2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.

2022இன் இறுதியில் 2023 எதிர்ப்பார்த்து இப்படி ஒரு கட்டுரை எழுதியபோது வரப்போகும் ஆண்டில் பயணமும் புனைவும்தான் பிரதான திட்டம் என எழுதியிருந்தேன், அதற்கேற்பவே 2023 அமைந்தது.

பயணங்கள்

காஞ்சனாபுரியில்
  • தாய்லாந்துப் பயணம்

நான்கு பயணங்கள் 2023இல் சாத்தியமானது. முதல் பயணம் தாய்லாந்தை மையமிட்டுத் தொடங்கியது. பிப்ரவரி 28ஆம் திகதி தாய்லாந்து புறப்பட்டு மார்ச் 5ஆம் நாடு திரும்பினேன். என்னுடன் என் நண்பர்கள் முருகன், சரவணன், திருமுத்து, பூபாலன் ஆகியோர் இணைந்தனர். முதன்மையாக இப்பயணத்தைத் திட்டமிட்டது சரவணன்தான். மலேசியாவில் பெரும்பாலோர் புக்கெட் தீவையே பயண இலக்காகக் கொள்வதால் பத்தாயா நகரை பயண நோக்கிச் செல்லலாம் எனத் திட்டம் வகுத்தார். அதில் நான் சயாம் – பர்மா மரண இரயில் பயணத்தைத் தயக்கத்துடன் இணைத்தபோது அனைவரும் உற்சாகமாகச் சம்மதித்தனர். ஏறக்குறைய ஆறு நாட்கள் ஐந்து இரவுகள் பயணங்களை மேற்கொண்டோம்.

பேங்காக், காஞ்சனாபுரி, பத்தாயா என எங்கள் பயணம் அமைந்தது. வரலாறும் கேளிக்கைகளும் இணைந்த பயணமது. இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவில் நடந்த மாபெரும் மானுட அழிவுக்கு இன்னும் சான்றாக உள்ள சயாம் – பர்மா மரண இரயில் தண்டவாளத்தில் நடந்தபோது வதைகளில் சிக்குண்ட மூதாதையர்களின் குரல்களைக் கேட்க முடிந்தது. அங்கிருந்த முதன்மையான இரண்டு அருங்காட்சியகங்கள் அதன் தாக்கத்தை இன்னும் காத்திரமாக உணர்த்தின.

ஓங்கில்களையும் புலியையும் தொட்டுப்பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்தது இப்பயணம். முக்கியமாக Sanctuary of Truth அருங்காட்சியகம் சென்றது ஓர் அபாரமான புனைவு உலகுக்குள் சென்று திரும்பிய அனுபவத்தைக் கொடுத்தது. கைகளால் செதுக்கப்பட்ட மரச்சிற்பங்களை ஒவ்வொரு பகுதியிலும் உள்வாங்கிய மரக் கட்டடம் இயற்கையான ஒளிக் கீற்றுகளை உள்ளே அனுமதித்து தங்கச் சரிகை சாற்றியதுபோல தகதகத்தது. தென்கிழக்காசியாவில் அங்கோர்வாட்டுக்குப் பின்னர் சென்று காண வேண்டிய கலைக்கூடம் அது.

  • நேபாளப் பயணம்

என்னுடைய இரண்டாவது பயணம் நேபாளை நோக்கியது. மே 26ஆம் தேதி புறப்பட்டு ஜூன் 8ஆம் தேதி மலேசியா திரும்பினேன். பயணத்தின்போதே இடைவிடாமல் நிகழும் அனுபவங்களை பயணக்கட்டுரைகளாக எழுதிக்கொண்டிருந்தேன்.

அன்னபூரணா அடிவாரத்தில்

உலகில் ஆகப்பெரிய மலைகளில் பத்தாவது இடத்தில் உள்ளது அன்னபூரணா. அந்த மலையின் அடிவாரம்வரை செல்வதே எங்கள் பயணத் திட்டம். நண்பர் சுரேஷ் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். எனக்கு அறிமுகமானவர்களில் கோகிலவாணி, அரவின் குமார் ஆகியோர் கலந்துகொண்டது பயணத்தை உற்சாகமாக்கியது.

