப் ப‌ற‌ந்த‌தே இல்லை. காற்ப‌ந்து விளையாட்டு என் வாழ்வில் விளையாடிய‌ விளையாட்டுக‌ளை ம‌ட்டும் ஒரு த‌னி நாவ‌லாக‌ எழுத‌லாம்.ச‌ர‌வ‌ண‌ன் என்னைப்போல் இல்லை. ஆனாலும் என‌க்காக‌ அவ‌னும் விளையாட‌ப்போவ‌தை த‌விர்த்தே வ‌ந்தான். எங்க‌ள் இருவ‌ருக்கும் பூப்ப‌ந்து ந‌ன்றாக‌ வ‌ச‌ப்ப‌ட்ட‌து.பின்னாலில் அது பெண்க‌ளுக்கான‌ விளையாட்டு என‌ நாங்க‌ளே முடிவெடுத்து குறைத்துக்கொண்டோம். பெண்க‌ளைக் க‌வ‌ர்வ‌தில் ச‌ர‌வ‌ண‌னுக்குப் பிர‌ச்ச‌னை இல்லை. அவ‌ன் அழ‌க‌ன். எளிய‌ உடையில் கூட‌ க‌வ‌ரும் ப‌டி தெரிவான். ஆனால் நான்…

க‌ருத்த‌ உருவ‌ம்; பேசினால் நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை திக்கும்; மெலிந்து கிட‌ப்பேன்.எந்த‌ பெண் பிள்ளைக‌ளும் நிச்ச‌ய‌ம் என்னை ஏறெடுத்தும் பார்க்க‌மாட்டார்க‌ள். ஏதாவ‌து செய்தேயாக‌ வேண்டும். இருக்க‌வே இருக்கிற‌து, என‌க்குத் தெரிந்த‌ கொஞ்ச‌ம் த‌மிழும்… க‌விதையும். க‌விதை எழுத‌ இட‌ம் வேண்டுமே. ஏதோ ஒரு த‌மிழ்ப் ப‌ட‌த்தில் நிழ‌ல்க‌ள் ர‌வி ந‌தியோர‌ம் அம‌ர்ந்து வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு க‌விதை எழுதுவார். பின்ன‌ர் த‌ன் க‌ர‌ க‌ர‌த்த‌க் குர‌லில் வாசிப்பார். ஒரு ப‌ழைய‌ வெள்ளை ஜிப்பா இருந்த‌து… ந‌திக்கு நாயாய் பேயாய் அலைந்து இறுதியில் ‘தாமான் கீஜாங்’கில் இருந்த‌ புத்த‌ர் கோயிலைக் க‌ண்டுபிடித்தேன். அந்த‌க் கோயில் ந‌தியோர‌ம் அமைந்திருந்த‌து. இன்னும் சொல்வ‌தானால் ஒரு ந‌தி வ‌லைவின் இட‌வெளியில் இருந்தது. கோயிலை சுற்றிலும் ஆல‌ ம‌ர‌ம் விழுதுக‌ள் விட்டிருந்த‌து. பிற‌ந்த‌து முத‌ல் க‌விதை…

0 காத‌ல் தோல்வி

ஆல‌ம‌ர‌ம்
தாடி வ‌ள‌ர்க்கிற‌து.

அன்றைக்கு ம‌ட்டும் ஆயிர‌ம் முறையாவ‌து அந்த‌க் க‌விதையை வாசித்துப் பார்த்திருப்பேன். நான் எழுதிய‌ க‌விதையே வெவ்வேறு அர்த்த‌ங்க‌ளை என‌க்குத் த‌ர‌த் தொட‌ங்கிய‌து. யாரிட‌மாவ‌து வாசித்துக் காட்ட‌ வேண்டும். ச‌ர‌வ‌ண‌னிட‌ம் சொன்னால் ந‌கைப்பான். ப‌த்திரிகைக்கு அனுப்புவ‌து என‌ முடிவு செய்தேன். இந்த‌ ஒரு க‌விதையை போட‌மாட்டார்க‌ள். மூளையை க‌ச‌க்கிப் பிழிந்து மேலும் நான்கு க‌விதைக‌ளை மென‌க்கெட்டு எழுதினேன்.

