சிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம் அதுபோன்ற படைப்புகள் வாசகர்களிடையே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம். பொதுவாகவே படைப்பிலக்கியங்கள் ஓர் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து அதன் சட்டகத்திற்குள் பயணிப்பதில்லை. படைப்புகளே புதிய இலக்கணங்களை உருவாக்குகின்றன. அதற்குமுன் நடப்பில் இருந்த கட்டமைப்பை உடைத்து மறுநிர்மாணிப்பு செய்கின்றன. எனவே நிலையான படைப்பிலக்கணம் என ஒன்று இருக்க சாத்தியம் இல்லை.
சோரம் போனவனின் : கடிதம்
மகாநாடு ஒரே சொதப்பலாக இருக்குமென்பது எதிர்பார்த்ததுதான், நேரில் பார்க்கவோ கேட்கவோ இயலாத குறையை உங்கள் கட்டுரை தீர்த்துவைத்தது. மற்றும் திருக்குறளில் இன்னாசெய்தாரை ஒறுத்தல் எனப்து சரியானதே. ஒறுத்தல்= தண்டித்தல் என்று பொருள்படும்.
இன்னும் இலங்கை வழக்கில் மீனைப்பொரித்தல் என்போம், பெருநிலத்தில் பொறித்தல் என்பார்கள். சில இடத்தில் மெள்ள மெள்ள என்போம் சிலர் மெல்ல மெல்ல என்பார்கள். எல்லாந்தான் இருந்துவிட்டுப்போகட்டுமே. நஷ்டம் ஒன்றுமில்லை.
காப்பியைத்தான் குழம்பி என்றாலோ, கொட்டைவடிநீர் என்றாலோ அது காப்பியைச் சுட்டும் தனித்துவமான சொல்லாகத்தெரியவில்லையே. கோயம்புத்தூர் சென்ற சமயம் ” இரண்டு கொட்டைவடிநீர் கொடுங்கள்” என்று கேட்டேன். அங்கே காப்பிக்கடை வைத்திருந்த யாழ்ப்பாணத்து ஆள் கேட்டார்: “ அய்யா யாம் எதன் கொட்டையை வடித்துத்தரவேண்டும்”.
கருணாகரமூர்த்தி.பொ
http://karunah.blogspot.com
சோரம் போனவனின் சொற்கள் : 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து…
மாநாட்டில் கலந்துகொண்ட முதல் நாளிலிருந்து ‘எதையும் வெளிப்படையாக பேசாதே… உனக்குத்தானே தலைவலி. எல்லாருக்கும் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துண்டு. ஆனால் இப்படிப் பேசிப்பேசி கிடைக்கப்போகும் நன்மைகளை கெடுத்துக்கொள்வதில்லை. நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய்…’ என்பது போன்ற அறிவுரைகள் தொடர்ந்து பல நலவிரும்பிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தன. ‘வல்லினம்’ நிகழ்வை தவிர்த்து கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்விலும் அதிகம் கலந்துகொள்ளாததால் பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்தது உற்சாகமாக இருந்தது. பலருக்கும் என்னைப் பார்த்தவுடன் நலன் விசாரிப்பதைவிட அறிவுரை சொல்லவே தோன்றியது. கெட்டு சீரழிந்து போயிருக்கும் நான், அவர்கள் அறிவுரை மூலம் உணர்ந்துகொண்டது முதலில் சோரம் போக பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே இந்தப் பதிவை சோரம் போன மனநிலையில்தான் எழுத வேண்டியுள்ளது.
ரேமண்ட் கார்வரின் வீடுகள்
வாசிப்புப் பழக்கம் உள்ள பலரையும் பார்க்கிறேன். ஆனால் அவர்கள் நுண்வாசிப்பாளர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வியே எனக்கு எப்போதும் உண்டு. வாசிப்பு என்பது ஒரு போட்டியில்லை. அதிகமான நூல்களை வாசித்துவிட்டோம் என்ற பட்டியலைச் சுமப்பதில் என்ன பெருமை இருந்துவிடப்போகிறது? வாசிப்பின் பலன் நமக்குள் நிகழும் மாற்றம். வாசிப்பில் தனி ஒருவன் அடையும் மாற்றமே அவனை எதிக்கொள்ளும் ஒவ்வொருவரையும் தீ போல பற்றுகிறது. இந்த உள் மாற்றம் என்பதை மனவிசாலம் என சுருக்கமாக அடையாளம் காணலாம். தேர்ந்த வாசிப்பாளர்களுக்கு சமூகத்துக்கு இன்னல் தரும், சமுதாயத்தைச் சுரண்டும் நபர்கள் மேல் அறச்சீற்றம் எழுமே தவிர , தனிப்பட்ட வாழ்வில் யாரையும் நல்லவர் – கெட்டவர் எனப் பட்டியலிடமாட்டார்கள். இந்த மனவிசாலம் அடைய வகை செய்யும் நுண்வாசிப்பை பழக்கத்தில் கொள்ளாமல் சுமந்து திரியும் வாசித்த நூல் பட்டியல் என்பது வீண்.