சனிராவுடன்

அன்னபூரணா அடிவாரம் வரை செல்வது சுரேஷின் திட்டமாக இருந்தாலும் அதில் லும்பினிக்குச் செல்லும் திட்டத்தை இணைத்தவர் கோகிலவாணி. இப்போது யோசித்தால் நேபாளப் பயணத்தில் லும்பினிக்குச் சென்றதே பேரனுபவமாக மனதில் நிலைகொண்டுள்ளது. புத்தர் பிறந்த அந்தப் பகுதியைப் பார்த்தபோது எழுந்த சிலிர்ப்பு அதைக் கற்பனையில் காணும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. மேலும் ஒவ்வொரு நாட்டின் பௌத்த மடாலயங்களிலும் காணமுடிந்த கலை வேலைப்பாடுகள் வழி மனதில் வந்தமர்ந்த தாரா தேவி, என் உணர்வுகள் ரீதியாக மாற்றங்களை உருவாக்கியுள்ளாள். நேபாளப் பயணத்தில் கிடைத்த முன்னாள் குமாரி தேவி அறிமுகமும் அவருடனான உரையாடலும் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கும் பிறரிடம் பகிரக்கூடிய மனப்பதிவுகள்.

  • கோலகங்சார் பயணம்

ஜூலை 29-30 ஆகிய நாட்கள் மீண்டும் நண்பர்களுடன் உள்ளூர் பயணம். கோலகங்சார் நகரில் ஓரிரவு தங்கி மலேசியாவின் முதல் இரப்பர் மரம், 1897இல் கட்டப்பட்ட விக்டோரியா பாலம் போன்றவற்றை பார்த்துவிட்டு வந்தோம். இந்தப் பயணத்தை நான்தான் திட்டமிட்டேன், ஜூலை 31 எனது பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் (முருகன், சரவணன், திருமுத்து, பூபாலன்) ஆகியோருடன் பொழுதைக் கழிக்க நினைத்தேன், எப்போதும்போல அது இனிய பயணமாக அமைந்தது.

  • தமிழகப் பயணம்

இவ்வருடத்தின் இறுதிப் பயணமாகத் தமிழகப் பயணம் அமைந்தது. டிசம்பர் 15 முதல் 25 வரை நாட்களூக்கு இப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். கோயம்பத்தூரில் நடக்கும் விஷ்ணுபுரம் விழாவிலும் சென்னையில் திட்டமிட்ட எனது தாரா நாவல் வெளியீட்டிலும் கலந்துகொள்வதுதான் திட்டம். ஆனால் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி நவின் எங்கள் பயணத்தை மேலும் விரிவாக்கினார். தஞ்சையை மையமாகக்கொண்டு எங்கள் பயணத்தை வடிவமைத்துக்கொண்டோம். அதன்படி திருச்சியில் மூவர் கோயிலையும் முசுகுந்தேசுவரர் கோயிலையும் பார்வையிட்டோம். சங்க காலம் முதல் புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூர் என்ற ஊரில் இவ்விரு கோயில்களும் அமைந்துள்ளன.

முசுகுந்தேசுவரர் கோயில் அருகில்

தொடர்ந்து புதுக்கோட்டைக்குப் பயணம் செய்து திருமெய்யர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை என சுற்றித்திரிந்தோம். குடுமியான் மலையில் ஏறி இறங்கப் பாதை தெரியாமல் மலை மேலேயே சுற்றித் திரிந்த அனுபவம் புனைவுக்கானது. தொடர்ந்து ஏழடிப்பட்டம் சமணர் படுகைகளைப் பார்வையிட மலைகளில் ஏறி நடந்தோம். விஜயாலய சோழீஸ்வரத்தைக் காண மலையில் ஏறியபோது காலம் விட்டு காலம் நகர்ந்ததாகவே தோன்றியது. சோழர்களின் முதல் மலைக் குகை கோவில்களில் ஒன்று, இங்குள்ள சிவன் கோவில் இடைக்கால சோழரான விஜயாலயனால் கட்டபட்டது.