0 பிண‌ங்க‌ள்

பு‌தைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌
அசைவ‌ன் வ‌யிற்றில்…

0 க‌ர‌ண்ட் த‌டையில் க‌வ‌லை
க‌ண்ணீர் வ‌டிக்கிற‌து
மெழுகுவ‌ர்த்தி…

இப்ப‌டி ஒரு க‌விதை பிர‌சுர‌மாக‌ மேலும் நான்கு க‌விதைக‌ளைச் சேர்த்து எழுதி, உட‌ன் க‌விதையைவிட‌ நீள‌மாக‌ அறிமுக‌க் க‌டித‌மெல்லாம் எழுதி ம‌க்க‌ள் ஓசை ப‌த்திரிகைக்கு (அப்போது அக்கினியால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ வார‌ப்ப‌த்திரிகை. ஒவ்வொரு வார‌மும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் 15 முத‌ல் 20 க‌விதைக‌ளாவ‌து பிர‌சுரித்தார்க‌ள்) அனுப்பி வைத்தேன். அனுப்பிய‌ இர‌ண்டாவ‌து வார‌த்தில் க‌விதை எந்த‌ மாற்ற‌மும் இல்லாம‌ல் பிர‌சுர‌மான‌து.

ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்தில் நான் க‌விஞ‌னாகி விட்டிருந்தேன்…

– தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 5

இன்று நினைக்கும் போது எதுவும் நியாய‌ம் இல்லாத‌து போல‌ தோற்ற‌ம் அளிக்கிற‌து. ஆனால் பெரும் பான்மை ம‌க்க‌ளால் தொட‌ர்ந்து அடிமை ப‌ட்டு கிட‌க்கும் நாங்க‌ள் எங்க‌ளுக்கான‌ சுத‌ந்திர‌த்தை அகிம்சை வ‌ழி தேடி பெரும் அவ‌காச‌மும் வாய்ப்பும் அப்போது குறைவு என்ப‌து ம‌ட்டுமே உண்மை.சாதியின் பெய‌ரால், இன‌த்தின் பெய‌ரால், ம‌த‌த்தின் பெய‌ரால் ஒவ்வொரு நாளும், கீழாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டும் எம் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு இன்றுவ‌ரை இடைநிலைப்ப‌ள்ளிக‌ளில் எந்த ‌வ‌கையான‌ பாதுகாப்பு வேலிக‌ளும் இல்லை என்ப‌தே நித‌ர்ச‌ன‌ம். இன்றைய‌ இய‌ந்திர‌ வாழ்வில் ‘அடுத்த‌வ‌னுக்கு என்ன‌ ந‌ட‌ந்தால் என்ன‌?’ என‌ வீட்டைப்பூட்டிக்கொண்டு தொலைக்காட்சியில் ம‌ட்டுமே உல‌கைப் பார்க்கும் ஒரு ச‌மூக‌ம் இடைநிலை ப‌ள்ளிமுத‌ல் ப‌ல்கலைக்க‌ழ‌க‌ம் வ‌ரை இருக்க‌வே செய்கிற‌து.அவ‌ர்க‌ளால் அர‌சாங்க‌த்திற்கு உய‌ர்த‌ர‌ கூலிக‌ளாக‌ இருக்க‌ ம‌ட்டுமே முடியும்.அப்படி இருந்துவிட்டுப்போனாலும் பாத‌க‌மில்லை. ஆனால் இந்த‌க் கூட்ட‌ம்தான் புல்லுறுவிகளாக‌வும் எட்ட‌ப்ப‌ர்க‌ளாக‌வும் மாற‌வும் செய்கிற‌து.வேறு வ‌ழியே இல்லை ‘க‌ளை’ பிடுங்க‌த்தான் வேண்டியுள்ள‌து.

அதிகார‌த்தை எதிர்ப்ப‌து எழுத்தாள‌னின் முத‌ல் ப‌ணி என‌ இன்று ஒவ்வொரு திருப்ப‌த்திலும் நினைத்துக் கொள்கிறேன். அத‌ற்கான‌ வேரை இடை நிலைப்ப‌ள்ளியில் என‌க்கு ஆழ‌ ஊன்றிய‌வ‌ன் ச‌ர‌வ‌ண‌ன். அதிகார‌த்தை நோக்கி உண்மையின் குர‌லை அத‌ற்கு ம‌றுவ‌ருட‌மும் நாங்க‌ள் இன்னும் ஆழ‌மாக‌க் கொடுத்தோம். எங்க‌ளின்……………. இடைநிலைப்ப‌ள்ளியில் இன்றும் அது நினைவில் கொள்ள‌ப்ப‌டுகிற‌து. ஒவ்வொரு ஆண்டும் ந‌ன்னெறி க‌ழ‌க‌த்தால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌டும் ஒரு கூட்ட‌த்தில் எங்க‌ள் ப‌ட‌மே ஒளிவ‌ட்டில் ஏற்ற‌ப்ப‌டுகிற‌து. அதை நானும் இதுவ‌ரைப் பார்த்ததில்லை. கைக‌ளை ஓங்கி கூட்ட‌மாக‌ கோஷ‌ம் போட்டு, வ‌குப்ப‌றைக்குள் நுழையாம‌ல் ம‌றிய‌ல் செய்த‌ எங்க‌ளை பார்த்த‌ இளைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இப்ப‌டி கூறின‌ர் “அண்ணா ஒரு வேளை உங்க‌ள புடிச்சி உள்ளுக்கு வ‌ச்சிருந்தாங்க‌ண்ணா?”