செகாவின் நாய்
கல்வியாளர்களுக்கு நவீன இலக்கியத்தின் மீது எப்போதுமே ஒரு சிக்கல் உண்டு. பல்வேறு கணிதங்களையும் அறிவியலையும் மொழியியலையும் புரிந்துகொள்ள முடிந்த அவர்களால் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனும்போது கோபமடைவார்கள். அந்தக் கோபம் அதை எழுதிய படைப்பாளனின் மேல் பாயும். ‘தங்களுக்கே புரியாத’ ஓர் இலக்கியப்பிரதி நிச்சயம் முழுமையடையாதது என புறக்கணிப்பார்கள். சங்க இலக்கியங்களையே புரிந்துகொள்ள முடிந்த அவர்களால் ஒரு நவீன கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என கிண்டல்தொணியில் பேசுவார்கள். உண்மையில் அவர்கள் சங்க இலக்கியங்களை அறிய உதவியது அதன் விளக்க உரைகளின் துணைக்கொண்டே என்ற உண்மை அப்போதைக்கு மறந்துவிடும்.
சங்க இலக்கியப்பாடல்களை உள்வாங்க எவ்வாறான தளர்ந்த மனநிலை தேவையோ அதே மனநிலை நவீன கவிதை வாசிக்கும்போது கிடைக்காமல் அவதியுறுவார்கள். ஒரு மலரை அறிய அதன் இதழ்களைப் பிரித்து எறிந்து , பிழிந்து சாரெடுப்பதுதான் சாத்தியம் என நினைப்பவர்களுக்கு அதை முழுமையாக நுகர்ந்துபார்ப்பதன் மூலமாகவே அறியலாம் என்ற உண்மையை ஏற்பதில்லை. பல கல்வியாளர்கள் பிரேத பரிசோதனை போலவே இலக்கியத்தையும் வெட்டிக்கூறுபோட்டு அறிய முயல்வது வருத்தமே.
டோட்டோ சானும் நமது கல்வி முறையும்
கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார்.
எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்குள்ள கல்வி சூழல் குறித்து அறியும் ஆவலில் பேசத்தொடங்கினேன். சுதந்திரமான கல்வி முறை. கற்பனை ஆற்றலை வளர்க்கும் பாடத்திட்டம். திறனை மையப்படுத்தியப் பள்ளிகள் என கவர்ச்சிகரமான கல்விச்சூழலை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருந்தது. அவர் பேச பேச எனக்கு Tetsuko Kuroyanagi எழுதிய ‘Totto-chan, The Little Girl at the Window’ எனும் நூல் ஞாபகத்துக்கு வரத் தொடங்கியது.
பிகே: உங்களைப் படைத்த கடவுளை நான் எதிர்க்கவில்லை; நீங்கள் படைத்த கடவுளைதான் நான் மறுக்கிறேன்
கடவுள் எனும் கருத்தாக்கம் குறித்த விமர்சனங்களோடு தமிழில் சில திரைப்படங்கள் வந்திருக்கவே செய்கின்றன. உடனடியாக எனக்கு இருவர் நினைவுக்கு வருகிறார்கள். முதலாமவர் வேலுபிரபாகரன். மற்றவர் கமலஹாசன்.
வேலுபிரபாகரன் ஆக்கங்கள் எவ்வித கலை உணர்வும் இல்லாதவர்கள் அல்லது எதுகுறித்தும் சிந்திக்காமல், உரத்து எதிர்ப்பதாலேயே அது புரட்சியாகிவிடும் என நம்புபவர்களுக்குத் தோதான திரைப்படங்களாக இருக்கும். அவை வெறும் கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மட்டும் நம்புபவை. கமல் படங்கள் அப்படியல்ல. மேலோட்டமாகப் பார்க்கும் போது கலை போல தோன்றும். ஆனால், அவை ஆபத்தானவை. இஸ்லாமிய வெறுப்பை உமிழ்பவை. கடவுள் எனும் பிம்பத்தை எதிர்த்துக்கொண்டே மதச்சார்போடு அரசியல் பேசுபவை.
பொதுவாகவே நம்மிடம் இதுபோன்றவர்களின் குரல்களை வகுத்துப்பார்க்கும் பழக்கம் இருப்பதில்லை. மிக மேலோட்டமாக ஒரு கலைப்படைப்பை அணுகி ஒரு வகைமைக்குள் கொண்டுவர மெனக்கெடுகிறோம். புரட்சியாளர்களைக் காண்பதில் அத்தனை ஆர்வம் நமக்கு.
போலி அறிவுவாதமும் மலேசிய கலை உலகமும்!
மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே (Pseudo Intellectuals) உள்ளன. இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது மிகக் கடினம். காரணம், அவர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஏதோ மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் போல ஊடகங்களால் முன்னிறுத்தப்படுவார்கள். இவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரே வழி இவர்களின் படைப்புகளைக் கட்டுடைத்துப்பார்ப்பதுதான்.
ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்
‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது.
ஞானக்கூத்தன் : மழைக்குளம்
‘விஷ்ணுபுரம் விருது’ ஞானக்கூத்தனுக்குக் கிடைக்கின்றது என அறிந்த அன்று அவர் கவிதைகள் அறிமுகமான தினம் ஒரு மந்தமான நினைவாய் முறையற்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. ஒரு கவிதை வாசகனுக்கு அவனது ஆரம்பகால கவிதை ரசனையைக் கூர்மை செய்தவர்கள் இலக்கிய வாழ்வில் ஒரு பகுதியாகி விடுகின்றனர். எங்கு எப்போது கவிதை குறித்து பேசினாலும் அந்த ஆளுமையை வலிந்து இழுத்து,துணைக்கு வைத்துக்கொள்கிறது நினைவு .