விஜயாலய சோழீஸ்வரத்தில் குட்டியாக நான்

தஞ்சைக்குச் சென்றது புதிய அனுபவங்களைக் கொடுத்தது. தஞ்சைக்கு இது எனது நான்காவது பயணம். முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் அருகாமை கிடைத்ததால் தஞ்சை பெருவுடையார் ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவற்றை மிக நெருக்கமாகக் காணமுடிந்தது. மேலும் அகழ்வாய்வு செய்யப்பட்ட ராஜேந்திர சோழனின் அரண்மனை உள்ள பகுதிகளையும் தொல்பொருள் காட்சியகங்களையும் காணக் கிடைத்தது.

முனைவர் மு. இளங்கோவன் அவர்களுடன்

இலக்கியச் சந்திப்புகள்

  • விஷ்ணுபுரம் விழா

தமிழகத்தில் பயணங்களை தொடர்ந்துகொண்டே நான்கு இலக்கியக் கலந்துரையாடல்களில் பங்குபெற முடிந்தது. முதலாவது விஷ்ணுபுரம் விழா. 2017இல் இந்த விழாவில் கலந்துகொண்டேன். ஆறு ஆண்டுகளில் இவ்விழா இரண்டு மடங்காக பிரம்மாண்ட உரு கொண்டிருந்தது. எப்போதும் போல ஆசிரியர் ஜெயமோகனைப் பார்க்க முடிந்ததும் சில வார்த்தைகள் பேச முடிந்ததும் இவ்வாண்டின் நிறைவை உணர வைத்தது.

  • மரப்பாச்சி அமைப்பு
மரப்பாச்சியில்

டிசம்பர் 20, காரைக்குடியில் சுனீல் கிருஷ்ணன் வழிநடத்தும் மரப்பாச்சி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த உரையாடலில் பங்கெடுத்துப் பேசினேன். சுனீல் கிருஷ்ணனிடம் அவகாசம் எடுத்துப் பேச முடிந்தது மகிழ்ச்சியளித்தது. நண்பர் துரை அறிவழகன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. மரப்பாச்சி சுனீல் கிருஷ்ணன் முன்னின்று நடத்தும் இலக்கியக் குழு. கடைசி நேரத்தில்தான் என் வருகையை உறுதி செய்ய முடிந்ததால் பொதுவாக மலேசிய இலக்கியச் சூழல் குறித்து உரையாடினோம்.

  • துருவம் இலக்கிய அவை
துருவத்தில்

அடுத்ததாக டிசம்பர் 23 துருவம் இலக்கிய அவை தஞ்சையில் ஏற்பாடு செய்திருந்த தாரா குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு அந்நாவலை வாசித்த பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாசகர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். தாரா குறித்த பொதுவான சில கருத்துகளையும் முன்வைத்தேன். துருவம் இலக்கிய அவை நடக்கும் புத்தகக் கடையும் அதன் உரிமையாளர் அச்சுதனும் ஆச்சரியப்படுத்தினர். அச்சுதன் துடிப்பான இளைஞர். தன் ரசனைக்கு ஏற்ற நூல்களை மட்டுமே விற்பனை செய்கிறார். அத்தனையும் தரமான நூல்கள். அதுபோல துருவம் இலக்கிய அவையை முன்னெடுக்கும் பார்த்திபனிடம் இருக்கின்ற தீவிரம் அவரை அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடியது. வருகின்ற அனைவரும் வாசித்து வருவதை இவ்வமைப்பு உறுதி செய்கிறது. முன் தயாரிப்புடன் வரும் வாசகர்கள் தீவிரமாக உரையாடுகின்றனர். இந்த அவையில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களைச் சந்தித்து அன்பைப் பகிர முடிந்தது. மேலும் நேசன் போன்ற ஒரு தீவிரமான வாசகரை சந்திக்க முடிவதெல்லாம் ஆச்சரியமான அனுபவங்கள். கலந்துகொண்ட பெரும்பாலோர் பேய்ச்சி, சிகண்டியை வாசித்திருந்தனர்.