இது போன்ற‌ கேள்விக‌ள் எழாத‌ வ‌ய‌து அது. சாலையில் அதிக‌ ப‌ட்ச‌ம் வேக‌மாய் மோட்டார் ஓட்டுவ‌து ப‌ற்றியும் மோட்டார் ப‌ந்தைய‌ம் இடுவ‌து ப‌ற்றியும் ஆயுத‌ங்க‌ளை எதிர்கொண்டு ஓடுவ‌து ப‌ற்றியும் கேள்வியே இல்லாத‌ வ‌ய‌து.நிமிட‌த்திற்கு நிமிட‌ம் வாழ்ந்த‌ வ‌ய‌து. வேற்று இன‌த்தானோடு சண்டையிட்ட‌ ஒரு ச‌க‌ த‌மிழ் ந‌ண்ப‌னை ம‌ட்டும் எந்த‌ முன் எச்ச‌ரிக்கையும் இல்லாம‌ல் நிர்வாக‌ம் ப‌ள்ளியைவிட்டு நீக்கினால் வ‌ன்முறையில் ஈடுப‌டுவ‌து த‌விர‌ வேறென்ன‌ செய்ய‌ முடியும். அதிக‌ ப‌ட்ச‌ம் வ‌குப்ப‌றை க‌ண்ணாடிக‌ளும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ‘ம‌ஞ்ச‌ள்’ முக‌ங்க‌ளும் உடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.மூன்றாவ‌து நாளில் ந‌ண்ப‌ன் ப‌ள்ளியில் இருந்தான்.

சில‌ விஷ‌ய‌ங்க‌ளுக்கு பொறுமை தோதுப‌டாது என‌ அப்போதே பிடிப‌ட்ட‌து. எங்க‌ள் குழு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ பிள‌வு ப‌ட்டுக்கொண்டிருந்த‌து. மூன்றாம் ப‌டிவ‌த்திற்குப்பின் சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் வேறு ப‌ள்ளிக‌ளுக்கு மாறின‌ர். சில‌ர் ப‌ள்ளியை விட்டு நின்ற‌ன‌ர். சில‌ர் ‘போலி டெக்நிக்’ ப‌டிக்க‌ச்சென்ற‌ன‌ர். கூட்ட‌ம் குறைந்த‌து.ஆனாலும் ப‌ழைய‌ ப‌ய‌ம் அனைவ‌ருக்கும் இருக்க‌வே செய்த‌து.நான்காம் ப‌டிவ‌த்தை ஹ‌னிமூன் வ‌ருட‌ம் என்றார்க‌ள் ஆசிரிய‌ர்க‌ள். ப‌ரீட்சைக‌ள் குறைவு.அடுத்த‌ வ‌ருட‌ம்தான் எஸ்.பி.எம். க‌ல்வியில் மிக‌வும் பின் த‌ங்கி இருந்தேன். என்னைவிட‌ ச‌ர‌வ‌ண‌ன் மோச‌ம்.

என‌க்கு இள‌ஞ்செல்வ‌ன் ஞாப‌க‌ம் அடிக்க‌டி வ‌ர‌த்தொட‌ங்கிய‌ கால‌ம் அது…

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 4

எங்க‌ள் ஊர் போலிசுக்குப் பொதுவாக‌வே நாங்க‌ள் ப‌ய‌ப்ப‌டுவ‌தில்லை. ச‌ர‌வ‌ண‌னின் அப்பா முன்னால் அர‌சாங்க‌ ஊழிய‌ரான‌தினாலும் காவ‌ல்துரையில் உய‌ர்ம‌ட்ட‌ அதிகாரிக‌ள் வ‌ரை அவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ள் என்ப‌தாலும் அன்று சில‌ எச்ச‌ரிக்கைக‌ளோடு விடுவிக்க‌ப்ப‌ட்டோம். அதுவ‌ரை கைக‌ள் இர‌ண்டையும் பின்புற‌மாக‌க் க‌ட்டி வெற்றுட‌ம்பில் வெயிலில் ம‌ண்டியிட்டு நிற்ப‌தை ப‌ள்ளியே வேடிக்கைப் பார்த்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் கூறினான் ‘இதுதான்டா ச‌ம‌ய‌ம் உட‌ம்ப‌ ந‌ல்லா முறுக்கிக் காட்டு…ச‌ர‌க்குங்க‌ பாக்குதுல்ல‌…’.