  • தாரா வெளியீடு
தாரா வெளியீட்டில்

இந்த இலக்கியச் சந்திப்புகளின் உச்சமாக சென்னையில் ‘தாரா’ நாவல் வெளியீடு நடந்து முடிந்தது. சு.வேணுகோபால், ஜா.ராஜகோபாலன், லதா ஆகியோர் தாரா குறித்து முன்வைத்த கருத்துகள் வாசகர்களுக்குத் திறப்புகளாக அமைந்திருக்கும். ரெ. விஜயலட்சுமி, சீனு, செந்தில்குமார், காளிப்ரசாத் எனச் சிலருடன் உரையாட முடிந்தது. தாரா குறித்த நேர்மறை எதிர்மறை விமர்சனங்களை ஒவ்வொரு சந்திப்பிலுமே காணக்கிடைத்தது. அதுதான் இலக்கியச் சூழலில் ஆரோக்கியமானது.

  • பெருந்தேவி
பெருந்தேவியுடன்


மறுநாள் நாங்கள் சென்று சந்தித்த பெருந்தேவியுனுடனான பொழுதுகள் இனிமையாக அமைந்தது. அவர் மலேசியாவுக்கு அழைக்கப்பட வேண்டியவர் என்பதையும் அவருடனான நீண்ட உரையாடல்கள் அவசியம் என்பதையும் அந்தச் சில மணித்துளிகள் உணர்த்தின. அவர் வீட்டின் அருகில் இருந்த சக்கரை அம்மா எனும் சித்தர் ஆலயம் செல்ல முடிந்ததும் இந்தப் பயணத்தில் முக்கியமானது. நானும் அரவினும் அவரது சமாதி இருந்த கோயிலை மூடுவதற்குள் உள்ளே நுழைந்து வணங்கிவிட்டு வெளியேறினோம்.

இலக்கிய முன்னெடுப்புகள்

  • ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா

கடந்த ஆண்டுபோலவே இவ்வாண்டும் ஜார்ச் டவுன் இலக்கிய அமைப்புத் தமிழ்ப் பிரிவுக்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்ததால் அதன் கருப்பொருளுக்கு ஏற்ப எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களை அழைத்திருந்தேன். மேலும் கடந்த ஆண்டு போலவே வல்லினத்தை இணை இயக்கமாக நியமிக்க ஜார்ஜ் டவுன் அமைப்பு ஒப்புதல் தெரிவித்ததைத் தொடர்ந்து செயல் திட்டங்கள் இலகுவாகின.

யுவன் சந்திரசேகர் வருவதால் அவரது புனைவுலகம் குறித்த கருத்தரங்கு ஒன்றையும் பிரம்ம வித்யாரண்யத்தில் ஏற்பாடு செய்தோம். அவரது ஆங்கில நாவலான The Illusory River நாவலும் வெளியீடு கண்டது. யுவன் சந்திரசேகரோடு நான் நிகழ்த்திய உரையாடல், மலேசிய சிங்கை இலக்கியம் குறித்த அரங்குகள் என நிறைவான நிகழ்ச்சிகளாக அமைந்தன. மேலும் என்னுடைய தாரா நாவலும் அ. பாண்டியனின் கரிப்புத் துளிகள் நாவலும் அதே நிகழ்ச்சியில் வெளியீடு கண்டன. நிகழ்ச்சியை ஒட்டி வந்திருந்த சிங்கப்பூர் நண்பர்களான லதா, சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, கணேஷ் பாபு ஆகியோரால் அரங்குகள் கூடுதல் தீவிரம் கொண்டன.

  • தமிழாசியா புத்தக உரையாடல்கள்
தமிழாசியா சந்திப்பில்

இவ்வருடம் மே மாதம் தமிழாசியா சந்திப்பைத் தொடங்கினேன். மாதம் ஓர் எழுத்தாளரின் நான்கு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அக்கதைகள் குறித்து விரிவாக ஆராய்வதே இந்தச் சந்திப்புகளின் நோக்கம். அசோகமித்திரன், புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், யுவன் சந்திரசேகர், தி. ஜானகிராமன் என முதன்மையான ஆளுமைகளின் சிறுகதைகளை வாசித்து விரிவாக உரையாடும் வாய்ப்பு ஒவ்வொரு மாதமும் அமைந்தது. ஒரு சிறுகதையின் உச்சமான தருணங்களைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்பு இந்த உரையாடல்கள் வழி சாத்தியமானது.

  • வல்லினம்

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் வல்லினம் அகப்பக்கம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை முறையாக வெளிவந்தது. தமிழின் முதன்மையான படைப்பாளிகளும் இளம் படைப்பாளிகளும் ஒருங்கே வல்லினத்தை தங்கள் படைப்புகளால் மேம்படுத்தினர். பல படைப்பாளிகளின் முதல் படைப்புகளும் வல்லினத்தில் இடம்பெற்றன. அதுபோல வல்லினத்தை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியதில் உற்சாகம் மிகுந்தது. வல்லினம் எனும் ஓர் இலக்கியக் குழு மலேசியாவில் உள்ளது என பிற மொழி எழுத்தாளர்களும் அறிந்துகொள்ளும் ஆண்டாக இது அமைந்தது.

  • இடைநிலைப்பள்ளிகளுக்கான சிறுகதைப் போட்டி

மார்ச் மாதம் நான் நடத்தி வரும் யாழ் பதிப்பகம் ஏற்று நடத்திய இடைநிலைப் பள்ளிகளுக்கான சிறுகதை போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கோ. சாரங்கபாணி அறவாரியம் ஆதரவில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. யாழ் பதிப்பகம் முதல் பரிசு பெற்ற எழுத்தாளருக்கு தங்க பதக்கம் வழங்கியது. மேலும் ஏழு மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா முன்னூறு ரிங்கிட் வழங்கப்பட்டது. இளம்பூரணன் கிராமணி இம்முயற்சிக்கு ஆலோசகராகவும். அ.பாண்டியன் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினர். பல நண்பர்களின் ஆதரவால் இம்முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

  • அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதைப் போட்டி

வல்லினம் ஏற்பாடு செய்த அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் முதல் பரிசை எழுத்தாளர் ராஜேஸ் ராமசாமியும் இரண்டாவது பரிசை அரவின் குமாரும் வென்றனர். ஆறுதல் பரிசுகளை முறையே தயாஜி, கலைச்செல்வம், நவின் ஆகியோர் வென்றனர். இப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் அக்கினி சுகுமார் குடும்பத்தினர் ஆதரவில் நடைபெற்றது.

  • தமிழாசியா

இவ்வாண்டும் ஏராளமான தமிழக நூல்களைத் தருவித்து ரூபாய்க்கு 10 காசு எனும் விலையில் தமிழாசியா வழி விற்பனை செய்தோம். மா. சண்முகசிவா அவர்களின் ‘வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்’ எனும் நூல் தமிழாசியா பதிப்பகம் வழி வந்து கவனத்தைப் பெற்றது. இந்நூல் முழுக்கவே மா. சண்முகசிவா முயற்சியில் வெளிவந்தது. அதை விநியோகிக்கும் பொறுப்பை மட்டுமே தமிழாசியா ஏற்றுக்கொண்டது. தமிழாசியாவை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியபோது சாதகமற்ற சொற்களே அதிகம் வந்தன. இன்று அது வாசகர்களால் நிலைத்து நிற்கிறது.

படைப்பிலக்கியம்

இவ்வாண்டு எனது ‘தாரா’ நாவல் மட்டுமே என் புனைவு முயற்சியாக வெளிவந்தது. ஜனவரி முதல் திகதி அத்தனை சமூக ஊடகங்களில் இருந்தும் துண்டித்துக்கொண்டு தாராவை எழுதுவதில் முனைப்பாக இருந்தேன். ஏறக்குறைய மே மாதம் ஒரு வடிவம் கிடைத்தபோது மீண்டும் சமூக ஊடகங்களில் இணைந்தேன். இனிதான் தாரா குறித்த விரிவான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டும்.

மொழிப்பெயர்ப்பாளர் சரவணன் & பதிப்பாளர் அமீருடன்


அதுபோல ‘சிகண்டி’ நாவல் மலாய் மொழியாக்கம் கண்டு நாவலாக வந்ததோடு வாசகர்களின் ஆதரவையும் பெற்றது உற்சாகத்தைக் கொடுத்தது. சரவணன் சத்தியானந்தனின் உழைப்பும் முனைப்புமே அதற்குக் காரணம்.