ச‌ர‌வ‌ண‌னுக்குக் சுருட்டை முடி. எப்ப‌டி சீவினாலும் பெரிதாக‌ ஒன்றும் மாற்ற‌ம் காணாது. என‌க்குதான் ப‌ர‌ட்டை. முன்புர‌ முடிக‌ள் முக‌த்தை முழுதுமாக‌ ம‌றைக்கும் ப‌டியான‌ நீள‌ம். அனைவ‌ரையும் வ‌குப்புக்குள் அனுப்பும் போது என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ம‌ட்டும் க‌ட்டொழுங்கு ஆசிரிய‌ர் உள்ளே அழைத்தார். முன்புற‌ம் நீண்டிருந்த‌ முடியைக் க‌ற்றையாக‌ப் பிடித்தார். என்னிலிருந்து பிரித்துக் குப்பையில் வீசினார். ச‌ர‌வ‌ண‌னுக்கு ஒரு அரை விழுந்த‌து. இத‌ற்கு மூல‌க்கார‌ண‌ம் நாங்க‌ள்தான் என‌ ஏதோ ஒரு ந‌ரி காட்டிக்கொடுத்திருக்கிற‌து.

காட்டிக்கொடுப்ப‌து போட்டுக்கொடுப்ப‌து ஈன‌ப்பிர‌விக‌ளின் செய‌ல் என‌ சர‌வ‌ண‌ன் க‌ர்ஜித்தான். எங்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌ருப்பு ஆடு இருப்ப‌தை அறிந்து கொண்டோம். அடிப்ப‌ட்ட‌ வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளுக்கு எப்போதும் ஒரு ப‌ழ‌க்க‌ம் உண்டு. அவ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளிட‌ம் ச‌ரண‌டைய‌ மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குப் பிடித்த‌தெல்லாம் அடிக்கு அடிதான். போலிஸில் கூட‌ அவ‌ர்க‌ள் வாய் திற‌க்க‌வில்லை. என்னிட‌ம் குத்துப்ப‌ட்டு முக‌ம் வீங்கிய‌வ‌ன் ம‌ட்டும் அவ்வ‌ப்போது முறைத்த‌ப‌டி இருந்தான். அத‌ற்கு அர்த்த‌ம் என் முக‌த்தையும் அது போல் வீங்க‌வைப்ப‌துதான். அவ‌ன் அடித்தால் என் முக‌ம் வீங்காது. முக‌மே இல்லாம‌ல் போகும் அபாய‌ம் ம‌ட்டும் உண்டு என்ப‌தால் அவ‌னை நேர்க்கொண்டு பார்க்காம‌ல் இருந்தேன். இங்குக் காட்டிக்கொடுத்த‌து ஒரு த‌மிழ‌ன்.

நானும் ச‌ர‌வ‌ண‌னும் த‌னியாக‌ அம‌ர்ந்து ச‌ந்தேக‌த்திற்குறிய‌ ந‌ப‌ர்க‌ளை ஒரு ப‌ட்டிய‌ல் போட்டோம். ‘உன்னை அவ‌ன் என்னா சொன்னான் தெரியுமா…”, அன்னிக்கு அவ‌ன் உம்மேல‌ உள்ள‌ க‌டுப்ப‌ எப்ப‌டி காட்டுனான் தெரியுமா?’ என‌ அடிக்க‌டி சொற்க‌ளைப் பிர‌யோகிக்கும் சில‌ குத‌ப்பிற‌ப்புக‌ளில் மூன்று பேரைக் க‌ண்ட‌டைந்தோம். இர‌ண்டே நாள் குற்றவாளி பிடிப்ப‌ட்டான். விசார‌ணைத் தொட‌ங்கிய‌து. ச‌ர‌வ‌ண‌ன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதைக்கு என‌க்குத் தெரிந்த‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ த‌மிழை வைத்துக்கொண்டு “போன‌து எம் ம‌யிரு இல்ல‌டா…உயிரு”என‌ வ‌ச‌ன‌மெல்லாம் பேசினேன்.

இம்முறை ச‌ர‌வ‌ண‌ன் முத‌ல் அடியில் ஆர‌ம்பித்தான். நான் தொட‌ர்ந்தேன். தோட்ட‌த்துக்கும் செம்மண்சாலைக்கும் இடையில் பொருத்த‌ப்ப‌ட்டிருக்கும் ர‌ம்ப‌ம் போன்ற‌ இரும்பு பால‌த்தில் அவ‌ன் த‌லையை வைத்து இழுத்தோம். அவ‌ன் த‌லை முடி பிய்த்துக்கொண்டு வ‌ந்த‌து. ச‌ர‌வ‌ண‌ன் கூறினான்… ‘ம‌யிருக்கு ம‌யிருடா’

– தொட‌ரும்