இவ்வருடம் ஒரு சிறுகதைகூட எழுதாதது எனக்கே ஏமாற்றமாக இருந்தது. ஆனால் லதாவின் சிறுகதைகள், ரியாஸின் அத்தர் தொகுப்பு, யுவன் சந்திரசேகர் சிறுகதைகள், சீ. முத்துசாமியின் ‘ஆழம்’ நாவல் குறித்து விரிவான கட்டுரைகளை எழுத முடிந்ததில் ஓரளவு திருப்தி.

உரை

கூலிம் நவீன இலக்கியக் களம் ஏற்பாடு செய்த கு. அழகிரிசாமி நூற்றாண்டு விழா கருத்தரங்கில் கு. அழகிரிசாமியின் புனைவுகளில் உள்ள குழந்தை கதாபாத்திரங்கள் குறித்து உரையாற்றினேன். மறுவாசிப்பின் வழி அவர் புனைவுகளை மேலும் ஆழமாக அறிந்துகொண்டேன்.

மரணங்கள்

சை.பீர்முகம்மது

இவ்வருடம் மலேசியாவில் முதன்மையான இரு கலைஞர்களின் மரணம் பேரிழப்பாக அமைந்தது. முதலாவது கே.எஸ்.மணியம். மற்றவர் சை.பீர்முகம்மது. மலேசியாவின் மேடை நாடகத்திற்காகப் பங்களித்தவர் கே.எஸ்.மணியம். மை ஸ்கில்ஸ் அறவாரிய மாணவர்களைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகம் போட்டபோது ஒப்பனை கலைஞராக மணியம் அவர்கள் பங்காற்றினார். நான் அவரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தது அப்போதுதான். உடனே தமிழ் விக்கியில் அவர் குறித்த பதிவொன்றை இணைத்தேன். அதுபோல சை.பீர்முகம்மது மலேசிய நவீன இலக்கியத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. விரிவான கட்டுரைகளும் அவர் குறித்து எழுதியுள்ளேன்.

பசுமை முகாம்

பொதுவாகவே பள்ளி சார்ந்த செயல்பாடுகளை ஓராண்டின் நிகழ்வுகளில் இணைப்பதில்லை. ஆனால் இவ்வாண்டுப் ‘பசுமையைப் பாதுகாப்போம்’ எனும் கருப்பொருளில் என் தலைமையில் சக பள்ளி ஆசிரியர்களும் இணைந்து நடத்திய முகாம் மிகச்சிறப்பாக அமைந்ததால் அதைக் குறிப்பிட விரும்புகிறேன். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தில் நடந்த இந்த முகாம் வழி மாணவர்களுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் வழிமுறைகள் சொல்லித்தரப் பட்டது. பஞ்சகாவியம் தயாரிப்பு செயல்முறையாக விளக்கப்பட்டது. அதோடு மரம் நடும் முறை,, மலேசியக் காட்டு மரங்களின் தன்மைகள் என பல தகவல்களை மாணவர்கள் அந்த முகாமில் அறிந்துகொண்டனர்.

இனி 2024…


நான் விரும்பி கொண்டாடும் தினம் புத்தாண்டுதான். ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது என்னைப் புதுப்பிக்கக் கூடியது. திரட்டப்பட்ட உற்சாகத்துடன் அந்நாளை எதிர்க்கொள்வேன். என்னையே நான் சில தவறுகளுக்காக மன்னித்தும் கொள்வேன். அதனால் மற்றவர்களையும் மன்னிக்கும் மனதை வளர்த்துக்கொண்டுள்ளேன்.
வரப்போகும் ஆண்டில் விரிவான ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி முடிக்க வேண்டியுள்ளது. ஒரு சிறுகதை தொகுப்பு போடும் திட்டமுண்டு. சரவாக் சென்று போர்னியோ காடுகளில் நுழைந்து அங்குள்ள மக்களைச் சந்திக்கும் திட்டம் ஒன்றை வரைந்து வருகிறேன். கூடுதலாக இவ்வாண்டு உடல் நலன் குறித்து கூடுதலான அக்கறை செலுத்தி செயல்படுத்தும் திட்டமும் உண்டு.

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

2018: கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

2019: இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020: அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

(Visited 221 times, 1 visits today)